Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வாழ்க்கை வள விஞ்ஞானம்

தெய்வீக இயக்கமான மனமும், அதன் அனுபவங்களையெல்லாம் பதிந்து இருப்பாக வைத்திருக்கும் கருமையமும் இக்கால மக்களிடையே பெரும் அளவில் தரம் குறைந்து களங்கமுற்றிருக்கின்றன. துன்பங்களை அளிக்கவல்ல எண்ணங்கள், செயல்கள் ஆகிய இருவகை வினைப்பதிவுகளின் விளைவாக, மனிதனுடைய அறிவாட்சித்தரம் களங்கப்பட்டிருப்பதால் தான், மக்கள் வாழ்வில் துன்பங்களும் சிக்கல்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. கருமையத்தின் களங்கத்தைப் போக்க மன இயக்கத்தைத் தான் சீர் செய்ய வேண்டும். செயல்களில் ஒழுக்கத்தை நடைமுறைப் படுத்தினால் தான், மன இயக்கம் ஒழுங்குறும்.
.
இதன் மூலம் தான், மனிதன் மனத்தாலும், குணத்தாலும் சீர்மை பெற்று இயற்கை வழிநின்று அறவாழ்வு பின்பற்றி அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ முடியும். இத்தகைய மனவளம் பெற நிச்சயமான செயல் வழி வாழ்க்கை வள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை". மரபுவழியாக, பேற்றோர்கள மூலம் தொடரும் தீய - வினைப் பதிவுகளையும், இப்பிறவியில் அவரவரே செயலாற்றிப் பெற்ற பதிவுகளையும் தூய்மை செய்ய வேண்டுமானால் பிரம்ம ஞானம் பெற்ற ஒரு குருவின் மூலம் தான் அது அனுபவ சாத்தியமாகும். ஆதலால், மனவளக்கலைப் பயிற்சியானது இறைநிலையுணர்ந்த ஒரு குருவின் மூலம் அளிக்கப்படுகிறது.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(காலம் வீணாக்க வேண்டாம்...)
சிலை வணக்கத்தின் எல்லை :
"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.
.
அன்பின் அழைப்பு:
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால் -
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்;
அறிவு நிலையறிவிப்போம், அமைதி காண்பீர்,
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மனைவி நல வேட்பு

உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சனி, 29 ஆகஸ்ட், 2015

தாயும் தந்தையும் :



அறிஞர் பெருமக்களே ! ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு இறையுணர்வும் அறநெறியும் பின்பற்றி வாழும் அறவோர்களே ! ஆன்மீக அறிவின் விளக்கத்தால் தான் உலக அமைதி உருவாக வேண்டும். அதற்கு ஆன்மீகச் சங்கங்களோடு இணைந்து மனத்தூய்மை பெற ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும் இணைந்த அறத்தைப் போற்றி வாழும் நீங்கள் தான் உலக அமைதிக்கு வித்தாக அமைந்து இந்த உயர் நோக்க வாழ்வை உலக மக்களிடம் மலரச் செய்ய வேண்டும். ஒரே திட்டம் : பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் ஆகிய வேட்கையால் எவ்விதத்திலும் பிறர் வளத்தையோ, நலத்தையோ நான் பறிக்காமல் வாழ்வேன் என்பதே போதும். இதனை உள்ளது உணர்தல்! நல்லது செய்தல்!! அல்லதை விடுதல்!!! என்ற மூவகைச் செயல்களாலும் சாதிக்கலாம்....

விலங்கினப் பதிவுகளை நீக்கி, இறைநிலை விளக்கம் பெற்று எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், இறைநிலையும் அதன் அலையும் இணைந்த மாபெரும் ஆற்றலான காந்தம் எனும் பேரியக்க மண்டலப் பேராற்றலே எல்லோருக்கும் தாயும் தந்தையும் என்ற பேரறிவின் நிலையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு இயற்கையில் நிறைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களையும் துய்த்து நிறைவு பெறுவோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உணமைகளை மனத்தினுள் உணர்வாய்
மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை; பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
நேர்மையுடன் வாழ உன்னில் அவன் - அவனில் நீயே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ஐந்தில் அளவுமுறை

அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.

உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. மிகுதியாகவும் கொள்ளக்கூடாது; முரண்பாடாகவும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும...். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும் போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.

மேலும் மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக்காத்து வர வேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்ச தன்மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் முகிதியாகச் செலவானால் [1] ஐம்புலன் கருவிகள் கெடும். [2] உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர் :
"சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்கேயுலகு" - என்று
அருளியதையும் நினைவு கூற வேண்டும்.
விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவு படுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஐந்துபுலன்கள் மூலம் உயிரின் ஆற்றல்
அழிவதையே இன்பமென உணர்ம யக்கம்
சிந்தனையில் உயருங்கால், சீவ காந்தம்
சிதறுவதே ஐயுணர்வென் றறிந்து கொண்டோம்;
உந்தஉந்தக் குண்டலினி புருவ மையத்
தூறிவரும் பேரறிவின் ஆற்றல் பெற்று,
சொந்ததனி முயற்சியினால் வாழ்வா ராய்ந்து,
சொல்நினைவு செயல்மூன்றை ஒழுங்கு செய்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

இயற்கைச் சட்டம்

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
தப்புக் கணக்கு :

"தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்".

.
இயற்கையின் பேராற்றல் :

"இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?"

.
இயற்கை நீதி :

"ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும்
உருவெடுத்த பின்விளையும் பதிவும் கூடி
வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக
வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத்
தாழ்வு உயர்வு எனும் எண்ணம் செய்கையாகத்
தழைக்கும் புகுவினையென்ற எழுச்சி ஈதே
ஏழ்பிறப்பும் எவ்வினையும் தொடரும் ஒத்து
எழும் அமைதி இன்பதுன்பம் இயற்கை நீதி".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 26 ஆகஸ்ட், 2015

சிவயோகம்

பிற உயிர் உணரும் இன்ப துன்ப இயல்பினைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நுட்பமும், அப்படி உணர்ந்து கொண்ட பிறகு அதற்கு இறங்கி உதவும் ஒரு திருப்பமும் மனிதனிடத்து வந்து விடுமேயானால் மனிதனுடைய மனதிலே அறவுணர்வு என்னும் தெய்வீக உணர்வு கிட்டும். பிறருடைய துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுகிறதல்லவா? அதுதான் உறவு அந்த உறவை, உண்மையான உறவைப் பிறரோடு கொண்டபோது அதிலிருந்து சேவை மலர்கிறது.

அறிந்தது சிவம். காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும் போது "சிவத்தின் செயலே" எனத் தெரியவரும். செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் தன்மை.

ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அனைவரோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால் அதுவே சிவயோகம். எந்தப் பொருளிலேயும் சிவனைக் காணலாம். எந்த நிலையிலேயும் சிவனாகவே இருக்கலாம். எந்தப் பொருளிலேயும் சிவனைக் காணலாம். சிவனோடு உறவாக இருக்கலாம்; உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால் இறைவனோடும் உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, தவமும் அகத்தாய்வும் தான்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சிவத்தை அறியும் அறிவு:
"சிவம் என்னும் பூரணத்தை வெளியென்றே உணர்வீர்;
சிறப்பான அதன் இயக்க ஆற்றல் அறிவாகும்;
சிவத்தினிட முதல் இயக்கம் சீர்மை பெற்ற விண்ணாம்;
சித்தரெல்லாம் சத்தியென்றார்; அந்தச் சத்திக்குள்ளே
சிவமமர்ந்து விளையாடும் சிறப்பதே பேரண்டம்;
சிற்றுருவாய் பிறப்பிறப்பு இடை வாழ்வதுவே உயிர்கள்;
சிவமறியும் பேரறிவைப் பெற்றவனே மனிதன்;
சிந்தனையால் உணரும்வரை சிதறும் மனம் மாயை".
.
அறிவு ஒன்றே:
"புத்தனென்ற பெரியாரும் இயேசுநாதர்
பொது நோக்கில் கவி புனைந்த திருவள்ளுவர்
உத்தமராம் நபிகள் எனும் உயர்ந்த ஞானி
உண்மைக்கே உயிரளித்த சாக்ரடீஸ்
நித்தியமாம் நிலையறிந்த ஞானியர்கள்
நிலஉலக மக்களுக்கு எடுத்துச் சொன்ன
அத்தனையும் சேர்த்து ஒரு தொகுப்பாய்ச் செய்தால்
அனைத்துமிணைந்து ஒரு கருத்தாய் அமையக்காண்போம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சமுதாயத் தொண்டு

இளமை நோன்பு, இல்லறம் இரண்டையும் முறையாக ஆற்றியதால் பொருள், இன்பம் எனும் இரு பிரிவுகளைப் பற்றி அனுபவ அறிவு கிடைத்துவிட்டது. இந்த இரண்டும், உடலையும், அலைந்து திரியும் மனதையும் பற்றிய அனுபவ அறிவு ஆகும். மேலும் உயிர், மெய்ப்பொருள் என்னும் இரண்டு மறைபொருட்கள் மனிதன் என்ற இயக்க நிலையத்தில் அடங்கியுள்ளன. இவற்றையறிந்தால் தான் மனிதன் அறிவு முழுமையாகும். அதற்கு ஆசான் மூலம் உயிர்நிலை உணர்ந்து, அதன் மேல் மனதைச் செலுத்தி அகநோக்குப் பயிற்சியால் உயிரின் இருப்பு, இயக்கம், விளைவுகள் பற்றிய அறிவைப் பெறும் காலமே வானப்பிரஸ்தம் எனும் அகத்தவப் பயிற்சிக் காலம். அகத்தவத்தால் அறிவு முழுமைபெற்று விட்டது. இயற்கையைப் பற்றிய முழு விளக்கமும் வாழ்வின் வளம், நெறிமுறைகள் பற்றியும் அனுபவமான அறிவும் கிடைத்துவிட்டது. மேலும் அவன் வாழ்நாள் முழுவதும் ஆற்றவுள்ள கடமை என்ன? தன்னை உருவாக்கி வாழவைத்த சமுதாயத்திற்கு உடல் ஆற்றலையும் அறிவின் விளக்கங்களையும், அர்ப்பணித்து சமூகத் தொண்டு ஆற்ற வேண்டும். பழம் பழுத்து விட்ட பின் மரத்திலிருந்து விடுபட்டு வேறுபடுவதைப் போல, குடும்பம், பொருளுடைமை என்ற இரண்டு சிற்றெல்லைகளிலிருந்து பற்றுக்களை விட்டு மனிதன், இயற்கை, உலகம் என்ற விரிந்த பற்றோடு வாழ்கிறான். இந்தப் பொருள், மக்கள் என்ற உரிமை காட்டும் செயல்களுக்குப் பதிலாக விரிந்த மனத்தோடு உலக மக்கள் அனைவருக்கும் தன்னை உரிமையாக்கி அவன் அறிந்த அறிவின் முழுமைப் பேற்றின் விளக்கங்களை மக்களுக்குப் போதிக்கும் சமுதாயத் தொண்டினைச் செய்து வாழ்கிறான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
தொண்டில் உயர்வு தாழ்வு வேண்டாம் :

"அருள்துறையில் சத் சங்கம் நடை பெறுவதென்றால்
அவரவர்கள் இயன்றவரை தொண்டாற்ற வேண்டும்,
பொருளுடையோர் பொருள் தரலாம் அவர் விரும்பும் அளவில்,
பொதுச் சொத்தே அருள்நாட்டம் கொண்டவர்கட் கெல்லாம்;
அருள் மனத்தால் ஒருவர் பிறரை அடக்கி ஆளும்
ஏற்றத்தாழ் வெதுவும் சத் சங்கங்கட் கொவ்வா;
உருள்உலகில் உருண்ட சங்கம் ஆயிரமாயிரமாம்
உட்பகையால், உண்மை கண்டு நல்லனவே செய்வோம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

காலத்தை வென்றவன் :



உலகிலே மனித குலத்தில் நாம் பிறந்து விட்டோம். நம்மை மனித சமுதாயம் உருவாக்கி வளர்த்து வாழ வைத்து வருகின்றது. மறைந்து போன, இன்றிருக்கும் கோடிக்கணக்கான சிந்தனையாளர்கள், உழைப்பாளிகள், அருட்செல்வர்கள் செய்த தொண்டுகள் நமது வாழ்வில் பொருள் வளமாக, அருள் ஒளியாக, ஆட்சி அமைப்பாக அமைந்து, நம்மைச் சிறப்போடு வாழ வைக்கின்றன. இவற்றால் பயன் பெற்று வாழும் நாம் ஒவ்வொருவரும் மனித சமுதாயத்திற்கு இயன்ற வரை நலம் புரிய வேண்டும். ...


பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து முடிந்து கொண்டேயிருக்கும் குறுகிய ஆயுட் காலத்தையுடைய தனி மனிதனுக்கு நல்வாழ்வை அளித்துக் காப்பது நீண்ட ஆயுளையும் விரிந்த எல்லையுமுடைய மனித சமுதாயமே. அதில் அமைந்த நன்மைகளை எல்லாம் துய்த்து இன்புறும் ஒவ்வொரு தனி மனிதனும், அந்தச் சமுதாயத்தின் நலம் காத்துத் தான் நலம் பெற வேண்டும். பொருளும், அருளும், ஆட்சியையும் மனிதனைக் காக்கும் அரண்கள். பொருள் துறைக்கும் அருள் துறைக்கும், ஆட்சித் துறைக்கும் ஒரு மனிதன் ஆற்றும் தொண்டு அவை சிறப்புற்று ஒங்க, தனி மனிதன் எடுக்கும் முயற்சியும் செயலும் கோடான கோடி மக்களுக்கு நீண்ட காலத்திற்கு, வாழ்வில் வளம் தரும் ஊற்றாகும். அத்தகைய அறிவால், செயலால் ஒரு தனி மனிதன் உலக மக்கள் உள்ளத்தில் காலத்தால் மறக்க முடியாத நீங்கா நினைவைப் பெறுகிறான்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மெய் விளக்கம் :
"நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்
வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பாவமும், புண்ணியமும் (Sins and Virtues)


 நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.

பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.


...

புண்ணியம் எது?

எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் எது?

ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உதவி :
"இவ்வுலகில் எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண
எந்த அளவோ ஒருவர் உயிர்நலம் பறிக்க
எவ்வகையிலும் ஒருவர்க்குரிமையில்லை இல்லை.
இயற்கையின் சட்டமிது, காப்புமிது வாகும்.
செவ்வியஉன் அறிவாலே, செயல்திறமையாலே
செய்வது பிறர்க்குதவி சிறந்த வாழ்வு ஆகும்.
ஒவ்வும்வகை யுற்றுணர்ந்து உயிர்க்கினிமை செய்ய,
உயிரனைத்தும் வாழ்த்தும் உனை, நீ யுலகை வாழ்த்து."
.
சுவர்க்கம் - நரகம் :
"உருவம் வரைக்கும் குறுகிநின்ற
உணர்ச்சி நிலையே நர-அகமாம்.
அருவ மென்னும் பேரண்டம்
அறிந்த நிலையே சுவர்-அகமாம்; பெருமையுள
விண் என்ற அணுவறிந்தோன்
விண்ணவனாம். ஆராய்ந்து
விண்கடந்து, வான் அறிந்த
விவேகியே வானவனாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




சனி, 22 ஆகஸ்ட், 2015

இறைநிலையின் இன்ப ஊற்று

உணவிலிருந்து கிடைத்து, எல்லா தாதுக்களிலும் கலந்து ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நுண் துகள்களைத் தூல உடலானது தனது வித்தின் மூலம் பிரித்தெடுத்து உடலில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கக் கூடிய உயிர்ச் சக்தியினோடு சேர்த்து விடுகிறது. முழு உடலில் நிறைந்தும், வித்துவில் செறிந்தும் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நுண் விண் கூட்டமே உயிர்ச் சக்தியென மதிக்கப்படுகிறது. உயிர்ச்சக்தி என்ற சிறப்பைப் பெற்று விளங்கும் நுண் விண் துகள்களே தங்களது சுழற்சி விரைவைக் கொண்டு சீவகாந்தத்தை விளைவித்துக் கொண்டே இருப்பதால், இந்தச் சீவகாந்தமானது பரு உடலிலும், நுண்ணுடலிலும் விளைந்து, நிறைந்து, சுழன்றோடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சீவகாந்தமே மனமெனும் சிறப்பையும் பெறுகிறது.

உடலாலோ, உள்ளத்தாலோ ஆற்றப்படக் கூடிய எந்தச் செயலானாலும் அதனைச் சீவகாந்தம் ஏற்றுக் கொள்வதுடன், அப்பதிவுகளைத் தனது இயக்க மையமான கரு மையத்தில் இறுக்கிச் சுருக்கி வைத்துவிடுகிறது. அங்கிருந்தவாறு காலாகாலத்தில் தக்க விளைவுகள் இன்பமாகவோ துன்பமாகவோ வெளி வருகின்றன.

இந்நிலைகளை இறையாற்றலே - தனது நியதிகளில் ஒன்றாக - ஏற்படுத்தி வைத்துள்ளதால், 'செயல் - விளைவு', 'செயல் - பதிவு - விளைவு' என்ற தத்துவத்தை யார் தடுக்க முடியும்?

இந்தத் தெய்வீக ஒழுங்கமைப்பை உணராமலோ, உணர்ந்தும் அலட்சியம் செய்தோ, அல்லது, உணர்ச்சி வயப்பட்டோ துன்பம் விளையக் கூடிய - இறைநிலையின் இன்ப ஊற்றுத் தன்மைக்கு எதிரான - செயலைச் செய்துவிட்டால், பிறகு இறைவனுக்கு வேண்டுதல்கள் செய்தாலுங்கூட, விளைவிலிருந்து தப்ப முடியாது.


.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இறையுணர்வில் எழும் பேரின்பம்:
.
"இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல் தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன் தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே".
.
"அறிவை ஏடுகளில் பெறலாம்,
ஞானத்தை தவத்தால் பெறலாம்".
.
"அறிவு என்பது அறியப்படுவது,
ஞானம் என்பது உணரப்படுவது".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

உலகத் தத்துவ இரகசியம் :



நாம் ஆற்றைப் பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னாள் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய்விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்...துக் கொள்கின்றோம். அது போன்றதே மனம் என்ற ஒரு இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறபோது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது. அதை எந்தெந்த இடத்தில் பாயச்சுகிறோமோ அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது. மனம் ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஓர் இயக்கம் தான். அது போலத் தான் ஒளியும். விளக்கிலிருந்து அலை அலையாய் ஒளி, ஒளியலை வந்து கொண்டேயிருக்கிறது; அது வெளிச்சமாக இருக்கிறது. அந்த ஒளி நிரந்தரமாக இருக்கிறதா என்றால் இல்லை. சுவிட்சை நிறுத்திய உடனே இருட்டு வந்து விடுகிறது. நிரந்தரமாக இருப்பதாய் இருந்தால் சிறிது நேரம் இருந்து விட்டு மெதுவாய் அல்லவா குறைய வேண்டும்? தொடர்ந்து வரவில்லையாதலால் இருந்தது உடனே போய்விட்டது. எவ்வளவு சீக்கிரம் அது போய்விட்டது என்று பாருங்கள். அதேபோல ஒரு இயக்கத்திலே இருந்து அலை பிறக்கிறது. அந்த அலையானது இடத்துக்குத் தகுந்தவாறு மோதி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்தாகவும், அதை உணர்ந்து கொள்ளக்கூடிய மனமாகவும் இயங்கும் உண்மையைத் தெரிந்து கொண்டால் உலக தத்துவ இரகசியம் அத்தனையும் புரிந்து கொள்ளலாம். காரணம், மனத்தால் அன்றி வேறு எதனால் உலகத்தை அறிகின்றோம் எந்தத் தத்துவத்தை தான் அறிகின்றோம்?

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உலகப் பரிணாமம்:

"உலகம், அண்டங்கள், உயிரினங்கள், பொருள்கள்,
பலதும் அணுவின் கூட்டுப் பக்குவப் பரிணாமம்,
பகுத்தறிந்தால், ஒன்றி, ஒன்றிப் பார்ப்பவனே, ஒலி முதலாய் பஞ்சதத்துவம், ஈர்ப்பு, பரம், அணு இவையாவான்."

.
அறிவே ஆறு குணங்களாக மாறுகிறது :

"அறிவுக்கு ஐம்புலன்கள் ஆயுதங்கள்,
அதை இயக்கும்போது தன்னிலையில் நிற்க,
அறிவுக்கு அனுபவங்கள் கூடும், அன்றி,
அது சலனமுற்றுப் பல பொருளில் பற்ற,
அறிவடையும் பலநிலைகள், காமமாதி
ஆறுகுணங்களாம், அதனை அறியும் போது,
அறிவு நிலை நிர்க்குணமாம், ஆய்ந்து பாரீர்,
அறிவினிலே அறிவு நிற்கும், அமைதி காண்பீர்."

.
"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பஞ்சபூத அறிவு

பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்று சொன்னால், அது பஞ்சபூதங்களின் தன்மையை உணர்ந்து கொள்வது தான். ஏனென்றால், எப்படிப் போனாலும், பஞ்ச பூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவது இல்லை. ஆகையினாலே, இவைகளையெல்லாம் அறிந்து கொள்வதற்கு வேண்டிய சங்கற்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். காப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே நமது மனத்தை ஏற்புச் சக்தி வாய்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஐந்து பெளதீகப் பிரிவுகளிடையேயும் நமது அறிவையும், மனத்தையும், ஜீவகாந்த சக்தியையும் செலுத்தி நமக்கு வலுவைத் தேடிக் கொள்கின்ற தவமே பஞ்சபூத தவம்.

எனவே, நமது மனத்தை ஒழுங்குபடுத்தி, அதற்கான ஒரு பயிற்சி மூலம் ஒவ்வொரு பூதத்தோடும் ஒன்றி, நின்று உயிர்காப்பைச் சரியான முறையிலும், அளவிலும் பெற்றுப் பழகி கொண்டால் வாழ்க்கையில், பஞ்ச பூதங்களான பொருட்களோடும், உயிர்களோடும், தொடர்பு கொள்ளும்போது, உயிர்க்கலப்பு பெறும்போது அந்த உயிர்க்கலப்பு முழுமையாகவும், சரியானதாகவும் வெற்றியும், இனிமையும் தரத்தக்கதாகவும் அமையும். இந்தப் பயிற்சியால் பஞ்ச பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றோடும் முறையாக, முழு அளவில், ஏற்ற சங்கற்பக் கருத்துக்களோடு உயிர்க்கலப்புப் பெற்றுப் பெற்றுப் பக்குவம் அடைந்த மனமானது, எந்த அனுபோகத்திலும், சலிப்போ, வெறுப்போ, தோல்வியோ ஏற்காத பக்குவத்தைப் பெறுகிறது; இனிமையைக் காத்துக் கொள்ளும் திறமை பெறுகிறது. அத்தகு மனத்தினால் எந்தப் பொருளோடும் இணைய முடிகிறது. எந்தச் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது. அந்தப் பொருளால் அல்லது சக்தியால் விளையக்கூடிய பாதகங்களில் இருந்தும் காப்புப் பெற முடிகிறது. அந்தப் பொருள் மற்றும் சக்தி பற்றிய முழு விளக்கத்தையும், தெளிவையும் பெறவும் பயன் கொள்ளவும் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வீடுபேறு:
"வெட்டவெளி பிரபஞ்சப் பொருள்கட் கெல்லாம்
வீடாகும் விண்கடந்து வானறிந்தால்
வெட்டவெளி அணு அறிவு ஒன்றாய்ப் போகும்
வீடுபேறு எனும் உயர்ந்த பதமும் ஈதே".
.
"கரு அமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை,சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்
தகுந்த அளவாம்; இதிலோர் சக்தி மீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணமாகும்."
.
உடலில் இயற்கை செயற்கை ரசாயண மாற்றங்கள் :
" மனிதர்களின் உடலில் உள ரசாயணங்கள்
மாறிக் கொண்டே இருக்கும் இருவிதத்தில்,
தனியமைப்புக் கருவான நாத விந்தில்
தரம் மாறும் அண்ட கோடி சஞ்சாரத்தால்,
எனில் இவையே இயற்கை ரசாயண மாற்றம் ஆம்.
இயக்குவதால் உடலை, கொள்ளும் ஆகாரத்தால்
இனி அந்த உடலில் எழுகிற எண்ணத்தால்
ஏற்படும் மாற்றம் செயற்கை எனும் மாற்றமாகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 19 ஆகஸ்ட், 2015

பழிச்செயல் பதிவு நீக்கம்



1) தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச் செயலாகும்....


2) மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு.

3) வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவித பழிச் செயல் பதிவுகளாக - 1)உறுப்புப் புலன்களிலும், 2)மூளையிலும், 3)வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.

4) விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப் பயிற்சி ஏற்று எல்லாப் பழிச் செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி வினைத் தூய்மையும், மனத் தூய்மையும் பெறலாம்.

5) எந்த பழிச் செயலானாலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர் தான், மனவலிவு பெற்ற பின்னர் தான் அதை முயற்சியால் பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப் போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் மகிழ்ச்சியும் நிறைவும், அமைதியும் பெறலாம்.

-  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அமைதி பெறுவீர் :
"அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது,
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே !."
.
அகத்தவப் பேறு:
"அகத்தவத்தால் "ஆ" லயமாம் சிறந்த வழிபாடு
ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு
அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி
அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;
அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி
அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது
அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்
அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நிறைவும் அமைதியும்



வாழ்வின் உண்மை என்ன என்று சிந்திப்போம். பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் நமது நிலையென்ன?...வாழ்வு காலத்தை எவ்வாறு அறிவின் விரிந்த நிலையில் கணித்துப் பார்க்கலாம். அறிவை விரிவாக்கிக் கொள்வோம். உண்மை உணர்வு ஏற்படுகின்றது. இந்தப் பேருலகம் ஒரு சத்திரம் போன்றது. பிறக்கும் ஒவ்வொருவரும் உலகம் என்ற சத்திரத்தில் தங்குகிறோம். நாம் குடிபுகும் அறையில் முன்னமே சிலர் இருந்தார்கள். பிறகும் சிலர் வந்து சேர்கிறார்கள். இதுவே குடும்பம். அவரவர்கள் தங்க வேண்டிய காலம் முடிந்தவுடன் புறப்பட்டு இயற்கையோடு கலந்து விடுகிறார்கள். வாழும்போது உடன் வாழ்பவர்கள் நட்பு ஏற்படுகிறது. அது முன்னும் இல்லை - பின்னும் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள இந்த நட்பு பயனாகிறது. வாழத் தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள். இன்பமடைகிறார்கள். வாழத் தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். மேலும் ஒரு உண்மை உணர்வோம்.
பேருலகம் என்ற சத்திரத்திற்கு வரும்போது எவரும் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதிலிருந்து புறப்பட்டு போகும்போதும் ஏதும் கொண்டு போவதில்லை. மக்கள் பற்று, குடும்பப் பற்று எங்கே? சொத்து பற்றோ பொருள் பற்றோ எங்கே இருக்கிறது; இன்னும் விரிந்து உணர்வோம், எவ்வளவோ பொருட்களைத் தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும். குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் உணவை கொள்ள முடியுமா? சுமக்கும் அளவிற்கு மேல் ஆடை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இவ்வுண்மைகளை விளங்கிக்கொண்டு அடிக்கடி நினைத்து நினைத்து அறிவில் அழுத்தமாகப் பதிவுகொண்டு குடும்பத்தில் அவரவர்கள் கடமைகளை ஆற்றினால் இது பற்றற்ற வாழ்வு ஆகாதா? எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் கூர்மையும் அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும் அமைதியும் இந்த நிலையில் தானே கிடைக்கும்? இதை விடுத்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் கோழைத்தனம் துறவு ஆகுமா? தன்னை வளர்த்த, வாழவைத்த சமுதாயத்தையும் ஏமாற்றிவிட்டு தானும் ஏமாறும் ஒரு இழிவான செயலல்லவா கடமைகளை மறந்து நழுவிப் போய்விடும் செயல்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஏடுகளின் மூலம் எழும் ஞான ஆர்வம் :

"ஏட்டினிலே கதைத்து விட்ட ஞானம் கற்று
ஏக்கமுற்று அதையடைய எண்ணம் கொண்டு,
போட்டவிடந்தனிற் பொருளைத் தேடிக் காணும்
பொது அறிவைக் கூட உபயோகிக்காமல் -
நாட்டிலுள்ள அனுபோகப் பொருட்கள் மீது
நாடி நிற்கும் அறிவைப் பண்படுத்த வேண்டி
காட்டுக்குப் போய் கனியும் கிழங்கும் உண்டு
காலத்தைக் கழிப்பதனால் பலன் தான் என்ன?"

.
ஞானம் தேடும் பக்தர்கள் :

"தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ?"

.
"செய்யும் செயல்களைத் திருத்தமாக செய்யாவிட்டால்
செய்த செயல்களுக்கு ஏற்ப விளைவுகளும்
தாறுமாறாகத்தான் இருக்கும்".

.
"சிறுகச் சிறுகப் பயின்றால்
சித்துக்கும் உண்மை நெறி".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இறைத்தன்மை அடைய

இயற்கைத் தத்துவத்தையும், அதன் விளைவுகளையும் அன்றாடம் வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் விளைவுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டும், சில நேரங்களில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றோம். இதனைச் செயல் விளைவுத் தத்துவம் என்று சொல்லலாம். விதி என்றும் சொல்லலாம். தெய்வச் செயல் என்றும் சொல்லலாம். வினை அல்லது வினைப் பயன் என்றும் இதை மதிக்கலாம்.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத் தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்.

மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. இந்நிலையைத்தான். ஆணவம் என்பார்கள். நாம் இதனைத் "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.

உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன் இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலங்குன்றியிருக்கின்றது. இதைமூடநிலை எனலாம். மூடம் என்றால் மறைவு என்று பொருள். மூடன் என்றால் அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல் அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைபட்டிருக்கும் நிலையாகும்.

தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.

 
 
 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே".

.
"உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர
உண்மையை நாம் ஒரு போதும் மாற்றமுடியாது".

.
அறிவும் புலன்களும் :

"அறிவைப் புலன்களில் அதிகநாள் பழக்கினேன்
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன;
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்
அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;
அறிவு புலன்களை அறிந்தது வென்றது.
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நமக்குள் இருக்கும் இரகசியம் :



எந்த ஒரு பொருளை உணர்ந்தால், எந்த அறிவைப் பெற்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியுமோ, எல்லாவற்றையும் ஐயமின்றி தெரிந்து கொள்ள முடியுமோ, அந்தப் பொருள்தான் 'அறிவை' அறிந்து கொள்ளக் கூடிய அறிவு எனும் பொருள். அது எங்கேயோ இல்லை. நமக்குள்ளாகவே இருக்கிறது. ஒரு சிறிய உதாரணத்தோடு பார்ப்போம்.

ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர், அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர், பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது, எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்துப் பணக்காரர் பாத்ரூம் போனார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். மற்றவர் மீண்டும் உள்ளே போய்விட்டு பிறகு வந்தார். மீண்டும் பணக்காரர் உள்ளே போனார். உடனே, வெளியில் இருந்தவர் பணக்காரருடைய பணத்தைப் பெட்டி, தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். கிடைக்கவேயில்லை. மறுபடியும் பணக்காரர் வெளியே வந்தார். பொழுது விடிகின்ற நேரம், இருவரும் புறப்படும் சமயம், மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். அதற்கு மற்றவர், "நீங்கள் பணத்தை எங்கே வைத்து இருந்தீர்கள்" என்றார். "ஏன் கேட்கிறீர்கள்?" என்றார் பணக்காரர். நீங்கள் இரு தடவை பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை" என்றார். "உன்னைப் பற்றிப் எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர்.

அதே போல எல்லாம் வல்ல இறைவன் இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே வைத்திருக்கிறான்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மனதின் அடித்தளம் இறை நிலை :
"அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும், உனது அலையே மனம் கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம் சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".
.
ஒன்றே பலவும்:
"ஒன்றுமில்லா ஒன்று இருள், பூர்ணம், மௌனம்
உள்ளுணர்ந்து ஒடுங்கி நிற்கும் நிலையைப் போன்று
ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஆதியில்லை
ஒலி, வெளிச்சம், இயக்கம் அணு அதன் பூரிப்பு
ஒன்றுமில்லா ஒன்று இந்த நாலானாலும்
ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தாகும்
ஒன்றுமில்லா ஒன்றின் இரகசியத்தைக் கண்டால்
உண்டுஎன்பது இல்லை என்பது இரண்டும் ஒக்கும்".
.
இயல்பும் - உயர்வும்:
"அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 

சனி, 15 ஆகஸ்ட், 2015

மகரிஷி கேட்கும் வரம்

இளம் வயதிலேயே என்னுள்ளத்தில் நான்கு வினாக்கள் எழுந்தன. அவற்றிற்கு விடை காண்பதில் எனது பிறவியின் நோக்கம் என்பது போன்ற உணர்வோடு சிந்தனைச் சுடரிலே என் வாழ்நாட்களைச் செலவிட்டேன். வெற்றி கிடைத்தது. முதல் வினாவாகிய "தெய்வம்" தெளிவாக உணரப் பெற்றேன். அது எல்லா பொருள்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் அறிவு மயமாக ஒளிவிட்டு கொண்டிருக்கும் உண்மை உணர்ந்து கொண்டேன். மூன்றாவது வினாவாகிய "அறிவு எது?" என்பதையும் ஆராய்ந்து அறிந்து கொண்டேன். உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருட்கள் நிறவி வராமல் தேங்கியும் அவசிய மற்ற பொருட்கள் பெருக்கமும் அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்ப்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.

இந்தத் தெய்வீக உணர்வின் அடிப்படையில் தான் கர்மயோகம் என்ற உலக சமயம் எனது உள்ளத்திலிருந்து உருவாகியது. அந்த விரிந்த அறிவின் நிலையிலே இப்போது உங்களோடு பேசுகிறேன். செயல்புரியும் தெய்வங்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் செயல்கள் மூலம் தான் மனிதனுக்கு, உலகுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இறைவனே உங்கள் அனைவருக்கும் அறிவாக இருக்கிறான்; உங்கள் உடல் உறுப்புகளிலே ஆற்றலாக இருக்கிறான். மக்கள் எல்லோருமே சாதனை புரியும் சித்தர்கள். அரூபமாகிய இறைவனைக் கேட்டுப் பெறுவது ஒன்றுமே இல்லை என்று அறிந்த நான், உருவ நிலையில் உள்ள தெய்வங்களாகிய உங்களையே நோக்கி உலகுக்கு நலமளிக்கும் வரம் கொடுக்கம்படி கேட்கிறேன். உருவத்தோடு, செயலாற்றி விளைவு பெறும் அறிவாற்றலோடு உள்ள நம்மிடையே உலகத்தையும் ஒப்புவித்து விட்டு, அரூப நிலையில் உள்ள இறைவன் ஏதுமற்றவனாகி நிற்கிறான். இனி அவனைக் கேட்பதில் பயனில்லை; அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் காலமும், முயற்சியுமே வீணாகும். எனவே, நான் மக்களை நோக்கியே கேட்கிறேன். நம் அனைவருக்கும் இன்றியமையாத தேவையை நாமே தக்கபடி செயலாற்றிப் பெற்றுக்கொள்வோம்.



 
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
நேர்மை :
------------
"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்
மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை;
பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்,
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
நேர்மையுடன் வாழ உன்னில் அவன் - அவனில் நீயே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தன்னுடைய மிக அத்தியாவசியத் தேவையை நாடி, அதற்குத் தடை ஏற்படும்பொழுது எழும் சினத்தை எவ்வாறு தவிர்ப்பது? சினம் மனதில் சீக்கிரம் மறைவதில்லையே? அதற்கு என்ன செய்வது?...


.
மகரிஷியின் பதில் :
--------------------------------
"நாம் வாழ்விலே எப்பொழுதுமே பிறரிடமிருந்து ஏதேனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய எதிர்பார்ப்பிலே எப்பொழுதும் கணக்கு சரியா என்று பார்த்தால் பெரும்பாலும் அது தவறாகவே இருக்கும். நமது எல்லைகட்டிய உணர்விலே இருந்து நமக்கு இது தேவைப்படும் என்பதை எண்ணிக்கொண்டு அதையே அவர்கள் செய்ய வேண்டும் அவர்கள் எனக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உண்டு, அறிவுண்டு, அவர்கள் செயலாற்றவேண்டிய கடமையும் உண்டு. அந்தந்த நிலையிலே இருந்து கொண்டு அவரவர்கள் பணிபுரியும்போது நீங்கள் எண்ணுமாறு அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதிலே தவறு உங்களிடமே தவிர அவரிடம் இல்லை.
.
அப்படியே தவறு அவர்களிடம் இருந்தாலும்கூட நீங்கள் என்ன செய்யமுடியும் என்று எண்ணிப்பாருங்கள். அவரை நினைத்துப் பல தடவை வாழ்த்துங்கள். இரண்டு மூன்று நாள் வாழ்த்துங்கள். உண்மையில் நீங்கள் எதையோ பெறுவதற்கு உரிமை உடையவராக இருந்து அதனை அவர் தவறாகத் தடுப்பவராக இருந்தால் அவருடைய அந்த எண்ணம் மாறிவிடும்; அவர் உங்களுக்கு நலம் செய்வார். நீங்கள் விரும்பியதைத் தருவார். சினத்தினால் அதை நீங்கள் பெறமுடியாது. எனவே சினத்தைவிட சினமற்ற தன்மையிலே அமைதியான நிலைமையிலே, அன்பான முறையிலே அதைப் பெறலாம். அதைவிட மேலும் பெறலாம் என்று அழுத்தமாகக் கூறுகிறேன்."

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

அமைதி :



அமைதி மனித இன வாழ்வில் நிறைவைத் தரும் தெய்வீக இன்பம். ஒரு மதிப்புடைய வாழ்க்கைச் செல்வம் அமைதி. அதனால்தான் மக்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புகின்றனர். பேரறின்ஞர்கள் அமைதிக்காகவே தங்கள் ஆற்றலை அர்ப்பணிக்கின்றனர்....

எனினும் இன்று நாம் காண்பதென்ன? உலக முழுவதும் நோக்குவோம். எங்குமே அமைதி குலைந்து காணப்படுகின்றது. தனி மனிதரிடத்திலே, சமுதாயத்தின் ஊடே, உலக நாடுகளுக்கிடையே, எங்குமே நிலையான அமைதியில்லை. பிணக்கு, அச்சம், பகை, போர், இவை பெருகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை நீடிக்கக்கூடாது. இது மாறித்தான் ஆக வேண்டும். மாற்றித்தான் ஆக வேண்டும். யார் மாற்றுவது? எப்படி மாற்றுவது? இவ்விரு வினாக்களில் யார் என்பதற்கு முதலில் விடை காண்போம். உலகை, மனித குளத்தை, நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டியது அறிஞர்கள் பொறுப்பு. சிந்தனையாளர்கள், எழுத்துலக மேதைகள், மதத் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள், கல்விப் பொறுப்பாளர்கள் சமுதாய நலம் விழையும் செல்வந்தர்கள் இவர்கள் எல்லோருமே மனித குலத்தின் நலன் காக்கும் தகுதி பெற்றவர்கள், பொறுப்புடையவர்கள். உலகில் அமைதி நிலவ இப்பெருமக்கள் தான் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இரண்டாவது வினாவான எப்படி என்பதற்கு விடை காண்போம். மனிதன் வாழ்வை நிறைவு செய்யும் துறைகள் இரண்டு. ஒன்று பொருள்துறை, மற்றது அருள்துறை. விஞ்ஞான வளர்ச்சி உலகில் பொருள் துறையை நிறைவு செய்துவிட்டது. அருள் துறையில் தான் மனித குலம் பின்னடைந்து நிற்கின்றது. ஒவ்வொரு உயிரும் தெய்வத்தின் திருவிளையாட்டரங்கம் என்பதை பெரும்பாலோர் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் விளைவாக மனிதனே மனிதனுக்குத் துன்பங்களை விளைவித்து வருகிறான். விஞ்ஞான மேன்மையால் பெருகும் பொருள்துறை வளர்ச்சி கூட, மனிதகுல சீரழிவிற்குத் திருப்பம் பெறுகின்றது. அணுகுண்டு முதலிய கொடிய போர்க்கருவிகள் மனித இனத்தையே அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்த அழிவு சூழ்நிலைகளை மாற்றியாக வேண்டும். இதற்கு நிச்சயமான ஒரே வழி அருள் துறையில் மனித குலம் போதிய வளர்ச்சி காண வேண்டும்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அமைதி பெறுவீர் :
"அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது;
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே!. "
.
அமைதி இயல்பாகும்:
"அகத்தவமும் அறநெறியும் இணைந்து ஓங்க
ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்;
இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்
எப்போதும் மன அமைதி இயல்பதாகும்
மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை
மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்
தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி
சுய நிலையாம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 12 ஆகஸ்ட், 2015

" சினம் கொள்பவன் வைராக்கியசாலியா? பொறுமை கொள்பவன் வைராக்கியசாலியா? இதில் யார் வெற்றிகாண்பார்கள் ?"


மகரிஷியின் பதில் :
-------------------------------
"நல்லமுறையிலே கடமையுணர்ந்து தெளிவான அறிவோடு வைராக்கியம் கொண்டால் அதை முடிப்பதற்குப் பொறுமைதான் வேண்டும். அந்தப் பொறுமையின்றிச் சினம் கொண்டால் வைராக்கியமே அழிந்துவிடும். எனவே சினத்தினால் சாதிக்கக் கூடிய நலம் ஒன்றுமே உலகத்தில் இல்லை; இதுவரை உலகிலே மனித இனத்திலே நடந்த சீரழிவை எண்ணிப் பாருங்கள். சினத்தினால் ஆகும் நலம் ஒன்றுமில்லை. பொறுமையினால் உங்களுக்குச் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது. ஏற்றுகொண்ட வைராக்கியத்தை முடிப்பதற்கு வழிமுறை தெரிகின்கின்றது. அதை ஒன்றன்பின் ஒன்றாக முறையாக செய்து முடிக்கக்கூடிய பொறுமைதான் வேண்டும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மூலம் ஒன்றே

முதன் முதலில் மனித இனத்திற்குத் தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு, உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்த போது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை, வாழ்வுமில்லையென்று கண்ட போது நீரையும் தெய்வமாகக் கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பையும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான்.

மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணரப் பல இலட்சம் தலைமுறைகள் சென்று விட்டன. சிந்திக்கச் சிந்திக்க அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுத்தான் என்ற தெளிவு வந்தபோது விண்ணை விடப் பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா? அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.

இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றஙகள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்துப் பரவியது.


.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சிறு வயதில் கொண்ட பக்தி:

"கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்
கண்காது மூக்குவைத்துக் கதைகள் சொன்னேன்
கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்
கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்
கடவுளுக்குப் பசிதீர்க்க பால் நெய் தேங்காய்
கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்
கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்
கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக."

.
உய்யும் வழி:

"தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றிப்போகும்,
பலவினைகள் புதிது எழா; முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்;
சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பெற்றோர் தவம் - பிள்ளைகள் நலம்

மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அன்று. நோயே வராமல் காக்கலாம். நோய் என்றால் என்ன? இயற்கையாக நம்முடைய உடலிலே இந்தச் சுகத்திற்கு, அதாவது உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்து இருக்கிறது. அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்கிறது. ஒவ்வொரு செல்லும் (Cell) ஒரு இரசாயனச் சாலையாக (Laboratory) வேலை செய்து கொண்டு இருக்கிறது நம்முடைய உடலிலே. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும்; அதைக் கெடுக்காமல் இருந்தால் போதும். அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருவமைப்புக் குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும். மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெற்றோர்கள் மன நலத்திலே, உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக அமைய வேண்டும்; இருக்க வேண்டும். பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு, மனத்தாங்கல் இருக்குமேயானால், நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே, மனநலமும், உடல் நலமும் காத்து இனிமை காப்போம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :

"வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ
வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்.
பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து
பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்
ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை
உயர்வு எனும் சொற்களுக்கு அருத்தம் காணும்
இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண
ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மதமும் விஞ்ஞானமும்

கடவுளைப் பற்றி இதுவரை எல்லா மதங்களிலும் என்ன சொன்னார்கள்? எங்கும் உள்ளவன் (Omnipresent) என்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவி அணுவுக்குள்ளும் இயக்க சக்தியாக இருப்பவன். அவன் தான் எல்லாம் அறிந்தவன் (Omniscient) எல்லாம் வல்லவன் (Omnipotent) என்றார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவரவர் மதத்தில் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதற்கும் இந்தக் கடவுள் தன்மைக்கும் ஒத்துக் கொள்கிறதா என்று பாருங்கள்.

எந்த இடத்தில் யார் சொல்வது ஒத்துக் கொள்கிறதோ அதுதான் சரி. ஆனாலும் அதை அப்படியே எடுத்துக் கொண்டால் போதாது. இன்றைக்கு உலகில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. இந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாக அந்தக் கடவுள் தன்மையானது இந்தப் பிரபஞ்சத்தை எந்த முறையிலே நடத்துகிறது என்பதையும், அதன் இயக்கம், நோக்கம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது தெரியாமல் அப்படியே பழைய கருத்துக்களையே வைத்துக் கொண்டால், மீண்டும் மனித அறிவு முன்னேற்றத்தில் முரண்படும். இப்பொழுது நம் உடலில் இந்த மாதிரி நடக்கிறது என்று சொன்னால் அது கடவுளால் நடக்கின்றது என்று சொல்லி விட்டால் போதாது. அந்தக் கடவுள் இந்த அணுவுக்குள்ளும் எம்மாதிரியாக இருந்து கொண்டு அதை நகர்த்துகிறான், சுற்றுகிறான், விளங்குகின்றான் அல்லது தோற்றப் பொருட்களைக் கூட்டுகின்றான், குறைக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு அறிவு இக்காலத்தில் வளர வேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்:

"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".

.
"விஞ்ஞான அறிஞர்களே! நம் குலத்தை
வேரறுக்க, வாழவைக்க உங்களுக்கு
எந்நாளும் மென்மேலும் திறமை கூடும்,
இனிதுணர்ந்து உலகநலப் பொறுப்பை ஏற்று
அஞ்ஞான முடையோர்கள் அறிவில் கூட
அணுநிலையோ டாதிநிலை இரண்டும் காட்டி
மெய்ஞ்ஞானம் ஊட்டுதற்கு முயல வேண்டும்
மிக எளிது உங்களுக்கு இதைச் சாதிக்க!."

.
விஞ்ஞானிகளுக்கு :

"அறிவினிலே மிக உயர்ந்து நுட்பத்தோடு
அணுவினிலும் நின்றொடுங்கி ஆழ்ந்தாராய்ந்து
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்
அறிந்து விட்டீர் விஞ்ஞான நிபுணரே! நம்
அறிவு எது? எங்குள்ளது? அந்தமென்ன?
அணுவினிலே உள சக்தி பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றி ஒன்றி ஆய்ந்து பாரீர்!
அணுநிலைக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 8 ஆகஸ்ட், 2015

அறிஞர்களின் வழிமுறைகள்



எண்ணத்தையும் உடலியக்கத்தையும் ஒழுங்குபடுத்த அறிஞர்கள் பல வழி முறைகளைக் கண்டு அதை மக்களிடம் பழக்கத்தில் கொண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் மேலும் மேலும் இந்த ஒழுங்கு முறைகளைத் திருத்தி வந்தார்கள். உலகில் மக்கள் வாழும் தேசங்களின் வெப்ப, தட்ப நிலை, விளை பொருட்கள், அவ்வப்போது அவர்கள் பெற்று வந்த அறிவின் வளர்ச்சி இவைகளுக்கு ஏற்ப அறிஞர்கள் மக்களைப் பண்படுத்த வகுத்த நெறிமுறைகள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் சிறிது வித்தியாசப்படலாம். எனினும் மனிதர்களின் உடல் இயக்கத் தேவைகள், அறிவின் இயல்பு, இயற்கை அமைப்பு, இன்ப துன்ப உணர்ச்சிகள் அனைத்தையும் அறிந்தே அவர்கள் வாழ்க்கை நெறிகளைப் போதித்து உள்ளார்கள்.
...
பெரும்பாலான மனிதர்கள் உலகில் மனோதத்துவக் கலையிலும் விஞ்ஞான கலையிலும் தேர்ச்சி பெற்றபின் மனிதர்கள் அறியாமையால் கொண்டிருக்கும் கற்பனைகள் அனைத்தும் நீங்கி அனைவரும் அன்போடும், பண்போடும், அறத்தோடும் வாழ்வார்கள். அக்காலம் சமீபத்தே வருகின்றது. அதுவரையில் வணக்க முறைகள் மனிதனை பண்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.

ஆறாம் நிலையாக இயங்கும் அறிவுக்கு இயற்கைத் தத்துவத்தை அறிந்து கொண்டே போகும் விஞ்ஞான ஆராய்ச்சியும், தெய்வ வணக்கம் என்ற முறைகளும் தான் அமைதி கொடுப்பவை, பக்தி மார்க்கத்திலே அறிவை மயக்கும், வாழ்வில் துன்பங்களைக் கொடுக்கும் சில பழக்க வழக்கங்கள் உலகெங்கும் மக்களிடையே பரவி இருக்கின்றன. விஞ்ஞான அறிவின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வரும் இந்நாளில் கல்வியறிவை அனைவரும் பெறும் அளவுக்கு வசதி கிட்டும்போது அத்தகைய தீய பழக்க வழக்கங்கள் படிப்படியாகக் குறைந்து பின் அடியோடு ஒழிந்து போகும்.


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
முழுமையும் அமைதியும் :

"அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்
அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் ஆறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதான் மூலநிலை நோக்கி நிற்கும்,
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்".

.
அறிவோடு விழிப்பாயிரு :

"ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு ,
நின்றிடு அகண்டாகார நிலையினில்,
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

இன்பமும் துன்பமும் :


 உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண் கருவிகளையும் உபயோகிக்கத் கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறைபொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.
...
இத்தகைய சிறப்புக்களை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்ச கட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது.

இவ்வளவு சிறப்புக்களையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும் நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையாக எழும் தேவைகள் மூன்று : அவை பசி, வெட்பதட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்பதட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால் உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டு துன்ப உணர்வுகளாக மாறும்.

இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன? அமைதியும் இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :

"காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,
மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உள்ளம்,
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே. "

.
இன்பம் துன்பம்:

"இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது
ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்
இன்பத்தின் மருபெயராம் துன்ப மாயும்
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்".

.
மேடு பள்ளம்:

"தரை ஒன்றை மேடு பள்ளம் என இரண்டாய்
தரம் பிரித்துப் பேசுமாபோல் உணர்ச்சி ஒன்றை
உரைக்கின்றோம் அதன் ஏற்றத் தாழ்விவற்றிற்கு
ஒத்தபடி இன்ப மென்றும் துன்ப மென்றும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பிறப்பின் நோக்கம்


ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).
சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும், உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன்.
மனிதனில் தான் அறிவினுடைய முழுமையைப் பெற முடியும். பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்). இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறி விடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்ட பிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

இயல்பறிதல்:

"சுகதுக்கம் அனுபவித்தேன், சோர்வு கண்டேன்
சுய அறிவால் ஆராய்ந்தேன், முடிவுகாண
சுகதுக்கம் உடலியங்கும் அறிவில் கண்டேன்
சூட்சுமமாய் மனங்குவித்து, ஒடுங்கிநின்று
சுகதுக்கம் கடந்துமோன நிலையுணர்ந்தேன்
சொரூபத்தில் அரூபநிலை யறிந்துவிட்டேன்
சுகதுக்கச் சுழல்தாண்ட முறை கேட்போருக்குச்
சொற்குறிப்பால் "கட+உள்" என்று சுருக்கிச் சொல்வேன்."

.
பிரம்மம்:

"நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்
சூனியமே! தொற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

புதன், 5 ஆகஸ்ட், 2015

தியானத்தின் நன்மைகள் :



விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். உடளவில் ஏற்படும் நன்மைகள் :

1) தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்பு குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2) (Blood pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3) எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4) உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்து பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5) உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6) ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

1) மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2) மூலையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
3) "As a man thinketh, so he becomes it," "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்த வெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4) விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave -க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அகத்தவப் பெருமை :
"அகத்தவத்தின் பொருள் கண்டு அதன் பெருமை யுணர்ந்திடுவீர்;
அகத்தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி;
அகத்தவத்தால் மேலும் உயிர் அம்மாகி மெய்ப்பொருளாம்;
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவம் தீவினையகற்றும் அருள் நெறியை இயல்பாக்கும்;
அகத்தவமே இறை வழிபாடு அனைத்திலும் ஓர் சிறந்த முறை;
அகத்தவமே உயிர்வழிபாடு அதனை விளக்கும் ஒளியாம்;
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மகிழ்ச்சியோடு வாழ :


மனிதன் என்ற தத்துவத்தை நான்கு சிறப்பு நிலைகளாகப் பிரிக்கலாம். அவை 1) உடல் 2) உயிர் 3) மனம் 4)மெய்ப்பொருள் என்பனவாகும். இந்நான்கும் பொருள் நிலையில் ஒன்றுதான், ஆனால் இயக்கச் சிறப்புகளால் பிரித்து உணரத் தக்கவையாக இருக்கின்றன. ஒரே பொருள் அதன் இயல்பான பரிணாம உணர்ச்சியால் நான்கு நிலைகளையும் அடைந்து ஒன்றில் ஒன்றாக நான்கும் இணைந்து இய...ங்கும் சிறப்பே மனிதனாக விளங்குகின்றது.

உடல் என்பது ஆற்றலின் (Mass) திரட்சியே. ஆற்றல் (Energy) என்பது மெய்ப்பொருளின் இயக்க நிலையே. மெய்ப் பொருள் தான் ஆற்றலுக்கு நிலைக்களம் (Static State). இதனை வெட்டவெளி என்கிறோம். வெட்டவெளியே தனது இயக்கத்தில் ஆற்றல் ஆகிறது. ஆற்றலின் திணிவு உடல். உடலில் நிறைந்த ஆற்றல் உணர்ச்சியெனும் சிறப்புற்று உடலை உணர்ந்து, பேரியக்க மண்டல தோற்றங்களை உணர்ந்து, உணரும் ஆற்றலான உயிரையும் உணர்ந்து முடிவாகத் தனது மூல நிலையான மெய் நிலையை நிலைக்களனாக உள்ள ஆதிநிலையை உணர்ந்து முழுமை பெறுகிறது.

உணர்ச்சியிலிருந்து முழுமை பெறும் வரையில் நடைபெறும் சிறப்பாற்றல் தான் மனம் (Mind) என்றும் அறிவு (Consciousness) என்றும் வழங்கப்படுகின்றது. எனவே மெய்ப்பொருள், ஆற்றல், தோற்றம், மனம் (Truth, Energy, Mass, Consciousness) என்ற நான்கு நிலைகளும் ஒரு பொருளின் பரிணாம வளர்ச்சியின் வேறுபாடுகளே. இந்த விளக்கத்தையே பேரியக்க மண்டல இயக்கங்கள் அனைத்தையும் மதிப்பிட அடிப்படையாகக் கொள்ளலாம்.

நுண்ணிய இயக்க ஆற்றலான பரமாணு முதல் பெரும் பெரும் நட்சத்திரங்கள் உட்பட மனதில் கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்தால் ஒரு பேருண்மை விளங்கும். ஒவ்வொரு அணுவும் அல்லது அணுக்கொத்தும் தன்னியக்கம், தொடரியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், விளைவு என்ற நான்கு வகையான தன்மைகளோடு இயங்குகின்றன. எந்த ஒரு இயக்கமும் தனியாகத் துண்டுபட்டு நடைபெறுவதில்லை. பேரியக்க மண்டலம் என்ற கோர்வையில் அமைந்துள்ள இயற்கை ஒழுக்கமைப்பை நாம் காரண-விளைவு நியதி (Causes and effect system) என்று கூறுகிறோம்.

இந்த விளைவின் கீழ் தோன்றிய மனிதனின் நோக்கம் அறிவின் முழுமை பெற்று அமைதி பெறுவதேயாகும். அறிவின் முழுமைக்கு வாழ்க்கை அனுபவம் வேண்டும். அவ்வனுபவத்திற்கு உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றி காத்து பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை ஒட்டி இயல்பாக வாழ்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
முக்களங்கங்களிலிருந்து விடுதலை :
"முன் முனைப்பு, பின் முனைப்பு இரண்டால் ஏற்ற
முக்களங்கம் எவையென்றால் மெய்மறந்த
தன்முனைப்பு, பழிச் செயல்கள், பொருள் மயக்கம் -
தளை மூன்றாம் இவை களைந்து உய்யவவென்றால்
உன் முனைப்பு குறைத்திட்டு உள்ளுள் நாடும்
உயிர்த் தவமும் அறநெறியும் சிறந்த பாதை
நன்முனைப்பாய் உயிர்நாட்டம் திரும்பி விட்டால்
நாள்தோறும் விடுதலையின் இனிமை காண்பாய்".
.
"எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுகளுக்குள்
மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கிவிடும்".
.
சிந்தனை:
"இன்பத்தும், துன்பத்தும், இயற்கையும் கற்பனையும்
சிந்தித்து அறிபவன், சிறப்பாக வாழ்வான்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஆசையின் மயக்கம்

தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிடவேண்டும். பசி, தாகம் முதலிய இயற்கைத் துன்பங்களைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால், பொதுவாக அப்படி நிற்பதில்லை.

ஆசையின் மயக்கநிலை

தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.

உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல், உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத் தான் தரும்.

இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளாளாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.




* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்".
.
"இச்சை எழும்போதே காரணம் கண்டிடு
இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு
இச்சைமுடிந்தால் எழும் விளைவை யூகி
இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்".
.
இச்சை யார்? நீ யார் இரண்டா? ஒன்றா? சொல்லு!
இச்சை எங்கே? நீ எங்கே? எதோ பிரி!
இச்சையாக இருக்கிறாய் நீயேதான்
இச்சை வேறொன்று எண்ணி மிரள்கிறாய்!".
.
அகத்தவப் பேறு:
"அகத்தவத்தால் "ஆ" லயமாம் சிறந்த வழிபாடு
ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு
அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி
அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;
அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி
அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது
அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்
அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 
 
 

சனி, 1 ஆகஸ்ட், 2015

இயற்கைச் சக்திக்கு உதவுவோம்

உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும் உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறுநேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் விளைவாலோ அல்லது ஐம்புலன்களின் விளைவாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது. உணவு, உறக்கம், உழைப்பு, ...பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், புறக்கணிப்பதாலும், சிந்தனையோட்டத்தை அவ்வாறு பயன்படுத்துவதாலும், நமது செயல்களின் விளைவாகத் தொந்தரவுகள் நேரலாம். பருவ வேறுபாடு, பரம்பரை உணர்ச்சிப் பதிவு, வானில் கோள்களின் ஓட்டத்தில் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள், அவற்றின் சேர்க்கையின் விளைவுகள் இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும்.
இந்த விளைவுகளிலிருந்து காக்க இயற்கை சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களால் நாம் தடுத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று. அதனால் தடுப்பு நிலையை உயர்த்திக் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் நாம் அறிய முடியாத நிலையில் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளையும் தடுப்பு நிலையை உயர்த்தி, உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பல நூற்றாண்டுக்கு முன்பே மனிதன் தெரிந்து கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத காரணங்களால், தான் நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும், வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு, உடல் நலத்தை விரைவில் பெற்றுவிடலாம்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
தன் நிலை :
"இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்
எண்ணும், இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்;
இயற்கையினை - ஈசன், உலகம், உயிர்கள்
எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்;
இயற்கையின் உச்ச நிலையாக உள்ள
எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆய்ந்தால்
இயற்கை, அறிவு இரண்டும் ஒன்றாய்க்காணும்
இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்".
.
விதி மதி :
"இயற்கையதன் நிகழ்ச்சிகளை விதி என்கிறோம்.
எண்ணத்தின் செயல்வகையை மதி என்கின்றோம்.
இயற்கை நிகழ்ச்சிகள் பஞ்சு, இரும்பு என்றால்
இவை மதியால் ஆடை, ஆயுதங்களாச்சு.
இயற்கையினை அறிந்த அளவறிவின் மேன்மை,
இதையறிந்தால் விதிமதியின் குழப்பம் போகும்.
இயற்கையின்றி எந்நிகழ்ச்சி உண்டு சொல்வீர்
எண்ணமின்றேல் இயற்கைக்குச் சிறப்பே ஏது?"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்