Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 17 மே, 2013

எனது வாழ்க்கை வரலாறு -5



அச்சமூட்டிய விபத்து

ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.

பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.

பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்றுசகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழேமாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டுவினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கிவேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்டஇனியேது பொருளாதாரத்தில் எங்கும்ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.

முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழஉலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கிஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடிஉருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கிஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்

எனது வாழ்க்கை விளக்கம்
இரண்டாம் உலகப் போர்க்காலம். உலகெங்கும் போர் அச்சம் மிகுந்திருந்தது. எனக்கு ஏதேனும் சமுதாயத்திற்குப் பயனுள்ள முறையில் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் செயின்ட்ஜான் ஆம்புலன்ஸ் (First Aid) குண்டு வீச்சுப் பாதுகாப்பு (Air Raid Precaution) ஆகிய இருதுறைகளிலும் பயிற்சி பெற்றேன். துப்பாக்கிச் சுடுவது தவிர மற்ற எல்லா வகையான இராணுவப் பயிய்சிகளும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படைக்கு உண்டு. எல்லாவற்றிலும் ஆர்வத்தோடு பயிற்சி பெற்றேன். உடை கூட இராணுவ உடைதான். வாரத்தில் இரண்டு நாட்கள் காரியாலயத்திற்கு அவ்வுடையிலேயே செல்ல வேண்டியிருக்கும். அப்போது போர்க்காலப் பாதுகாப்பாகச் சென்னையைக் காலி செய்ய உத்திரவாகிவிட்டது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் கோயம்பத்தூருக்கு மாற்றப்பட்டது. நான் உடனே அங்கு செல்ல முடியாமல் ஆறு மாதங்களுக்கு லீவு எடுத்துக்கொண்டேன். அப்போது லுங்கி வியாபாரம் ஏற்றுமதித் தடை காரணமாகச் சிறிது மந்தமாக இருந்தது. துணி விற்பனை மட்டும் சற்று முனைப்பாக இருந்தது. லீவும் முடிந்தது. மேலும் லீவு நீட்ட முடியாமல், நான் மாத்திரம் கோயம்புத்தூருக்குச் சென்று வேலையில் சேர்ந்து கொண்டேன்.
ஓட்டல் சாப்பாடு, காரியாலயத்திலேயே படுக்கை. இவ்வாறு இரண்டு மாதங்கள் கழிந்தன. எனக்கு ஓட்டல் ஒத்துக் கொள்ளாமல் உடல் நலிவுற்றது. என் துணைவிக்கு என் நிலையை எழுதினேன். நீங்கள் வந்தால் நானும் உடன் வந்து விடுகிறேன் என்று பதில் எழுதினாள். எங்கேனும் ஒரு வீடு குடியிுுருக்க ஏற்பாடு செய்துவிட்டு உடனே வருமாறு கேட்டுக் கொண்டாள். அவ்வாறே கோவைக் கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, மூன்று நாள் லீவில் கூடுவாஞ்சேரி சென்றேன். துணிக்கடையை சரியாக என் தம்பி நடத்தவில்லை. மூலதனம் மிகவும் குறைந்து போயிருந்தது. அதைச் சிறிது ஒழுங்கு செய்துவிட்டு, என் துணைவியோடு கோவைக்குச் சென்றுவிட்டேன். அங்கு சில மாதங்கள்தான் இருந்தோம். இரண்டாந்திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் அங்கேயே உருவாக்கிக் கொண்டோம். என் அன்னைக்கு எங்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. மீண்டும் லீவு எடுத்துக்கொண்டு கூடுவாஞ்சேரிக்கு வந்துவிட்டேன். பதினோரு மாதங்கள் லீவில் இருந்தேன். இதற்குள் காரியாலயங்கள் மீண்டும் சென்னைக்கு வர உத்தரவாயிற்று. அந்தச் சமயத்தில் நான் வேலைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டேன். காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்டது. கோவையில் நாங்களும் கூடுவாஞ்சேரியில் என் அன்னையோடு மற்றவர்களுமாகக் குடும்பம் பிரிவுபட்டிருந்தபோது எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. செழித்து வந்த பொருளாதாரம் சிறிது சிதறுண்டது. காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்ட போது அந்தப் பெரும் சிக்கல் நீங்கியது. கூடுவாஞ்சேரிக்கு வந்தவுடன் இரண்டாந் திருமண ஏற்பாடு செய்ய முனைந்தோம். எனக்கு அப்போது வயது முப்பத்திரண்டு. முதல் திருமணமாகி பத்து ஆண்டுகள் முழுமை பெறவில்லை. திருமணத்திற்கு நாங்கள் ஒப்புதல் செய்து கொண்டோம். அதுவரையில் எனது துணைவியின் தந்தையார் ஒப்புதலைப் பெறவில்லை. அதற்காக நாங்கள் மயிலாப்பூருக்குப் போனோம். அப்போது என் மனைவியிடம் ஒரு கருத்தை தெரிவித்தேன். அவள் தந்தை ஒப்புக்கொள்ளாவிடில் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டுமென்றேன். “அவர்களைச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு” என்றாள். மேலும் கூறினாள். “அவர் உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், திருமணம் நடக்க வேண்டியது தான். அதன் பிறகு அவரைச் சமாதானப் படுத்துவது என் வேலை” என்றாள். எனது மாமனாரை நாங்கள் அனுமதி கேட்டபோது “உங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூிறிவிட்டார். இதை முனனமே என் துணைவி ஏற்பாடு செய்துவிட்டாள் போலும்.
கூடுவாஞ்சேரிக்கு அடுத்த நந்திவரம் கிராமத்தில் பெண் பார்த்தாயிற்று. எல்லாம் என் துணைவியின் ஏற்பாடுதான். வழக்கத்திற்கு மதிப்பளித்து, ஒரு நாள் நான் நேரில் போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தேன். எனக்குத் தத்துவ ஆராய்ச்சியால் மனம் எவ்வளவோ தெளிவும் உறுதியும் பெற்றிருந்தது. எனினும் எனது வருங்கால வாழ்வை நோக்கிச் சிந்தித்தபோது ஒரு பெரிய புயல் வீசத் தொடங்கியது. என் உயிருக்குயிரான கண்மணி, எனது உள்ளத்தின் போக்கிறிந்து எனக்கு உதவியும், தொண்டு செய்தும் காக்க வல்லவள் என் துணைவி. அவள் இடத்தில் மற்றொரு பெண்ணைக் கொண்டு வந்து அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து வருந்தினேன். கோவைக்குச் சென்றபோது தவிர மற்ற நாட்களில் நாங்கள் பிரிந்திருந்ததே கிடையாது. இரண்டாந் திருமணத்தின் மூலம் அவள் என் வாழ்விலிருந்து பெரும்பகுதி ஒதுங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து உருகினேன்.
திருமணத்திற்கு நாள் நிச்சயமாயிற்று. திருமாங்கல்யம் செய்வதற்கு ஆச்சாரியிடம் பொன் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல நாளைக் குறிப்பிட்டிருந்தோம். அன்று நான் ஏதோ காரணத்தால் ஊரில் இல்லை. மாலைதான் வந்து சேர்ந்தேன். “நீங்கள் இன்று மாங்கல்யம் செய்ய ஆச்சாரிக்குப் பொன் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். நேரத்தோடு நீங்கள் வராததால் நானே ஆச்சாரியைக் கூப்பிட்டுப் பொன் கொடுத்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினாள் என் துணைவி. எனக்கு வியப்பாயிருந்தது. இவளிடம் பொன் ஏது? பணமும் இல்லையே? எப்படி பொன் வாங்கிக் கொடுத்திருப்பாள்? என்று யோசித்தேன். உடனே அவள் “பொன் ஏது என்று யோசிக்கிறீர்களா? என் வளையல்கள்தான்; இரண்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள். அவள் கைகளைப் பார்த்தேன். கைக்கு ஒரு வளையல்தான் இருந்தது. ஒரு சவரன் பொன்னில் நாலு கவரிங் வளையல்கள் போட்டிருந்தாள். அவற்றில் இரண்டுதான் அளிக்கப் பெற்றது. இரண்டாம் திருமணத் தாலியாக மாறியது. எனது உள்ளமே உருகிவிட்டது. அவள் ஒரு வெற்றிப் பார்வை வீசினாள். “என் வாழ்வில் பெரு நிதியான உங்கள் அன்பிலேயே ஒருத்திக்குப் பங்குகொடுக்கப் போகும் எனக்கு இந்தப்பொன் வளையல்களில் பங்கு கொடுப்பது பெரிய காரியமன்று” என்றாள். “வசதியிருக்கும் போது நான் மீண்டும் வளையல் செய்துபோட்டுக்கொள்கிறேன்” என்றாள். எதிர் காலத்தில் அவள் நடத்தை குடும்ப நிர்வாகத்தில் எப்படியிருக்கும் என்று எனக்கு ஒருவாறு தெரிந்துவிட்டது. அதை விளக்குவதற்கே இந்த நிகழ்ச்சி நடந்தது போலும். அவளைச் சிறுவயது முதலே நன்கு அறிவேன். ஆனால் தியாக உணர்வை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அன்றுதான் கிடைத்தது.
ஒரு மனிதனிடம் அடங்கியுள்ள மன ஆற்றல், நட்பு அளவு அவை சந்தர்ப்பங்களால்தான் வெளிப்படும். அவள் என்ன நினைத்து வளையல்களைக் கழற்றிக் கொடுத்தாளோ என்று, எனது நினைவு ஓடியது. நாலு வளையல்களில் வரப்போகிறவளுக்கும் இரண்டு வளையல்கள் உரியவை தானே என்று நினைத்தாளோ! நல்ல நாள் என்று குறித்த தினத்தில் மாங்கல்யத்திற்குப் பொன் கொடுக்க வேண்டும் என்ற எண்ண அழுத்தத்தில் அதை அளித்தாளோ! திருமணத்திற்கு எவ்வளவோ செலவுகள் உள்ளனவோ, அதோடு பொன் வாங்குவதற்கும் ஏன் தனியே செலவழிக்க வேண்டும்; இருப்பதைக் கொண்டே அலுவலை முடிக்கலாமே என்று நினைத்தாளோ! இதன் மூலம் இரண்டாந் திருமணத்தில், நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நிரூபித்துக்காட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாளோ! இவை எல்லாவற்றிற்கும் அவள் தியாகச் செயல் இடமளித்தது. வசதிகளோடு அமைந்த சொந்த வீட்டை வறுமை காரணமாக விற்றுவிட்டு வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் குடிபுகப் போகும் ஒருவர் உள்ளத்தில் நிலை எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது என் எதிர்கால வாழ்வை நினைக்கும்போது எனது உள்ளம். கண்ணீர் துளிர்ந்தது. மூன்று வகையில் கண்களிலிருந்து நீர்வரும். மகிழ்ச்சி பொங்கி வரலாம். துன்பம் மேலிட்டு வரலாம். கண்நோயுற்றால் வரலாம், எனக்கு கண் நோய் இல்லை. கண்ணீர் வந்தது. மகிழ்ச்சியினாலா அல்லது வருத்தத்தினாலா என்று பிரித்துக் கூற முடியவில்லை.
15-06-1943 தேதிதான் திருமணத்திற்க் குறித்த நாள். அந்த நாள் வந்துவிட்டது. இரண்டாந் திருமணத்தைப் பார்க்க வேண்டுமென்ற விழைவில் எங்கள் சுற்றத்தாரும் நண்பர்களும், சுற்றுப்புறக் கிராமவாசிகளும் வந்து குழுமிக்கொண்டிருந்தனர். திருமணத்திற்கு முன் இரவே கூட்டம் அதிகம். லுங்கி வியாபாரம் தலையெடுத்து நன்றாக நடைபெறும் காலம் அது. பல ஊர்களில் எனக்கு ஒப்பந்த நெசவாளர்கள் இருந்தனர். திருமணநாள் காலையில் அவர்களெல்லாருமே வந்து குவிந்து விட்டனர். இரண்டாந் திருமணத்தில் முதல் மனைவிதான் தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் முதல் மனைவியின் ஒப்புதல் மீதுதான், இரண்டாம் மனைவி இல்லத்துக்கு வருகிறாள் என்பதைச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மறைபொருள் விளக்கமே முதல் மனைவி திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்றும், அவள்தான் திருமாங்கல்யத்தை எடுத்துக் கணவன் கையில் கொடுக்க வேண்டுமென்றும், நமது முன்னோர்கள் இதை ஒரு சடங்காக வைத்துள்ளனர். இரண்டு பெண்களும், இருபுறத்திலும் உட்கார்ந்துதான் ஓமம் முதல் எல்லாச் சடங்குகளும் நடந்தன. வெளியிலிருந்து வந்து குழுமியிருந்த தாய்மார்கள், சகோதரிகள் எல்லோருக்கும் உள்ளத்தில் அடக்க முடியாத ஆவல். திருமாங்கல்யம் எடுத்து முதல் மனைவி, கணவன் கையில் கொடுக்கும்போது அவள் ஆற்றாமையால் கதறி அழுவாள். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும். நாமும் சிறிது கண்ணீர் சிந்தி நமது அனுதாபத்தைத் தெரிவித்து மனச் சுமையை இறக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டிருந்து பல நாட்களாக இத்திருமண நாளை எதிர்பார்த்து வந்திருந்த தாய்மார்கள் கூட்டம் வரவர அதிகமாகியது. மற்றச் சடங்குகள் முடிந்து தாலி எடுத்துக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. புரோகிதர் சொற்படி எனது முதல் மனைவி திருமாங்கல்யத்தை மனதிடத்தோடு எடுத்தாள். என் கையில் கொடுத்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் என்னை நோக்கினாள். “துணிவோடு தாலி கட்டுங்கள். எல்லாம் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்று சொல்லும் வீர உணர்ச்சி, அவள் பார்வையில் விளங்கிற்று. எனினும் நான்தான் கோழையாகிவிட்டேன். சிறிது கண் கலக்கம் ஏற்பட்டது. உடனே சமாளித்துக் கொண்டேன். இந்த நிலையில் நான் தோல்வி கண்டதற்கும் அவள் வெற்றி பெற்றதற்கும் காரணம் உண்டு என்பதைப் பின்னர் சிந்தித்து உணர்ந்தேன். அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி எண்ணி, உள்ளத்தைப் பண்படுத்தி வந்திருந்தாள். நான் பொதுவாக எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திருமணத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறையிலான உளப் பயிற்சியால் அவள் பரீட்சை வந்த போது நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுவிட்டாள். பாடத்தை அக்கரையோடு படிக்காமல் பரீட்சையில் வினாத்தாள் கையில் வாங்கியவுடன் திகைப்புற்ற மன நிலையில், கைகள் உதறலோடு விடை எழுதத் துவங்கும் மாணவன் போல என் நிலை வந்துவிட்டது. கைகளில் சிறிது உதறல் எடுத்து, பொதுவாக நான் பெற்றிருந்த தவச் சாதனையால் இந்த நிலையைச் சமாளித்துக்கொண்டு கொட்டு மேளம் முழங்கத் திருமாங்கல்யத்தைச் சூட்டி விட்டேன்.
எனக்குத் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை. மாறாக ஒரு திகைப்பும், குற்றம் புரிந்துவிட்டது போன்ற மனப்பான்மையுமே இருந்தன. எல்போர்டு (L.Board) போட்டு கொண்டு, கார் ஓட்டும் கணவனோடு அந்தக் காரில் முதல் முதலாகக் கணவன் வற்புறுத்தல் மீது பயணம் செய்யும் மனைவியின் மனநிலை போல, ஒரு பயங்கர மனோநிலைதான் எனக்கிருந்தது. எனக்கும் என் முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட இரண்டாந்திருமண ஒப்பந்த சூழ்நிலைகளும், உண்மை விளக்கங்களும் வெளியே உள்ளவர்கள் உணர்வார்களா? செல்வச் செருக்கால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுகிறான் என்று சிலர் நினைப்பார்கள். அறியாமையால் இரண்டு பெண்களை மனைவியாக்கிக் கொள்கிறான் என்று சிலர் நினைப்பார்கள். பெண் உள்ளத்தோடு பெண் உள்ளம் ஊடுருவி இணைந்து பரிதாபம் கொண்டு, அவள் மீது இரக்கமும், என்மீது வெறுப்பும் சிலர் கொள்வார்கள். இவற்றையெல்லாம் முன்னமே பலதடவை சிந்தித்து உணர்ந்துதான் இருந்தேன், என்றாலும் திருமணத்தில் குழுமியிருந்தவர்கள் முகங்களை நான் கண்ட போது, அவர்கள் நேரில் என்னைப் பார்த்து அவ்வாறெல்லாம் உரையாடுவதுபோல இருந்தது. இத்தகைய சிக்கலான மனோநிலையில் எனது இரண்டாம் திருமண விழா நடந்தது.
முதல் திருமண விழாவோடு இரண்டாந் திருமண விழாவை ஒப்பிட்டுப் பார்த்தால், முற்றிலும் வேறுபட்ட மனோ நிலைகள் எனக்கு அமைந்திருந்தன. வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் துய்க்கத் தொடங்கும் நாளாக அன்றிருந்தது. வாழ்க்கை இன்பங்களை விட்டுத் துன்பங்களை ஏற்கும் தொடக்க நாளாக இரண்டாம் திருமண நாள் அமைந்தது. பார்த்த நாடகமாக இருந்தால், அடுத்து வரபோகும் காட்சிகளும் பாத்திரங்களின் உணர்ச்சிகளும் இவ்வாறிருக்கும் என்று யூகித்து எதிர்பார்க்கலாம். இதுவரை பாராத, அதன் கதையமைப்பும் அறியாத நாடகம், எனது இரண்டாம் திருமணம், தாலி கட்டும் காட்சியில் கதாநாயகிகள், நாயகன் உணர்ச்சிகள் இவ்வாறு தான் அமையும், அவற்றை நேரில் காணலாம் என்று, பலவிதமான மனச் சோடனைகளோடு வந்திருந்த தாய்மார்கள், ஏமாந்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்களில் முட்டிக்கொண்டிருந்த நீர் வெளியாக வாய்ப்பே இல்லை. இந்தப்பெண் என்ன இம்மாதிரி ஏமாற்றி விட்டாளே என்ற வருத்தத்தில் தான் சில தாய்மார்கள் கண்களில் நீர் சிந்தியிருக்கலாம்.
எப்படியோ இரண்டாந் திருமணம் என்ற காட்சி, என் வாழ்க்கை என்ற நாடகத்தில் முடிந்துவிட்டது. வாசலில் பெரிய பந்தல் போட்டிருந்தும் இடம் கொள்ளவில்லை. அவ்வளவு பேருக்கும் உணவு அளித்தாக வேண்டும். பந்தி ஒன்றுக்கு 200 பேர் உட்காரலாம். பகல் 12.00 மணிக்குத் தொடங்கிய உணவளிக்கும் வேலை மாலை 4 மணி வரையில் முடிவடையவே இல்லை. பந்திக்குப் பரிமாறுவதில், நானும் எனது இலட்சிய மனைவி லோகாம்பாளும், நேரில் பங்கு கொண்டோம். எங்கள் பாடு சோர்ந்துவிட்டது. ஒருவாறு திருமணம் முடிந்துவிட்டது. எனது இரண்டாம் மனைவியின் பெயர் கண்ணம்மா, திருமணத்திற்கு முன்னமே அப்பெயரை மாற்றி விட்டோம். அவளுக்கு “இலட்சுமி” என்ற பெயர் சூட்டி விட்டோம். இந்தத் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட எனது வாழ்க்கை விளக்கங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரெண்டு கவிகள் மூலம் விளக்கியிருக்கிறேன்.

எது பண்புநீதி வழுவாது மக்கள் உழைத்து உண்டுநித்திய அநித்தியத்தின் விளக்கம் பெற்றுஆதிநிலை அறிவுநிலை யுணர்ந்து அன்பால்ஆன்மீக நெறியில்பலர் வாழ்ந்த நாட்டில்சாதி, மொழி, நாடு, வெறி இவற்றின் மூலம்தங்களையே உலக மக்களிடமிருந்துபேதித்துப் பிரிவு பிரிவாக்கிக் காணும்பித்து ஒருபெரிய களங்கமன்றோ ஆய்வீர்

நீங்களும் இதுபோலாகலாம்
அழுக்காறு அவா வெகுளிகடுஞ்சொற்கள் எனும் நான்கு வேண்டாவற்றைஅத்தனையும் மாற்றிவிட்டுத்தூய்மைப் பேறடைந்தபயன் அறிவறிந்தேன்பழுத்தமனம் அருளாற்றல்கணம் மறவா விழிப்புநிலை பிறழ்வதில்லைபண்பட்டதென எண்ணம்சொல், செயல் இவை விளைவாய் நலம் காண்கின்றேன்ஒழுக்கமுடன் கடமை பிறர்க்குதவி செய்யும் ஆற்றலிவை வாழ்வில் ஓங்கிஒளிவீசிப் பாருலகமக்கள் நலநாட்டத்தில் தொண்டானானேன்முழுத்திறமை வளர்கிறதுகொடுப்பதென்றிக் கேட்பதில்லை எதிர்ப்பார்ப்பில்லைமுதிர்ந்து வரும் அறிவுசிவக்காட்சியென உள்ளுணர்ந்து நிறைவாயுள்ளேன்

எனது இரண்டாவது திருமணம் நடைபெற்ற பிறகு எனக்குக் குடும்ப வாழ்க்கையில் பொறுப்பு மிகுந்துவிட்டது. இரண்டு பெண்களின் உள்ளங்களையும் ஊடுருவி ஆராய்ந்துதான், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். தன்னைப் புறக்கணித்து நான் எந்தச் செயலையும் புரிவதாக, இருவரில் ஒருவர் கூட நினைத்துவிடக்கூடாது. அத்தகைய கருத்து உருவாகிவிட்டால், பின்னர் அதனை ஒழுங்கு செய்வது கடினம். எனவே, மிகவும் விழிப்போடு ஒவ்வொரு செயலையும் செய்வேன். பரம் பொருளிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்பது, ஒரு தெளிவான விளக்கம். ஆயினும் உயிர்கள் அனைத்துமே பெண் குலத்தினிடமிருந்து தோன்றின என்ற விளக்கம் எனது சிந்தனையில் முதலிடம் பெற்றது. எனவே, நான் பெண்களை மிகவும் மதிப்போடு நடத்திவந்தேன். இந்தக் கருத்தை ஒட்டியே உலக சமாதானம் என்ற நூலில்.
பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்வே றென்னபெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு?
என்ற கருத்து ஒரு கவியில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். ஒருவர் மனமும் நோகாமல் வாழ்வை நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு குடும்பத்தை நடத்தினேன். லுங்கி வியாபாரம் அப்போது நாளுக்கு நாள் மேலோங்கியது. வெளியிலே சாயம் தீர்த்து நூல் கொண்டுவருவது மிகவும் தொந்தரவாக இருந்தது. ஆகவே, ஒரு சாயத் தொழிற்சாலையையும் ஏற்படுத்திக் கொண்டேன்.
நான் அடைய விரும்பிய இலட்சியங்களில், வறுமையில்லா வாழ்வும் ஒன்று. எனது வறுமை ஒழிந்துவிட்டது. தேவைக்கு மேலாக வருவாய் பெருகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு லுங்கி விற்பனை, ஒன்றேகால் இலட்சம் ரூபாயை எட்டியது. இதனால் என் அளவில் வறுமை ஒழிந்து போயிற்று. ஆனால் என் போன்று வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வறுமை ஒழிய வழி என்ன? இந்தச் சிந்தனை ஓங்கியது. முதலில் என்னிடம் தறி வேலை செய்யும் தொழிவாளர்களின் வறுமையை நீக்க வேண்டும். முதலில் செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் இதுவே. எனவே, தாராளமாகக் கூலியைக் கொடுத்தேன். பிறகு ஆண்டுதோறும் நிகர லாப வருவாயில் 25% போனசாகக் கணக்குப் போட்டு, நெசவாளர்கள் எல்லோருக்கும் கொடுத்து வந்தேன். நெசவாளர் மனைவி குழந்தை பெற்றால், உடனடியாக ரூ.15/- இனாமாக வழங்கும் ஏற்பாடும், தாயோ தந்தையோ இறந்துவிட்டால், ரூ.25/- இனாமாக வழங்கும் ஏற்பாடும் செய்தேன்.
நெசவுத் தொழிலையும் துணி விற்பனையையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.


அவை இந்தக் கவிகள் மூலம் விளங்கும்:-

“ஆடைகளைத் தோற்றுவிக்கும் பணியில் கண்டஅனுபவமும் திறமையும் கொண்டெல் லோருக்கும்கோடையிலும் குளிரினிலும் உடுத்திக் கொள்ளக்குறைந்த விலையில் நல்லதுணி வகைகள்ஊடை வலுபாவு வலு பொருத்தம் பார்த்துஒத்துநெய்து சரி அகல நீளம் வைத்துக்கூடை சுமப்போனுக்கும் செல்வர்கட்கும்குறித்த விலைவிற்கும் ஒருபணியைச் செய்வேன்.”

“விற்பனையில் ஒத்துழைக்கும் எவர்க்கும் லாபவிகிதத்தில் பெரும்பாலும் குறைந்திடாமல்சிற்பிகளைப் போலறிவைப் புலன்களோடுசேர்த்தொன்றித் தொழிலாற்றும் நெசவாளர்கள்அற்புத செய்கைக் கேற்ற கூலி தந்தும்ஆடைகள் நெய்தே விற்கும் மற்றையோர்கள்கற்பனையாலும் என்னால் நட்டம் காணாக்கருத்துடனே உடுத்துபவர் திருப்தி காண்பேன்.

இவ்வாறு கொள்கையை வகுத்துக்கொண்டு தொழிலை நடத்தி வந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக