Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

செயல்விளைவு தத்துவம்



 வாழ்க வையகம். உலகம் முழுவதும் பக்தி வழியில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களிடம் உள்ள ஆழமான தெய்வ நம்பிக்கை சில சமயம் முரண்பாடான விளைவுகளைத் தருவதை அறிகிறோம். அது என்னவெனில், எல்லாம் வல்ல தெய்வத்தை நான் வணங்குகிறேன், ஆண்டவனே! எனக்கு இன்னது வேண்டும், அ...தை நீ கொடு என்று வேண்டிக் கொள்வது பழக்கமாக உள்ளது. அனைவரும் அவ்வாறு வேண்டி அவற்றை பெற்றார்களா? அத்தகைய வேண்டுதல் மூலம் தேவையான பொருட்கள் கிடைத்து மனிதகுலம் நிறைவு பெற முடியுமா? இறைநீதி என்பது மனிதன் கேட்டு இறைநிலை வழங்குவதில்லை. மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் அதற்குத் தக்க விளைவுகளைத் தவறாமல் பெற ஏற்ற அமைப்புதான் ”செயல் விளைவு தத்துவம்.”

கடவுளை வேண்டிக் கொண்டு, விளைவுகளுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட, என்ன செயல் செய்தால் அந்த விளைவு எனக்குக் கிடைக்கும் என்று சிந்திக்கவும், பயனடையவும் தக்க ஒரு வழியே செயல் விளைவு நீதியாகும். எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தக்க விளைவு உண்டாகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவமாக உள்ளது. இந்த அனுபவங்களைக் கொண்டும், முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களைக் கொண்டும் செயல் விளைவு தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஏமாற்றமில்லாமல் பயன் தரக் கூடியதுதான் செயல் விளைவு நீதி.

“ஈசனே தானாக உணர்ந்த போதும்
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்”

மனிதன் இன்பத்தை நாடுகிறான். வாழ்க்கையில் இலாபத்தை நாடுகிறான். இவற்றிற்காக கடவுளை வேண்டுவதை விட அதற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து முறைப்படி செய்து பயனடைவதுதான் ஏமாற்றமில்லாத உறுதியான வழிமுறையாகும்.

பொதுவாக பாவம், புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளை மனதில் கொண்டு புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் எல்லா வளங்களும் கிட்டுமென்பது, அது உண்மையே ஆனாலும், பாவம் எது, புண்ணியம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.

பாப புண்ணியம்

“எண்ணம், சொல், செயல் என்ற மூன்றினாலும்
எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ
மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ
மாசுஎனும் துன்பம் எழா வகையினோடும்
உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே
உலக இயல்போடு ஒட்டிவாழும் செய்கை
புண்ணியமாம், இதற்கு முரணான வெல்லாம்
புத்தி மிக்கோர் பாபமென விளங்கிக்கொள்வார்.”

எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலும் எவருக்கோ தனக்கோ, இன்றோ பின்னோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தருமானால் அது, அந்தச் செயல், பாவம் என்றும், இருக்கும் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்குமானால் அது புண்ணியம் என்றும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவுகளைத் தரும் செயல்களை நமது வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிரமமில்லை.

இதுவரையில் நாம் வாழ்ந்துகண்ட அனுபவங்களை வைத்துக் கொண்டே, விளைவுகளைக் கொண்டே, எந்த எந்தச் செயல் நல்லது, செய்யத்தக்கது, எந்தச் செயல் தீயது, தவிர்க்க வேண்டியது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த அளவுக்குச் சிந்தனை ஆற்றல் வளராதவர்களுக்கு மன உறுதியும், செயலில் பிடிப்பும் ஏற்படுவற்காக நம்பிக்கை வழியில் தெய்வத்தை வேண்டுதல் என்ற பயிற்சியும், பழக்கமும் ஏற்பட்டது.

பழக்கம்தான் உறுதி பெறும்பொழுது பண்பாடாக மாறுகிறது. பண்பாடுதான் மனிதனை தவறாது வழிநடக்கச் செய்யும் ஒரு பாதுகாப்பு. எனவே, இக்காலத்தில் விஞ்ஞான அறிவு மிகுந்து வரும்பொழுது, கல்வியின் வளர்ச்சிக்குப் பலப் பல வாய்ப்புகள் அமைந்திருக்கும்பொழுது, அறிஞர்கள் முயன்று செயல் விளைவு தத்துவத்தை மக்களிடம் பரவ விட்டு, வாழ்க்கைப் பண்பாட்டையே உயர்த்திவிடலாம். கடவுளை வேண்டுதல் என்ற பழக்கத்தில் நின்று அதனால் பயன்காணாது சோர்வடையும் மக்களுக்கு விஞ்ஞான பூர்வமான செயல் விளைவு தத்துவத்தை இன்று விரிவாக போதித்து, மனித இனப் பண்பாட்டை உயர்த்த வேண்டியது இன்றுள்ள பேரறிஞர்கள் கடமையாகும்.

செயல் விளைவு தத்துவத்துக்குச் சான்றுகளை எடுத்துக் கூறுவதற்கு அதிக சிரமமே இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும்,சமுதாயத்திலும், உலக அரங்கிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டே துல்லியமாக செயல்விளைவு தத்துவத்தை நாமும் நன்கு உணரலாம்; மக்களுக்கும் உணர்த்தலாம்; செயல் படுத்தி நலம் காணச் செய்யலாம்.

வாழ்க்கை நல போதகர்கள் இக்காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் கல்வி திட்டத்தில் செயல் விளைவு தத்துவத்தை விளக்கும் ஒரு முறையை அமுல்படுத்த வேண்டியது இக்காலத்தில் ஒரு இன்றியமையாத தேவை. சிந்தனையாற்றல் மிகுந்தவர்களுக்கும், சமுதாய நல நாட்டமுள்ள தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும், பணிவோடு எனது கருத்தை அளிக்கிறேன். அறிஞர் பெருமக்கள் சிந்தனை செய்து, இக்கருத்துக்குப் படிகட்டியும், வடிகட்டியும் மக்கள் குல மேன்மைக்கு வழிவகுக்க வேண்டுமென்று உலக நலம் வேண்டி அறிவுத் தொண்டாற்றி வரும் அறிஞர் பெருமக்களை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வையகம்!


நிறைவுரை
...
நண்பர்களே! அறிஞர் பெருமக்களே! இறைநிலையின் தன்மாற்ற சிறப்புகளை ஒரு சரித்திரமாக்கி, சுருக்கமாக எழுதி இந்த நூலை மனித குலத்துக்கு அர்பணித்திருக்கிறேன். இந்த நூலில் கண்ட உண்மைகளைப் பற்றி சிந்திக்கும் போது சில அறிஞர்களுக்கு என்னைச் சந்தித்து, சிலபல சந்தேகங்களுக்கு விடை காண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

அத்தகைய வரிகளை எனக்குத் தெரிவித்துவிட்டு, நாளும், நேரமும் ஒதுக்கிக் கொண்டு, என்னைச் சந்தித்து உரையாடி நிறைவு பெறலாம். மிகப் பொறுமையோடு இந்த ஆழ்ந்த கருத்துடைய ஒரு தத்துவத்தை நீங்கள் படித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும் உரியவை ஆகும்.இந்த நூலைத் தொடர்ந்து உங்கள் தொண்டு உலகுக்கு ஞான ஒளிபரப்புவதாக அமையட்டும். உங்கள் சிறப்பான கருத்தையும்,முடிவையும் எனக்குத் தெரிவித்து உங்கள் கடமையைச் செய்தால் களங்கங்கள் கரைந்த உண்மைகள் உலகுக்கு எளிதில் பரவும்
.
(1) இறைநிலை விளக்கம், (2) காந்த ஆற்றலின் விளக்கம், (3) அவ்வாற்றல் பாய்மப் பொருளாகி பிரபஞ்சக் களத்தில் நிறைந்து உருவாகும் விந்தைகள் அனைத்தும் மனித மனத்துக்கு மிகவும் உற்சாகம் தருவனவாகும். மனிதன் எப்பொழுதுமே வாழ்க்கைப் பொருட்கள், அதனால் ஏற்படும் இன்ப துன்ப உணர்வுகள் என்ற வரையில் அறிவை எல்லைக் கட்டிக் கொண்டு ஒரு மேலான உண்மையை, இறைநிலையின் திருவிளையாடல்களை மனம் விரித்து காண முடியாமல், மயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய மயக்கம் இந்த நூலின் மூலம் எளிதாகத் தெளிந்து விடும் என்பது உண்மை. “எனக்கு என்ன மயக்கம் இருக்கிறது?” என்று எண்ணலாம்; ஒரு குறிப்பு கொடுக்கிறேன்; அதன் மூலம் அந்த மயக்கம் நீங்கி, அதற்குரிய தெளிவும் யாருக்கு என்றாலும் வந்துவிடும்.

நாம் எங்கே வாழ்கிறோம்? உலகின் மீது, இந்த உலகமோ மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. சூரியனை 9 கோடி மைலுக்கு அப்பால் விலகி நின்று, ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சுற்று முடித்துக் கொண்டிருக்கிறது. என்ன விரைவிலே இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது? சூரியனைக் கொண்டு, அதன் சுற்றளைவைக் கொண்டு நிலவுலகின் ஓட்ட விரைவைக் கணக்குத் தெரிந்தவர்கள் சுலபமாக கணித்துக் கொண்டு மகிழலாம்.

அத்தகைய கணிப்பில் நாம் காண்பதென்ன? நாம் இருந்து கொண்டு வாழும் உலகம், தன்னைத் தானே மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டே, சூரியனை ஒரு நாளைக்கு பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் மைல் விரவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் அதை விட்டு விலகியா நிற்கிறோம்? இந்த பூமியின் சுழல் வேகத்தில் நாமும் பற்றிக் கொண்டுதான் சுழலுகிறோம், ஓடுகிறோம். என்றாகிலும் இந்த உண்மையை நினைத்துப் பார்த்ததுண்டா?

இதுபோன்று நம் உடலில் நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றனவே, அது எவ்வாறும் யாரால் நடைபெறுகிறது என்று சிந்தித்து பார்த்தோமா? ஆனால், உண்மையை அறியும்பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்து, இறைநிலையின் பேராற்றலை உணர்ந்து மகிழ்கிறோம். அது மட்டுமல்ல அந்தப் பேராற்றலின் நுண்துகள்கள்தானே பிரபஞ்சப் பேராற்றலின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அடிப்படையாகும்.

இத்தகைய உண்மைகளை உணர்ந்து அறிவின் தெளிவு பெறும்பொழுது, அடையும் அனுபவம்தான் “பேரின்பம்” என்ற பெரும்பயனாகும். இந்த இன்பம் எல்லோர் உள்ளத்திலும் பொங்கட்டும். அதிலிருந்து எழும் மகிழ்ச்சி அலைகள் உலக மக்கள் அனைவரையும், உள்ளத் தூய்மையும் செயலில் நேர்மையும் பெற வைக்கட்டும். எல்லோரும் இனிது வாழ்க. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

- வேதாத்திரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக