Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நட்பு

நட்பு

 1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம்.

3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.

4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.

5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?

6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.

7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.

8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.

9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.

10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.

+ வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்


மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்

1. தன்னை உருவாக்கி வளர்த்த இயற்கை, பெற்றோர், சுற்றம், ஊர், உலகம் இவற்றிற்கு ஒருவன் பட்ட கடனைத் தன் உழைப்பால் ஈடு செய்ய வேண்டும்.

2. வினைப்பதிவுகளில் தீயவைகளை ஒழிக்க அறவழியில் செயலாற்றி வாழ்வை நடத்தி மாற்றியமைத்து தூய்மை செய்து கொள்வது.
...

3. அறிவை அறிந்து அதுவே பூரணப் பொருளான தெய்வம் என்றுணர்ந்து அப்பொருளின் இருப்பு, இயக்கம், விளைவுகள் அனைத்தும் உணர்ந்து எல்லா உயிர்களோடும், பொருட்களோடும், இனிமை காத்து வாழ்வில் பேரின்பம் காண்பது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதன் முழுமை பெற ஏழு விதிகள்




1. வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
  3. இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவு நியதியையும் உணர்ந்து கொண்டும், மதித்தும் நடக்க வேண்டும்.

4. வாழ வேண்டிய முறைகளையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் ஒழுங்காகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல்வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவற்றிற்கு முறையான உடற்பயிற்சியையும், உள்ளப்பயிற்சியையும், சிந்தனை ஆற்றலையும் பழகிக் கொள்ள வேண்டும்.

6. விழிப்போடும் விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை, தற்சோதனை, செயல்திருத்தம் என இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 8 நவம்பர், 2012

மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

வினா: சுவாமிஜி, ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள், ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

மகரிஷியின் விடை: உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. சீவன்களில் கருணைமிக்க எந்த உயிர்களுக்கும் நன்மையே செய்கின்ற ஓர் அற்புதமான சீவன் ஓரறிவான தாவரங்களே.

இறைவனின் பரங்கருனையே பஞ்சபூதக் கூட்டான வித்தாகி, ஓரறிவுத் தாரவங்களாக உயிர்த்துள்ளது. அத்தாவரங்களே இரண்டறிவு முதல் ஆறறிவு வரையுள்ள சீவன்களுக்கு உணவாக வந்துள்ளது. தாவரங்கள் பிறவற்றிடம் இருந்து பறித்து உண்ணவேண்டிய அவசியமில்லை. பூமியில் இருந்து தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது.
...

இரண்டறிவில் இருந்து ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்களில் தாவர பட்சியான ஆடு, மாடு, மான், யானை போன்ற சில ஜீவன்களைத் தவிர மற்றவைகள் ஒன்றையொன்று கொன்று உணவாக்கிக் கொள்கிறது. அங்கு அதற்கு உணவு உற்பத்தி செய்யவோ, நாளைக்கு என்று சேமித்து வைக்கவோ தெரியாது. கிடைப்பதை அப்படியே உணவாக (Readymade Food) எடுத்துக் கொள்கிறது.

விலங்கினங்களிடையே பறித்து உண்ணல் என்பது அதன் இயற்கை சுபாவம். அவற்றிற்கு தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள தெரியாது. அங்கு அதில் மனிதன் குற்றம் காண முடியாது. அதனால் ஐந்தறிவு வரை பாவ-புண்ணியம் என்பதில்லை.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறது. அதற்கு நாம் ஆறறிவு பெற்ற மனிதன் என்று தெரியாது. உணர்ந்து கொள்ளவும் முடியாது. "இரத்தமும், சதையும் நிறைந்த தன்பசிக்கான உணவு மலையே மனிதன்" என்று நினைத்துத் தனக்கு வேண்டியதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்றே கடிக்கிறது.

ஐந்தறிவு விலங்கினங்களில் இருந்து வித்து எடுத்து வந்த மனிதன், தன் முழுமையை உணரும் ஆறாவது அறிவைப் பெற்ற பின்னும் பரிமாணத்தில் பெற்று வந்த விலங்கினப் பதிவாகிய 'பறித்து உண்ணல்' என்பதை விட முடியவில்லை. அங்கு தான் மூன்று விதமான குற்றங்களைச் செய்கிறான். அதுவே உலகின் அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படையாகிறது.

1 . உயிர்க்கொலை,
2 . உணவுக்காக அதன் உடலைத் திருடிக் கொள்ளுதல்,
3 . அதன் வாழும் உரிமையைப் பறித்தல்.

இந்த மூன்றிணைப்புக் குற்றமே இன்றும் மனித வாழ்வில் தொடர்கிறது.

ஒருவன் சிறிது பொருள் வைத்திருந்தால் மற்றவன் அதைப் பறிக்க நினைக்கின்றான். தன் சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான். இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே. பொருள் பறிப்பது, அதிகார மோகம், புகழ் வேட்பு, பொறுக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது.

மனிதன் அறநெறியும் இறையுணர்வும் பெற்றாலே பாவம் போக்கி உயிர்களிடம் அன்பும் கருனையுமாக வாழ முடியும். இவ்விலங்கினப் பதிவுகளை மாற்றி மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறியும், அறிவை உயர்த்தி வாழ்வின் நோக்கம் அறிந்து வாழ இறையுணர்வும் வேண்டும்.

திங்கள், 22 அக்டோபர், 2012

காணிக்கை




மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மாவுக்குத் தேவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதாகக் கற்பித்து, இங்கே உலகில் கடவுளுக்கென்று கொடுக்கும் பொருட்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போன ஆன்மாக்களுக்குப் போய் கிடைப்பதாக பல காலம் பலராலும் கூறப்பட்டு, இந்நம்பிக்கையில் கடவுளுக்கு என்று உணவு அளிக்கத் திருவிழாக்களும், கடவுளுக்கென்று பலவகையான பொருட்காணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

மனிதன் உழைத்து சம்பாதிக்கும் எப்பொருளும் அவனைப் போன்று மனித உருவில் உள்ளவர்களுக்குத் தக்க முறையில் உதவி வாழ்வுக்கு வளமளிப்பது அவசியம். மனிதன் கடவுளுக்கு என்று கொடுக்கின்ற எந்தப் பொருளானாலும் எங்கே போய்ச் சேருகிறது என்று கண்டுபிடித்துக் கொள்வது ஒன்றும் சிரமமல்ல. கடவுளுக்கு மனிதன் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இடைத்தரகர்களாக உள்ளவர்களின் ஏமாற்றுச் செயல்கள் தாம்.
...

மனிதகுலத்தின் வளத்தை அழிக்கின்ற பல விசயங்களில் முக்கியமானவை கடவுளுக்கென்று கொடுக்கின்ற பொருட்களும், செய்கின்ற செயல்களுமாகும். இந்தப் பெரிய பொத்தல், இந்த விஞ்ஞான காலத்தில் சிந்தனை மிக்க அறிஞர்களால்தான் அடைக்கப் பட வேண்டும். இப்பொத்தல் அடைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகவும் நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு அறிவு கல்வியினாலும், ஆராய்ச்சியினாலும், விஞ்ஞானத்தினாலும், இயற்கையாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தம்பதியர் பயிற்சி

குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே குண்டலினி யோகப் பயிற்சியை ஏற்றுப் பழகுவதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். பால் உணர்ச்சி வேட்பு இவற்றில் சமநிலை, அறுகுணச் சீரமைப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்தும் உதவியும் வாழ்தல் இவை அனைத்தையும் குண்டலினி யோகத்தால் பெறவும் காக்கவும் முடியும்.

பிறக்கும் குழந்தைகள் தரமுடையனவாக இருக்கும். பிறந்த குழந்தைகளை வளர்ப்பின் முறையறிந்து வளர்ப்பதால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நலமளிப்பவர்களாக அவர்கள் சிறப்படைவார்கள். சுருங்கச்சொன்னால் குண்டலினி யோகம் பயிலும் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும், உலக சமுதாயத்திற்கும் அறிவின் நலமளிக்கும் சுடராக, ஆன்மீக ஒளியைப் பரப்பும் நல்விளக்காகத் திகழ்வார்கள். யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உயிரையும் அறிவையும் மேலான நிலையில் வைத்துக் கணவன் மனைவி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ முடியும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

புதன், 10 அக்டோபர், 2012

மனதை செம்மை படுத்த வேதாத்திரி மகரிஷி கூறிய இரத்தின கருத்துக்கள் ...




வாழ்க வையகம்                                                                     வாழ்க வளமுடன்

 
* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
 

சனி, 22 செப்டம்பர், 2012

கவலை




நினைப்புக்கும், நடப்புக்கும் இடையே வித்தியாசம் வரும்போது இருக்கும் மன நிலையை கவலை என்கிறோம். இருப்புக்குத் தகுந்தவாறு தேவையை மாற்றி அமைத்துக் கொள்ளும்போது கவலை இராது. கவலை உள்ளத்தில் நிலைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். கவலை வளர்ந்தால் மனதில் நல்லெண்ணங்கள் வரா; அவை நிலைக்கா; உடலாற்றல் செலவாகிக் கொண்டே இருக்கும்.

கவலையை ஒழிக்கத் தேவையானவை:
...
இயற்கை ஒழுங்கமைப்பை அறிதல்
சிந்திக்கும் திறனை பெருக்கிக்கொள்ளுதல்
தன்னம்பிக்கை
முயற்சி
துணிவு

கவலை எழாமல் காக்க
1. தேவையின்றி சிக்கலைத் தானே பெருக்கிக் கொள்ளாது இருத்தல்
2. அவசியமற்ற முறையில் பிறர் செயலில் தலையிடாது இருத்தல்
3. எந்தக் காரணத்தைக் கொண்டும் போதிய நீதி உணர்வு இல்லாமல் தன்கடமையிலிருந்து வழுவாது இருத்தல்

பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 6 செப்டம்பர், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " வலி, நோய், மரணம் "


 உயிர் விண்ணாம் சூக்குமம் ஆம் உடலுக்குள்ளே
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
...
உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும்
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின் குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்.

-வேதாத்திரி மகரிஷி

பஞ்ச பூதங்களின் கூட்டுதான் சீவன்கள் ஆகும். சீவன்களில்
கண்களால் காணக்கூடிய உடல் பரு உடலாகும். கண்களுக்குப்
புலப்படாத சூக்கும உடல் என்பது தன்னைத் தானே
சுற்றிக்கொண்டும் உடல் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கக்
கூடிய உயிர் துகள்களின் தொகுப்பே ஆகும். இதே போன்று
கண்களுக்குப் புலப்படாத காந்த உடல் என்பது தன்னைத்
தானே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய உயிர் துகள்களிலிருந்து
வெளியேறும் நுண் துகள்களான காந்தமும் அது உடல் முழுதும்
சுற்றி கொண்டிருக்கும் ஓட்டமும் ஆகும். இக்காந்த ஓட்டம்தான்
அணு அடுக்குகளை சீராகக் காக்கிறது. இதுவே உடல்
இயக்கங்களையும் மன இயக்கங்களையும் பராமரிக்கிறது.
அணு அடுக்கில் ஏதேனும் காரணத்தால் சீர்குலைவு
ஏற்பட்டால் அதை சீர்செய்ய அதிகமான சீவகாந்தம்
அங்கே குவியும்போது அது மின் குறுக்காகி, வலியாக
உணரப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி இடத்தால் அகன்றும்,
காலத்தால் நீட்டிக்கும்போது நோய் எனப் படுகிறது.
அதிகமான சீவகாந்தம் நோயைப் போக்க முயலும்போது
உடலை நடத்த போதுமான சீவகாந்தம் குறைவுபடுகிறது.
இத்தேவையை நிறைவு செய்யவேண்டி உயிர்த் துகள்கள்
வழக்கத்தைவிட வேகமாக சுழல்வதால் உடல் வெப்பம்
அதிகமாகி, அவ்வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வித்துக்
கலயம் உடைந்து சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு
வெளியேறிவிடுகிறது. உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த
சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு வெளியேறியதும்
உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுகிறது. இதுவே
மரணம் ஆகும்.
 
வாழ்க வளமுடன்.

வியாழன், 12 ஜூலை, 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " நிறைந்த உள்ளம் "




 
நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
... உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.    - வே.மகரிஷி

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பும்போது அதிலுள்ள காற்று
எவ்வாறு வெளியேறி விடுகிறதோ அதைப் போன்றே
இறைநிலையோடு தொடர்ந்து தொடர்பு கொள்ளும்போது
நம் மனதுள் உள்ள எல்லா தீய குணங்குளும், எல்லா
உலகியல் பற்றுகளும் நம்மை விட்டு நீங்குவதோடு
நம் மனம் தூய்மை அடைகிறது. இந்நிலையை நாம்
அடைய வேண்டுமானால் அதற்கு 'தவம்' மட்டுமே
உதவி புரியும். வேறு எந்த வகையிலும் யாரிடமும்
பெறவும் முடியாது. தரவும் முடியாது. இந்நிலையில்
அறிவு உயர்வடைந்து தானே பரம்பொருள் என்பதை
அறிந்துகொள்ளும். இந்த விழிப்பு நிலையில் நம்மை
நாம் சீரமைத்துக் கொண்டு, நம்மிடமுள்ள வேண்டாத
குணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். நாம் மனித
நிலையிலிருந்து மகான் என்ற நிலையை அடைய
முடியும். ஒரு கல் அல்லது மரத்தில் தேவையற்ற
பகுதிகளை நீக்கும்போது எப்படி அது ஒரு அழகிய
சிலையாக மாற்றம் பெறுகிறதோ அதைப் போன்று.


வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

புதன், 11 ஜூலை, 2012

பிறப்பும் இறப்பும்




பிறப்பும் இறப்பும் உருவ தோற்றமான உடலுக்கே அன்றி, அரூபமாக இருக்கும் இயங்கும் உயிருக்கு அல்ல.

அணுக்களின் எழுச்சி, கவர்ச்சி என்ற இயக்கத்தால் ஏற்படும் அவைகளின் கூடுதல், பிரிதல் என்ற நிகழ்ச்சிகளே எல்லா உருவங்களின் தோற்ற, மறைவு சம்பவங்களாகும். தொடர்ந்து நடைபெற்று வரும் அணுக்களின் கூட்டு இயக்கத் தன்மாற்றச் சிறப்புகளின் அவ்வப்போதைய நிலைகளைக் காட்டுவதே பொருட்கள், ஜீவராசிகள் இவைகளின் உ
ருவ அமைப்புகளும் அவைகளின் பல்வேறு இயக்கங்களும் என்பது தெளிவான விளக்கம்.

உயிர் என்பது அரூபமனாது. அது அணுவுக்கு அப்பால் மெளனமாக உள்ளது. அதுவே அணுவில் இயக்கம், ஒலி, ஒளி இவைகளாக இருக்கிறது. ஜீவ ராசிகளின் புலன்கள் கூடுதலுக்கேற்பவும், தேவையுணர்வு, அனுபோகம், இன்ப துன்பம் என்பனவான அனுபவங்களுக்கு ஏற்பவும் அதே சக்தி அறிவாக இருக்கிறது. இந்தச் சக்தி எங்கும் நிறைந்து என்றும் உள்ளது. இந்தப் பேராதார நிலையாகிய உயிருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
-

செவ்வாய், 1 மே, 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - " க ர் ம யோ க ம் "



கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும்
சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே
தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம்.
... கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு. தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது
முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன்
பிறருடைய உதவியால் வாழ்ந்துவருகிறான். அவனது வாழ்வில்
அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது
அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.
இதை மனித மனம் உணர்ந்து தன்னால் இயன்ற அளவு, தன்னுடைய
அறிவைக்கொண்டும் பொருளைக்கொண்டும், உடலைக்கண்டும்
சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து இன்புறுவது
கடமை ஆகும். இதுவும் ஒருவகையில் தொண்டு ஆகும்.

யோகம் என்றால் அறவாழ்வு. அறவாழ்வு என்பது விளைவறிந்த
விழிப்பு நிலையில் தனது எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு
படுத்தி சமுதாயத்திற்கும், தனக்கும் ஒத்தும் உதவியும்
வாழக்கூடிய வாழ்வு ஆகும். இறைநீதி ஆனது நமது செயல்களுக்கு
ஏற்ற விளைவாக இன்பத்தையோ துன்பத்தையோ அளிக்கிறது என்பதை உணர்ந்து நன்மைகளை மட்டுமே ஆற்றி இன்பத்தை
மட்டுமே பெற்று வாழ்வது விளைவறிந்த விழிப்பு நிலை ஆகும்.
நம்மை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை
திருப்பிசெலுத்துவதே கர்ம யோகம் எனும் கடமை அறம் ஆகும்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - " நான் யார் "

நான் யார் என்றே வினவ நல்லுடலும், உயிர், அறிவு
நல்லினைப்பியல்பாய்க் கூடியொரு நாட்டமுடனே ஒலிக்கும்
ஊன்உடலே வாகனமாம் உள்ளியங்கும் ஆற்றல் உயிர்
... வான்கடந்த மெய்ப்பொருளே வாலறிவாம் அதுவே நான்.
 
-வேதாத்திரி மகரிஷி

" நான் யார் ", மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வி கேட்டு விடைகான வேண்டியது அவசியம். அப்போதுதான் பிறவியின்
நோக்கம் நிறைவுபெறும். ஆனால் நாம் " நீ யார் " என்ற கேள்வியையே
எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு ஒரு பலனும் இல்லை.
பஞ்சபூதங்களால்தான் எல்லா தோற்றங்களும் உயிர்களும் உருவாகி
இருக்கின்றன. அப்படியானால் நாம் (மனிதன்) பஞ்சபூதங்களால்
ஆக்கப்பட்டவர்களே. பஞ்சபூதங்களுக்கு மூலம் விண். விண்ணுக்கு
மூலம் சுத்தவெளி. வெளி என்பதுதான் அனைத்துக்கும் மூலம்.
இதுவே தெய்வம். கடவுள். அப்படியானால் நாம் அனைவருமே
கடவுள்தான். உண்மை. இறைநிலையே உடலாகவும், உயிராகவும்,
அறிவாகவும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இனைந்து
மனிதனாக வந்துள்ளது. உயிரை தாங்கும் வாகனமாக உடல்
செயல்படுகிறது. அனைத்தையும் இயக்கிகொண்டும், அறிந்துகொண்டும், வழிநடத்துவது அறிவு ஆகும். நமக்குள்
எல்லாமாக இறைநிலையே இருந்தாலும் அறிவே சிறப்பாக
இயங்குவதால் '' அறிவே நான் ''. எனவே அறிவே தெய்வம்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - "தொழில்"

* தொழிலும் வருவாயும் உள்ளவர்களே கடமைகளை ஒழுங்காகச்
... செய்யமுடியும். அறவழியில் நடக்கமுடியும். ஆகவே உடல்
வலிவுள்ள யாவரும் தொழில் செய்தேயாகவேண்டும்.
செலவுக்கேற்ற வருவாய் தேடியே ஆகவேண்டும்.

* முற்றிலும் தனக்குத் தெரியாத ஒரு வாணிபத்தில் இறங்குவது
கூடாது. பெரிய அளவில் செல்வ முதல் உடையோர்கள் ஊதியத்தின்
மூலம் பலருடைய தொழில் நுட்பத் திறமைகளை ஒன்றுசேர்த்து
பயன்பெறலாம். மற்றவர்களுக்கு புதுத் துறை ஏற்றதல்ல.

* முறையாகச் செய்யும் தொழிலானது உடல், உள்ளம், குடும்பம்,
ஊர், நாடு, உலகு இவற்றிற்கு மேன்மை தரும். வசதியிருந்து
பொருள் ஈட்டாமல் உணவு கொண்டு வாழ்பவர்கள் பொருளாதாரச்
செழிப்பை அரிக்கும் கிருமி, சமுதாயாத்திற்கு ஒரு நோய்.



புதன், 11 ஏப்ரல், 2012

வாழ்வுக்கு ஆதாரமான அறநெறிகள்





 1. வாழ்வின் நோக்கம்,, தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
...
3. இயற்கையின் ஒழுங்கமைப்பும், அதன் ஆற்றலின் விளைவான காரண காரிய விளைவு விதியைப் பற்றி உணர்ந்து கொண்டு மதித்து போற்றி நடக்க வேண்டும்.

4. வாழவேண்டிய முறைகளையும், ஆற்றவேண்டிய செயல்களையும் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கு உடல் வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளைத் தற்சோதனை, செயல்திருத்தம் என்ற இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறிகளை வாழ்விலே பின்பற்றி செயல்பட்டால், வாழ்வு இனிமையாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி