தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை
நிறைவோடு நின்றுவிடவேண்டும். பசி, தாகம் முதலிய இயற்கைத் துன்பங்களைப் போக்கிக்
கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச்
சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால், பொதுவாக
அப்படி நிற்பதில்லை.
தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.
உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல், உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத் தான் தரும்.
இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளாளாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
--
யோகிராஜ் வேதாத்திரி
மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக