Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 31 அக்டோபர், 2015

சத்சங்கம் :


உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில் படும் அல்லல்களையும் துன்பங்...களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்கு காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங்கொண்டுள்ளன. பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும் தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல், இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்கமுடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.-
"அவ்வப்போது அன்பர்கட்கு சொல்லுகிறேன் எழுதுகிறேன்
துயர்களைய தூய்மைபெற நலம் காண்பீரே - மகரிஷி."
.
காலத்திற்கேற்ற வாழ்க்கைநெறி :
.
"எந்த எந்தக் காலத்தோ வாழ்ந்திருந்த
இறையறிஞர் சிந்தித்தார்கள்,
இயற்கையாய் அன்றுவரை வளர்ந்த
பண்பாடொப்ப மக்களுக்கு
அந்த அந்தக் காலத்துத் தேவை சூழ்நிலை
அறிவுக்கிசைந்த வாறு
அப்போது ஏற்றபடி வாழ்க்கை முறை வகுத்தார்கள்
சொன்னார்கள் கருணை கொண்டு;
இந்த விந்தை மிகுகாலம் விஞ்ஞான அறிவுக்கு
எல்லாம் ஒவ்வா
என்பதனால் இக்கால நிலைக்கேற்ப
வாழ்க்கைமுறை விளக்குகின்றேன் -
சொந்த சின்தனையொட்டி வாழ்வாராய்ந்து
அவ்வப்போது அன்பர்கட்கு
சொல்லுகிறேன் எழுதுகிறேன் துயர்களைய
தூய்மைபெற நலம் காண்பீரே".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

மகா மறைபொருள்

 

இருப்பு களம், இயக்க களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதனின் முன்பிறவிக்கும் பின் பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும், வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

*********************************************
.
அகத்தவத்தால் ..
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும் !."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 29 அக்டோபர், 2015

ஆன்மீகக் கல்வி


ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படி தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத்தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதேபோல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி' யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். 
.
உண்மையில் மனிதருக்கு பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை. ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெற வேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனித குலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய 'பிரம்ம ஞானம்' பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்.
.
-
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
***************************************************
"ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்.
ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்
உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;
ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்
உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

புதன், 28 அக்டோபர், 2015

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்

 


மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் "ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்" - இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் "மதம்" (Religion) என்பதாகும்.

அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் "ஞானம்".


கேட்போருக்குச் சொற்குறிப்பால் "கட+ உள்"
என்று சுருக்கிச் சொல்வேன்..
.
"சுகதுக்கம் அனுபவித்தேன், சோர்வு கண்டேன்
சுய அறிவால் ஆராய்ந்தேன், முடிவுகாண
சுகதுக்கம் உடலியங்கும் அறிவில் கண்டேன்
சூட்சுமமாய் மனங்குவித்து, ஒடுங்கிநின்று
சுகதுக்கம் கடந்துமோன நிலையுணர்ந்தேன்
சொரூபத்தில் அரூபநிலை யறிந்துவிட்டேன்
சுகதுக்கச் சுழல்தாண்ட முறை கேட்போருக்குச்
சொற்குறிப்பால் "கட + உள்" என்று சுருக்கிச் சொல்வேன்".
.
தெய்வநிலை :
"எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர்
இங்கு நம் உடல் உள்ளத் துறைந்தும் இருப்பாரன்றோ?
அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

குத்தி விளக்கிய அறிவு

ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள்.

அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

***************************************************
உண்மை நிலையறிய ஒத்தவழி :-
.
"கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்,
வம்புகளை வளர்க்கின்றீர் வாழ்வைப் பாழாக்குகின்றீர்
வாரீர் அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்".
.
"இன்பம் துன்பங்கடந்த ஈசனுக்கு எது தேவை?
பன்முறையும் சிந்தித்துப்பார் அவனைநாடி நினைந்து
அன்பும் அறமும் ஓங்கி அகத்துணர்வு அடைந்துயிர்கள்
துன்பங்கள் தீர்க்கும் வினைத் தூய்மைபெறப் பயின்றிடுவீர்".
.
"உருவங்கள் கோடான கோடியாய் அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒரு சக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 26 அக்டோபர், 2015

முத்திறம்

"பரிணாமம்" என்பது விண் முதற்கொண்டு அவையிணைந்து பஞ்சபூதங்களாகவும், அண்ட கோடிகளாகவும், உயிரினங்களாகவும் மாற்றம் பெறும் நிகழ்ச்சி.

"இயல்பூக்கம்" என்பது எல்லாத் தோற்றங்களும் அணுக்களின் கூட்டுத் தான் என்றாலும், அவற்றில் காந்தம் உற்பத்தியாகி, அதன் தன்மாற்றங்கள் - அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகியவற்றால் அந்த வடிவம் பெறும் குணங்களுக்கேற்ப, அததற்கு உரிய இயக்கச் சிறப்புப் பொருத்தமாக அமையும். இதுவே இயல்பூக்கமாகும். மேலும் இயல்பூக்க நியதியால், உருவங்களில் அமைப்பு மாற்றங்களும், குணநலமாற்றங்களும் உண்டாகும்.

"கூர்தலறம்" என்பது செயல் அல்லது இயக்கத்திற்கேற்ற விளைவு எனும் இயற்கை நீதி. எல்லையற்ற இறையாற்றலை, இருப்பு நிலையாக - ஈர்ப்பு ஆற்றலாகக் கொண்டால், அதன் ஆற்றல் பெருகி மடிப்புற்று வழிந்தோடும் நிகழ்ச்சியே விண் என உணர்ந்தோம். இறைவெளியென்பது நிலைபொருள். அதிலிருந்து தோன்றிய நுண்விண் அலையாகும். பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தும் விண் கூட்ட நிகழ்ச்சிகள் தானே?

அதாவது அலைகள் ஒன்றோடொன்று கூடுவதும், மோதுவதும், பிரிவதும் தான். அனைத்தும் அலை நிகழ்ச்சிகளே. எந்த அலையானாலும், காந்த ஆற்றல் இல்லாதது இல்லை. அலைகள் கூடினாலும், மோதினாலும் அவற்றிலிருக்கும் காந்த ஆற்றல், அந்தந்தப் பொருள், இடம், வேகம், சூழ்நிலை இவற்றிற்கேற்பத் தன்மாற்றங்களைப் பெறும். அதற்கேற்றவாறு விளைவுகள் காணப்படும். இந்த இறைநீதி தான் செயலுக்கு அல்லது இயக்கத்திற்கு ஏற்ற விளைவு என்ற "கூர்தலறம்" ஆகும்.
**********************************************
.
முத்திறம் -- பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம்.
முத்தரம் -- பூரணம், பேராற்றல், பேரறிவு.
.
முத்தரமே முத்திறமாய்..
------------------------------------
"அகத்தவத்தால் மனச்சுழலைப் படிப்படியாய்க் குறைத்து
ஆதிநிலை ஒன்றுவரை பழக்கமாக்கிக் கொண்டால்
இகத்துணர்வோ டெல்லையிலா இறைநிலையும் உணர
ஏற்றபடி அவ்வப்போ பொருந்திவரக் காண்போம்.
மிகத்தெளிவும் உள்ளுணர்வும் முற்றறிவும் கிட்டும்
மூலம்எனும் இறைமுதலாய் மனிதன்வரை வந்த
மகத்துவமாம் முத்தரமே முத்திறமாய் மலர்ந்த
மறைபொருளை அறிவுணரும் பிரம்மஞானம் கிட்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

மனமும் பிரம்மம்

 

மனிதனின் பருவுடலைப் பற்றி ஆராய்வோம். பலகோடி விண் துகள்கள் கூடிய ஒரு கூட்டுத் தோற்றமே பருவுடல். விண் என்பது இறை வெளியே - தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால், திணிவு பெற்று, ஒரு புள்ளி வடிவத்தோடு சுழன்றியங்கும் அலை இயக்கம். எனவே, இறைநிலையே விண்ணாகி, விண் கூட்டுச் சேர்க்கையால் ஏற்பட்ட கோடிக்கணக்கான பரு உருவத் தோற்றங்களில் ஒன்றாகப் பருவுடல் விளங்குகின்றது. ஆறாவது அறிவான நுண்மாண் நுழைபுலனறிவால் நாம் உணரும் போது, பருவுடல் பிரம்மமாகவே விளங்குகின்றது. அடுத்து உயிர் என்பதைப் பற்றி ஆராய்வோம்.

கோடிக்கணக்கான விண்துகள்கள் பரு உடலுக்குள் சூக்குமமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. விண் என்பது இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்த விளைவான சுழலலைதானே? எனவே, விண் துகளான உயிரையும் பிரம்மமாகவே உணர்கிறோம். மூன்றாவதாகக் காந்த ஆற்றலின் அலை நிலையான மனம் என்பது என்னவென்று சிந்திப்போம். இறைநிலையிலுருந்து தோன்றிய விண், விரைவாகத் தற்சுழற்சியாக இயங்கும்போது, அதைச் சுற்றியுள்ள இறைவெளியின் சூழ்ந்தழுத்த ஆற்றலால் விண்ணுக்கும், இறைவெளிக்கும் இடையே ஏற்படும் உரசலால் எழும் நுண்ணலைகள் காந்தம் எனப்படும்.

இந்தக் காந்தமானது, பஞ்ச பூதங்களாகிய விண்கூட்டு அடர்த்தி நிலைகளான விண்வெளி, காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் இவற்றில் முறையே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாகத் தன்மாற்றம் பெறுகிறது. இவ்வைந்து வகையான காந்தத் தன்மாற்றங்களை பஞ்சதன்மாத்திரை என்று கூறுகிறோம். இதே காந்தமானது உயிர் உடல்களில் மேலே கூறப்பெற்ற ஐந்து மாற்றங்களோடு, உணர்வு ஆற்றலுடைய அலை நிலையான மனமாகவும் திகழ்கின்றது. இங்கு மனமும் பிரம்மமே என்று உணர்கிறோம்.

*************************************************
.
பிரம்ம வித்தை :
---------------------------
"வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது,
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்தவெளி சூனியமாய், நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சனி, 24 அக்டோபர், 2015

தெய்வீகப் புதையல்

 

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சகஜ நிட்டை:
"கருதவத்தில் ஆரம்பச் சாதகர்கள்
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அனேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்".
.
உலகிணைந்த கல்விமுறை வேண்டும்;-
"கருத்தொடராய் வந்த வினைப்பதிவுகளின் வலுவைக்
கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
வாழ்வுள்லோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவை வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 23 அக்டோபர், 2015

பொருளும், மதிப்பும்

 

நம்மிடம் 10ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இரண்டுமே காகிதம் தான். ஆனால், அதற்கு மதிப்பு என்று ஒன்று உள்ளது. அதே போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பொருள் நமக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்தே அந்த மதிப்பும் அமையும். அந்தப் பொருள் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது எண்ணிறந்த மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது என்கிற போது அதற்கு மேலும் மதிப்பு உயருகிறது. பொருளினால் மதிப்பே தவிர எனது, என்னுடையது என்பதினாலே மதிப்பு உயருவதில்லை.

ஆகவே, இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் தவம், தற்சோதனை இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான். நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், அடைய வேண்டும், முழு முதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 22 அக்டோபர், 2015

வாழ்க்கைத் தத்துவம்



வாழ்க்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்தில் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பின் நிலையேயாகும்....

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்தவேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோன்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவால் விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்.




 "வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்
கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்
ஏழை, நோயுற்றோர் எங்குமே சாட்சியாம்".
.
ஆசிரியர்:
"வாழ வழிகாட்டிப் பயிற்சியூட்டி
வாழவைக்கும் சிறந்த செயல் கல்வியாகும்.
வாழ்வினையே கல்வி போதனைக்கே நல்கி
வாழும் உயர்நிலை பெற்றோர் ஆசான் ஆவார்".
.
"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 21 அக்டோபர், 2015

தெய்வீக நீதி

 அறிவை வைத்துக் கொண்டு ஒருவர், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து அப்படி ஆராய்வதன் மூலமாக வலி, நோய்கள், பிணக்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, அமைதியோடும், பேரின்பத்தோடும் வாழக் கூடிய உயர் வாழ்க்கையைப் பெற முடியும். உலகத்தில் உள்ள சடப் பொருள்களும் சரி, உயிரினங்களும் சரி, எதுவானாலும் அவற்றோடு தொடர்பு கொள்ளுகிற போது ஒரு இணக்கமான, அளவு முறைக்கு உட்பட்ட வகையில் விழிப்பு நிலையோடு செயல்பட முடியும். பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும், உயிரினமானாலும் அல்லது வேறு இரசாயன கூட்டுப் பொருளானாலும், அது பரிணாம வளர்ச்சி நியதிப்படி, ஆதிநிலையிலிருந்து தற்போதைய நிலை வரை தொடர்ந்து ஜீவகாந்தத் தன்மாற்றத்தின் குண இயல்புகளோடு தான் அமைந்திருக்கிறது. எந்த ஒரு உயிரினத்துடனோ அல்லது சடப் பொருளுடனோ தொடர்பு கொள்ளும்போது ஒருவர் உருவம், நிறம், குணமாக அதனதன் தன்மையை அடைந்து தன்னுடைய சீவகாந்தத்தின் தன்மாற்றத்தையே எண்ணமாகவும் சொல்லாகவும் செயலாகவும் செலவிடுகிறார். அவருக்கும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளுக்கும் இடையே நடைபெறுகிற அலை இயக்கம் மோதுதல், பிரதிபலித்தல் என்கிற தன்மைகளோடு, அவரையும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளையும் ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாக்கி அதற்கேற்ற விளைவுகளைத் தருகிறது. இந்த விளைவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும், தொடர்பு கொள்ளுகிறவருடைய இயற்கையான தன்மையையோ அல்லது தொடர்பு கொள்ளப்படுகிற பொருள் அல்லது நபரின் இயற்கையான தன்மையையோ பாதிக்கக் கூடாது. அதாவது எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும் புலன் மயக்கில் அதனோடு சிக்கிக் கொள்ளக்கூடாது. ஆன்மீக அறிவு பெற்ற ஒருவர் இதைத் தெய்வநீதியாகவும் வாழ்க்கை ஒழுக்கமாகவும் கொள்ள வேண்டும்.
 

அறிவின் அக நோக்குப் பயணம் :
"ஆன்மிகத் துறையென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப் போகுங்கால்
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும், இனிமையாம்
ஆன்மஒளி சுடர்விட்டு உள்ளுணர்வுப் பேறாகும்.
.
ஊன் உருவமான உடல் ஊர்தியென்றும் ஊடே
உயிர் என்ற சூக்குமமே "நான்" என்ற உணர்வு வரும்,
ஒடுங்க ஒடுங்கக் காணும் உண்மையோ அறிவதுவே
உயிரிலிருந்தோங்கி யெழுந்துடல் உலகம் வெளிவிரியும்.
.
"நான்" அதுவே இருப்புநிலை மெய்ப்பொருள் தெய்வமெனும்
நன்முடிவு விளக்கமாம், அந்த முழுமுதற் பொருளே
நல்ல ஒழுங்காற்றலாய் நல்லுணர்வாய் அறிவறியும்
நல் ஊற்றாய்த் திருவருளாய் நல்லின்ப வெள்ளமாய்.
.
தேன்பொழியும் பேரின்பம் திகட்டாது சலிக்காது
திருத்தங்கள் எண்ணம் சொல் செயல்களிலே மலர்ந்துவரும்
செருக்கொழிந்து தான் அடங்கித் தெய்வநிலை எங்கெதிலும்
திருவருளின் காட்சியாம் திரும்புங்கள் உட்புறமாய்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

உன்னுள் நான்; என்னுள் நீ

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களாலான பருப்பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது.

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை.

வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

____________________________________
"இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும்
முயற்சி வெற்றி பெற முழு அமைதி என்றும் இன்பம்".
.
மனித மாண்பு :
"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்".
.
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்
நிலைவெளியில் எழுப்புகின்ற நேர்அலைகள் காந்தமாம்
மறைபொருளாம் காந்தம் தன்மாத்திரைகள் ஐவகை
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மா பிரம்ம ஞானமாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 19 அக்டோபர், 2015

கருவில் திருவுடையார் :

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நற்கும்போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.
.
ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும், என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர் நிலையில் பக்குவப்படட்டும். குருதானாக வருவார்.
.
மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? பிரம்மத்தினுடைய இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).
.
நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம் :-
அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கெனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
________ ________ _______ _______ _______
.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்".
.
அறிவறியும் தவம் :
"இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்."
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மெய் வழி அறிவு ( God Consciousness) :


 உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயங்க இடமாகவும், முடிவாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழுமுதற்பொருள். இதன் இயக்கமே உயிர். உயிரின் படர்க்கையே மனம் என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.

இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத்துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலாலும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.

மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்ககள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை ஓதியவனும் ஓதியதை உணர்ந்து தானானவனும் ஞானி.

இன்பநிலை எய்த வாரீர் :-

"அறிவானது நிறை நிலையை ஆதியாக
அமைதி நிலையில் உணர்ந்து அதுவாம் போது
அறிவு உயர்ந்தகன்று அமைதிப் பேரின்பத்தில்
அணுமுதலாய் அண்ட கோடி தானேயாக;
அறிவே அவ்வந் நிலையில் ஒழுங்கியக்க
அமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்
அறிவின் பெருமை யுணர்ந்த இன்பவெள்ளத்
தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 17 அக்டோபர், 2015

குண்டலினி யோகம் :

 "நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளிய முறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல் கீழ்நோக்கிப் போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும், அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கின்றோம். மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ்நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம்.
.
சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும் போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறை குண்டலினி யோகப்பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச்சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து, உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.
.
ஒவ்வொரு மையத்திலும் உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக பலன் மிகும். இவ்வாறு இயக்கி விடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும், உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லை என்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றன ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கட- உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை
கட- உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி,
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட- உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.!"
.
"அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

தன்னிறைவுத் திட்டம்

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும், திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?' என்று கணித்துக் கொள்ளுங்கள்.

அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில், சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன.

உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும்.

இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்மயோகம்" இதில் அடங்கியிருக்கிறது.

மனநிறைவு :
"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்".
.
எதிர்பார்த்தல் ஏமாற்றம் :
"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 15 அக்டோபர், 2015

வேண்டியதெல்லாம் கிடைக்கும் :

 நஎதிர்பார்த்தது, எதிபார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகி கொண்டே போகிறது. இந்த அடிப்படை தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டுவிடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒருவார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும் போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்துகொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாதமாக வைத்து அந்தப் பயிற்சியையே நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
மற்றவரை எதிர்பார்த்தல், கையந்தால் வேண்டாம்....
.
அருள் தொண்டு :
"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல், கையந்தால் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 14 அக்டோபர், 2015

எண்ணப் பதிவு

ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந...
்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
எண்ணத்தின் சிறப்பு :
"எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்;
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி.
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை".
.
நன்மையே நோக்கு :
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்,
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 13 அக்டோபர், 2015

பதிவுகளின் சின்னம் :



மனிதனுக்குப் பாவப்பதிவுகள் என்று இருந்தால் எப்படி அதைக் கண்டு பிடிப்பது ? அதனுடைய அடையாளம் என்ன என்றால் "உள்ளத்திலே களங்கம் உடலிலே நோய்" இதுதான் பாவப் பதிவுகளுடைய அடையாளம்....


சில சமயம் உடலிலுள்ள நோய்கள் வெளியில் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் என்னிடம் எந்தப் பாவமும் இல்லை, பதிவும் இல்லை, நோயும் இல்லை என்று எண்ணிக் கொள்ள முடியாது.

ஒரு செடி வளர்கிறது, வளரும் போதே அதில் இவை, பூ, காய், பழம் பார்க்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், அதிலே எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்தந்த பருவம் வரும்போது தான் அதன் இலை, பூ, காய் தெரியவரும். அதே போல நம் உடலிலுள்ள பழிச்செயல் பதிவுகள் கூட அந்தந்த காலத்திலே அந்தந்த வயதிலே, அந்தந்தத் தொடர்பு வரும்போது தான் அது துன்பமாகவோ, நன்மையாகவோ தெரியவரும்.

பாவப் பதிவுடைய சின்னம் தான் இந்த உடலே என்றாலும் இத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெற்று வினைத்தூய்மை, மனத்தூய்மை பெற்று இறைவனோடு கலக்க வேண்டும் என்ற சிந்தனை பெரும்பாலோருக்கு உள்ளது. அதற்கு மன உறுதியும் விழிப்பு நிலையும் பெறுவதற்கு ஒரு பயிற்சி முறையாகத் தேவை. அதற்கு குண்டலினி யோகமோ அல்லது வேறு ஒரு தியான முறையோ பழகினால் தான் மனவலிவும், விழிப்பு நிலையும், பொறுப்புணர்ச்சியும் ஏற்படும். அதன் பிறகு அன்றாட வாழ்வில் நமது மனம், மொழி செயல்களை நலம் தரும் முறையில் திட்டமிட்டவாறு செயல்படுத்தலாம்.
 மகரிஷியின் அருட்பணி:-
அன்பின் அழைப்பு :
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்".
.
அருட்பணி:
"அருள் ஓங்கி உலகெங்கும்
அமைதி நிலவவேண்டி
அருள் வேட்கைக் கொண்டோர்க்கு
அவர் தகுதியைக் கணித்து
அருள் விளக்கும் வாசலதை
அன்பாய்த் தொட்டுத் திறந்து
அருள் விளங்கச் செய்யும் ஒரு
அருட்பணியை மேற்கொண்டேன்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 12 அக்டோபர், 2015

இயற்கை உணர்வு (Natural Instinct)

இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு "Instinct" என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த "Instinct" என்பதற்கு மேலே "Intelligence" அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் "Intelligence" என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த "Intelligence" வந்த பிறகு தான் "அறிவு", "Knowledge" வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது "Intelligence". அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' "Knowledge" என்று சொல்லலாம்.

இந்த "Collective Knowledge" வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் "Intuition" உண்டாகிறது. அதில் இருந்து தான் எல்லாம்வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதன் மனிதனாக வாழ ஏற்ற
ஒரு சாதனை வழியே மனவளக்கலை".
.
"அகத்தாய்வு என்பது மனத்தூய்மையை
நாடிச் செல்லும் தெய்வீகப்பயணம்".
.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது".
.
"தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,
தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;
அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ
அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.
இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,
வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை.
வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன் !"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உடலோம்பல் இறைவழிபாடு

 

இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடும், முறையோடும் சாப்பிடுவோம். ஆனால், சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக் குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கித் துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையால் செய்யும் தவறுகள் தான் துன்பமாக விளைகிறது. இறையின் ஆற்றலால் எல்லாம் சரியாக நடக்கிறது.

ஆனால், நாம் ஆசையினால், மறதியினால், இறைவனின் செயலை மறந்ததினால் அதிகமாகச் சாப்பட்டோம். இறைவன் செயலில் குறுக்கிட்டோம். உறுப்புக் கெட்டுவிட்டது. அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்கிறோம். இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத் தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பந்தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறபோது இறையுணர்வு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல், அதிகமாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வதும் இறை வழிாபாடு தானே?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும்
உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும்
கவலையாக மாறுகிறது."
.
"ஆகாசம் உயிராக இருக்கிறது.
அது உடலில் இயங்குவதால் உடலுக்கு ஒரு
காந்த இயக்கம் கிடைக்கிறது".
.
"ஒரு குழந்தையின் உற்பத்தியானது
பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின்
தரத்திற்கு ஏற்றவாறு தான் அமையும்".
.
சிறியது உடல் பெரியது மெய் :-
"பெற்ற உடம்பின் பயனாய் ஊறுமுதல் ஐந்து
புலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்;
நற்றவத்தால் உயிரறிந்து அறிவறிந்தபோது
நாம் பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்;
சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லை,
சிறியதுடல் பெரியது மெய் சீவன் சிவன் உண்மை
பற்றின்றி வாழவில்லை அளவுமுறை கண்டால்
பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 10 அக்டோபர், 2015

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி

 


கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூடக் கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும், விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர், உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி! முயற்சி!! வெற்றி!!! என்ற மந்திரத்தைத் தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வரக் கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.
"கவலை இல்லாத மனிதன் உலகில் உண்டு,
சிக்கல் இல்லாத மனிதன் உலகில் யாரும் இல்லை".
.
"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்,
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.