இவ்விளக்கம் உலகில் வாழும் மக்களில் சிந்திக்கும் ஆற்றல் உடைய அனைவருக்கும் தேவையானது. இந்த உண்மையை அறியாத குறைதான் மனிதருள் வாழ்வில் ஆங்காங்கு, அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் துன்பநிகழ்ச்சிகளாகும்.
மனித இனம் தோன்றி பல தலைமுறைகள் சென்றன. வாழ்க்கையில் ஏற்பட்ட புலனுணர்ச்சி அனுபவங்களால் திறன்பெற்ற அறிவின் சிறப்பு நிலையில் தோன்றியதே இறைநிலை பற்றிய வினாவும், தேடலும், ஆராய்ச்சியும், பற்பல கற்பனையான முடிவுகளும் ஆ...கும். இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள் ஆகும்.
ஆனால், இந்த இறைநிலையின் உண்மை அறியாமல் சிந்தனையாற்றல் மிக்க அறிஞர்பெருமக்கள் மிகவும் சோர்ந்து போயினர். இருப்பினும் அவர்களுடைய தேடுதல் விரைவு குறைந்தபாடில்லை. இத்தகைய உயர்ந்த, சிக்கலான மனநிலையில் அவ்வப்பொழுது சில அறிஞர்கள் கற்பனையாகக் கடவுள் நிலையைக் கருதினார்கள். அவையெல்லாம் மக்களிடையே பரவின.
இத்தகைய கற்பனையான தெய்வநிலை அறிவு பல சிந்தனையாளர்களைத் தூண்டி, அந்தக் கற்பனைக்கு மேலும் மேலும் கற்பனைகளை வளர்த்தன. இதனால் உண்மையான தெய்வநிலை மனிதனுக்கு எட்டாமல் சிதறுண்டு போயிற்று. ஒரே அருட்பேராற்றலாக உள்ள தெய்வத்திற்குப் பல பெயர்களும், பல கதைகளும் உண்டாயின.
எனினும், மனிதனுடைய தேடுதல் நிற்கவில்லை. அறிவின் உயர்நிலையில் உள்ளவர்கள் மனமும் இவ்வாறு வந்த விளக்கங்களைக் கொண்டு நிறைவு பெறவில்லை. அதே தொடரில்தான் நாமும் இறைநிலையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக நாம் பெற்றுள்ள விளக்கங்கள் ஓரளவு மனித மனத்துக்கு நிறைவு தரக்கூடியதாகவும், உடல், மனம், வாழ்க்கை வளம் இவற்றிறுக்கு ஏற்ற பாதுகாப்பும், பராமரிப்பும் அளிப்பதாகவும் இருக்கிறது.
எவரொருவர் உலகில் மனிதருடைய தேடுதலில் ஒரு விளக்கம் கண்டாலும் அவ்விளக்கம் உலகில் உள்ள அனைவருக்குமே போய்ச் சேர வேண்டும். இது ஒரு மாற்றமுடியாத, தவிற்க முடியாத இறைநீதியாகும். அந்த நீதியின் அடிப்படையில் நமது மனமும் ஆழ்ந்து எடுத்த முடிவுகளை இங்கு அனைவருக்கும் முதலில் விளக்குவோம்.
பிறகு எவருக்கு என்ன ஐயம் ஏற்பட்டாலும் நான் உணர்ந்த நிலையில் அதற்கேற்ற பதிலளித்து உலகுக்கு அறிவின் மூலம் நமது கடமை ஆற்றுவோம். இங்கு நாம் கொடுக்கக்கூடிய விளக்கங்கள் எவரொருவரையும் குறைகூறவோ, அவர்களுடைய தத்துவங்களை அலட்சியப்படுத்தவோ அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.
நாம் உலகத்தைப் பார்க்கிறோம். அதிலுள்ள பொருட்களையும், உயிரினங்களையும் அறிகிறோம். ஒவ்வொரு தோற்றமும், இயக்கமும் தனிச்சிறப்பாகவும், வியப்பளிக்கத் தக்கதாகவும் உள்ளது. இந்த உண்மையை உணரும்போது ஏதோ ஒரு மகாசக்தி உலகையும், மற்ற உயிரினங்களையும் அறிவின் திறன் மிகுதியால் உற்பத்தி செய்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற கருத்து உருவாகிறது.
இந்த நிலையில்தான், மனிதனிடம் தோன்றிய இறைநிலைக் கருத்து படைப்புத் தத்துவமாக உருவானது. சிந்தனையாற்றல் மிகும்போது இந்தப் படைப்புத் தத்துவமே தவறு என்று புரிந்து கொள்கிறோம். ஏனெனில், பேராற்றலாக உள்ள தெய்வம் ஏதோ ஒன்றைப் படைக்கிறது என்று சொன்னால் அது, அதற்குத் தேவையென்று விளங்குகிறது. அதே இடத்தில் ஒரு மதிப்புக்குரிய வினாவும் எழுகிறது.
இறைநிலை என்ற பேராற்றலுக்கு ஏதேனும் தேவை இருக்குமா? அதற்கான படைக்கும் பொருள் எதைக் கொண்டு படைத்திருப்பார்? அந்தப் பேராற்றலான இறைநிலைக்கு அப்பால், எடுத்துப் படைப்பதற்கு பொருள் ஏது? இந்த வினாக்கள் எழுந்த பின் படைப்பு என்ற தத்துவம் நம்ப முடியாததாக ஆகிவிட்டது. மேலும், எத்தனையோ தத்துவங்கள் உலக தோற்றத்துக்காக வெளியாகி இருந்தாலும், அனைத்துமே கூர்ந்த அறிவின் ஆராய்ச்சிக்கு ஒத்துவரவில்லை.
ஒவ்வொரு பொருளின் அமைப்பும், அதன் இயக்கச்சிறப்புகளையும் கூர்ந்து அறியும்போது இதை யாரோ ஒருவர் படைத்திருப்பார் என்று எண்ணுவதற்கு இல்லை. இதனால் நான் கண்ட முடிவு, எல்லாம் வல்ல முழுமுதற்பொருளானது (1) வற்றாயிருப்பு (2) பேராற்றல் (3) பேரறிவு
(4) காலம் என்ற நான்கு வளங்களைக் கொண்டு பெருவெளியாக நிறைந்து, விரிந்து திகழ்கிறது என்பதாகும்.
இந்த நான்கு தன்மைகளும் கொண்டு இறைநிலையின் இயல்பூக்க விரைவு என்னும் அறிவாற்றலால் ஒவ்வொரு பொருளும் தோன்றியும், சிறப்பாகவும் ஒழுங்குமுறை தவறாமலும் இயங்கி, விளைவுகளை அளித்துக் கொண்டு இருக்கின்றது என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. முதலில் நம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டியது இறைநிலையின் சிறப்புத் தன்மைகள், அவை வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கு வளங்களும் ஒன்றிணைந்த ஒரு தத்துவமே இறைநிலையாகும்.
இந்த உண்மைகளை வைத்துக் கொண்டு நாம் ஆராய்ந்தால் எங்கும் நிறைந்து மறைபொருளாகவும், இயக்க மூலமாகவும் உள்ள ஒரு ...பேராற்றல் சுத்தவெளியே என்று உணர்கிறோம். சுத்தவெளியானது எல்லையற்றது. மறைபொருளாக உள்ளது. எல்லாப் பொருளுக்கும் அடிப்படை ஆற்றலாகவும், இயக்கச் சிறப்பான அறிவாகவும் அமைந்து விளங்குகிறது. இந்தப் பேராற்றலைவிட அதிகமான சக்தி உடைய மற்றொரு ஆற்றல் பிரபஞ்சத்தில் உலகில் இருக்க முடியுமா? நமது ஆராய்ச்சியில்,
(1) வற்றாயிருப்பு : எப்பொழுதேனும் சுத்தவெளி அளவில் குறையுமா?
(2) பேராற்றல் : உலகிலும், பிரபஞ்சத்திலும் காணும் பொருட்கள் அனைத்துமே சுத்தவெளியின் நுண்பகுதிதான். ஆகவே அதில் தோன்றிய விண் முதற்கொண்டு அண்டங்கள் அனைத்தும் லேசாக தன்னில் மிதக்க விட்டுக் கொண்டு இருக்கிறது. இக்கருத்துத்தான் பேராற்றலாகும்.
(3) பேரறிவு : எந்தப் பொருளும் அமைப்பு, இயக்கச் சிறப்பு, விளைவு இவற்றில் எப்பொழுதும் மாற்றம் பெறாமல் சிறப்பு அடைந்து கொண்டே இருப்பதும், அவை அனைத்தையும் தன்னிலே லேசாக மிதக்க விட்டுக் கொண்டிருப்பதும் சுத்தவெளியைவிட வேறொன்றுமில்லை. பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களும் முறை தவறாமல் இயக்கப்படுகின்றன.
(4) காலம் : இறைநிலைக்குத் தன்னிறுக்கமென்பதுதான் இயல்பான ஆற்றலாகும். இதனால் அது தன்னை இறுக்கிக் கொள்ளும்போது தானே உடைந்து நுண்துகளாகி அலை வடிவத்தில் அவை பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அத்தனைப் பொருட்களையும் லேசாகத் தன்னில் மிதக்க விட்டுக் கொண்டிருக்கிறது. தனது இறுக்க ஆற்றலாலும் அதுவே அதிகமான இடத்தில் விரிவடையும் போது விலக்கும் ஆற்றலாகவும் இருப்பதால் இறுக்கமும், விலக்கமும் சேர்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் ஒரு பெயர்தான் காலம் என்பதாகும்.
ஆகவே இறைநிலையானது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்கும் உடைய பெருவெளியே என்று உறுதியாக மதிக்கலாம். முற்காலத்தில் புகழ்வாய்ந்த ஒரு பேரறிஞர் விளக்குகிறார்.
“அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்
தழைத்ததெது மன வாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கெனும் பெருவழக்காய்
யாதினும் வல்லஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல் பகல் அறநின்ற எல்லை உளதெது அது
கருத்திற் கிசைந் ததுவே
கண்டனவெலா மோனவுரு வெளியதாகவே
கருதி யஞ்சலி செய்குவாம்.
அதுவேதான் பிரபஞ்ச பேராற்றலான தெய்வம் என்று கூறுகிறார்.
இவ்வாறு சுத்தவெளிதான் தெய்வம் என்று பல அறிஞர்கள் முன்னமே கூறியுள்ளார்கள். காலத்தால் இக் கருத்து மங்கிப் போய் இறைநிலை தேடுவதில் மேலும் மேலும் மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலைமைக்கு காரணம் இறைநிலையானது புலன்களுக்கு எட்டாத மறைபொருள். அதோடு சுத்தவெளியான அப்பரம்பொருள் ஒரு வல்லமை பொருந்திய பேராற்றல் என்பதை ஒப்புக்கொள்வதில் குழப்பம் இருந்தது. இப்பொழுது நமது ஆராய்ச்சியில் சுத்தவெளி ஒரு பேராற்றல் என்பதைத் தெளிவாக விளக்குகிறோம்.
நாம் எங்கே வாழ்கிறோம்? பூமி உருண்டை என்ற உலகின் மீது, இந்த பூவுலகின் எடை என்ன இருக்கும்? பல கோடி டன்கள் இருக்கலாம் அல்லவா? இதே உலகம் ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனின் எடை எவ்வளவு இருக்கும்? பூமியைவிட சூரியன் 33.3 லட்சம் தடவை எடை அதிகமாக உள்ளது. இப்பொழுது யூகிப்போம். சூரியனும், பூமியும் சேர்ந்தால் மொத்த எடை எவ்வளவு இருக்கும்? நம்மால் சாதாரணமாக கணக்கிடவே முடியாது. எனினும், நமது யூகத்தால் ஓரளவு அனுமானம் கொள்ளலாம். சூரியனும், பூமியும் சேர்ந்து கணக்கிலடங்காத கோடி கோடி டன்கள் எடை இருக்கும் என்று நம்பலாம்.
அடுத்தபடியாக, சூரியனும் பூமியும் எங்கே இருக்கின்றன? இரண்டு கோள்களுமே சுத்தவெளியில்தான் லேசாக மிதந்து, உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது சிந்திப்போம். ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் மிதக்கிறது என்று சொன்னால் எந்தப் பொருள் வலிதாக இருக்கும்? மிதக்கும் பொருளா அல்லது அதை தாங்கும் பொருளா? இந்த சிந்தனைக்கு எவரும் எளிதாகப் பதில் தரலாம். மிதக்கும் பொருளைவிட தாங்கும் பொருள்தான் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்.
இந்தக் கருத்தை மனதால் கணித்துப் பார்த்தோமானால் சூரியன், பூமி இரண்டையும் விட சுத்தவெளி அதிக வல்லமை உடையதுதான் என்று ஐயமின்றி விளங்கிக் கொள்வோம். இதனால், சுத்தவெளி எந்த ஆற்றலுமில்லாத ஒரு வெற்றிடம் அல்லது சூன்யம் என்ற கருத்து மாறிவிடுகிறது. நமக்குத் தெரிந்த சூரியக் குடும்பத்தையும் மேலும் ஆகாய வெளியில் உலவும் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்களையும் லேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் சுத்தவெளியின் பேராற்றலும் அதன் வல்லமையும் இணையற்றது என்று விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை இவ்வாறு இருக்க, ஏன் மனிதகுலம் சுத்தவெளி எந்த சக்தியுமற்றது என்று எண்ணவேண்டும்?
பேராற்றலான சுத்தவெளி இயல்பாகத் தன்னிறுக்க ஆற்றல் உடையது. தன்னிறுக்கத்தால் தானே பொடிப்பொடியாகி நுண்துகளான அலைவடிவம் பெற்றுவிட்டது. ஒவ்வொரு துகளும் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நிலையாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருள், நுண்துகளாகி அவற்றின் அதிவேக த...ற்சுழற்சியினால் அலைநிலை அடைந்த போது அது ஒரு மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது.
இந்த ஆற்றலில் பொருளாக உள்ளது இறைநிலை. துகளாகி அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். தற்சுழற்சி விரைவால் அலைநிலை பெற்றதும் அதே இறைநிலைதான். எனவே இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் மூன்று நிலைகளும் ஒன்று சேர்ந்த நுண்நிலை பெற்ற பாய்மப் பொருளான இறைநிலையானது ஆங்கிலத்தில் “Fluid” என்ற பெயர் பெற்றது. இந்த நிலையைத் தமிழில் “பாய்மப் பொருள்” என்று கூறுகிறோம்.
இறைநிலை ஆதிநிலையில் அசைவற்று இருந்து அதன் அழுத்தத்தால் ஏற்பட்ட இயக்க நிலைகளில் அலைநிலையாகி இந்தப் பேரியக்க மண்டலமான பிரபஞ்சம் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. இடமாகவும், பொருளாகவும், இயக்கமாகவும் உள்ள இந்தப் பாய்மப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் இல்லாத இடமே இல்லை. அதன் நுண்பகுதியான இறைத்துகள் ஒவ்வொன்றிலும் இறைநிலையின் ஆற்றல் அனைத்தும் அடங்கியுள்ளன. இப்பொழுது இறைநிலை தனியாக இல்லை. பொருளாகவும், இயக்கமாகவும் பிரிக்க முடியாதபடி ஒரே ஆற்றலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சர்வ வல்லமையுடைய பேராற்றலைக் ”காந்தம்” என்று அழைக்கிறோம்.
இப்பொழுது காந்தத்தின் தன்மையைத் தெரிந்து கொள்வோம். அது ஆதிநிலையில் இயக்கமற்ற மறைபொருளாகவும், அதற்கு இயக்கம் வந்தபோது தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் இயக்கநிலைக்கும் வந்திருப்பதால், பேரியக்க மண்டலத்தில் காந்தம்தான் இணையற்ற பேராற்றலாக எங்கும் நிறைந்து ஊடுருவி இறைநிலையின் தன்மைகளையெல்லாம் வெளிப்படுத்துவதாக உள்ளது.
இத்தகைய புதிர் போன்ற பெரும் மாற்றத்தை, இறைநிலையின் சரித்திரப் பெருமையை, மனித மனத்தால் உணர முடியவில்லை. ஆயினும் அதே மனதை இறைநிலையின் ஆற்றலால் உருவாகிய காந்த ஆற்றலின் அழுத்தத்தின் மீது செலுத்திப் பழகிவரும் ஒரு பெருமையான நிகழ்ச்சியை அகத்தவம் என்றும், குண்டலினியோகம் என்றும் கூறுகிறோம். இயற்கையின் இயல்பான தன்மைகளில் ஒன்று பேரறிவு
(Omniscient Consciousness).
எல்லா இடங்களிலும், பொருட்களிலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தெய்வீகப் பாய்மப்பொருள் காந்த நிலையாக இருந்தாலும் அது இடத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களும், குணங்களும் பெற்று, எதுவுமாகும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. இறைநிலையானது பிரபஞ்ச பொருட்கள் அனைத்துக்கும் மூல ஆற்றலாக இருப்பதால் அதனை ஒரு தெய்வீகத் தத்துவமாக மதிப்பு கொண்டு வணங்குகிறோம். இருப்பு நிலை ஆக இருந்த இறையாற்றல், சுத்தவெளி என்ற பெயரோடு இருந்தது.
அதே ஆற்றல் தன்னிறுக்கத்தால் துகள்களாகி தனது சூழ்ந்தழுத்தத்தினாலேயே அலைநிலை பெற்றுப் பாய்மப் பொருளாகிச் சுத்தவெளியாக உள்ள இறைநிலையோடு நீக்கமற நிறைந்து ஒரு இணையற்ற பேராற்றலாக இருக்கிறது. இந்த ஆற்றலைத்தான் தெய்வமென்று கூறுகிறோம். கடவுள் என்றும் இறைநிலை என்றும் வழங்குகிறோம். ஆதியும், அனாதியுமான முழுமுதற்பொருள் என மதிக்கிறோம். இந்தப் பேரறிவு “இறைநிலை விளக்கம்” எனப்படுகிறது. நாம் ஊணர்ந்தவற்றை வரிசைப்படுத்திப் பார்த்தால்,
1. இறைநிலை
2. இறைத்துகள்
3. காந்தம்
4. அணு.
இறைத்துகள்கள் இறைநிலையின் சூழ்ந்தழுதத்தினால் கூட்டம் கூட்டமாக சேர்ந்து இயங்கும்போது அந்தக் கூட்டு இயக்கம்தான் அணுவென்று கூறப்படுகிறது.
இறைநிலையிலிருந்து அணுநிலை வரைக்கும் புலன்களுக்கு எட்டாத தத்துவங்களாகும். இவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், தெளிவதும், பிறர்க்கு விளக்குவதும் “தத்துவ ஞானம்” ஆகும். அணுநிலைக்கு மேலாக, அதன் பின்னர் நடக்கும் இயக்கங்களையெல்லாம் புலன்களால் உணரமுடியும். அவற்றின் நிகழ்ச்சிகளை மொழியில் விளக்கமுடியும்.
இத்தகைய ஆற்றலைத்தான், விண்முதற்கொண்டு உள்ள இவ்வாற்றல் ஆன, விண் + ஞானம் = விஞ்ஞானம் என்று வழங்குகிறோம். எனவே மறைபொருளான இறைநிலை முதற்கொண்டு அணுநிலை வரைக்கும் “மெய்ஞ்ஞானம்” என்றும், அணுநிலைக்கு மேலாக நடைபெறும் இயக்கங்களை “விஞ்ஞானம் என்றும், கூர்ந்த அறிவின் ஆற்றலை இரண்டு விதமாக வழங்கி வருகிறோம். அடுத்தபடியாக இறைநிலையின் தன்மாற்ற விளைவுகளில் அணுமுதலாக உண்டாகும் இயக்கங்களைப் பற்றி ஆராய்வோம்.
- வேதாத்திரி
அருமையான விளக்கம்.பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு