Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 11 மார்ச், 2015

உண்மையான துறவு யாது?

ஒரு அன்பர் கேட்டார்; ''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம்
வரும் என்று சொல்கின்றார்களே'' என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே
போவீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான்
இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?
உணவைத் தானே நாட வேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்ததாக
அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ
விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு
கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது
தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று. அளவு
முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது.
ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் தான்
உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாக தெரிகிறது. அதைத்
தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கயே
அதோடு நிறுத்தக் கூடிய அறிவும், செயலும் வந்து விட்டன என்றால் அதாவது
அறிந்த அறிவுக்கு செயல் ஒன்றுபட்டால் அதுதான் துறவு. '' அடுப்பிலே சாதம்
வைக்கின்றீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு
ஏன் இறக்குகின்றீர்கள்?'' என்று என்று கேட்டேன். ''சட்டியில் உள்ளது அடிப்பிடித்துவிடும்''. வேக வைக்கின்றவரை உறவு; இறக்குவது துறவு. இதற்கு
மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும்போது உடனே விடுதலை
செய்துவிட வேண்டும்; அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு,
அனுபவிக்கக்கூடிய முறை இந்த இரண்டும் தெரிந்தால் அது தான் துறவு.

நம்மைத் திருத்துவோம்:

"உறவிலே காணுகின்ற உண்மைநிலை தெளிவே
துறவாகும், துன்பமிலா இன்பம் நல்கும்
அறவோர்கள் கண்டநெறி அன்புநெறி அதைவளர்ப்போம்,
திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்".
.

"அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்.
அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்".
.

இல்லறமும் துறவறமும் :

"இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
இதுவரையில் கருதிவந்தார் உலகமக்கள்,
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தைப் பண்படுத்தி எனையறிந்தேன்;
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பதுன்பம், உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தைத் திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

                                                                        --தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக