மனிதனை இன்ப துன்பச் சுழலால் பாதிக்கப்படாத அமைதி நிலைக்குக் "குண்டலினி யோகம்" உயர்த்துகிறது. இங்குதான் அமைதி கிட்டும். இயற்கைத் துன்பங்களாகிய பசி, வெப்பதட்ப ஏற்றம், உடற்கழிவுப் பொருட்களின் உந்து வேகம், இவற்றால் ஏற்படும் துன்பங்களைப் போக்கிக் கொண்டால் மீதி இருப்பது என்ன? இன்பம்தான். அமைதிதான். ஆனால் இக்காலத்தில் பலர் ...விரும்புவதும் செய்வதும் என்ன? இன்பத்தை துய்க்க விழைகின்றனர். மேலும் மேலும் இன்பத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர். இதன் விளைவாக வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் எண்ணிக்கை பெருகுகின்றன. துய்க்கும் உடலும் சோர்வுறுகின்றது. மனதும் அமைதியை இழக்கின்றது. உடலுக்கும் மனதுக்கும் திட்டமிட்ட முறைப்படுத்திக் கொண்ட ஓய்வு இல்லை. இயந்திரமாகவே மனிதன் மாறிவிடுகிறான். அமைதி எவ்வாறு கிட்டும், நிலைக்கும்.? எந்த இன்பமானாலும் அது உயிராற்றலின் அழிவால் எற்படுவதேயாகும். ஆகையால் இன்பத்திற்கு விழைவது துன்பத்திற்கு போகும் பாதையாகும். துன்பத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால் மீதி இருக்கும் இனிமையே இயற்கையான இன்பம். இந்த இன்பம் தான் அமைதி தரும். இதுவே நிறைவையும் தரும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக