புலன்களுக்கு எட்டாமல் நிற்கும் அப்பேராதார நிலையைத் தானே எய்தி அனுபவமாகப் பெறுவது, இது அகநோக்குப் பயிற்சியால் கிட்டக்கூடிய பேறு. ஆன்மா புலன்கள் மூலம்... உலகைத் தொடரும் போது மனமாக இருக்கின்றது. மனம் அகநோக்குப் பயிற்சியால் உயிரில் ஒடுங்கும்போது மனமே அறிவாகி ஆன்ம உணர்வை எய்துகிறது. அறிவைக் கொண்டு ஆன்மாவின் மூலநிலை உணரும்போது ஆன்மாவே நிறை நிலை எய்துகின்றது. ஆன்மாவே மெய்ப்பொருளாக அக உணர்வு பெறுகின்றது. இந்த அனுபவங்கள் அகத்தவத்தால் மாத்திரம் கிட்டும். இத்தவத்தைப் பயில ஆசான் வேண்டும். பக்தி நெறிக்கு நூல்களே போதும். ஞானநெறிக்கு ஆசானின் நேர்முகத் தொடர்பு வேண்டும். இந்த இரண்டு வழிகளில் அவரவர் அறிவுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற ஒன்றைப் பின்பற்றலாம். பக்தி நெறியில் முழு அமைதி கிடைக்காவிட்டால் அப்போது ஞான நெறிதான் தகுதியானது. பக்தி நெறியில் மனிதன் தெய்வத்தை நம்புகிறான். ஞானநெறியில் தெய்வத்தை உணர்கிறான். உள்ளுருக்கத்தோடு இவற்றில் எந்த நெறியைப் பின்பற்றினாலும் மனிதனின் தன்முனைப்புத் திரை நீங்கி விடும். இந்தத் திரையை நீக்கிக் கொண்டு விழிப்போடு கடமையாற்றினால் வாழ்வு நிறைவை அளிக்கும். மகிழ்ச்சி ஓங்கும். மனிதன் அருட்பேறு பெற்ற இன்பத்தில் அமைதி பெறுவான்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக