Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 31 மே, 2015

சிக்கல்களும் தீர்வுகளும்


சிக்கல் இல்லாத மனிதன் உலகில் இல்லை.
சிக்கலை கண்டு மிரளாமல், சிக்கலின் தன்மை, காரணம், உண்டான விதம் ஆகியவற்றை ஆராய வேண்டும்.
...
திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர் உண்டு. அதே போல தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு. இன்று கவலையாகத் தெரியாவது, நாளைக்குக் கவலையாகத் தெரிவதில்லை. எனவே எந்தக் கவலையையும் ஆராய்ந்து சரியான தீர்வைக் காணலாம்.
சிக்கல்-தீர்வு
1. வறுமை, கடன் - முயற்சி, சிக்கனம்
2. நோய் - செயலொழுக்கம், மருந்துண்ணல்
3. கருத்து வேறுபாடு - காரணம் அறிந்து, விட்டுக் கொடுத்து, விளக்கம் கூறி, மனநிறைவை ஏற்படுத்திக் கொள்ளல்
4. பேராசை, பொறாமை - தீய குணங்களின் விளைவுகளை அறிந்து அவற்றைத் தவிர்த்து நிறைமனம் பெறுதல்
5. பொருள், புகழ், செல்வாக்கு - முயற்சி, ஒழுக்கம், சமூகத் தொண்டு ஆகியவற்றின் மூலம் ஈடுகட்டுதல்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சனி, 30 மே, 2015

அறிவில் தெளிவு பெறுவதே " முக்தி "

"வாழ்வில் "மனம்" தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான். உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர, பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் 'மனவளக்கலையினை' அகத்தவம் என்றும் 'யோகம்' என்...றும் வழங்கப்படுகிறது. மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை 'யோகம்' என்றும், ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை 'ஞானம்' என்றும் வழங்குகிறோம்.
.
விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே 'ஞான நெறியாகும்'. எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே "முக்தி" எனப்படும்".
.
.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
-
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 29 மே, 2015

மனவளக்கலை மன்ற பயிற்சி

 "மனவளக்கலை மன்றத்தில்' பயிற்சி எடுத்துப் பாருங்கள். கணக்குப் போட்டுப் பாருங்கள். 'மனவளக்கலை மன்றத்திற்கு' வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள். இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.

.
ஆனால், 'மனவளக்கலை மன்றம்' மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது. மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. 'உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள்' என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும். அதே போல,

.
மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.

.
ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய தன் ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும். ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருப்பது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.

.
ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' செய்கிறது. உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது."

.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 28 மே, 2015

குண்டலினியோகம் யோகம் புரியும் அன்பர்களே!


"நீங்கள் தற்சோதனையில் இன்பத்தைப் பொருளாக வைத்து ஆராயுங்கள். அது எவ்வாறு அனுபவமாகின்றது என்று கண்டு கொள்வீர்கள். அப்போதுதான் புலனடக்கம், தெளிந்த முறையில் உண்டாகும். இன்பத்திற்கு விழைவது துன்பத்திற்கு போகும் பாதையாகும். துன்பத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால் மீதி இருக்கும் ...இனிமையே இயற்கையான இன்பம். இந்த இன்பம் தான் அமைதி தரும். இதுவே நிறைவையும் தரும். தன்னளவில் இன்பத்திற்கு விழையாமல் இருந்தால் தன் துன்பம் மட்டுமல்ல பிறர் துன்பங்களையும் போக்க வல்லமை மிகும். திறமையும் உயரும், கருணை சுரக்கும். குடும்ப அளவில் முதலில் உங்கள் 'செயல் நல, குண நல" சீரமைப்பில் வெற்றி பெற்றுவிட்டால் அதுவே உங்கள் வாழ்வின் வெற்றியாகும். இந்த வெற்றியில் கிட்டும் நிறைவும் அமைதியும் மற்றவர்களுக்கும் வழி காட்டும், சமுதாயத்திலும் இவ் அமைதி பரவிக்கொண்டே போகும். இதுவே உலக அமைதிக்கும் ஏற்றதோர் வழி. மன அமைதிக்கு சரியான வழி "குண்டலினி யோகமெனும் மனவளக் கலையே" ஆகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


புதன், 27 மே, 2015

ஓர்மை நிலை

"பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. "மனித மனமானது" இறைநிலையின் முடிவான பொருள். (Other End of the Mind is Almighty the God). 'உடலுக்கும் - மனதுக்கும்' இயக்க ஆற்றலாக இருப்பது ஜீவகாந்தம் ஆகும். ஜீவகாந்தம் என்பதோ இறைநிலையும் அதன் நுண்ணியக்க மூலமான 'விண்' மூலம் தோன்றிய அலையும் சேர்ந்த ஒரு கூட்டு ஆற்றல் தான். இந்தப் பேராற்றலானது 'கருமையம்' எனும் மூலாதாரத்தில் மையம் கொண்டு, உடல் முழுவதும் அலையலையாகப்பரவிப் புலன்கள் மூலம் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் மனமாக இயங்கிக் கொண்டும் இருக்கிறது. கருமையத்தில் திணிவு பெற்றுள்ள சீவகாந்தத்தைத் தான் "குண்டலினி சக்தி" என்று கூறுகிறோம். இதே மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்"(Meditation) ஆகும்.

.
"ஸ்பரிச தீட்சை" முறையால் உடனே மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்கு "மனவளக்கலை" ஆசான், மகரிஷியின் அருள்ஆற்றல் துணை கொண்டு வழங்கப்படும் தீட்சையின் வாயிலாக "குண்டலினி சக்தியை" (Life Force) முறைப்படி ஆக்கினைக்கு கொண்டு வந்துவிட இயலும் . பிறகு அந்த ஆற்றலின் அழுத்தத்தையும், அதன் சுழற்சியையும் மனதால் கூர்ந்து கவனித்துத் தவம் (Meditation) செய்ய வேண்டும். தியானத்தின் போது, ஆசான் நெற்றியில் உணர்த்திய உயிரின் அசைவையே அசையாமல் கவனிக்கவேண்டும்.

.
அப்போது புறமனமானது ஐந்து புலன்களில் நான்கை விட்டுவிட்டு, "ஊறுணர்ச்சி" என்று சொல்கிற "உயிர் ஆற்றலின்" (life force) அசைவை மட்டுமே உணர்கிற (ஆக்கினை சக்கரத்தில்) ஒரே புலனாக மட்டும் நிற்கும். அப்போதுதான் ஓர்மை நிலை (Concentration) சித்தியாகும். அப்போது நடுமனம் புறமனத்தின் இயக்கத்திற்கு ஒத்து நிற்க வேண்டும். இன்றேல் நடுமனம் தன் இயக்கத்தை நிறுத்தவில்லை என்றால், பலவித எண்ணங்கள் குறுக்கிட்டுத் தவத்தை கலைக்கும். இந்த இடத்தில் ஆயாசத்துக்கு இடங்கொடுக்காமல், ஊக்கத்துடன் முயன்று நடுமனத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அது 'புறமனத்தோடு' ஒத்துப் போகச் செய்ய வேண்டும்.

.
நாள் தோறும் பழகப் பழக.. மெய்ப்பொருள் பற்றிய; தன்னை அறியவேண்டும் என்கிற அறநெறியோடு கூடிய சிந்தனையுடன், தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆசான் அருளியபடி தியானம் செய்து காலை மாலை பழகப் பழக...போகப் போக எண்ணங்கள் குறுக்கிடாத, அசைவிலா ஒர்மைநிலை சித்தியாகிவிடும். தன்னை அறியவேண்டும் என்கிற, முழுமையை நோக்கிய உயிரின் விடுதலைக்கான ஆன்மீக வேட்கை கொண்ட ஓர் முயற்சியாக, நாம் தினமும் நம்மை 'தியானத்தில்' தவறாது சில நிமிடங்கள் ஈடுபடுத்திக்கொண்டால், தொடர்ந்து செய்து வரும் உளப் பயிற்சியின் பயனாக, . நாட்கள் ஆனாலும், ஓர்மைநிலை (Concentration) சித்தியாகிவிடும், நாள்தோறும் பழகிவரும் தியானத்தினால் தவ ஆற்றல் மிக மிக.. எல்லாம் வல்ல இறைநிலையே எவ்வாறு மனிதனிடத்தில் உயிராகவும், மனமாகவும், அறிவாகவும், இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உள்ளுணர்வு உண்டாகும். இந்த உயிரானது முழுமையை நோக்கி இயங்குவதற்கு, இந்த உடல் ஓர் வாகனமாக உள்ளது என்ற உள்ளுணர்வும் (Intuition) உண்டாகிவிடும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 26 மே, 2015

தவமா? தற்சோதனையா? எது எதற்கு உதவுகிறது ?.

வினா:

"தவம் தற்சோதனைக்கு உதவுகிறதா? தற்சோதனை தவத்திற்கு உதவுகிறதா?"

.
விடை :

இரண்டுமே ஒன்றுக்கொன்று உதவக் கூடியவை தான். ஒருவன் தன்னிடமுள்ள உணர்ச்சிவயத்தைக் கண்டறிந்து, அது காரணமாக அவன் செய்து வந்த தவறுகளை உணர்ந்து, 'அவற்றை இனியேனும் செய்யக் கூடாது' என முடிவெடுத்துக் கொள்வதும், அம்முடிவைச் செயல்படுத்துவதும் தான் தற்சோதனை. இத்தற்சோதனை தான் இப்போது ஆன்மீகத்தில் புதிதாக என்னால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இவ் உளப் பயிற்சி முறை தான் மனிதனை மிருகக் குணத்திலிருந்து உண்மையில், காரியாம்சத்தில் மீட்கக் கூடியது.

.
இந்தத் தற்சோதனையை வெற்றியுடன் செய்து முடிப்பதற்கு தான் தவம் உதவுகிறது. வெளிச்சத்தில் ஒரு பொருளை தேடி எடுப்பது போல், தவம் தரும் மன அமைதி நிலையில் தனது குறைகள் தெரியவரும். பிறகு அதே தவம் தந்த மன உறுதியை கொண்டு, அவற்றை நீக்கவும் முடியும். அதே போல், தற்சோதனையால் தூய்மையடைந்து விட்டால் தவம் எளிதாகவும், சிறப்பாகவும் அமைகிறது. இந்த இரண்டையும் கொண்டு மனித குல வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம். வேறு வழி இல்லை.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"மாசற்ற ஒளி ஊடே மறைந்திருக்கும் இருள் போல
ஈசன் அறிவில் இருக்கும் நிலை".

.
"வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும்
எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்".

.
"மனம் தன்னை தூய்மை செய்து கொள்ள
எடுக்கும் முயற்சியே தற்சோதனை".

.
"அகத்தவத்தின் பெருமை:
அகத் தவத்தின் பொருள் கண்டு
அதன் பெருமை உணர்ந்திடுவீர் !
அகத் தவமோ உயிரினிலே
அறிவை ஒடுக்கும் பயிற்சி !
அகத் தவத்தால் மேலும் உயிர்
அம்மாகி மெய்ப்பொருளாம் !
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம் !"

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 25 மே, 2015

Q : Swamiji, the meditation practices propagated by the World Community Service Centre are suitable for the people of all the religions. But a doubt as to why people belonging to the other religions also have to say the words “Om, Shanti!” at the end of the meditation, persists in the minds of many. Will you please clarify?


A: The word “Om” represents the Divine State and does not pertain to any particular religion. Silence is one of the characteristics of the all perva...sive Divine State, which is represented by the syllable “Mm”. The sound of the syllable “O”, which originates in the Mooladhara and travels up to the Thuriya, has been combined with the “Mm” sound to produce the word “Om”. This sound “Om” signifies the silence of the Absolute.
The word “Om” which was found the most suitable to represent the Divine State, is common to all the religions. “Shanti” on the other hand means peace, tranquility. The purpose of repeating the words “Om, Shanti!” at the end of the meditation is that we may all attain peace through the Divine grace. Those, not in favour of this, may refrain from uttering them. However, this would only impose a narrow view on the broad minded aspects of the World Community Service Centre, besides disrupting the uniformity of the meditation practices.

ஞாயிறு, 24 மே, 2015

பெண்கள்


பெண்ணை இரண்டாம் தர பிரஜையாகத்தான் உலகம் நீண்ட காலமாகக் கருதிக் கொண்டு வருகிறது.இது உண்மைக்கு மாறானது, தத்துவ உலகத்திற்கும் இது வேறுபட்ட கருத்துத்தான்.
உலகத்திலே வாழுகின்ற மக்கள் எல்லோருமே பெண்ணினத்தின் அன்பளிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த முறையிலே பெருமை பெற்றவர்கள் பெண்கள். அந்தப் பெருமையைக் காக்க வேண்டியது, போற்ற வேண்டியது ஆண்களுடைய கடமை.
...
"பெண்கள் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை பெண்கள் சிறப்புமிக்கவர்கள் , மதிக்கப்படவேண்டியவர்கள் "
--அருள் தந்தை

சனி, 23 மே, 2015

அருள் துறைக்கு நேர்வழி

முட்டைக்குள் அமைந்தகரு
உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும் ....
குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்.

திட்டமிட்டு தவம் ஆற்றி, அறம்பயின்று
தூய்மை அறிவில் உடலில் பெற்று விட்டால்
தீரும் வினை புலன்மயக்கம்
தாண்டிடலாம், தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும் விளைவாக
வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீடடைய விரும்புவதோ
பொருந்திடாது .
தட்டுங்கள் திறக்குமென்றார்
தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
தக்கவழி அருட்குருவின் தாள்பணிந்து
தவம்பயின்று தனை உணர்தல்

---அருள் தந்தை

வெள்ளி, 22 மே, 2015

தற்சோதனை

"தற்சோதனை மனித சமுதாயத்திற்கு, மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது. இதுவரையில் நாம் பழக்கத்தின் வழியில் சென்று வருகின்றோம். இந்தப் பழக்கத்திலிருந்து ஒரு மாற்றம் பெற வேண்டுமானால் ஒரு சிறந்த வாழ்க்கை நலம் தரும் விளக்கம் வேண்டும்.
.
"நாம் எதற்காக வாழ்ந்து வருகின்றோம்? எங்கிருந்து வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம் ? நம்முடைய வாழ்வின் நோக்கம்தான் என்ன?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு பார்த்தோமானால் இன்று இல்லாவிட்டாலும்கூட, வரவர சிறுகச் சிறுக நம் அறிவுக்குள்ளாகவே இயற்கை ரகசியங்க...ள் எல்லாம் புதைந்து இருப்பதனால் வாழ்வுக்கான விளக்கங்கள் தெளிவாகத் தெரிந்துவிடும். ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும். எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து, இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும்.
.
இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). அதற்குத் தடையான போக்கு நம்மிடத்திலே என்னென்ன உண்டு என்பதைக் கண்டுபிடித்து, படிப்படியாக அதையெல்லாம் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகத்தை (Simplified Kundalini Yoga) பயின்று அதன் மூலம் மாற்றி நம்மைத் திருத்திக்கொண்டு, உயர்ந்து, அந்த நிலையை அடைய வேண்டும். இந்த உணர்தலும் அப்படி உணர்ந்த வழியே திரும்பி உயர்ந்து அதுவாகவே மாறுவதும் தான் ஆன்மீக வாழ்வு.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 21 மே, 2015

மனிதருள் வேறுபாடு ஏன்..??

“மனிதருள் வேறூபாடு ஏன்?”- இந்த சிந்தனை, இந்த கேள்வி, ...
அநேகமாக எல்லோருடைய  உள்ளத்திலும் ஏதேனும் ஒரு காலத்தில் நிச்சயமாக எழுந்திருக்கும்;
சிலருக்கு அடிக்கடி  எழுந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணத்தை சொல்லக் கேட்டிருப்பார்கள்.;
அவரவர்கள் ஒரு காரணத்தை அறிந்து இருக்கிறீர்கள். ஆனாலும் விரிந்த அறிவிலே  இந்த கேள்விக்கு விடை கண்டுவிட்டோமேயானால்  நாம் வாழ்நாள் முழுவதும், நமது வாழ்விலே ஒரு பெருஞ்சுடராக, எல்லாவித
வாழ்க்கை ரகசியங்களையும்  நாம் புரிந்துகொள்வதற்கும் அதற்கு ஏற்றவாறு நமது கடமைகளை ஆற்றுவதற்கும் வேண்டிய ஆக்கமும், ஊக்கமும்
பெறமுடியும்.
.
.
ஏழு சம்பத்துக்கள்
.
.
வேறூபாடுகள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது இரண்டுபேர்  ஒரேமாதிரியாக இருக்கின்றார்களா  என்று பார்த்தோமேயானால்  இல்லை, இருக்க முடியாது
என்றுதான் முடிவுக்கு வருவோம். அப்படியானால் என்னென்ன வகையில் அந்த வேறுபாடுகள்  என்று நாம் பிரித்து நோக்கலாம், எத்தனை வேறுபாடுகள் ,
மனிதர்களுக்குள்ளாக இருக்கின்றன என்று பார்த்தோமேயானால்,
அவற்றை ஏழு மதிப்புகள், ஏழு சம்பத்துக்கள் (seven values) என்று சொல்லலாம். ஏழு மதிப்புகளில்தான் மனிதன் வேறுபடுகின்றான்.
.
அவை
1. உருவமைப்பு
.
2. குணம்
.
3. அறிவின் உயர்வு
.
4. கீர்த்தி
.
5. உடல் வலிவு
.
6. செல்வம்
.
7. சுகம்
.
.
இந்த ஏழு சம்பத்துகளில்தான்  ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருப்பதைக் காணலாம். இதற்கு  மேலாக ஒரு வேறுபாடு இருக்க  முடியாது; அப்படி ஏதேனும்  இருப்பதாகத் தென்பட்டாலும்  அது இந்த ஏழுக்குள் அடங்குவதாகவே  இருப்பதைக் காணலாம். இந்த வேறுபாடுகல் எவ்வாறு உண்டாயின  என்பதை நாம் தெரிந்துகொண்டோ-மேயானால், அந்தச் சிந்தனையிலே  ஒரு அமைதி கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த வேறுபாடுகளின் காரணமும் கண்டுவிட்டால், எந்த வேறுபாட்டை போக்க வேண்டும், எதை போக்க  இயலாது, எப்படி நாம் மேன்மை  அடையலாம் என்பதை  தெரிந்துகொண்டு நம் வாழ்க்கையை
செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.

புதன், 20 மே, 2015

இறை உணர்வும், அற உணர்வும் :


இறைவனானவன் துன்பம் தரலாமா என்று நாம் எண்ணுவோம். ஆனால் உண்மையிலேயே அது துன்பம் அல்ல. நாம் உணர்வதற்காக, உணர்ந்து திருந்துவதற்காக வந்த ஒரு வாகனம் தான் அந்தத் துன்பம் எனப்படுவது. ஒரு தடவை எற்படக்கூடியதை வைத்துக் கொண்டு மீண்டும் அந்தத் துன்பம் வராது காத்துக் கொள்ளக் கூடியது நம்முடைய செயல் தான். ஆகவே செயலிலே விளைவைக் காணும் இந்த ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகு எப்பொழுதும் வைத்துக் கொண்டால் இறைவனே நீதான். மனதிலே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு நிலைக்கிறது. இறைவன் நிலை விட்டு நாம் மாறுவதேயில்லை. ஏனென்றால் எப்பொழுதும் ஏதாவது செயலைச் செய்து கொண்டேதானே இருக்கிறோம்? அந்தச் செயலிலே விளைவு வரும். அந்த விளைவு இறைவனுடைய கருணை, இறைவனுடைய வரம் என்பதிலே ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர்கிறபோது எப்பொழுதும் இறைநிலை உணர்வு மாறாதிருக்கும்.

.
அதே நேரத்திலே நாம் செய்கிற செயல் மூலமாகப் பிறருக்கு நன்மைதான் வர வேண்டும், தீமை வரக் கூடாது. இந்தச் சமுதாயம் நமக்கு ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொருட்களைக் கொடுத்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் யாருக்கும் நான் செய்வது துன்பமாக இருக்கக் கூடாது. இந்த இரண்டு நோக்கத்தோடு செயலைச் செய்து வந்தால் தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிமையாகச் செய்ய இயலும் என்ற அளவிலே வரும், அப்படி வந்து விட்டதானால் இறை உணர்வும் வந்து விடும், அற உணர்வும் வந்துவிடும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
" (கடவுள்) + (ஆணவம், கன்மம், மாயை) = மனிதன்.
(மனிதன்) - (ஆணவம், கன்மம், மாயை) = கடவுள்".

.
"God + Impurities = Man
Man - Impurities = God"

.
"செயல் புரிபவன் மனிதன், செயல்களின்
விளைவாக வெளிப்படுவது இறைநிலை ஆகும்"

.
"இறையுணர்வும் அறநெறியும் பேறாய்ப் பெற்ற
எவருக்கும் எண்ணம் சொல் செயல்கள் மூன்றில்
மறை பொருளே பொருத்தமுள விளைவாய்த்தோன்றி
மனதுக்கு இன்பதுன்பம் அமைதி என்னும்
நிறைவு தரும் திருவருளின் நடனம் காண்பார்
நேர் வழியில் செயல் செய்தே விளைவைக் கொள்வார்.
குறையேது எதனை எவரிடம் கேட்டுப் பெறுவதற்குக்
குற்றமற்ற குணக்குன்று அருள்சுரங்கம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 19 மே, 2015

"வாழ்க வையகம்" "வாழ்க வளமுடன்" என்ற திருமந்திரம் :-


"ஏதாவதொரு பழிச்செயல், தவறான செயல் செய்திருக்கலாம். அதன் பதிவு நம் குழந்தைகளுக்கும் இருக்கும். அந்தப் பதிவுகளை மாற்றி, சூழ்நிலையாலே நம் குழந்தைகளின் வாழ்க்கை மேலும் பாதிக்காமல், அவர்கள் நல்லவர்களாக பாதுகாப்புப் பெற்றவர்களாக நல்ல முறையிலே உலகிலே சிறப்புடன் வாழவேண்டும். எதிர்காலம் ஒளிமயமாக அமைய வேண்டும். கல்வியிலே உயர வேண்டும். என்றெல்லாம் நமக்கு உள்ளத்திலே ஆசையிருக்கும். அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் குழந்தைகளை வாழ்த்த வேண்டும். ஒவ்வொருவராக நினைத்து "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்தலாம்.

.
வாழ்க வளமுடன் என்று சொல்லும் பொழுதே அந்த வார்த்தையிலே உள்ள ஒரு கருத்தாழத்தை நினைந்து பாருங்கள். "வாழ்க" என்று சொன்னாலே எல்லாம் பெற்று இனிதாக நீங்கள் வாழ வேண்டும் என்ற பொருள் உள்ளடங்கியிருக்கிறது. "வளமுடன்" என்று சேர்க்கும்பொழுது வாழ்க்கையிலே உங்களுக்குத் தேவையான எல்லாப் பேறுகளையும், பெற்று வாழவேண்டும் என்று அமைகிறது. ஆதலினால், நீங்கள் வாழ்த்தவேண்டியவரை உங்கள் மனக்கண் முன் நிறுத்தி "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துவது மிக்க வலுவுடைய ஆழமான கருத்துடைய நல்ல ஒலியை, தெய்வீக ஆற்றலை பிறருக்குப் பாய்ச்சக்கூடிய ஒரு "திருமந்திரமாகும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 18 மே, 2015

உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும் :...


.
எனது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் நான் பொருள் துறையிலே கழித்தேன், பொருள் பெருக்கி அதனைச் செலவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தேன், முடியவில்லை. அடுத்து, நாம் ஏதேனும் அரசியலுக்கு உதவ முடியுமா என்று கட்டுரைகள் வாயிலாகவும், திட்டங்கள் வாயிலாகவும் உணர்த்தி வந்த போது ஏதோ ஒரு சிறிய அளவு பலன் தான் காண முடிந்ததே தவிர அது நிலைக்கவில்லை. இறுதியாக ஆன்மீகத்துறையில் வந்த பிறகு தான் ஒரு உயிருக்கு உணர்வு ஊட்டினால் கூட அதிலே நிறைவு இருக்கிறது.
.
ஒரு குடும்பத்திற்கு ஒரு இனிமையான வாழ்வு வாழ்வதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளித்தால் அதிலே ஒரு நிறைவு இருக்கிறது. இவ்வாறாக தனிமனிதன், குடும்பம், சமுதாயம் உலகம் என்ற முறையிலே தனி மனிதனிடத்திலே அமைதி வேண்டும்; அந்த அளவிலே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் உணரவேண்டும் என்றால் மனிதன் மனதை உணர வேண்டும்; மனதுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய அறிவை உணர வேண்டும்; அறிவின் இருப்பிடமாக உள்ள உயிரை உணர வேண்டும். இதை உணர்வது ஒன்றும் சிரமமே இல்லை. உங்களுக்குள்ளாக, நீங்களாக இருந்து கொண்டு அதைத் திருப்பிச் சிந்தனை செய்து அதை அறிந்து கொள்ளும்போது இந்த மனம் இந்த முனையில் மனமாக இருக்கிறது. மற்றொரு முனையில் எல்லாம்வல்ல இறைவனாக இருக்கிறது என்பதைக் காணலாம். அது சுலபமே. அதற்கு ஒரு சிறு பயிற்சிதான் தேவை. அந்தப் பயிற்சியிலே ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தான் தேவை.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்".
.
"நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டுவருகிறோம்".
.
"செயல், ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம்,
இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்".
.
"ஒன்றி ஒன்றிப் பழகிவரும் அறிவிற்கன்பு ,
உறுதி, நுட்பம், சக்தி இவையதிகமாகும்;
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
அறிவினிலே நிலைத்துவிடும் ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்துபோகும்;
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கை முறை சிறப்புடைத்து; ஈது தவமாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 17 மே, 2015

எதிர்பார்த்தல் வேண்டாம்

"நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு வர வேண்டியது நின்றுவிடாது. எதிர்பார்த்தாலும், எதிர்பாராவிட்டாலும் வந்து சேர வேண்டியது சரியாக வரும் -
 .
'கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால், மனைவி என்ற முறையில், கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில், தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.

.
ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து 'அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, 'அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும்' என்பது இல்லை.

.
அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு வர வேண்டியது நிற்காது; வர வேண்டியது சரியாக வரும். அப்படி வரும்போது, எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே, அதுவும் இதுவும் இடிபடாது. என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

.
எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம், சோர்வு, துன்பம், பகை, பிணக்கு எல்லாம் வருகின்றன. 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

.
மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும்; அமைதி கிடைக்கும். அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

.
எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான். எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

.
முதலாவது - எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

.
இரண்டாவது - பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

.
மூன்றாவது - எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

.
இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி, குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்கள், எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர, எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.. --------------------------------------------------------------------------------

.
."குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்,
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

விழிப்புநிலையின் மேன்மை

எல்லாம்வல்ல மெய்ப்பொருள் [பிரம்மம்] எழுச்சி பெற்று உலகமாக, உயிர்களாகப் பரிணாமத்தினால் காட்சியாகிறது; அப்படிக் காட்சியாகும் பிரம்மத்தின் தன்மையான அறிவு வெளிப்படுகிறது. சுத்த வெளியாகிய மெய்ப்பொருள், அணுவாக இயங்கி, உலகமாக, உயிர்களாக, உயிரின் அலையான அறிவாக மாறும் வரை பிரம்மத்தின் வேறு தன்மை வெளிப்படுவதற்குச் சந்தர்ப்பம் கிடையாது.


பிரம்ம வேறு, அறிவு வேறா என்றால் வேறில்லை; இரண்டும் ஒன்று தான். அறிவை அறியும் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நாம் "எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம்" என்பதை உணர்ந்து எப்போதும் விழிப்பு நிலை கொண்டு பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே எந்தக் கணமும் செய்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த விழிப்புநிலை தான் மெய்ஞ்ஞானம் ஆகும். (It is this State of constant awareness that is Wisdom). இந்த விழிப்புநிலை வந்து விட்டதேயானால் நாம் பிறருடைய தவறுகளைக் குறையாக எண்ண மாட்டோம். அப்படிக் குறையாகவே இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டாமல், "அவர்களுடைய அறிவு இவ்வளவு, அதற்கேற்ப அவர்கள் செயல்களாற்றி வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் உதவ முடியும்" என்று பார்த்து முன்வருவோம்.

இந்த உயர்ந்த நிலை வந்து விட்டதேயானால் நம்முடைய செயல்களில் குற்றம் இருக்காது; நம்முடைய குற்றத்தைக் கண்டு நம்மைத் திருத்திக் கொண்டால் எப்போதும் நன்மையே செய்யும் தகைமை வந்துவிடும்.




.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உணர்ந்து திருந்து :
-------------------------

.
"நமை தூற்றப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற் சூடு அளிப்பவருக்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல்இறை எவர்க்கும்
எத்துன்பத் துக்குள்ளும் காவலாக
அமை நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்."

.
"அறியாமை (Innocence), அலட்சியம் (Ignorance), உணர்ச்சிவயம் (Emotional Moods) -என்ற மனதின் நிலையிலிருந்து மீளமுடியாமல் மனிதன் அவதிப்படுகிறான்".

.
"உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்
உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே."

.
"ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை;
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாக்க வல்லது".

.
"காரணம் அறியாமல் காரியம் செய்பவன் பக்தன்.
காரணம் என்னவென காண முயற்சிப்பவன் யோகி".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 16 மே, 2015

கற்பனையான எதிர்பார்ப்பு :

"நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள் அதற்காகப்
----------------------------------------------------------------------------------------------
'பணம்' தேவையில்லை. "மனம்" தான் தேவை -- மகரிஷி "
-------------------------------------------------------------------------------------
...
.


.
"அன்பர்களே! நமது வாழ்க்கை முழுவதும் சோர்வு, ஏமாற்றம், துன்பங்கள் நிரம்பியுள்ளன. இதற்கெல்லாம் காரணம், பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation).

.
கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை. அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு, 'அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும், இன்னதைத் தரவேண்டும், இன்ன அளவில் செய்ய வேண்டும்' என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

.
ஆனால், அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது. அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது. 'இவ்வாறுதான் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி, நமது அதிகாரத்திற்கு உட்பட்டு, நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா..?..!

செய்வதே இல்லை; செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள்.

.
நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து 'என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும்,, இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும்.' என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும். இதற்கு மேல் செய்யக்கூடாது' என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம். நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே, அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.

.
ஆகையால், எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும்; அமைதி வேண்டும்; மகிழ்ச்சி வேண்டும்; நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் (Simplified Kundalini Yoga) செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை. 'மனம்' தான் தேவை. தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும்.."
.



.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 15 மே, 2015

இயற்கையை உணர்ந்து வாழ வேண்டும்

"ஆறாம் அறிவு முழுமையாகச் செயல்புரிவதற்கு உடலிலும், மனத்திலும் நல்வாய்ப்புகள் பலவற்றையும் தன்னிடத்தில் பெற்றிருக்கும் மனிதன், விலங்கினப் பதிவுகளிலிருந்து விடுபட்டு, தனது அறநெறி வாழ்வால் தான் முழுமைபெற முடியும். தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஐவகைக் கடமைகளையும் உணர்ந்து ஆற்றி மனிதனாக வாழ வேண்டும். இதற்காக மனதைச் சீராக இயங்கச் செய்ய தவம் என்ற சிறந்த உளப் பயிற்சியைச் செய்ய வேண்டும். மேலும் ஆறாவது அறிவை முழுமையாக இயக்கப் பழகிக் கொண்டு உடல், உயிர், தெய்வம் இம்மூன்று தத்துவங்களைப் பற்றியும் தெளிவாக உணர்வதற்கும் கூட அகத்தவம் (Simplified Kundalini Yoga) புரியவேண்டும்.
.

"ஒவ்வொருவருக்கும் - அறிவு இருக்கிறது; பொறுப்புணர்ச்சி இருக்கிறது; செயல்திறமை இருக்கிறது; வாழ்வின் அனுபவம் இருக்கிறது - இதை ஒத்துக் கொள். பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றைக் கெடுத்து விடும். நலம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்து விடு. .இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது - வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 14 மே, 2015

"யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யயாமி" - இதன் பொருள் என்ன?

 "தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே மனதை அலைய விட்டுக் கொண்டு, அதனாலே உடலையும் இன்னும் வாழ்க்கையிலே உள்ள நலன்களையும் குழப்பம் செய்து கொள்கிறோம் கலக்கம் செய்து கொள்கிறோம். அந்தக் கலக்கத்தைத் தினந்தோறும் மாற்றி, அதன் நட்டத்தை ஈடு செய்து, நாம் திரும்பவும் மனதைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்து வைப்பதற்கு குண்டலினியோக தவம் (Meditation) அவசியம். எப்பொழுது அவசியம்? எவ்வளவு அவசியம்? என்றால், மனிதனுக்குச் சிந்தனையாற்றல் பெற்றவுடனேயே அவசியம். நாள்தோறும் அவசியம்.

.
தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கின்றோம்; அதைச் சுத்தம் செய்து வைத்தால் தானே மறு நாளைக்கு நன்றாக இருக்கும் ? இதேபோல மனதையும் கூட நாம் தினந்தோறும் வலுப்படுத்திக் கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, அலையும் மனதை அதன் நிலைக்குக் கொண்டு வந்து விட ஒரு பயிற்சி வேண்டும். அதைப் பெரியவர்கள் வேதகாலத்தையொட்டி வந்த சொல்வழக்கிலே "யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யயாமி" என்று சொல்லுவார்கள். மனதை முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து விடுவதற்காகச் செய்யக் கூடிய முக்கியமான உளப்பயற்சி தான் இந்த குண்டலினி தவம் (Simplified Kundalini Yoga).

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 13 மே, 2015

மன உறுதி

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்? ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம் ? ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

.
உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள். பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை, பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே ! இப்போது உங்கள் பிரச்சனை என்ன? ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா? அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா? கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

.
ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"எண்ணம் தானாக எழுந்து அலையாமல் எண்ணத்தில்
எண்ணமாய் இருப்பதே யோகம்".

.
"அகத்தாய்வு என்பது மனத்தூய்மையை
நாடிச் செல்லும் தெய்வீகப்பயணம்".

.
"விளைவறிந்து நலமுணர்ந்து நல்ல நாட்டத்தோடு
எண்ணம், சொல், செயல்களைப் பயன்படுத்தும்
கலையே தற்சோதனை".

.
"நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு, இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு, இதை மறக்கும் நிலையில்
உள்ள மதியின் போக்கே மாயை"

.
அறிவறியும் தவம்:

"இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
See More