Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 30 நவம்பர், 2013

ஒலி

ஒவ்வொரு ஒலிக்கும் சீவகாந்தத்தை ஒவ்வொரு முறையில் இயக்கும் வல்லமை உண்டு. மொத்தம் 50 ஒலிகளை எழுத்துக்கள் மூலமாக உச்சரிக்கிறோம். ஒரு எழுத்துடன் மற்ற எழுத்து சேரும்போது, அந்தக் கூட்டு ஒலிக்குத் தனி விளைவு உண்டு. நீண்ட கால அனுபவத்தால் முன்னோர்கள் தனி எழுத்திலும், கூட்டு எழுத்துக்களிலும் ஏற்படும் நல் விளைவுகளையும், தீய விளைவுகளையும் கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். இந்த முறையின் மூலம் மனிதன் தேவைப்படும் பொருள், புகழ், புலன் இன்பம், அதிகாரம், நட்பு (வசியம்) இவற்றிற்கு எந்தெந்த ஒலிகள் எவ்வாறு ஒழிக்க வேண்டுமென்ற 'ஒலி விஞ்ஞானமே' மந்திரங்கள் ஆகும். தனக்கு என்ன வேண்டுமென்பதைத் தெளிவாக சங்கல்பங்களாக்கி பல தடவைகள் அதையே நினைத்தும் சொல்லியும் தனது அறிவாட்சித் தரத்தை மேன்மை படுத்திக் கொள்ள 'தந்திரம்' உதவுகிறது. எனவே பொருள் பற்று, மக்கள் பற்று உடையவர்கள் அவர்கள் விருப்பங்களில் வெற்றி பெற யந்திரம், மந்திரம், தந்திரம் இவை சிலை வணக்க முறையில் அடங்கியுள்ளதால், அத்துறையில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் சிலை வணக்கம் ஒத்ததாகும். மற்றபடி "இறையுணர்வு" எனும் ஞானநெறி பெற்றவர்களுக்கு இத்தகைய சடங்கு முறைகள் தேவையற்றதாகி விடுகின்றன. "வினை-விளைவு" (cause and effect) தத்துவம் இறையுணர்வு பெற்றவர்களுக்கு இயல்பாகி வாழ்வில் நிறைவு தரும்.                                                                                                                                                                            

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 26 நவம்பர், 2013

கடவுளைக் காணலாம்

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.

திராவிடர் கழகதைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார்.

“ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப் படுத்தி விட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார்....

“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார். அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

நானும் அதைத்தான் சொல்கிறேன். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது
போல மக்கள் மனத்தைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

திங்கள், 25 நவம்பர், 2013

வாழ்க்கை சிக்கல்களை போக்க மனவளக்கலை :



வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்த மனப்போராட்டம்.சமுதாய கூட்டமைப்பில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களிலும் வேறு பலரும் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்து விட்டாலும் அவனோடு பின்னபட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும்....

சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது . அப்படி அமைத்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டு தவிக்கும் வரையிலேந்த மனிதனும் சும்மாயிருக்க மாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதி விலக்கு .

சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். இதையெல்லாம் நம் மனந்தான் செய்தாக வேண்டும்.


தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனத்தின் தரத்தையும் , மனத்தின் திறத்தையும் - அதாவது மனத்தின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.அதற்கு மனவளக்கலை பயிற்சி அளிக்கின்றது .

தன்னிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம் , கடமை, ஈகை என்கின்ற அறநெறி காத்துவாழும் ஒரு தேர்ந்த மனவளக்கலைஞனுக்கு -குண்டலினியோகிக்கு சிக்கல்களை தானாகவே தீர்த்துக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். சிக்கல்கள் வரவே வராது.

--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சினத்தை ஒழிக்க நடைமுறையில் வெற்றியடையத்தக்கதொரு பயிற்சித் திட்டம்

கோபமோ மனத்தின் அடித்தளமான உயிராற்றலுக்கு, அது விரைந்து விரைந்து செலவாகும் வேகத்தைக் கொடுத்து விடுகிறது. எனவே கோபம் கொள்ளும் மனத்தினால் ஒடுங்கி நின்று தவமியற்ற (Meditation) இயலாது. முக்கியமாக மனம் தன் சுயநிலையாகிய சுத்தவெளியை, தெய்வநிலையை எட்டாது. உலக சமுதாய சேவா சங்கத்தின் "மனவளக்கலை" பயிற்சியில் தவம், தற்சோதனை மூலம் சினத்தை ஒழிக்க நடைமுறையில் வெற்றியடையத்தக்கதொரு பயிற்சித் திட்டம் உள்ளது. நாம் 'குண்டலினி யோகமாகிய'(Meditation) 'மனவளக்கலையை' பயின்று, மனம் ஒடுங்கி ஒடுங்கி நின்று தவமியற்றிப் பழகிப் பழகி கூடவே "தற்சோதனையில்" சினம் தவிர்த்தல் என்ற சிந்தனையை தூண்டும் பயிற்சியின் மூலமும் தான் இந்தச் சினத்தை வெல்லும் திறன் மனத்திற்குக் கிட்டும். அதனால்தான் ஆறுகுணச் சீரமைப்பையும் துரியாதீத தவத்தையும் நாம் ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறோம். இறைநிலையோடு கலந்து பழகித் தவமியற்ற - தவம் இயற்றத்தான் "சட்டென்று விரிந்து சினமாக மாறாத தகைமை(ability) மனத்திற்குக் கிட்டும்".
சினம் அச்சம் இரண்டும் ஓர் மனிதன் வாழ்வில்
சீர்குலையச் செய்யும் கொடும் உட்தீயாகும்.
சினம் அச்சம் ஒழிய சிந்தனையை ஏற்றி
சிவன் சீவன் நிலைகளை நன்குணர வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
"மனமென்னும் மாடு அடங்கில், தாண்டவக்கோனே; முக்தி
வாய்த்ததென்று எண்ணேடா, தாண்டவக்கோனே!
சினமென்னும் பாம்பு இறந்தால், தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா, தாண்டவக்கோனே".
- இடைக்காட்டுச் சித்தர்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 22 நவம்பர், 2013

கணவன் மனைவிக்கு அறிவுரை

 குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்....

கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 21 நவம்பர், 2013

இந்திய நாட்டின் பொருளாதார சீர்கேடு பற்றி மகரிஷியின் கருத்து :



இயற்கை வளம், மக்கள் பண்பாடு, அந்நிய நாட்டுத் தொடர்பு , ஆட்சிமுறை, இயற்கையாக ஏற்படும் சில திடீர் விளைவுகள் ஒன்றோ சிலவற்றாலோ ஏற்பட்டுள்ள குறைபாடு தான் ஒரு நாட்டின் பொருளாதாரச் சீர்கேடாக மாறுகிறது.


** மக்களை அடக்கியாளவும், பொருட்களைச் சுரண்டவும் ஏற்ற முறையில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் நிர்வாகச் சட்டங்கள்.

**சுதந்திரம் கிடைத்து விட்டதனால் இது வரை அடக்கி வைத்திருந்த தேவைகளை உடனே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற மக்களின் பேரார்வம் .

**அரசியல் தலைவனாக வந்துவிட்டால், பொருள்,புகழ் , அதிகரம், அந்தஸ்து என்ற நான்கும் கிடைக்கின்றனவே அவற்றை நானும் ஏன் அடையக்கூடாது என்ற ஒரு சிலர் கொள்ளும் பேராசை.

**பணத்திற்கும், கவர்ச்சிக்கும் , பேச்சுகளுக்கும் மயங்கித் தங்கள் ஓட்டுரிமையை மக்கள் வீணாக்கும் பரிதாப நிலை .

**இந்த நாட்டில் உற்பத்தியாகாத வெளி நாடுகளில் செய்கின்ற பொருட்களையும், அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களையும் உபயோகிக்கும் பழக்கம்.

** போதிய அளவில் உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மக்கள் பெற வேண்டிய கல்வியின்மை , வறுமை .

**மூடப்பழக்க வழக்கங்களுக்காகவும் , சடங்கு சம்பிரதாயங்களுக்காகவும் பொருளாதாரத்தையும் , சுகாதாரத்தையும் வீணாக்கும் பழக்கம் இவை அனைத்தும் சேர்ந்து , ஒன்றுடன் ஒன்று பலவுடன் பல மோதி இந்த நாட்டில் இன்றிலிருக்கும் சீர்கேட்டினை உருவாக்கியது.

புதன், 20 நவம்பர், 2013

இருதய மலர்களுக்கு:



உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞ்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளிய முறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனித குளத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட் பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல ...[பிரபஞ்சம]மாக விளங்குகிறது. இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் [Repulsive Force] ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் [Attractive Force] ஆற்றலும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தக்களமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு [Pattern, Precision & Regularity] எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும், முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால் தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வையடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, "உடல் உள்ளப்" பயிற்சி முறையே எளிய முறை "குண்டலினி யோகமாகும்".

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமும் ஆகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன் பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்கு படுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள். அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.
                                                                                                                     -வேதாத்திரி மகரிஷி


"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும்,
அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன
என்பதை அறிந்து கொள்வதும் தான் ஞானம்".
.
"மனம் இல்லாது மனிதனே இல்லை"
.
அறிவறியும் தவம்:
"இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
 

செவ்வாய், 19 நவம்பர், 2013

குடும்பக்கலை:



யோக முறையிலே எளிய முறைக் குண்டலினி யோகம் என்ற ஒன்று முக்கியமானது. அதன் பிறகு உடற்பயிற்சி, அதற்கு மேலாக அகத்தாய்வு, அகத்தைவிலே எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்று வினா எழுப்பி விடை காணுதல் என்ற அளவிலே வருகிறபோது இந்த உடலெல்லாம் தெளிந்தபோது மனமும் தூயதாக தெளிவாக இருக்கிறது. இரு...ட்டிலே இருக்கின்றபோது அங்கு நல்ல வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? மேல் தளத்திலிருந்து படியிலே இறங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு இல்லை, சில சமயம் படி இருப்பதே தெரியவில்லை என்றால் என்னவாகும்? ஆனால் படியிருக்கிறது என்று தெரிந்து விளக்கும் இருந்தால் எப்படியிருக்கும்? அதே போல் வாழ்க்கையிலே தெரிந்து வாழக்கூடியதும், தெரிந்ததை நடத்தி, திருத்தி நாம் உறுதி எடுத்துக் கொண்டு அந்த முறையிலே வாழ்வதற்கும் ஏற்றதோர் பயிற்சி தான் மனவளக்கலை.

அதற்கு மேலாக உடலை நன்கு உறுதியாக வைத்துக் கொண்டு, ஆன்மாவை வளர்த்துக் கொள்வதற்குப் பெருந்துணை புரியும் கலை தான் காயகல்பக் கலை. அதை ஒழுங்காகச் செய்து வந்தால் மனிதன் எந்த நிலைக்கு உயர வேண்டுமோ அந்நிலைக்கு உயரலாம். குண்டலினி யோகம் செய்வதற்கு உயிராற்றல் போதிய அளவு வேண்டும். அந்த உயிராற்றலுக்கு வித்து ஆற்றலும் வேண்டும். இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொடுக்கக்கூடியது காயகல்பம். காயகல்பம் குண்டலினி யோகத்திற்கு உதவியாக இருக்கிறது. குண்டலினி யோகம் காயகல்பத்திற்கு உதவியாக இருக்கிறது. ஆகவே இரண்டு வழியாலும் நாம் உடலையும், மனத்தையும் இணைத்து முன்னேறப் பயிற்சி செய்கிறோம். இது குடும்பங்களுக்கெல்லாம் மிக்க அவசியம்.
                                                                                                                   -வேதாத்திரி மகரிஷி

திங்கள், 18 நவம்பர், 2013

தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க


உடலுக்கும் - மனதுக்கும் இயக்க ஆற்றலாக இருப்பது ஜீவகாந்தம் ஆகும். ஜீவகாந்தம் என்பதோ இறைநிலையும், அதன் நுண்ணியக்க மூலமான விண் மூலம் தோன்றிய அலையும் சேர்ந்த ஒரு கூட்டு ஆற்றல் தான். இந்தப் பேராற்றலானது, கருமையம் எனும் மூலாதாரத்தில் மையம் கொண்டு, உடல் முழுவதும் அலையலையாகப் பரவிப் புலன்கள் மூலம் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் மனமாக இயங்கிக் கொண்டும் இருக்கிறது. இதே மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்" ஆகும். குருவின் மூலம் "ஸ்பரிச தீட்சை" முறையால் உடனே மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்குக் கொண்டு வந்து விடலாம். பிறகு அந்த ஆற்றலின் அழுத்தத்தையும், அதன் சுழற்சியையும் மனத்தால் கூர்ந்து கவனித்துத் தவம் (Meditation) செய்ய வேண்டும். கருமையத்தில் திணிவு பெற்றுள்ள சீவகாந்தத்தைத் தான் "குண்டலினி சக்தி" என்று கூறுகிறோம்.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டு இருக்கிற மனிதன் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாகப் பெற்று அந்த விளக்கத்தின் வழியே வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு முறையான பயிற்சி எதுவோ அதைத்தான் "மனவளக் கலை" என்று சொல்கிறோம். பதினைந்து பதினாறு வயது ஆனவுடனேயே இந்தப் பயிற்சிக்கான தகுதி எல்லோருக்கும் உண்டாகிறது. இந்த அகத்தவ (Meditation) பயிற்சியாகிய - குண்டலினி யோகத்தை குடும்பத்திலுள்ள ஆண், பெண் எல்லோருமே பயிலலாம். விடாமுயற்சியுடன் செய்யத் தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப் பற்றி, சமுதாயத்தை பற்றி, இயற்கையை பற்றி அறிந்து தெளிவாக தெரிந்துகொண்டு, பூரண நிலையை (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவும், நம்பிக்கையும் பெற முடியும். தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

இறைநிலையை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

காட்டாற்று வெள்ளத்தை ஓர் அணைக்கட்டாகக் கட்டி கால்வாயில் விட்டு பாசனவசதி செய்தால் எவ்வாளவு நன்றாக இருக்கும்?அந்த மாதிரி மனிதனின் ஆற்றலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டுமானால் "இறைநிலையை" பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இறைநிலை இல்லாத மனித வளம் என்பதோ மனித செயல் என்பதோ இல்லை. இறையாற்றல் இல்லாத இடமே இல்லை. இறைநிலை இல்லாத அசைவே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது தான் உண்மை. அப்படியானால் உடலுக்குள்ளாகவும் அந்த ஆற்றல் இருக்கத்தானே வேண்டும். உடலுக்குள்ளாக இறைநிலையை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் வேறு எங்கே போய் கண்டுபிடிப்பது? என்ற சிந்தனையைச் செலுத்த முடியுமேயானால் வெகு சீக்கிரத்தில் இறைநிலையை பற்றி உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான வழி - "இறைநிலையை" உணர்ந்த குருவின் மூலம் கிடைக்கும் தத்துவ விளக்கங்களும், முறையான 'அகத்தவப் பயிற்சியும்', சிந்தனையுடன் கூடிய 'அகத்தாய்வு பயிற்சியும்' கற்று பயன் கொள்ள வேண்டும்.

    சீவகாந்தம்

    'சீவகாந்தம்' என்பது இருப்புநிலை, இயக்க அலை என்ற இரண்டு தத்துவங்கள் கூட்டாகச் செயல்படும் பேராற்றலாகும். உடலுக்குள்ளாகக் காற்று, இரத்தம், சீவகாந்தம் இவை எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஓரளவு உரசல்கள் இயற்கையாக ஏற்படுகின்றன. இத்தகைய உரசல்கள் உடல்இயக்கம் மற்றும் மன இயக்கங்களுக்கு ஆக்க முறையில் அளவோடு இருக்கும்போது மனம் இந்த உணர்வுகளைச் சமநிலை உணர்வாக, அமைதி நிலையாக அனுபவிக்கின்றது. எந்த விதமான உரசல் ஆனாலும் அந்த அளவிலே 'சீவகாந்தம்' அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. 'சீவகாந்தம்' அவ்வாறு மாற்றம் பெறுவதையும் அதனால் ஏற்படும் ஆற்றல் செலவையும் மனம், உணர்வாகப் பெறுகின்றது என்பதை இயற்கையின் நியதியாக மனதில் கொள்ள வேண்டும். தினசரி வாழ்வின் நிகழ்ச்சிகளாக இந்த உண்மையினை மனிதமனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனினும், ஆறாவது அறிவுநிலை போதிய வளர்ச்சி பெற்றுப் "புற உணர்வோடு அக உணர்வும்" மலரும் போதுதான் - உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது - உணர்பவனையும் அறியமுடிகிறது.  

     - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
     

    வெள்ளி, 15 நவம்பர், 2013

    மகான் வாழும் இடமே கோவில்


    பிரபஞ்சம் அனைத்துமாக இருப்பது ஒரே கடவுள் தான். இறைநிலையாகிய கடவுளை வணங்குவதைவிட சிந்திப்பதே மேல் என்றார் இராமாநுஜர். மனிதனுக்கு, அவன் வரும் முன்னரே, உணவாகவும், மருந்தாகவும் பயன்பட தாவரத்தைப் படைத்த இறைநிலையின் கருணையின்பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் கரு உருவானவுடனேயே, அந்தத் தாயின் அசைவு அந்தக் கருவைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அங்கே ஒரு தண்ணீர்க் குடம் அமைத்தது இறைநிலையின் கருணையேயாகும். உப்புத் தண்ணீரை உயரே ஆகாயத்தில் ஏற்றி, உப்பு நீங்கிய நன்நீரை மழையாகப் பெய்வித்து ஜீவன்களின் தாகத்தைத் தீர்க்கிற இறைநிலையின் கருணையை போற்ற வேண்டும். உடலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டுவிடும்போது, அந்தக் காயத்தின் வழியாக அத்தனை இரத்தமும் வெளியேறி விடாமல் இருக்க, அங்கே இரத்தத்தை உறைய வைக்கும் அந்த இறைநிலையின் அன்பையும், கருணையையும் உணர வேண்டும்..

    இறைநிலை கருணை மிகுந்தது. அன்பே சிவம் என்பதும், அல்லாஹ் கருணை மிக்கவர் என்பதும் இதனையே வலியுறுத்துகின்றன. அன்பும் கருணையும் நமது செயலில் மேலோங்கும்போது இறை எவ்வழியோ அவ்வழியே நாமும் செயல்படுகிறோம். அதுவே இறைவழிபடுதல் அல்லது இறைவழிபாடு என்பதாகும். மனிதன் இறைவழிபடும்போது, இயற்கையோடு இசைந்து வாழ்வதால் அவன் வாழ்வாங்கு வாழ்கிறான்.

    மனிதன் தன்னை உயர்த்தி இறைவழிபடுதலே மிகச்சிறந்த இறைவழிபாடாகும். அவ்வாறு உயர, அன்பும், கருணையுமே அவனுக்கு ஆதாரங்கள் அன்பினாலும், கருணையினாலும் உயர்ந்த மனிதனே வணங்கத்தக்கவன் ஆவான். அவன் வாழும் இடமே கோவிலாகும். கோவில் என்பது யாரோ யாருக்காகவோ கட்டுகிற கட்டிடமல்ல, சிந்தனைச் செறிவோடு, அகத்தின் அமைதியில், மனத்தூய்மை பெற்ற மகான் வாழும் இடமே கோவில்.

    வியாழன், 14 நவம்பர், 2013

    ஞான வழி



    விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஞான வழி மனிதனுக்கு இன்றியமையாததாகும். சிந்தனை ஆற்றல் பெற்ற அனைவரும் ஞான வழியில் பயின்று, தேறி விளங்கி வாழ்வது தான் பொருத்தமானது. இயற்கை சமுதாயம் என்ற இரண்டையும் நன்குணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல்வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் விளக்க வழி வாழ்வே "ஞான நெறியாகும்". வாழ்வில் "மனம்" தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான். உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருகின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருட்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் "மனவளக்கலையினை" அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை "யோகமென்றும்", ஆராய்ந்த பின் கண்ட விளக்கத்தின் வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை "ஞானம்" என்றும் வழங்குகிறோம்.

    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    செவ்வாய், 12 நவம்பர், 2013

    பாக்கியசாலிகள் :


     பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் "தவம் - தற்சோதனை", இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற "பாக்கியசாலிகள் நீங்கள்". உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான், நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், முழுமுதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க, உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்த இறை சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.

     - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    ஞாயிறு, 10 நவம்பர், 2013

    அறிவும் புலன்களும் :

    மனிதன் அறிவு மற்றெல்லாவற்றையும் விடச் சிறப்புற்றிருந்தும் அது ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்குண்டு மயங்கி இன்ப துன்ப அனுபோக அனுபவங்களிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. ஆன்மாவின் களங்கங்களான பழிச்செயல் பதிவுகளைத் தூய்மை செய்து பரம்பொருளை உணர்ந்து அதோடு கலந்து முடிவதற்கே உடலை ஒரு கருவியாக அமைத்துக் கொண்டிருக்கும் உண்மையினை மறந்து, மயக்கத்தில் (மாயை நிலையில்) செயல்புரிந்து கொண்டிருக்கின்றது. அறிவு முதிர்ந்து சிந்தனையினால், தானே தெளிவு பெறும்போது அல்லது தெளிந்தவர் சுட்டிக்காட்டி உணர்த்தும்போது அறிவு விழிப்புநிலை அடைகிறது. கடவுள் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அறிவில் ஓரளவு உயர்ந்தோர்களுக்கே ஏற்படுகின்றது. அறிவின் கூர்மை பெற்றவர்கள் மாத்திரமே சிந்தித்து அக்குறையை அறிவின் விளக்கத்தால் போக்கிக் கொண்டவர்கள் சிலர். அந்நிலையை உணர்ந்த ஞானிகள் விளக்கிய போதனைகளை கடைபிடித்து நலம் பெற்றவர்கள் பலர்


    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

    சனி, 9 நவம்பர், 2013

    திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்:

    திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்:

    "திளைக்கும் வினைக்கடல்
    தீர்வுறு தோணி
    இளைப்பினை நீக்க
    இருவழி உண்டு
    கிளைக்கும் தனக்கும் அக்
    கேடில் முதல்வன்
    விளைக்கும் தவம் அறம்
    மேற்றுணை யாமே "

    திளைக்கும் வினைக்கடல் என்றால் என்ன? ஒவ்வொருவரும் வினைக் கடலாகத்தான் இருக்கிறோம். இதுவரை செய்த செயலின் தொகுப்பே மனிதன். தீயவினைப் பதிவுகள் அவ்வப்போது வாழ்வில் துன்பங்களை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே, இந்தக் கடலைக் கடப்பதற்காகவே வாழ்க்கை என்ற தோணியில் போய்க் கொண்டுள்ளோம். ஆனால் அதைக் கடக்க முடியாமல் சோர்வுறுகிறோம். கிளைக்கும் என்றால் இவனுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்கும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். நமது சந்ததியினரும் கூட நன்மையே பெற வேண்டுமானால் தவமும், அறமும் வேண்டும். "தவம்" என்றால் இறைநிலை உணருவதற்காகச் செய்யக் கூடிய அகத்தவப் பயிற்சி. அதாவது உளப்பயிற்சி (Meditation). அறம் என்றால் முயற்சியையும், செயல்களையும் தனக்கும் பிறர்க்கும் எக்காலத்திற்கும் துன்பமின்றி நலமே விளைப்பனவாக மாற்றும் பயிற்சி. ஆகவே "தவம்", "அறம்" என்ற இரண்டு வழிகள் தான் மனிதனை உய்விப்பதற்கான வழி என்பது திருமூலர் வாக்கு.

    வெள்ளி, 8 நவம்பர், 2013

    உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம்:

     
    உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் தேச, மத, இன, மொழி, ஜாதி, பேதங்கள் அற்று வயதிற்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும், உணவு, உடை, இடம், கல்வி, தொழில், வாழ்க்கைத் துணை இவைகளைப் பெற்று, வாழும் திறமையறிந்து கூட்டுறவாக, ஒரே குடும்பத்தைப் போல் அன்போடும், பண்போடும் கடமையுணர்ந்து, கடமை புரிந்து, சமத்துவமாக, சுதந்திரமாக, ஆனந்தமாக, அமைதியாக வாழவேண்டும் என்பதே உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். இக்காலத்திற்கும் எதிர்கால மனித இனத்தின் நல்வாழ்விற்கும் தேவையான, உயர்ந்த வாழ்க்கை முறையை - திட்டத்தை - வகுத்து, அதன் மூலம் இன்று மனிதரிடையே நிலவி வரும், அறியாமையால் பெருகும், கற்பனை மயக்கம், வறுமை பேத உணர்ச்சி இவைகளை ஒழித்து, என்றும், எங்கும், எல்லோரும் இயற்கையில் விளையும் துன்பங்களைக் குறைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இதற்கு நாம் எடுக்கும் முயற்சி, வகுக்கும் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்:
    1) மனித இன வாழ்விற்கும், இயற்கைக்கும் ஒத்த முறையில் அது இருக்க வேண்டும்.
    2) மனித சமுதாயத்திற்குப் பொதுவாக இருக்கவேண்டும்.
    3) சிரமமில்லாமல் அமுல் நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.
    4) தொடர்ந்து பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
    5) பல நாட்களாக உடற் கருவிகளை இயக்கிப் பழகிக் கொண்ட பழக்கங்களையும், பற்றுதல்களையும், கொள்கைகளையும் உடனே மாற்றவோ, விடவோ, விட்டுவிடச் செய்யவோ எளிதில் முடியாது. ஆகையால் படிப்படியாக அவசியமான மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். இந்த நோக்கத்துடனேயே, "உலக சமாதான திட்டம்" வகுக்கப்பட்டிருக்கிறது.



    இந்தத் திட்டத்தின் அடிப்படை இலட்சியம் யாதெனில் ;-
    உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் தேச, மத, இன, மொழி, ஜாதி, பேதங்கள் அற்று, வயதிற்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும், உணவு, உடை, இடம், கல்வி, தொழில், வாழ்க்கைத் துணை இவைகளைப் பெற்று, வாழும் திறமையறிந்து கூட்டுறவாக, ஒரே குடும்பத்தைப் போல் அன்போடும், பண்போடும் கடமையுணர்ந்து, கடமை புரிந்து, சமத்துவமாக, சுதந்திரமாக, ஆனந்தமாக, அமைதியாக வாழவேண்டும் என்பதேயாகும்.

    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
     
     

    புதன், 6 நவம்பர், 2013

    பிரம்மம்

    இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களிலே, இயக்கங்களிலே மனிதனுடைய அறிவிற்கு எட்டியவை, எட்டாதவை என்று இரண்டாகப் பிரித்தால் புலனறிவுக்கு எட்டாதவை மனம், உயிர், மெய்ப்பொருள் இவையாகும். இவை மறைபொருள் என்று கூறுகின்றோம். வெறும் நூலறிவினாலே இந்த மறை பொருட்களை விளக்க முடியாது. அவனே அதுவாகி அந்நிலையிலே தோய்ந்து உணர்ந்த தெளிவிலே தான் விளக்க முடியும். மனத்தின் உண்மையான அடித்தளத்தை மனத்தின் நிலையை விஞ்ஞானிகளால் உணர முடியாது. முழுமுதற் பொருளாகிய அந்த பிரம்மமே, சுத்தவெளியே மனதிற்கு ஆதி நிலையாக உள்ளது என்று எண்ணத்தக்கதாக, கருதக் கூடியதாக, அறிவுநிலை அதுவாகி மாறி உணர வேண்டும். அதுவே, இயக்கத்தில் மனமாக இருக்கிறது. தன் உணர்வில் அறிவாக இருக்கிறது. தன் முடிவில் பிரம்மமாக, முழுமுதற் பொருளாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. பழத்திலே சாறாக இருப்பது எதுவோ, அதுவே வெளியிலே தண்ணீராக இருக்கிறது. அதே போலத் தண்ணீர் நிற்கின்ற இடத்திற்குத் தகுந்தவாறு அதனைக் குட்டை, ஏரி, ஆறு என்று குறிப்பிட்டுப் பேசுவது போல அந்த பிரம்மமே, சுத்தவெளியே எல்லாவற்றிலும் கலந்தும் ஊடுருவியும் உள்ளது.

     - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    செவ்வாய், 5 நவம்பர், 2013

    எது உயர்ந்தது தவமா? தற்சோதனையா?

    கேள்வி :எது உயர்ந்தது தவமா? தற்சோதனையா?

    பதில் :

    ஒரு ரூபாய் நாணயத்தில் எது உயர்ந்தது? பூவா? தலையா? தற்சோதனையற்ற தவம், சித்தென்னும் நிலைக்குள் சிக்கும் வாய்ப்புண்டாம். தவமற்ற தற்சோதனை, எண்ணியது முடிக்கும் திறனின்றி, க...ண்மக் கடல் தாண்டும் வழியின்றி சிக்குமாம்.

    பசி தீர்க்க தோசை நம் முன்னே வைக்கப்படுகின்றது. நாம் ஒரு கேள்வி கேட்கின்றோம், எது தின்றால் பசி போகும்? தோசையிலுள்ள உளுந்து தின்றாலா, இல்லை அரிசி தின்றாலா என்று? உங்கள் முன்னே உளுந்தும் அரிசியும் தனித்தனியாய் வைக்கப்படவில்லை. அது போன்று தவமெனும் உளுந்து முக்கியமா? இல்லை தற்சோதனையெனும் அரிசி முக்கியமா என்றால், இரண்டும் இணைந்து தானே பயிற்சி எனும் தோசை வடிவில் நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. எடுத்து உண்டால், பசி போகும். அமைதி கிட்டும்.

    திங்கள், 4 நவம்பர், 2013

    கருவிலே திருஉடையார் ஆதல்

    வினா: சுவாமிஜி, "கருவிலே திருஉடையார் ஆதல்?" என்கிறார்களே அதன் பொருள் என்ன?

    மகரிஷியின் விடை: பதினான்கு வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் உடற்பயிற்சி, தவம் மற்றும் காயகல்பப் பயிற்சி கற்றுப் பயின்று வந்தால் வித்தில் உள்ள குறைகள் அகன்று விந்து-நாதம் தூய்மைப்படும். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மற்றும் மனவளம் மிக்கதாகவும், அறிவுக் கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் பொழுதே சான்றோனாகத் தோன்றுவதை "கருவிலே திருஉடையார் ஆதல்" என்கிறார்கள்.

    விவசாய, விஞ்ஞானத் துறையில் எவ்வாறு வித்து பழுதடைந்து இருந்தால் அதிலிருந்து தோன்றும் மரம் பழுதடைகிறதோ, எவ்வாறு வீரியவித்தை உபயோகித்தால் பலன் சிறப்பாக உள்ளதோ, அதே போன்ற இயற்கை நியதி இதற்கும் பொருந்தும்.

    ஞாயிறு, 3 நவம்பர், 2013

    அறிவை அறிந்து வாழ்கையில் வெற்றி பெறுவோம்



    • "சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம்."

      "முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட உடலும் உள்ளமும் துன்பங்களைத் தாங்க வல்லமையுடையவை ஆகின்றன."

      "கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவு அடைகிறது. இது போல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கும்".

      - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

    சனி, 2 நவம்பர், 2013

    விடுதலை



    எவ்வளவு தான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், முறை மாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.

    - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

    வெள்ளி, 1 நவம்பர், 2013

    உறக்க நிலையில் விழிப்பு :

     பத்து நிமிடம் செய்தோமானால் , தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருக்கிறது என்றால் அதுவே லாபம்தான் . போகப் போக ஒரு நிமிடம் கிடைக்கும் . " தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிற போது தான் அது யோகம் ".... நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் செய்கிற போதே , நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதை தெளிவு படுத்திக் கொள்வதற்கு , உரப்படுத்திக் கொள்வதற்கு இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம்த் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் . அது வந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த அக்கறையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகிற பலன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், எல்லா அம்சங்களிலும் உங்களைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள் .

    --வேதாத்திரி மகரிஷி