பருவுடல் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, அதனுள் வேலை செய்து வரும் உயிர் பருப்பொருள் ஆக இல்லாமையால் நமக்கு அது புலப்படுவதில்லை. எனவேதான் அதை 'சூக்குமம்' என்கிறோம். உயிருக்கும் உடலுக்குமிடையே "மனம்" என்ற அறிவாற்றல் இயங்கி வருகிறது. மனம் என்பது என்னவென்று ஆராய்ந்து பார்ப்போமானால் தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற அனுபவத் தொகுப்புத்தான் மனம் என்பது தெளிவிற்கு வரும்.
நமக்கு ஏற்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யவே நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம். அதனால் விளையும் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். துன்பமானால் வருந்துகிறோம். இன்பமானால் சந்தோஷிக்கிறோம். இந்த அனுபவத்திற்குப் பிறகு இப்படிச் செய்தால் இது தீமை தரும் என்று உணர்ந்து அதை மீண்டும் செய்யாமலிருக்க உறுதி கொள்கிறோம். இதுவே முடிவாக நம் மூளையில் பதிந்து விடுகிறது. மீண்டும் அதே தேவை ஏற்படும் போது அதே நன்மையான செயலைச் செய்யும்படி நாம் தூண்டப்படுகிறோம். இதுதான் திருந்திய மனம். இந்த 'மனம்' புலன் வழி மயங்கிச் செயல்படுகிறது. அதை புலன் மயக்கிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயமடையச் செய்ய வேண்டும். இதுதான் "மனவளக்கலை" என்ற குண்டலினியோகமாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக