Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 31 ஜூலை, 2013

கனவு

செவ்வாய், 30 ஜூலை, 2013

பஞ்சகோசங்கள்

கோசம் என்றால் உறை என்பது பொருள். ஐந்து கோசங்களுக்கு மத்தியில் தான் மனம் மையம் கொண்டு செயல்படுகின்றது. கோசங்களை மனதின் எல்லைகள் என்றும் சொல்லலாம்.

உடல் தேவையான உணவைப் பற்றி எண்ணும்போது, மனம் அன்னமய கோசத்தில் இயங்குகிறது. ஒரு கருத்தைப் பற்றி எண்ணும்போது மனம் மனோமய கோசத்தில் இயங்குகிறது. தவத்தில் அமர்ந்து மனம் உள்நோக்கி உயிரின் மீது வைக்கும்போது பிராணமய கோசமாக இயங்குகிறது. மனம் விரிந...்து சூரியன், நட்சத்திரங்கள், பிரபஞ்சம் இவற்றை எண்ணும்போது விஞ்ஞானமய கோசமாக இயங்குகிறது. பிரபஞ்சத்தையும் தாண்டி, இறைநிலையான சுத்தவெளியில் மனம் ஒன்றி அதில் திளைக்கும்போது ஆனந்த மயகோசமாக இயங்குகிறது.

அன்னமய கோசத்திலிருந்து ஆனந்தமயப் பேறு பெறுவதே முழுமைப்பேறாகும். ஆனந்த மய கோசத்திற்கு இட்டுச் செல்லும் தவப் பயிற்சியே துரியாதீதமாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

திங்கள், 29 ஜூலை, 2013

கருமையம்" ஓர் "தெய்வீகப் பெட்டகம்

உடலியக்கத்தாலும் மன இயக்கத்தாலும் ஏற்படும் சீவகாந்த ஆற்றலின் தாக்கங்கள் அனைத்தும் உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலில் கலந்து சுருங்கிக் கருமையத்தில் இருப்பாகி விடுகின்றன.உடலில் உள்ள சீவகாந்தம் தோல், நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், மூலமாக முறையே அழுத்தம், சுவை, மணம், ஒளி, ஒலி, இவையான மாற்றம் அடைந்து வெளியாகிப் பரவுவது போலவே கருமையத்தில் அமைந்திருக்கும் பதிவுகள் அவ்வப்போது மூளைச் செல்கள் மூலம் விரிந்து எண்ணங்கள் என்னும் அகக் காட்சிகளாக மலர்கின்றன. எனவே, 1) கருமையம், 2) மூளை, 3) புலன்கள், இம் மூவகையும் வான்காந்தக்களத்தின் சிறப்பு மிக்க உயிரினங்களின் செயல்பாடுகளாகும். கருமையத்தில் ஒரு பதிவு ஏற்பட்டால் அது எப்போதும் அழிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அது ஒரு பதிவேடுபோல உதவுவதோடு அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபு வழிப் பதிவுகளாகச் சிறிதுகூட மாறாமல் ஜெராக்ஸ் பிரிண்ட் போல பல தலைமுறைகளுக்கும் தொடருந்து வரும். மேலும் இறைநிலையானது தனது பரிணாம நியதியின் மூலம் விண்ணாகி, பஞ்சபூதங்களாகி, அண்டங்களாகி, உலகமாகி ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரையில் வந்த பரிணாம இயக்கங்களின் பதிவுகள் அனைத்தும் மனிதனுடைய கருமையத்தில் அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடத்தில் உள்ள கருமையம் இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள "தெய்வீகப் பெட்டகமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 27 ஜூலை, 2013

கணவன் மனைவி - பொருளீட்டல்

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தைக் கணவன் மனைவி இருவருமே உயிர் போல் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவாகவே குடும்பத்தி...ல் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.
பொருள் ஈட்டுதலில் கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல்லது ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வான திறமையும் பொறுப்பும் உடையவராகவோ இருக்கலாம். ஆயினும் காப்பது, நுகர்வது, பிறர்க்கிடுவது ஆகிய செயல்களில் இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும்.
வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் இக்காலத்தில் கணவனோடு மனைவியும் பொருளீட்டல் துறையில் முயல வேண்டும். வருவாய் குறைவாயுள்ள குடும்பத்தில் சிக்கனத்தின் மூலம் அதை ஈடு செய்வதில் கணவனை விட மனைவிக்கே அதிகப் பொறுப்பு உண்டு.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 26 ஜூலை, 2013

மொழி



தாய்வழியாகக் கற்கப்படும் மொழியைத் தாய் மொழி என்று சொல்லுகிறோம். ஆனால் மொழியே தாயல்ல; தாய் போல மதிப்பதற்கும் இல்லை. ஏனெனில் மனிதனே இன்று உலகில் நிலவி வரும் மொழிகள் அனைத்தையும் தோற்றுவித்தான், வளர்த்தான், வளர்த்து வருகிறான்; வேண்டாதவற்றை அழித்து விட்டான்; இனியும் அவ்வாறே அழித்து விடுவான். மனித சமுதாயம் வாழ்வதற்கு ஒரு மொழியே போதும். ஆதலால் கடைசியாக மனிதன் மீதியாகக் கொள்ளப் போவது ஒரு மொழி மாத்திரமே.

மொழிகளைத் தோற்றுவித்த மனிதன், அவன் நல்வாழ்விற்காக வேண்டாதவற்றை அழித்து விட, ஒழித்துவிட உரிமையும் பெற்றிருக்கிறான், ஆற்றலும் பெற்று இருக்கிறான்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வியாழன், 25 ஜூலை, 2013

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருளியது



குற்றம்

எவருக்கேனும், எப்பொழுதேனும், துன்பத்தை விளைவிக்கத் தகுந்த எண்ணம், சொல், செயல்களைக் குற்றம் என்று அனுபவ அறிவால் மதிக்கின்றோம்.

அறிவு
அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும், நல்முடிவும் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே 'அறிவு' எனப்படும்.

ஆசை
எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.

நான் யார்
"நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். . எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.

இன்ப துன்பம்
இன்ப துன்ப தோற்ற மாற்றம் இயல்பாராய்ந்தறிந்திடில்
அன்பெனும் பேரூற்று அறிவிற் சுரந்திடும்.
இன்பத்தும் துன்பத்தும் இயற்கையும் கற்பனையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்.

வாழ்த்து
எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும்.

எண்ணம், சொல், செயல்
எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும். எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

உயர்புகழ்
புகழ் என்பது தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வரவேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன்செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலைதான் புகழாக இருக்கும். அதுவே உயர்புகழாகும்.

மனத்தின் நிலைகள்
தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே உறுப்புப் பதிவுகள். இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல்மனம் அல்லது புறமனமாகும். தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாவது நடுமனம். இவை அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத்திரளில் பதிவாகிவிடுவது அடிமனம். இவையே conscious mind, sub-conscious mind & super-conscious mind எனப்படுகின்றன.

சினம்
பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முடியாது.

மனம்
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அது தான் அதன் இயல்பு, தன்மை. அதாவது எண்ணங்கள் பிறந்து கொண்டு தான் இருக்கும். இந்த விதியை உணர்ந்து விழிப்புடன் இருந்தால் உயர்வு. அறியாமல் மனத்தின் போக்கிற்கு எண்ணத்தை விட்டு விட்டால் தாழ்வு.

ஐவகைப் பற்று
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை.

செயல் விளைவு
நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

எண்ணம்
எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

பேரற வாழ்வு
குற்றம், குறை, பகை, கோள்சொல்லல், வஞ்சம் ஐந்தும் ஒழித்து
நற்றவம், நட்புணர்வு, நலம் பிறர்க்குச் செய்தகுதி,
ஞானநெறி நாட்டமொடு மன்னிப்பு ஐந்தும்
பெற்று அதன்படி வாழ்ந்தால்
பேரற வாழ்வாகும் அது

உறவும் துறவும்
உலக வாழ்வில் பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்ற நான்கிலும் பற்று ஏற்படுவது இயல்பேயாகும். கடமை உணர்வோடும், அளவு-முறை அறிந்த விழிப்போடும் ஆசைகளை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப்பயனை எய்த அவசியம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
 

புதன், 24 ஜூலை, 2013

எண்ணத்திற்கு உயர்வளிப்போம் ஆராயிந்து

நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வைக்க வேண்டும். தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடமளிக்கவே கூடாது. மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் ஆராய வேண்டும். விழிப்புநிலை எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.
எண்ணந்தான் அனைத்துமே ! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை, நன்மையும் தீமையும் எண்ணத்தினுள்ளே ! சிறிதும் பெரிதும் எண்ணத்தினுள்ளே ! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. எண்ணத்துக்கு அப்பால் எதுவுமே இல்லை.
எண்ணத்தின் உயர்வால் தனக்கும் உயர்வு, உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து தனக்கும், உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்துகொள்ள வேண்டும். எண்ணத்தை உயர்வாக்க வேண்டுமானால் முதலில் ஆசையை முறைப்படுத்திச் சீரமைத்து, சினம் தவிர்த்து, கவலையையும் ஒழித்து, நான் யார் என்ற உண்மையை உணர்ந்து, அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலே இருக்கப் பழக்க வேண்டும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 23 ஜூலை, 2013

கடமையில் விழிப்புணர்வு

இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.

பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்...
ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும். பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, பிறர் உதவி என்பது கூறிய ஆயுதம் போன்றது. தவறி மாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும் என்று விசாரணையை துவக்குகிறாரோ அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.

உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும்.  

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உலக ஒற்றுமை :
யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ! என்ற
எண்ணத்தால் உயர்வடைந்த தமிழன் பண்பு
சூதும் வாதும் நிறைந்த தெளிவில்லாத
சுயநலமிகள் செயலால் களங்கமாச்சு;
போதும் நாம் கண்ட பலன் குறைகள் தம்மைப்
போக்க உயர்சிந்தனையால் முயற்சி செய்வோம்,
தீதும் நலமும் ஆய்ந்து செயல் திட்டத்தைத்
திருத்திக் கொள்வோம் இன்று உலகை நோக்கி.
.
அறிவின் அளவு:
"அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம் அணுக்குள் அடக்கலாம், அவ்அறிவின் அளவையறி".
.
"செயல்ஒழுக்கம், சேவை,
சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம்,
இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 22 ஜூலை, 2013

ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும்

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களானால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும். அந்தக் குடும்பத்தில் நல்ல குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தை அறிவுடையவனாக சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும், குடும்பத்திற்கும் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால் அந்தக் குழந்தைப் பேறுக்கு உரிய ஆண், பெண் இருவருமே சம உரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நி...றைந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மாத்திரம் கல்வி வசதி, செல்வ வசதி இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்? ஒரு புறம் அறிவிலே, செல்வத்திலே, மற்றும் எல்லாவற்றிலுமே எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி. அங்கே பிறக்கக் கூடிய குழந்தை கூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையமைப்பிலேயே ஆண் பெண்களுக்கு சில வேறுபாடுகள் உள்ளன. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்தான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 21 ஜூலை, 2013

Vethathiri Maharishi's speech:



“We are facing so many problems in life. Even if there is no real problem, man has the habit of creating some problem. We don't know how to live at all without problems. Let us understand one truth. We don't know where we came from and where or when we will go. We know the date of our birth, we also know that we have come with a return ticket; only we don't know the date of departure. The period between these two dates is called 'life'. We only require to live this life without any problems as far as possible, living and dying peacefully.

When we have to visit a new place, we try to find out the route and the most convenient method of travel. Similarly, in this journey of life we should know the best method of living. Unfortunately, everyone may not be able to know the correct method of living and that is why great leaders have come and shown us the way. It is in the names of these leaders the religions have started. Two basic principles in all religions are worship of god and living virtuously to maintain harmony in society. Worship of God includes an understanding of the law of nature and living in tune with that. For maintaining harmony in society one should live without creating pain to others. Different religions started at different times and according to the stage of evolution at that time and place their teachings appear to be different. While the leaders in whose name the religions were started had clear vision about God, subsequent leaders were not so enlightened and started giving their own interpretations. Over centuries, due to lack of true knowledge of God and due to power politics the truth about God has been lost. Ideally, in a true religion there is no place for egotism, the six temperaments, the five great sins, inequality, violence, poverty and ill-treatment of women. If such a true religion exists all of us can accept it and follow it. But do we have such a religion today? Our World Order of Holistic Unity is such a religion. We should not even call it a religion; in fact, it is a set of principles and a way of living to bring about equality among all of us. In Tamil it is called a “Samayam”, 'Sama' meaning 'Equal' and 'Iyam' stands for 'Ism'. This is common to all humanity and it is eminently suitable to every one of us to practice, the only God in this religion is the almighty, divine Absolute Space. It preaches love, compassion and harmony in all human relationships. The philosophy of magnetism is the basic tenet. Being harmonious with all living beings doing our work in tune with nature and to lead a moral, dutiful and charitable life is the essence of this new way of living.

In essence, not giving pain to anyone physically or mentally and being ready to help to the extent possible are the two basic principles of the World Order of Holistic Unity.

Let us assume that all the people in the world start living like this, the world would be peaceful, happy and prosperous. Some may say that it would be like Heaven. Here we should be careful. Hell and Heaven are two words which have created lot of troubles just like “God” has been put behind the curtains and so many stories have been created. So has been the case with Hell and Heaven. What we should understand is that every action has an appropriate result as per the perfect system of cause and effect. Therefore, all our actions should be such that they are in harmony with nature and are beneficial to members of the society.

We should understand that the all-pervading and benevolent consciousness is working everywhere. A few examples will make it clear. (1) When a male child is born, two or three years later a female child is produced by nature, as the counterpart. (2) We all know that the food we eat gets digested. But who does this? We are not consciously doing it. Thus within us even without our knowledge there is a consciousness which does it so perfectly. This is happening every day in every single living organism. (3) Even before living beings are born the all-conscious nature has provided all the means for food and shelter. That is why it is called 'providence'.

We are not able to appreciate this because we are not able to see the consciousness physically. But can we ignore this? The clapping of our hands may be our own action, but the production of sound is the work of nature. Thus, everywhere we are governed by this all pervading law of nature.

To lead a harmonious life we should start within our families. Instead of fighting, tolerance, adjustment and sacrifice should be our watch words. If we practice this for one week we can find the difference. This would percolate to the whole world in due course"
 
-Vethathiri Maharishi

சனி, 20 ஜூலை, 2013

அருட் தந்தை அருளிய அருள்தொகுப்பு



1.இறைநிலையை நோக்கிய நினைவில் இருக்கின்ற உயிரினங்களில் சில, அடுத்து என்ன வரப்போகிறதோ, அதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் தி...றன் பெற்றவையாக இருக்கின்றன. மழை வரப்போகிறதென்பதை எறும்பு, மயில் போன்ற உயிரினங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றன. ஆனால், மனிதன் விஞ்ஞானக் கருவிகளின் மூலம் தான் தெரிந்து கொள்கிறான். -

2.மழைநீரைப் போன்றே மனிதனுடைய ஆற்றலும் எல்லையற்றது. அதை உணர்ந்து கட்டுப்படுத்தி, தேக்கி, முறையாகச் செலவு செய்ய வழி கண்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலம் காக்கலாம். மனவளம் பெருக்கலாம். வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, இன்பம், அமைதி இவற்றை அடையலாம். இவ்வாறு ஒழுங்குப்படுத்தப்பட்ட மனிதனுடைய ஆற்றல் அவனது குடும்பத்திற்கும். சமுதாயத்திற்கும் வளம் பெருக்கும் ஆற்றலாக அமைகிறது. மனிதனுடைய ஆற்றலைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தித் திட்டமிட்ட முறையில் செயல்படுத்திப் பயன் காண்பதற்கு முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட ஓர் உளப்பயிற்சியே தியானம் ஆகும்

3.தியானம் என்பது வடமொழிச் சொல். இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அகத்தவம் ஆகும். உயிர் மீது மனம் செலுத்தி அமைதி நிலைக்குக் கொண்டு வந்து, அந்த அமைதியின் மூலம் சிந்தனையை உயர்த்தி, அறிவை வளப்படுத்தி, வாழ்வில் நலம் காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சிதான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாதத் தேவையாகும்.

4.இறைவன் என்றால் உண்மை என்று பொருள். எது மெய்ப்பொருளோ அது உண்மை. உண்மையை உணர்ந்து பிறகு, அந்த உண்மைப்பொருள் அனைத்து உயிரினங்களுக்குள்ளாக அறிவாக இருக்கிறது. எனவே, பிறர் மனம் நோகாமல், துன்பப்படாமல் இருக்கும் அளவில் எந்தச் செயலையும் செய்ய வேண்டும். அதை அறநெறி என்று சொல்கிறோம். துன்பம் செய்யாதிருப்பது ஒழுக்கமாகும். துன்பத்திலிருப்பவர்களுக்கு உதவி செய்வது ஈகையாகும். ஒழுக்கமும் ஈகையும் இல்லையானால் அறம் என்பது கிடையாது. இறையுணர்வு வந்தால்தான் அறநெறி என்பது இயல்பாக அமையும்.

5.நாமம் என்றால் ஏதோ இப்படி போடுகிற கோடுதான் நாமம் என்று கருதி வைத்திருக்கிறோம். நாம் என்று சொன்னால் மனிதகுலம். அம் என்றால் பிரம்மத்தைக் குறிக்கிறது. ஓங்காரத்தைக் குறிப்பது அம். நாம் + அம் = நாமம். நாமே இறைநிலையாக - பிரம்மமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

6.பாமரம் - பாமரன் பாமரம் என்பதுதான் பாமரன் என்றானது. பாய் + மரம் = பாய்மரம். பாய்மரமானது காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது. அதுபோல் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் பாமரன் ஆவான். பாமரன் என்றால் அறிவின் வழியில் செல்லாதவன்.

7.இக்காலத்தில் விஞ்ஞான அறிவு விரைவாக முன்னேறிக் கொண்டு வருகின்றது. செயலுக்கும், விளைவுக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாகச் சிந்தித்து உணருகின்ற ஆற்றல் மக்களிடம் பெருகி வருகின்றது. விளைவறிந்து விழிப்போடு செயலாற்றி வாழுகின்ற இக்காலத்தில், சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற எல்லோரும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுவகை மனோநிலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது இன்றியமையாததாகி விட்டது.

8.கடவுள் தன்மை, இயற்கைத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், ஞானம் முதலிய அனைத்துக்கும் குடும்பத்துள்ளேயே பாடங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி இருந்தும் பலர் தோல்வி அடைகிறார்கள். எங்கோ சிலர் தான் வெற்றி அடைகின்றனர். அந்தப் பாடங்களால் நாம் புரிந்து கொண்டதை மதித்து நடந்தால் வெற்றிதான்.

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஆதியே அனைத்தும் :



இந்த அகண்டாகாரமாக உள்ள பிரபஞ்சத்தை நினைவில் கொள்வோம். தோற்றங்களாகவுள்ள எல்லாவற்றையும் கழித்து அவற்றின் மூலப் பொருளாகவுள்ள ஆகாசத்தை (Ethereal Particle) நினைத்துக் கொள்வோம். நுண்...ணிய இயக்கத்துகள்கள் முதல் கொண்டு பெரும் பெரும் நட்சத்திரங்கள் வரையில் ஒவ்வொன்றிலும் [1] தன்னியக்கச் சூழல் விரைவு (Self rotative force) [2] ஒன்றால் மற்றொன்று தூண்டப்பெற்று தொடரியக்கம் (Chain action) [3] மோதுதலிருந்து எழும் பிரதிபலிப்பு (Reflex action) [4] அவ்வவதற்கேற்ற விளைவுகள் (Results) என்று நான்கு வகையான இயக்கங்கள் நடைபெறுவதை உணருவோம். ஆகாசம் என்னும் நுண்துகள்கள் தான் விஞ்ஞானிகளால் Ethereal Particle அல்லது Electron என்று சொல்லப்படுகிறது. அது இயங்கும் இடத்திற்கேற்ப, அது பெறும் மாற்றம், சிறப்பு இவைகளிலிருந்து மின் அணு (Electron) கரு அணு (Neutron) துணைக்கரு அணு (Proton) எனப் பேசப்படுகிறது.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்களில் ஒருவரைப் பேரன் என்றும், மற்றவரைத் தந்தை என்றும், மூன்றாமவரை தாத்தா என்றும் சொல்கிறோம். அதே போன்று பெண் வரிசையில் பேத்தி, அன்னை, பாட்டி என்று கூறுகிறோம். ஒப்பிட்டு நோக்கும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பரிணாமத்தால் உள்ள வேற்பாடு, உறவு, சிறப்பு இவைகளைக் கொண்டு தான் பெயர்கள் வேறு வேறாகக் கொடுக்கிறோம். மனிதன் என்ற நிலையில் எல்லோரும் ஒன்றே. இது போன்றே ஆகாசமெனும் பரமாணு, பரிணாமத்தால் அடைந்த பல்வேறு தனமைகளை ஒப்பிட்டு நோக்கும் அறிவு, பெயர்களை பலவாக ஆக்குகிறது. இது பிரித்து உணர்வதற்கு எளிதாக உள்ளது.

இந்தப் பகுத்துணரும் ஒப்புவமை நோக்கு (Relative Concept) புலன்களால் விளைந்த சிறப்பாகும். புலன்களை கடந்து நிற்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவு இவை அனைத்தையும் தொகுத்துணரும் போது பெறப்படும் உண்மை எல்லாமே ஒரு பொருள் என்பதாகும். அதுவே பொருள் நிலையில் ஒன்றாகவும், நிகழ்ச்சி நிலையில் வேறுவேறாகவும் உணரப் பெறுகின்றது என்பது விளங்கும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 18 ஜூலை, 2013

துன்பம் இல்லாத நிலை :

ஆறாவது அறிவு முழுமை பெறுகிறது என்றால், விரிந்து விரிந்து பரம் பொருளோடு இணைந்து இதற்கும் மேலே விரிய முடியாத அளவு அந்த முழுமுதற் பொருளோடு இணைந்துவிட்ட பிறகு இனி எங்கே விரியும்? அதற்கு மேல் விரிவு இல்லை. அந்த வகையிலே இந்த மனம் அசையாப் பொருளை அறிந்து அதோடு நிலைத்துவிட்டால் அங்குதான் மனம் என்பது நிலைக்க முடியும் மற்ற பொருட்கள் எல்லாம் அசைந்து கொண்டே இருக்கக் கூடிய தன்மையுடையவை; மாறிக் கொண்டே இருக்ககூடிய தன்மையு...டையவை. அதே போல மனமும் அசைந்து கொண்டு மாறிக் கொண்டுதான் இருக்கும். அதிக வேகமாக அசைந்து கொண்டு இருக்கின்ற பொருளோடு மனதை வைக்கின்ற வரைக்கும் மனம் அந்த அளவுக்கு ஆடிக்கொண்டு அசைந்துகொண்டு தான் இருக்கும்.
இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில் இந்த உடலைப் பாதுகாக்க, வாழ்க்கையை நடத்திட, அசையும் பொருட்களோடு தொடர்பு கொள்வது அவசியம் தான். ஆனால் அதே நேரத்தில் எப்பொழுதும் அசைந்து கொண்டே ஆடிக்கொண்டே இருக்கின்ற நிலையில் இருக்கின்றதைவிட நிலைத்து இருப்பதும் அவசியம் தான். ஆகவேதான் மனிதனுக்கு நிலைத்த பொருளாகிய கடவுளை, தெய்வத்தை, வழிபடுவது, வணங்குவது, அதை உணர்ந்து கொள்வது, அதோடு லயித்து இருப்பது என்பது அவசியமாயிற்று. மனிதனின் அறிவு எட்டிய நிலையில் அந்த பூரணத்துவம் வந்துவிட்டதானால், அப்பொழுதுதான் அடிக்கடி உணர்ச்சிவயப்படக் கூடிய தன்மையும், பேராசை, சினம், கடும்பற்று, இன்னும் முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று ஆறு குணங்களாக தான் மாறாதிருக்கக்கூடிய ஒரு நிலைத்த பேறு உண்டாகும்.  



 "மனதை அடக்க நினைத்தால் அலையும்,
மனதை அறிய நினைத்தால் அடங்கும்".
.

"அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி".
.

மனதின் அடித்தளம் இறை நிலை:

"அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும் உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..
 

செவ்வாய், 16 ஜூலை, 2013

வினைப்பதிவு நீக்கல்


பாவபதிவு

ஆசிரியர் பணியில் இருக்கும் நான் சில சமயங்களில் மாணவர்களைக் கண்டிக்கவும்,தண்டிக்கவும் வேண்டிருக்கிறது.இதுபோல் நீதிபதியும் தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறார்.இது பாவபதிவில் சேருமா ?

சுவாமிஜி அவர்களின் பதில்--
...
மாணவனின் நன்மைக்காகவே கண்டிப்பதால் இச்செயல் புண்ணியத்தையே சேரும்.கடமை உணர்வோடு விழிப்பு நிலையில்,சினப்படாது,துன்பம் வராத அளவிற்கு,கண்டிப்பு இருக்குமானால் அது பாவபதிவைத் தராது.
ஒரு குற்றவாளிக்கு நீதிபதி சிறைத் தண்டனை தருகிறாரென்றால் அது பாவமாகாது.ஏனெனில்,மனப்பிணக்கோ,பகையோ அங்கு இல்லை.குற்றவாளி ஒருவன்,தான் செய்த குற்றத்தை உணர்வதற்கு எவ்வளவு காலமாகும் என்று கணக்குப் போட்டு அவன் திருந்துவதற்குண்டான பயிற்சித் திட்டம் தான் தண்டனை என்பது.
தண்டனை என்பது குற்றவாளி திருந்துவதற்குண்டனா ஒரு வாய்ப்பாக,திருந்தும் வரை சமுதாயத்தில் மீண்டும் தவறு செய்யாதிருப்பதற்கு ஒரு தடையாக இருக்கச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு விதிமுறையாகும்.
ஒருவன் குற்றம் புரிவதற்கு அவனைச் சரியாக வளர்க்காத சமுதாயம் தான் காரணம்.
எனவே,அவன் திருந்தும் வரை அவனுடைய தேவைகளுக்காகும் செலவைச் சமுதாயம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.சிறைக்கைதி என்றால்அரசாங்க விருந்தினன்.
குற்றம் செய்பவர்களைத் திருத்துவதற்காகத் தான் தண்டிக்கிறோம்.அது பாவபதிவைத் தராது

திங்கள், 15 ஜூலை, 2013

அன்பு - பாசம்

அறிவு அவ்வப்போது அடையும் பலவித நிலைகளைத் தனித் தனியே குறிப்பிட்டுக் காட்ட நாம் பல சொற்களை உபயோகிக்கிறோம். அவற்றில் அன்பு, பாசம் என்ற சொற்கள் இருவித நிலைகளை குறிக்கின்றன. உருவ அளவிலே - பொருள் அளவிலே - ஞாபகம் குறுகி ஒரு பொருள் தனக்குச் சொந்தம் என்று கருதும் கற்பனை மீது எழும் பற்றுதல் நிலையைப் பாசம் என்று சொல்லுகிறோம். ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே - உயிர் நிலையை அறிந்த உயர்விலே - பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே - ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே - கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழிகாண வேண்டும் என்ற கனிவிலே - ஏற்படும் பற்றுதலை அன்பு என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்னும் போது அது அன்பு நிலையாகும். என் மனைவியை - என் குழந்தைகளைப் பாதுகாக்க முயற்சிப்பேன் என்னும் போது அது பாசம் என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது அன்பின் செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது பாசம் என்று சொல்லப்படும். ஆகவே, ஒரு எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே பாசம் எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும், அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே அன்பு எனப்படும்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"கருணை, அன்பு, ஆராய்ச்சி, காதல், தியாகம்,
காமம், சினம், பயம், வெட்கம், வீரம், சோகம்,
அருவருப்பு, இன்பதுன்பம், ஆசை, பாசம்,
ஆர்வம், தயை, விருப்பு,வெறுப்பமைதி ஞானம்,
கருவம், பக்தி, வைராக்கியம், பொறுமை, மானம்,
கவலை, யுக்தி, யூகம், மாய்கை, இரக்கம்
நிருவிகற்ப மௌனம், மற்றும் எண்ணிறந்த
நிலை குறிக்கும் பெயர்கள் பல அறிவிற்குண்டு".

.
"இயற்கையிலே நிகழ்ச்சி யெல்லாம் கணித்துப் பார்க்க
இன்பம் துன்பம் அன்றிப் பயன் வேறுண்டோ?
செயற்கையிலே பயிற்சியினால் துன்பம் தீர்க்கும்
செயலை விடச் சிறந்த துண்டோ மனிதர்கட்கு".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 12 ஜூலை, 2013

மனிதன் கடமை

ஈட்டும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால் அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதன் கடமை. குறைந்த பட்சம் தனது வருமானத்தில் 100-ல் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு ஓங்க ஏற்ற நற்செயலாகும்.
பொருளாசை வேண்டாம் என்று ஞானிகள் பலர் கூறியுள்ளார்கள். "பிறர் நலம் கெடுக்கும் அளவிற்குப் பொருட்கள் மீது பேராசை வேண்டாம் என்ற குறிப்பே அது". கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பொருள் ஈட்டுவதை அந்தப் போதனை கட்டுப்படுத்தாது. பொருள் இன்றி வாழ முடியாது. ஒருவன் பொருளீட்டும் கடமையிலிருந்து விலகினால் அவன் கடமையைச் சேர்த்து மற்றவன் செய்துதான் ஆகவேண்டும். அது பிறர்க்கு பாரமே. ஆகவே ஞானியாக இருந்தாலும் முறையாக அறவழியில் பொருளீட்ட வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஒரு மனிதன் அறிவில் உயர்ந்திருந்தால், அதன் பயனைத் துய்க்க மக்கள் உணர்ந்து விரும்பினால், அவனுக்குப் பொருள் உதவிபுரிந்து அவன் ஆற்றலைச் சிறந்த முறையில் பயன் கொள்ளக் கூட்டு முறையில் வழி செய்து கொள்ளட்டும். அது வரையில் ஞானியானாலும் அவன் வாழ்க்கைத் தேவைக்கும் அவன் ஆற்றியுள்ள கடமைக்குப் பிறர் உழைப்பையோ தயவையோ எதிர் பார்க்கக்கூடாது. 


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

கணவன் - மனைவி நட்பு



 கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால் மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது. நமது மனவளக் கலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். நட்பையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.
...
கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும். சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பமில்லாமலிருக்கலாம்.அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும் அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும் வாழ்த்தியும் வந்தால் நிச்சயம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பங் கொள்வார்கள்.

பல மக்கள் வாழ்வில் தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெறுங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.
                                                                                    
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

.
"கணவன் மனைவி நட்பு தான்
உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது".

.
"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

.
"வாழ்க்கையிலே மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது
கணவனை மனைவியும், மனைவியை கணவனுமே".

.
"அருவநிலையாய் இயங்கும் அறிவு வாழ்வில்
அவ்வப்போ தொருபொருளின் தொடர்பு கொண்டு
மருவிநிற்கும் நிலைகளைச் சொற்குறிப்பால் காட்ட
மாற்றுப் பெயர்கள் பல உண்டு, அவற்றுள் ஆண்பெண்
இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில்வாழ
எண்ணத்தால் முடிவுகண்டோ செயலில் கொண்டோ
ஒருவர் ஒருவர்க்கு உடல்பொருளோடாற்றல்
உவந்து அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல்."

.
இளமை நோன்பு, இல்லறம், தொண்டு :

"வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயிற்சி ஏற்கும் முறையை
வகைப்படுத்த இளமை நோன்பாகும்; பொறுப்போடு
வாழ்வாங்கு வாழ ஒரு வாழ்க்கைத் துணை ஏற்று
வழியோடு கடமையுணர்ந்தாற்ற இல்லறம் ஆம்;
வாழ்வினிலே மறைபொருளாம் உயிர் அறிவை உணர
வளமான உளப்பயிற்சி அக நோக்குத்தவமாம்;
வாழ்வதனை முற்றுணர்ந்து அதை அமைதி வெற்றி
வழிகண்டு வாழவைக்கும் பேரறமே தொண்டு".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 10 ஜூலை, 2013

சமாதிநிலை

ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனத்தின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மூலத்தை அடைந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட...்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை. தன் மூலத்தை அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (expiation, superimposition and dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத்தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் (frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை.  

                                                                                         - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

திங்கள், 8 ஜூலை, 2013

கடமையும் நீதியும்

பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் வாழ்க்கைக்கு அவசியமான வசதிகள் அனைத்தையும் காலா காலாத்தில் பெற்று அனுபவிக்க எல்லோருக்கும் உற்ற சுதந்திரமே உரிமை எனப்படுகின்றது.

வாழ்க்கைத் தேவைகளைப் பெறவும், அளவு முறையோடு அனுபவிக்கவும், அறியாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இயன்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் உதவி செய்ய வேண்டியது கடமை எனப்படுகின்றது.

இந்த உரிமையை அனுபவிப்பதிலும் கடமையை நிறைவேற்றுவதிலும், பிறர் உரிமையும் கடமையும் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்ட ஒரு ஒழுக்க முறையே நீதி என்று மேன்மையாகக் கருதப்படுகின்றது. இந்த நீதியைப் பாதுகாப்பதற்குச் சமுதாயம் அவ்வப்போது வகுக்கும் கட்டுப்பாடுகளே சட்டங்கள் என மதிக்கப்படுகின்றன.

அந்தச் சட்டங்களை மீறுவது குற்றமெனவும் குற்றமிழைப்பவர்களைத் தடுக்க, திருத்த, தண்டிக்க, பாதுகாக்க எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தண்டனை என்றும் வழங்கப்படுகின்றன.

இவையெல்லாம் வாழ்க்கைத் தத்துவத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையாளர் காணும் விளக்கங்களாகும்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடமையை உணருவோம்:
"கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று
கடமை தவறாது பயனாகும்போது
சொல்லும் கருத்தும் உடைய மனிதன் ஏனோ
சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்;
அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே
ஆசைதனை பேராசையாக்கிக் கொண்டு
தொல்லை படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன்
சுய நிலையை அறிய கருதவமே போதும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


அறநெறியே இறைவழிபாடு

நமக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் இயற்கை என்று அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அதற்கு மதவாதிகள் கடவுள் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதேபோல் இந்தப் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால், இந்த உலகம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் மைல் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறது. சூரியனைச் சுற்றி வரும் பாதையிலே ஒரு நாளைக்குப் பதினைந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் மைல் ஓடுகிறது.

இதில் ஏதாவது தாமதம் இருக்குமா? இல்லை தடம் மாறுகிறதா? அவ்வளவு நேர் நிர்வாகமாகச் சிறிதும் பிறழாமல் எந்தப் பெரிய ஆற்றல் (Consciousness) நிர்வாகம் நடத்துகிறது என்று பார்த்தால், அத்தகைய பெரிய நிர்வாக ஆற்றல் பிரபஞ்சத்தில் எல்லாம் வல்ல இறைவெளியின் அழுத்தம் என்ற உந்து ஆற்றலால் தான் நடக்கிறது. அதே போல் என் உள்ளத்திலே, உடலிலே நடக்கிறதும் அதே தான். உடலிலும் சரி, பிரபஞ்சத்திலும் சரி, அணுவிலும் சரி, அணுவைச் சுற்றிலும் சரி எங்கும் நிறைந்த ஆற்றலாக இருப்பது அந்த எல்லாம் வல்ல இறைவெளி ஒன்றுதான்.

எனவே, அந்த அழுத்தமும், அதன் அறிவும் ஒன்றிணைந்த ஆற்றல் தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலுக்குத் தக்க விளைவுகளைத் தந்து கொண்டே இருக்கிறது. கையைத் தட்டினால் ஒலி வருகிறது. அதே போன்று அதிகமாகச் சாப்பிட்டால் உடனே அசீரணம். அவ்வாறு எந்தச் செயல் செய்தாலும் தவறாகச் செய்தால் அது தவறு என்று உணர்ந்த உடனே துன்பம் உண்டாகிறது. சரியாகச் செய்தால் நாம் வாழ்க்கையைச் சீராக வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்று பொருள். தவறு செய்யாது இருக்க வேண்டும். தவறு செய்தால் உடனே தண்டனை இருக்கிறது என்பதுதான் இறை ஆற்றல் உணர்த்தும் நீதி. அது கூர்தலறம் (Cause and effect system) இதைத் தெரிந்து கொள்ள இறையுணர்வு வேண்டும். தெரிந்து கொண்ட பிறகு மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அறநெறி வேண்டும். அறநெறிதான் உண்மையில் இறை வழிபாடு.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மனத்தூய்மை வினைத்தூய்மை :

"மனத்தூய்மை வினைத்தூய்மை மனிதன் வாழ்வில்
மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்;
மனம்உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்
மற்றும் தன்வினை உயர அறமே ஆம்."
.

மனமே இயற்கையின் மாநிதி :

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே;
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்
மனத்திலே உள எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்?
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

மனதின் அடித்தளம் இறை நிலை :

அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும், உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 5 ஜூலை, 2013

மனித வாழ்வின் வளம் உயர்த்தும் மனவளக்கலை

தான் உயரவும், பிறரை உயர்த்தவும் ஏற்ற பயிற்சி மற்றும் தொண்டு ஆகிய இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் முதலிய தவங்களைத் தவறாமல் இயற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.
தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள், விழிப்பு நிலையில் அறிவு செயல் படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை மாற்றிவிடலாம். ஆசை சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் தலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும், அமைதியுண்டாகும்.
சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடமிருந்து உங்களுக்கு அன்பு, நட்பு இவை கிடைக்கும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும். நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலத் தோற்றம், இயக்கம், விளைவு மற்றும் மறை பொருட்களான மனம் உயிர், தெய்வம் இவை பற்றி உணர்வு உண்டாகும்.
இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே “மனவளக்கலை”யாகும். இக் கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மான்புணர்ந்து பழகி, நலம், பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மன நிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து, சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர்வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை. இது உங்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. மனித குலத்தை உய்விக்க வல்ல நல்லதோர் விஞ்ஞானம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மதிப்புணர்ந்து பயன்பெறுங்கள்.
-->
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வியாழன், 4 ஜூலை, 2013

உணர்வுக்குயிர் கொல்லா நோன்பு

நம்முடைய உணவிற்காகப் பிற உயிரைக் கொல்லும்மோது நாம் மூன்று பாவங்களைச் செய்கிறோம்.
1.உயிர்க் கொலை
2.அதன் மூலம் அவ்வுயிர்க்கு அளிக்கும் துன்பம்
3.ஓர் உயிரின் வாழும் சுதந்திர்த்தைப் பறித்தல்.
அதனால் தான் வள்ளுவர்
“கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்கிறார். இக்குறளுக்கு மகரிஷி வித்தியாசமான விளக்கம் தருகிறார்.
ஒருவர் தன் நண்பரின் இல்லத்திற்குச் செல்கிறார். புலால் உணவு விருந்தாகப் படைக்கப்படுகிறது. இவன் மறுத்தும் அவர்கள் வற்பறுத்துகின்றனர். இவன் தன்னுடைய உறுதிப்பாட்டை கைகூப்பித் தொழுது விளக்குகிறான். பிறகு அவர்கள் வற்புறுத்தவில்லை. இத்தகைய கருணை உள்ளவனிடம் எல்லா உயிர்களும் தஞ்சமடையும். குறளின் கருத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள,
“கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்பதற்குப் பதிலாக
“கொல்லான், புலால் கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்”
எனப் படித்தால் சரியான விளக்கம் கிடைக்கும்.
இறையருள் வேண்டும் எனில் தன் ஊண் பெருக்கற்குப் பிறிதூண் உண்ணும் பாதகச் செயலைக் கைவிட வேண்டும்.
--> -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

புதன், 3 ஜூலை, 2013

பூவும் அறிவாளியும்

நறுமணம் வீசும் பூச்செடி சேற்றில் முளைத்தாலும் பாதகமில்லை. ஆனால் அதில் பூத்த மலர் சேற்றிலே விழுந்து விட்டால் அது பயனற்றுப் போகும். அதுபோன்ற அறிவாளிகள் பிறப்பு எக்குலத்திலும் எவ்வளவு இழிவாக இருந்த போதிலும் பாதகமில்லை. அவர் ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும் ஜாதி, மத, தேச, மொழி வெறியில் சந்தர்ப்பவசமாக சிக்கிக்கொண்டாலும் அவர் பயனற்றவராகி விடுகிறார்.

சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்த பூ அது வரையில்தான் பயனற்றுப்போகும். ஆனால் அறிவாளி தரம் கெட்டு விடுவாராயின் அதைத் தொடர்ந்து எண்ணிறந்த மக்கள் தரம்கெட்டுப்போக நேரிடும்.

- வேதாத்திரி மகரிஷி

இயற்கையிலேயே தியாகிகள் :



நம் நாட்டின் பண்பாட்டின் படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். ஏன் என்றால் அவர்கள் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்து விட்டுத் தான் வருகின்றார்கள். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. அந்த அளவுக்குத் துறந்த பிறகு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். சேர்ந்த இடத்திலே இந்த ஒரு பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண் மக்களுடைய கடமையாகும். சாதாரணமாக ஒரு மனைவி என்ற மதிப்பில் மாத்திரம் வேண்டியது அல்ல. பெண்மை என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய மதிப்பைப் போல நம் வீட்டுக்கு வந்த பெண்ணிற்குக் கூட அந்த மதிப்பு உண்டு என்று பார்த்து நடந்து கொள்ளலாம் அல்லவா?

எல்லாம் சரியாகப் பார்க்கும் போது சாதாரணமாக ஆணுக்கு ஆண் என்ற நட்பிலே ஒரு எல்லை வரையில் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவிலே இருக்கக் கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதைச் சரியாக உணர்ந்து நடப்பீர்களேயானால் அதைவிட ஒரு பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம். 



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பெண் வயிற்றிலுருவாகிப் பின்னுமந்தப்
பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து, மேலும்
பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு,
பெண்மைக்கே பெருமதிப்புத் தந்து உள்ளோம்;
பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்
பெருமை குன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்;
பெண்மைக்கு நமது கடன் ஆற்ற வாரீர்
பெருந்திரளாய்க் கூடி ஒரு முடிவு செய்வோம்."
.
"உத்தமியாள் அறிவுடையாள் பதியாய் என்னை
உவந் தேற்றாளை மணந்து நலமாய் வாழ்ந்தேன்,
பத்து வருடம் போச்சு குழந்தை இல்லை;
பக்தி நிலை அக்காலம் எங்களுக்குப்
புத்திரனில்லா தோர்கள் பாவி என்று
புனைந்த கற்பனைக் கதைகள் படித்ததோடு
நித்தம் அதனைச் சுட்டிக் காட்டி உற்றார்
நிந்திக்கும் சொற்களையும் கேட்டு நொந்தோம்".
.
அறிவின் திறனால் உணர்த்திய காதல் :
----------------------------------------------------------
"உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னை
உவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர் -
பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்,
பேரறிவால் வாசுகி யூகித் தறிந்தாள்,
வித்தையெனப் பலர்முன்னே மணல்கைக் கொண்டாள்
வீசியெறிந்தால்; மறைவில் அரிசிச் சாதம்
சித்தம் மகிழ்ந்தே படைத்து சூழ்ந்தோர்க் கெல்லாம்
சிந்தை நிலையறி வித்தாள், என நான் சொன்னேன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 1 ஜூலை, 2013

முதல் மனிதனிலிருந்து தொடர்ந்து வரும் மனிதர்களின் முடிவு என்ன?



" இறைவன் என்பவன் எல்லாமாகவும் வந்துள்ளான். அவனே நானாகவும் இருக்கிறான்" என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, அவனோடு நம் அறிவை இணைத்துத் தூய்மை செய்து, பதிவுகளில் இருந்து விடுதலை பெற்று, உயிர் உணர்ந்து 'வானவனாகி', பிறகு தானே அவனாக மாறித் 'தானவனாகி' இறைநிலையடைவதே மனிதர்களின் முடிவாகும்.

                                                                                   --அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இறைவனுக்குத் தேவை

உனக்குள்ளாக இருக்கக் கூடிய அறிவினைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, என்றால் அதற்கும் அப்பால் ஆதியாக இருக்கக்கூடிய ஐம்புலன்களால் உணர முடியாத இறைவனை எப்படி அறிய முடியும்? அதனால் முதல் கட்டமாக அறிவை அறிந்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் அனுபவத்தால். வாழ்க்கையிலே நம்முடைய அறிவு அந்த எல்லையை நோக்கி தான் வளர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கிறது. மனிதனுடைய அறிவு இறைநிலையின் ஒரு பகுதி தான். 
 
அந்த இறைநிலையையும் அதன் ஒரு பகுதியாகிய இயற்கையையும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவு விரிந்து கொண்டே இருக்கிறது. எனவே இறைவனை பரிந்து கொள்வது என்றால் முதலில் அறிவைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அறிவுக்கு மூலமான ஒரு நிலையை நாடிச் செல்ல வேண்டும். அந்த நிலை தான் இறைநிலை எனவே அறிவை அறியாது இறைவனை அறிய முடியாது. ஏனெனில் இறைவனே தான் அறிவாக இருக்கிறான்.
 இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல், அதனுடைய தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில் ஊடுருவி நிறைந்திருந்தால் அதுதான் நீங்கள் இறைவனுக்குச் செய்யக் கூடிய கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள், இறைவன் மகிழ்ச்சி அடைவான். ஏனெனில் அவன் அன்பும் கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான். அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும், குடலும் அற்ற இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து இறைவனை மகிழ்விக்க நினைப்பது அறியாமையே.
 
  
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி