என் வயது இருபத்திரண்டுக்குப் பிறகு, எனது வாழ்வில் பல திருப்பங்கள்
ஏற்ப்பட்டன. பொருளாதாரத் துறையில் உயர வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம்,
தத்துவத்துறையில் உயிரின் நிலை என்ன? தெய்வம் எவ்வாறு உளது? என்று அறிந்துவிட
வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், என் அறிவை ஆட்க்கொண்டன. எப்போதுமே சிந்தனைதான்.
முயற்சிதான் பொருள் துறையை உயர்த்துமென்பதில் அசைவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஆராய்ந்து கொண்டேயிருந்தால், கடவுளையும் கண்டுவிடலாம் என்ற ஒரு திண்ணமான எண்ணமும்
எனக்கிருந்தது.
போஸ்டல் ஆடிட் ஆபிஸில் கிடைத்த வேலை எனக்குச் சிறிதுகூடச்
சம்மதமில்லை. எனினும் அந்த வேலையையும் விட்டு விட்டு என்ன செய்வது? வேறு வேலை
கிடைத்தால் பின்னர் அதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தொடர்ந்து வேலை செய்து
வந்தேன். ரூாபாய் பதினைந்து என் வேலைக்குச் சம்பளம். தறி நெசவில் மாதம் சுமார்
பத்து ரூாபாய் கிடைக்கும். மொத்தம் கூட்டினால் ரூாபாய் இருபத்தைந்து, அந்தக்
காலத்தில் என் தேவைக்குப் போதும். என் உணவுக்கும், பெற்றோர்களுக்குப் பணம்
அனுப்புவதற்கும், அத்தொகை போதுமானதாக இருந்தது. எனினும் எதிர்கால முன்னேற்றம்
எப்படி? மேலும் காலையிலும் மாலையிலும் நான்கு பர்லாங்கு தூரம் சென்று, தறி
நெய்துவிட்டு வருவதென்பது, எனக்குத் தாங்கொணாத் துன்பமாக இருந்தது. முதலில் தறி
நெசவிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இந்த நினைவில் மிக அழுத்தமாக இருந்தபோது,
ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பகுதி நேெர வேலை கிடைத்தது. இரத்தினம்
என்னும் பெயருடைய ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். என்னிடம் மிகவும்
கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியன். காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க
வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் பத்து, நெசவுத் தொழிலைவிட சிறிது சுலமாக இருந்தது.
எனினும், முன்னேற்றம் எவ்வாறு?
எனது பொருள் துறை வளர்ச்சியைப் பற்றி, ஒருநாள்
ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எண்ணம் தோன்றியது. “ஆயுர்வேத மருந்துகள்
எல்லாம் தெரிந்திருக்கும் நான், ஏன் மருத்துவம் செய்யக் கூடாது?” இந்தத் துறை
எனக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி தரும் என்று நினைத்தேன். முதலில் எவ்வாறு
தொடங்குவது? என்ற சிந்தனை. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தேன். பல் பொடியும், தாம்பூல
மாத்திரையையும் செய்து விற்பது என்று முடிவு செய்தேன். அப்படியே தாம்பூல
மாத்திரையைத் தயார் செய்தேன். அதில் கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூ, இவையெல்லாம்
இருக்கும். ஒரு உயர்ந்த முறை அது. எனது ஆசான் வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ்
செய்முறை அது. ஒரு புட்டி நூறு மாத்திரைகள் விலை நாலு அணா. போஸ்டல் ஆடிட்
ஆபிசிலேயே, அதை விற்கத் தொடங்கினேன். சிறுகச் சிறுக விற்பனை அதிகமாயிற்று. ஒரு முறை
செய்தால் ரூபாய் பத்து செலவாகும். வரவு ரூபாய் நாற்பது. ஒரு மாதத்தில்
விற்றுவிடும். இதோடு பல்பொடியும் செய்தேன். “சிகாமணி நாயுருவி பல்பொடி” என்பது அதன்
பெயர். இரண்டு விற்பனைகளும் சேர்ந்து, மாதம் ஐம்பது வருவாய் அளித்தது. எனது
நம்பிக்கை வலுப்பெற்றது. பொருள் துறையில் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்ற ஒரு
எண்ணமும் உறுதியும் எனக்கு உண்டாகிவிட்டன.
இருபத்துமூன்றில் எனக்குத் திருமணம்
செய்து வைக்க, என் பெற்றோர்கள் முனைந்தனர். எனது அக்காள் மகளையே எனக்குத் திருமணம்
செய்து வைக்கும்படி, என் மாமாவை என் தந்தையார் கேட்டார். எனது மாமாவுக்குத் தனது
மகளை ஒரு செல்வ வளமிக்க ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். எனக்கு என்
அக்காள் மகளையே மணக்க வேண்டுமென்ற விருப்பம். என் மாமாவின் முடிவு கண்டு என்
பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலாமா என்று,
என்னை வினவினார்கள். குழந்தை வயது முதலே என்னோடு பழகி என் உள்ளத்தில் நீங்கா நினைவு
பெற்றபின், வயது வந்த பிறகும் அவளையே மணக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு,
வேறு எந்தப் பெண்ணையும் மணக்க விருப்பமில்லை. திருமணப் பேச்சு நின்று
விட்டது.
சுமார் ஆறு மாதங்கள் சென்று விட்டன, இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு
பேரிடி. என் தந்தைக்கு காய்ச்சல் கண்டு மிகவும் அபாய நிலையில் இருப்பதாகச் செய்தி
வந்தது. மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்குப் போய் என் தந்தைக்கு
வேண்டிய கடமைகளைச் செய்யலாம் என்று இருந்தேன். மறுநாள் காலையே, என் தந்தை இயற்கை
எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்க
முடியவில்லை. செய்தியைக் கேட்ட இடத்திலேயே, அப்பா என்று கூவிக் கதறிக் கதறி
அழுதேன். எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். என்மீது பரிதாபம் கொண்ட அவர்,
என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியும் அவரும் என்னைத்
தேற்றினார்கள். அவரைப் பார்த்து என் அப்பாவை நான் இழந்துவிட்டேனே என்று மீண்டும்
ஒரு முறைக் கதறினேன். “அப்பா! வேதாத்திரி, கவலைப்படாதேடா! உனக்கு நான் தந்தையாக
இருந்து ஆகவேண்டிய அனைத்தும் செய்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அவர்களோடு நீ மூன்றாவது பிள்ளையாக இரு அப்பா” என்று உள்ளக் குழைவோடு ஆறுதல்
கூறினார்கள்.
பிறகு ஊருக்குச் சென்று என் தந்தைக்கு இறுதிக் கடன் ஆற்றினேன்.
பிரிவாற்றாமை என்ற அனுபவம், எனக்கு அது தான் முதல் தடவை. மீண்டும் மயிலாப்பூருக்கு
வந்து எனது கடமைகளை ஆற்றத் தொடங்கினேன். தாம்பூல மாத்திரை, பல்பொடி விற்பனை
எனக்குப் போதிய பணம் அளித்ததால் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டு
விட்டேன்.
எனது அக்காள் வீட்டு பக்கத்து வீட்டில் சொக்கலிங்க கிராமணி என்பவர்
ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் என்னை அழைத்து தனது இரண்டு மகன்களுக்கும் பிரைவேட்
பாடம் சொல்லிக் கொடுக்கும்படியும் மாதம் ரூபாய் ஏழு தருவதாகவும் கூறினார். சிறிது
தயங்கிப் பின் ஒத்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் சென்றன. ஒருநாள் அவர் என்னை
நோக்கி “ஏன் திருமணம் செய்துகொள்ளத் தாமதம்” என்று வினவினார். “எனக்கு போதிய பணம்
இல்லை” என்று பதிலளித்தேன். நான் ஒரு சீட்டுக் கட்டி வந்தேன். ரூபாய் நூறுதான் அதன்
மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு என் திட்டப்படி ரூாபாய் இருநூறு வேண்டும், இந்த
நிலைமைகளை விளக்கிச் சொன்னேன். வட்டி இல்லாமல் நூறு எனக்கு கடனாகக் கொடுப்பதாகவும்
உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் ஊக்கமளித்தார்.
இந்தப் பேச்சுக்கள்
அனைத்தையும் எதிர் வீட்டு அப்பாவிடம் சொன்னேன். உடனே அவரும் அவர் மனைவியும் வந்து,
என் மாமாவைப் பெண் கேட்டார்கள். உடனே பதில் தரவில்லை. அவர்களும் விடவில்லை.
எப்படியோ ஒருவாறு நான் விரும்பியவளையே எனக்கு மணம் செய்ய முடிவு செய்து
விட்டார்கள், பணமும் தயார் செய்துவிட்டேன்.
ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி
தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது
அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத்
தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது.
“ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான்.
மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல்
என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி”
என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக்
கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப்
போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில்
ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து
இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த
நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது
ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது.
எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம்
அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட
வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே
முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு
வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம்
கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம்
சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக்
கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத்
தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு
வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி
முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு
உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால்
ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி
வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என்
உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான்
மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக்
கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை
நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம்
குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை
என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான்.
வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும்
கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள
வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே?
உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே
இருந்தன.
பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர்
எங்கும்பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்புத்தி நுட்பம் தொழில் நுட்பம்
போிதிக்கட்டும்பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,பூதஉடல் தரமுணர்ந்தோர்
அரசாளட்டும்பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்பொருட்கட்கே வாழ்வு என்ற
கருத்து வேண்டாம்.
பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்றுசகல தொழில் நலம், வீடும் நிலம்,
வியாபாரம்மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழேமாறிவிடும் திட்டத்தை அமுலாய்க்
கொண்டுவினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கிவேலையின்மை, வறுமை இவையொழித்துக்
காட்டஇனியேது பொருளாதாரத்தில் எங்கும்ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.
முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழஉலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு
அன்றோ?உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கிஒருவர் பலர் சுதந்திரத்தைப்
பறித்திடுதல் நன்றோ?உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடிஉருவாக்கும்
சட்டங்கள் நீதியெனில் சரியா?உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கிஓருலக
ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.
எனது வாழ்க்கை விளக்கம்
ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோர்களிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே
எனது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள, இடைவிடா முயற்சியை மேற் கொண்டேன். எனினும்
எனக்குப் போதிய அளவு நிறைவு கிட்டவில்லை. அடுத்தடுத்துச் சிக்கல்கள் ஏதேனும்
உருவாகும். அதைச் சமாளித்து வெற்றி பெறுவதற்குள் மீண்டும் வேறு சிக்கல் கிளம்பும்.
மனித வாழ்வே சிக்கலுடையதுதான். அறிவாளி, மூடன், செல்வந்தன், ஏழை, வலியவன், எளியவன்,
படித்தவன், படிக்காதவன், இளைஞன், முதியவன், இல்லறத்தான், துறவறத்தான், ஆண்பெண்
எவரென்றாலும் என்ன? வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒன்று
அல்லது பல சிக்கல்களுக்குள்ளாகித் தவித்துக் கொண்டு தான், வாழ்வை நடத்துகின்றனர்,
நடத்தவேண்டும். சமுதாயச் சூழ்நிலை அமைப்புதான் வாழ்க்கைச் சிக்கலுக்கு முதல்
காரணம். அந்தச் சமுதாய அமைப்பு என்ற வலுவுள்ள சக்கரத்தின் சுழலில், ஒவ்வொரு
மனிதனும் அவன் பொறுப்புணர்ச்சியின் அளவிற்கு அமுக்கப்பெற்றுத் தவித்துக்கொண்டே
வாழ்ந்துவருகின்றான். நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிக்கலைக் களைந்து வாழ்வில்
முன்னேற்ற மடைந்து, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை அடைய வேண்டுமென நான்
விரும்புனேன். சமுதாயச் சூாழ்நிலை சறுக்கு மரம் போல் என்னைக் கீழ்தள்ளும். எனினும்
எக்காலத்திலும் முயற்சியை நான் தளரவிட்டதில்லை. எனக்கு ஒரு முடிவு உள்ளத்தில்
அமைந்திருந்தது. “நாம் வெற்றியை நாடிப் பாடுபடுகிறோம். முறையாக முயன்றால் கட்டாயம்
அது கிடைக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் கால நீளக் கணக்கு உண்டு. இடைக் காலத்தில்
வெற்றி கிட்டவில்லையே என்று நினைத்தால், அது தோல்வியாகத் தோன்றும், எனவே, வெற்றி
கிட்டும் வரை முயற்சி, உழைப்பு, சிந்தனை, ஒழுக்கம் இவற்றைக் கொண்டு பாடுபட
வேண்டும்” என்ற முடிவு என்னிடம் அசைக்க முடியாததாக இருந்தது.
எனது திருமணம்
நடந்து எட்டு மாதங்களில் எனது தம்பிக்குக் குடல் இறக்கநோய் கண்டுவிட்டது. அவனால்
தறி நெய்ய முடியவில்லை. குடும்பம் பெருகி விட்டது. பொருளாதாரத்தில் அப்போதைய
வாழ்விற்குப் பற்றாக்குறை அதிகமில்லை என்றாலும், முன்னேற முடியாத சறுக்கல்
இருந்தது. எனது தம்பி நோய் வாய்ப்பட்டது, குடும்பப் பெருக்கம், இவை என் வாழ்விலும்
பெரும்பாரமாகித் தவிர்க்க முடியாத சிக்கலாகி விட்டது. என் செய்வது? கடும் உழைப்பை
ஏற்றேன், கடமைகள் ஆற்றினேன். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன. என் வாழ்வில்
தோன்றிய அத்தனைத் துன்பங்களையும் எளிதில் களையவும், எழும் சிக்கல்களைச் சமாளித்து
வெற்றி பெறவும், என் வாழ்க்கைத் துணைவி யமைந்தது எனது பெற்றோர்கள் செய்த தவம்
என்றே, அடிக்கடி நினைந்து மகிழ்வேன். என்றாலும் சாதாரண மனிதன் சபலம் கொள்வது போல்
அடிக்கடி நானும் கொள்வதுண்டு. என் மனைவியின் நிலைமை பற்றித்தான் அந்தச் சபலம். அவள்
நல்ல செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம்
உள்ளவர். அதிலிருந்து அவரை எவராலும் திருப்ப முடியவில்லை. பொருள் அழிந்து வறுமை
எய்தியதோடு, மருத்துவத் துறையில் அவர் போதிய நினைவைச் செலுத்த முடியாமல் வருவாயும்
குறைந்தது. அந்தக் காலத்தில் தான் அவள் பூப்பு அடைந்தாள். அதன்பின் மூன்று ஆண்டுகள்
சென்றுதான் திருமணம் நடந்தது. வறுமையிலேயே திருமணம். வறுமையில் வாழ்பவர்கள் ஓரளவு
அதைத் தாங்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள். செல்வத்தில் இருந்து வறுமைக்கு
வந்தால், அதுதான் தாங்கொணா நிலைைமை. திருமணத்திற்குப் பின்னும் அவளுக்கு என்னிடமும்
அதே நிலை நீடிக்கிறதே என்று வருந்தினேன். ஆயினும் அவள் சோர்வோ சலிப்போ குறையோ
வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இரவு பகலாக என்னுடன் பொருள் துறையை வளமாக்குவதில்
நன்கு உழைத்தாள். எளிய வாழ்க்கை நடத்தினோம். ஆயினும் எனக்கு அவள் பெருநிதி.
அவளுக்கு நான் ஒரு ஒப்பற்ற நிதி. இந்த மனோநிலையில் நாங்கள் எல்லாம் உடையவர்களாக
எல்லாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நன்கு ஆற்றி வாழ்ந்து வந்தோம்.
எனக்கு வயது இருபத்தேழு. அப்போது ஒரு முடிவு எனக்கு ஏற்ப்பட்டது.
“கூடுவாஞ்சேரிக்கு குடிபோய்விட வேண்டும். கிராம வாழ்வில் செலவு குறையும். சீசன்
டிக்கெட் அப்போது மாதம் ஒன்பது ரூபாய்தான். அதற்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து இரண்டு
படி பால் வாங்கி வந்து சென்னையில் எந்த ஓட்டலிலாகிலும் கொடுத்துவிட்டால், ரூ. 15/-
கிடைக்கும். அதனால் இரயில் வண்டிச் செலவும் தள்ளிப் போகும்” என்று ஒரு நினைவு
தோன்றியது. போஸ்டல் ஆடிட் ஆபிஸில் ஒரு கான்டீன் இருந்தது. இதன் செயலாளரை அணுகி, என்
விருப்பத்தைத் தெரிவித்து நாள்தோறும் இரண்டுபடி பால் என்னிடம் விலைக்கு வாங்கிக்
கொள்ளும்படி கேட்டேன். அவர் அன்போடும் மகிழ்ச்சியோடும் எனக்கு அத்தகைய உதவியைச்
செய்வதாகக் கூறினார்.
நான் மட்டும் ஒரு மாதத்திற்கு இரயில் பிரயாண சீசன்
டிக்கெட் வாங்கிக் கொண்டேன். கூடுவாஞ்சேரியில் இருந்த எனது மற்றொரு அக்காள்
வீட்டில் இரவில் தங்கி காலையில் 2 படி பால் எடுத்துக் கொண்டு எழும்பூர் வந்து
அங்கிருந்து, ஒரு மைல் தொலைவில் உள்ள ஆபிசுக்கு நடந்து வருவேன். என் கணக்குப்படி
நாட்தோறும் எட்டு அணா கிடைத்தது. பால் நன்றாக இருப்பதையும், கூடுவாஞ்சேரி பாலில்
போட்ட காப்பி மிகவும் சுவையாக இருப்பதையும் கண்டு, மேலும் நான்கு படி
ஆர்டர்கொடுத்தார்கள். அடுத்த மாதம் எனது குடும்பத்தைக் கூடுவாஞ்சேரிக்கே அழைத்து
வந்து விட்டேன். மாதம் ரூ. 11/2க்கு ஒரு முழு வீடு வாடகைக்குக் கிடைத்தது.
பலவிடங்களில் ஓட்டைகள் தான் என்றாலும், அதுவே எங்களுக்கு அச்சமயம் மேலாக இருந்தது.
மாதம் ரூ. 50/- வீதம் பால் விற்பதில் கிடைத்தது.
அப்போது எனக்கு எதிர்பாராத நல்ல
வாய்ப்பு ஒன்று ஆபீசில் உருவாகியது. கார்டு பையில்கள் (Guard Files) வெளியிலிருந்து
வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் கழிவுத்தாள்களைக் கொண்டே பைல்கள்
தயாரித்துக் கொள்ள ஒரு திட்டம் உருவாகியது. அதன்மூலம் நல்ல வருவாய்
கிடைக்குமென்றும், அதை நானே கான்ட்ராக்ட் எடுத்துக் கொள்வது நல்லதென்றும், என்னிடம்
அன்பு கொண்ட ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட் ஒருவர் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை!
‘புக்பைண்டிங் திறமை பெற்றவன்’ என்று ஒரு அத்தாட்சித் தாள் கொடுக்க வேண்டும். நான்
ஒப்புக்கொண்டேன். ஒரு பைண்டரைக் கொண்டு ஒரு வாரத்தில் இரவு பகலாக உழைத்துப்
புக்பைண்டிங் கற்றுக்கொண்டேன். ஒரு அச்சகத்தில் எனது வேலையை நிரூபித்து அங்கிருந்து
அத்தாட்சித்தாளும் வாங்கிக் கொடுத்தேன். ஆபீசில் அந்த கான்ட்ராக்டை என் பேருக்கே
கொடுத்து விட்டார்கள்.
கழிவுத்தாள்கள், அட்டைகள் இவற்றை ஆபீசிலிருந்து, கூடுவாஞ்சேரிக்கு நாள்தோறும்
எடுத்துக்கொண்டு வந்து சேர்ப்பேன். எனது துணைவி அவற்றை ஒழுங்காக அடுக்கித் தைத்து
வைப்பாள். நான் இரவில் வந்தபின் வச்சிரம் பூசி அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டி,
கோப்புகளாகச் செய்வோம். இவ்வாறு வருடம் ஒன்றுக்கு 1500, அல்லது 2000 பைல்கள்
தயாராகும். ஆண்டுதோறும் ரூ. 300/-லிருந்து ரூ. 500/- வரையில் மொத்தமாகக்
கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ. 600/- கொடுத்துக் கூடுவாஞ்சேரியில் ஒரு வீடு
வாங்கினோம். பொருள் துறையில் முதல் வெற்றி வீடு வாங்கப்பட்டது. பைல்கள் செய்வதில்
வருவாயும் சற்றுக் கூடியது. பால் விற்பனையும் ஓங்கியது. ஓரளவு பணவு மீதியிருந்தது.
பால் வியாபாரத்தில் அதிக சங்கடம். வெயில் காலத்தில் சில குடங்கள் பால்
முறிந்துவிடும், அவற்றிற்குப் பதில் நல்ல பால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்கென
ஆள் வைத்திருந்தேன். எனினும், அவனாலும் சமாளிக்க முடியவில்லை. அந்த வியாபாரத்தை
நிறுத்திவிட எண்ணினேன். அப்போது நாள் ஒன்றுக்கு ரூ. 25/- பால் மூலம் இலாப வரவு
இருந்தது. எனது நண்பர் கபூர் சாயபு என்பவர் பால் விற்பனை செய்து வந்தார். அவரிடம்
பால் வியபாரத்தை முழுமையாக ஒப்புவித்து விட்டேன். கையில் கொஞ்சம் பணம் இருந்தது.
இதை வைத்துக் கொண்டு, லுங்கி உற்பத்தி விற்பனை நடத்த எண்ணினேன். சென்னையில் அங்கப்ப
நாய்க்கன் தெருவில் மெளலானா லுங்கிக் கம்பெனி பலர் அறிந்த ஒன்று. அங்குச் சென்று
லுங்கி நெசவுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டேன். எனக்கு ஞாயிற்றுக்கிழமைதான், துணி
பார்வைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அப்படியே ஒப்புக்
கொண்டார்கள். லுங்கி உற்பத்தி விற்பனைக்கு என் தம்பியையே நியமித்து, நான் ஆபீஸ்
வேலைகளோடு, வியாபாரத்தையும் கவனித்து வந்தேன்.
நாளுக்கு நாள் பொருள் துறையில்
முன்னேற்றம் கண்டேன். ஆயினும் உயிர், தெய்வம் என்ற இரண்டைப்பற்றி அறியாது
திகைத்தேன். சிந்தனை மிகுந்து ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. எனக்கு என் ஆசான் எஸ்.
கிருஷ்ணாராவ் விளக்கி வைத்த பஞ்ச பூத தத்துவம் வர வர மிகத் தெளிவாக விளக்கியது, ஒரு
நாள் இரவு மணி மூன்று இருக்கும்; விழித்துக்கொண்டேன். சிந்தனை மிகுந்தது, ஒரு
முடிவு தோன்றியது.
“பிரபஞ்சம் ஐந்து பூதங்களும், ஆதியான தெய்வ நிலையும் சேர்ந்த,
ஆறு நிலைகள் தானே கொண்டது. ஐந்து பூதங்களுக்கு அப்பால் சுத்த வெளியைத் தவிர வேறு
ஏது? எனவே சுத்த வெளியேதான் தெய்வம் என்று கூறப்படுவதாக இருக்க வேண்டும்.
தாயுமானார் பாடியுள்ள அங்கிங்கெனாதபடி என்ற கருத்தோடு இணைத்தால், அதுதான் சரி.
ஆயினும் உயிர் என்பது இந்த ஆறு நிலைகளில் எதுவாக இருக்கும். இயக்க நிலையில் உள்ளதே
உயிர். ஆகவே அது பஞ்ச பூதங்களில் ஒன்றான விண்ணாகத்தான் இருக்க வேண்டும்” என்ற ஒளி
போன்ற கருத்து விளங்கியது. இந்த அடிப்படையான உள்ளுணர்வை வைத்துக்கொண்டே, மேலும்
சிந்திக்கத் தொடங்கினேன். என்ன வியப்பு? எனக்கு வர வர உலகமே முன்னைவிட வேறுபட்டுத்
தோன்றியது. காலையிலிருந்து உறங்கப்போகும் வரையில், நான் ஈடுபடும் வேலைகளில் எல்லாம்
தெய்வம், உயிர் நிலைகளின் விளக்கத்தை ஒப்பிட்டு ஆராய்வேன். ஒவ்வொரு செயலும்,
காட்சியும், மனிதரும், எனக்கு அவ்வப்போது மெய்விளக்கப் பாடம் சொல்லிக் கொடுக்கும்
நூல்களாகத் தோன்றின. இந்தத் துறையில் உள்ளம் பூரித்து, மனம் அமைதி கொண்டது. எனினும்
பழைய நூல்கள், புராணங்கள், கட்டுக்கதைகள், சடங்குமுறைகள், இவற்றில் அமைந்த
கருத்துகட்கும், எனது விளக்கத்திற்கும், வேறுபாடுகள் இருந்தன. இவை எல்லாவற்றிற்கும்
நிறைவு காண வேண்டும். உள்ளத்தின் பூரிப்போடு சில ஆண்டுகள் “பஞ்ச பூத தத்துவ
விளக்கம்” என்ற பூங்காவில், அறிவைச் செலுத்தி மகிழ்ந்திருந்தேன். எந்தச்
சமயத்திலும் பொருள்துறை வளர்ச்சியில், என் முயற்சியைக் குறைத்துக் கொள்ளவில்லை.
காலை மணி நான்கு முதல் இரவு மணி பத்து வரையில், அயராது உழைத்தேன்.
எனது வயது முப்பத்திரண்டு ஆகியது. அப்போது, என் உள்ளத்தை மோத ஒரு நிலைமை
உருவாகியது. திருமணமாகியும் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதைக்
குறிப்பிட்டுக்காட்டி என் துணைவியை யார் யாரோ மனத்தைப் புண்படுத்தி விட்டார்கள்.
மலடி என்று இழித்துக் கூறும் வார்த்தை அவள் காதில் விழுந்தது. அதோடு மற்றும் ஒரு
பெண்ணைத் திருமணம் செய்தால் தான், அவர்களுக்குக் குழந்தை என்றும் சொல்லி
விட்டார்கள். பாவம் கபடமற்ற உள்ளம், வசைச்சொற் கேட்டறியாகவள், உள்ளம் வெந்து
துடித்தாள். என்னிடம் இவற்றை யெல்லாம் கூறிய போது தக்க ஆறுதல் கூறினேன். எவர் என்ன
சொன்னாலும், நீ காதில் போட்டுக் கொள்ளாதே. நாம் பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது.
மேலும் இயன்ற வரை பிறருக்கு உதவி செய்து வரவேண்டும். இந்த லட்சியத்தோடு நாம்
வாழ்கிறோம். இயற்கையாக நிலவும் குழந்தைப் பேறின்மைக்கு, நாம் வருந்தவும் கூடாது.
அதைப் பொருளாக வைத்து நம்மைத் தூற்றுபவர் பேச்சுக்கும், மதிப்பளிக்கக் கூடாது
என்று, அடிக்கடி கூறினேன். எனினும் அவள் உள்ளம் பிறர் தூற்றும் பழிச்சொற்களால்
அமைதியிழந்து தவித்தது. எனக்கு அவள் மனநிலை கண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை. இது
ஒரு பெருஞ்சிக்கலாகி விட்டது. நாள் தோறும் நீங்கள் இரண்டாந் திருமணம் செய்து
கொளளத்தான் வேண்டும் என்பாள். நான் ஆறுதல் கூறி வருவதோடு, காலையில் படுக்கை
விட்டெழுந்தவுடன் கண்களை நெருடி விட்டுக் கொண்டு ஒரு பாட்டைப் பாடுவேன்.
அந்தப் பாட்டு இது தான்,“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை;பெருநெருப்பு
சாமளவும் துக்கம்துக்கம்”
இதை விடாமல் பாடுவேன். என்றாலும் அவள் மனம் அமைதி பெறவில்லை. குருவிக்
கூண்டைக் கலைத்துவிட்ட மாதிரி, எங்களைக் கலைத்துத் தவிக்கவிட திட்டமிட்டு விட்டது
சமுதாயம்; உறவினர், சுற்றத்தார் என்ற உரிமையில். மனித வாழ்வில் எழும் சிக்கலைப்
பாருங்கள்! எல்லாவற்றையும் தாங்கி வெற்றி பெற்றுத்தான் முன்னேறவேண்டும்.
சிறியது உடல் பெரியது மெய்
பெற்ற உடம்பின் பயனாய் ஊறு முதல் ஐந்துபுலன்மூலம் அனுபவித்தல்
சிற்றின்பமாகும்நற்றவத்தால் உயிரறிந்து அளவறிந்தபோதுநாம்பிறவி எடுத்தபயன்
பேரின்பமாகும்சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லைசிறியதுடல் பெரியதுமெய்
சீவன்சிவன் உண்மைபற்றின்றி வாழ்வில்லை அளவுமுறை கண்டால்பற்றற்ற வாழ்வாகும்
பகுத்துணர்வோம் நாமே.
விளைவறிந்த விழிப்பு
விறகதனை வாங்குகின்றோம் எரிப்பதற்கேவேண்டிய போதல்லாது நெருப்பின்
பக்கம்மறதியினாலும் வையோம் அதுபோல் ஆண்பெண்மணமாகா முன் நெருங்க
விடக்கூடாதுஉறவுகளில் பெற்றோர்கள் பெற்ற மக்கள்உடன்பிறந்தார் குறிப்பிட்ட சுற்றம்
அல்லால்பிறருடனே ஆணோடு பெண் நட்பாகாபிழையில்லை தொழில் வயது நாடு ஒத்தால்.
இனிது வாழ்க
உடல்நலம் நீள்ஆயுள் கல்வி செல்வம்ஒழுக்கம் புகழ் மெய்ஞானம் இவற்றில்
ஓங்கிகடல்சூழ்ந்த நிலஉலக மக்களெல்லாம்கடமையுணர்ந்தாற்றி பெருவாழ்வு வாழ்ககுடல்பசி
யோடறிவுப்பசி நிறைவுபெற்றுகுற்றமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றிஇடல் காத்தல்
ஈட்டல் என்ற துறைகள் மூன்றில்ஏற்றம் பெற்றென்றென்றும் இனிதுவாழ்க.
எனது வாழ்க்கை விளக்கம்
எனது வாழ்வின் அமைப்பே விசித்திரமானது. ஒருபுறம் குடும்பத்தில் சிக்கல்கள்
மாறி மாறி உருவாகும்; வருந்துவேன். சிந்திப்பேன். தெளிவு பெறுவேன். துணிவு
பெறுவேன். மற்றொரு புறம் தத்துவ ஆராய்ச்சியில் இடைவிடாத ஈடுபாடு. எப்போதும்
சிந்திப்பேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், செயலிலும், விளைவிலும், இயற்கையின்
ஒழுங்கமைப்பைக் கூர்ந்து ஆராய்ந்து தெளிவு பெறுவேன். இத்துறையில் எனக்கு நாளுக்கு
நாள் இன்பம் மேலோங்கி வந்தது, இரண்டாந் திருமணம் குறித்து, என் துணைவியின்
உறுத்தல், என் வாழ்வில் பெரும் சிக்கலாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் காலத்தால்
தீர்ந்துவிடும் என்று, அதை ஒதுக்கி வைத்தே மற்ற கடமைகளை ஆற்றிவந்தேன்.
பஞ்ச
பூதத் தத்துவப் பூங்காவிலே அமர்ந்து, என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தேன்.
அப்போது என் அறிவு நாளுக்கு நாள் மேலும் மேலும் ஒளிபெற்று வந்தது. முன்னே
விளக்கியபடி நான் காணும் தோற்றங்கள் அனைத்தும், பஞ்ச பூதக் கூட்டுக் காட்சிகளாகவே
எனக்குத் தோன்றின. முதலில் சில நாட்கள் வரை “ஆகாசம்” என்ற நிலைதான் தெளிவாகப்
புரியாமலிருந்து கடைசியாக அதைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது.
அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும்
முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றி ஏதோ சில கட்டுரைகளைப்
படித்திருக்கிறேன். சில பல இயக்கத் துகள்கள், ஒன்று சேர்ந்து இயங்கும் ஒரு
கூட்டமைப்பே அணுவென உணர்ந்தேன். விஞ்ஞானிகள் கூறும் அவ்வணுவின் அமைப்பில் சிந்தனை
ஓடியது. ஒவ்வொரு அணுவிலும் கரு அணு (Neutron), துணைக்கரு அணு (Proton) மின்னணு
(Electron) என்று ஒரு கூட்டு உள்ள இயக்கம் ஒன்று உள்ளது எனில் அக்கூட்டு அமையாத
தனிநிலையும் இருக்கத்தானே வேண்டும்? இந்த மூன்று வகைத் துகள்களும் அவ்வமைப்பில்
பெற்ற இயக்கச் சிறப்பால் பெற்ற பெயர்களே, கருவணு, துணைக்கருவணு, மின்னணு
என்பதெல்லாம் என்ற விளக்கம் கிடைத்தது. அத்தகைய தனித்த இயக்க மூலக் கூறுதான்
“ஆகாசம்” எனப்படும் நுண்ணியக்க நிலை என விளங்கிக் கொண்டேன். அதன்பின் பிரபஞ்சம்
முழுவதையும் ஆகாசம் (Ether) எனும் பரமாணுக்களின் தொகுப்புக் களமாகவே கருதும்
ஒழுங்கு முறை என் அறிவிற்கு ஏற்பட்டது. ஆகாசம் எனும் தனி மூலக் கூறுகளின்
திரட்சியால் விஞ்ஞானிகள் கூறும் அணு அமைந்தது என்றும், அம்மூலக் கூறுகளின்
எண்ணிக்கைக்கேற்ப அணுவின் மூலக மதிப்புகள் (Elemental Values) பலவாக கணிக்கப்
பெற்றன என்றும் உணர்ந்தேன். எந்தத் தோற்றமும் ஆகாசமும் வெளியும் சேர்ந்த கூட்டு
அமைப்பாகவும், வெளியின் விகித அளவு (Proportion) குறையக் குறைய தோற்றப் பொருட்களின்
திண்மை மிகுகின்றது என்றும், திண்மை மிகமிக, விளைவுகள் - அதாவது அழுத்தம், ஒலி,
ஒளி, சுவை, மணம் முதலியவை - வேறு படுகின்றன வென்றும், இந்த விளைவு வேறுபாடுகளை
அடிப்படையாகக் கொண்டே ஆகாசத்தின் திரட்சி வேறுபாடுகளுக்குக் காற்று, வெப்பம், நீர்,
நிலம் என்ற பெயர்ப் பிரிவுகள் உண்டாயின வென்றும் உணர்ந்து கொண்டேன். ஆகாசமே,
பிரபஞ்சம் எனும் பேரியக்கத் தொடர்க்களம் முழுமைக்கும் அடிப்படையான இயக்க மூலக்கூறாக
இருக்க, அதன் முன்நிலை எது என்ற சிந்தனையில் மேலும் ஆழ்ந்தேன். ஆகாசத்திற்கு
அப்பால் என்ன இருக்கின்றது? சுத்தவெளி தானே உள்ளது? இந்தச் சுத்தவெளிக்கும் பரமாணு
எனும் ஆகாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்று ஆராயத் தொடங்கினேன். இதைப் பற்றிப்
பலநாட்கள் சிந்தனை செய்து வந்தேன். எனக்கு அகத்தே ஒரு விளக்கமும் காட்சியும்
கிடைத்தன, “வெட்ட வெளியே மெய்ப்பொருள். அதன் இயக்க நிலையே பரமாணுவெனும் ஆகாசம்.
தெய்வம் எனப்படுவதும் சிவம் எனப்படுவதும் சுத்தவெளியே; அதன் நுண்ணியக்க ஆற்றலே
(Energy) ஆகாசம்.” மனம் விரிந்தது, நிலைத்தது. உள்ளுணர்வு மலர்ந்தது. அகத்தே
எல்லையற்ற கடல் காட்சியாயிற்று. அலைகள் கோடாணு கோடி காட்சியாயின. ஒரு கவியும்
உருவாயிற்று; அந்தக்கவிதான் இது
ஆதியெனும் மெய்ப்பொருளோ கடல்போ லொன்று;அதிலெழுந்த இயக்கமெலாம் அலைகள்
போலாம்;பேதமுடன் அலைகளவை விரிந்த போதும்பிரியாது கடலை விட்டுக்கடல்
ஒன்றேனும்வாதமிடும் பலகோடி அலைகளூடும்வழுவாது நிறைந்து நின்று, முடிவில்
தன்னுள்நீதமொடு இணைத்துக்கொள் தன்மை போன்று,நிலையற்ற இயக்கமெலாம் முடியும்
மெய்யில்”
வெட்டவெளியே மெய்ப் பொருளாகவும், அதன் ஆற்றலே சக்தியெனும் ஆகாசமாகவும், அதன்
திரட்சிநிலை வேறுபாடுகளே பஞ்ச பூதங்காளகவும், அவை இணைந்த கூட்டுக் காட்சிகளே
பேரியக்கத் தொடர்க்களத் தோற்றங்களாகவும் விளக்கம் பெற்றேன்.
சுத்தவெளி ஏதுமற்ற இடம்தானே, அதைப் பொருள் என்று எப்படிக் கூறுவது என்ற
திகைப்பு முன்னர் ஏற்பட்டது. பின்னர் அதைப் பற்றிய ஐயமும் தெளிந்துவிட்டது.
இயக்கத்தோடு இயக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் கணிப்பு நிலையிலுள்ள அறிவிற்கு,
வெட்டவெளி ஏதுமற்றதாக இருக்கிறது. அறிவே சமாதிநிலையில் பொருளாகவும், இயக்க நிலையில்
உயிராகவும், புலன் வழியிலான காட்சி நிலையில் எண்ணற்ற இயக்க வேறுபாடுகளாகவும்,
இயங்கும் உண்மையினைக் கூர்ந்து தவ நிலையின் அநுபவமாக உணரும்போது வெட்ட வெளியே
பொருள் என்றும் அதன் இயக்க ஆற்றவான பரமாணு உயிர் என்றும், அணுக்களின் திரட்சி
நிலைகள் பலவாறான வேறுபட்ட தோற்றங்கள் என்றும், விளங்கி விட்டது. மேலும் பேராற்றல்
பெற்ற கோடான கோடி சூரியன்களும் (நட்சத்திரங்களும்) மற்ற கோள்களும் வெட்ட
வெளியில்தான் மிதந்து உருண்டு ஓடி இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மை தெளிந்த
விடத்தில், வெட்ட வெளியே, எல்லாம்வல்ல (Almighty) பரம்பொருள் என்னும் விளக்கம்
உண்டாயிற்று. இடம், இயக்கம் இரண்டையும் ஒத்தப் பார்த்தால் இயக்கத்தைவிட இடம்
வலிதாகவன்றோ இருக்க வேண்டும். இவ்வாறேல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் சமாதி
நிலையிலும் (நிறைபேற்றுநிலை), துரிய நிலையிலும் (நிறைபேறுநிலை), புறக்காட்சி
நிலையிலும் (புலனுணர்வு நிலையிலும்) நின்று நின்று பல நாட்கள் பல மாதங்கள்
ஆராய்ந்து, பொருள் (Matter) ஆற்றல் (Energy), தோற்றம் (Mass), உணர்வு
(Consciousness), ஆகிய நிலைகளை விளங்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல பரம்பொருளே
ஆகாசமென்ற உயிர்த் துகள்களாய், அதன் திரட்சித் தோற்றமே உடலாய், உயிர்- உடல் கூட்டு
இயக்கத்தால் உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோக, அனுபவ, ஆராய்ச்சி,
தெளிவு, முடிவு என்ற உயிரின் பத்து படித்தளப் படர்க்கை இயக்க ஆற்றலான மனமாய்
இயங்கும் மறைபொருள் உண்மைகள், எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டன.
“ஒரே பொருள்
எல்லாமாக இருக்கிறது” என்ற அத்வைத தத்துவம் விளங்கிவிட்டது. “அது மலர்ச்சிபெற்று
இயக்கம் என்ற நிலை வேறுபாட்டோடு சித்து-உயிர்-ஆகாசம்-பரமாணு-சக்தி என்று பேசப்படும்
ஆற்றலாக இயங்கித் திரட்சி நிலையில் உலகமாகி உயிர்களாகி அனந்தமாக இருக்கின்றன” என்ற
தெளிவில் துவைத தத்துவமும் விளங்கிவிட்டது.
உயிர்களாகி, மனிதனாகி புலன் மயக்கின்
தேவை, பழக்கம், சூழ்நிலைகள் நிர்ப்பந்தங்களில், சிக்கலுற்று துன்பங்களை விளைத்துக்
கொண்டு தவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வாழவேண்டுமெனில், தனது அறிவை அகநோக்குப்
பயிற்சியால் பண்படுத்தி, மனதின் இயக்க விதியறிந்து, உயிரின் நிலையறிந்து,
அவ்வுயிரைப் பரநிலையோடு இணைத்து இணைத்து நின்று தவம் ஆற்றி, அறிவின் முழுமை பெற
வேண்டும். பிறவிக் கடலைக் கடக்க இதுவே சரியான வழி. இதற்குப் பொருள்நிலை, நிகழ்ச்சி
நிலையறிந்து, அகநோக்குத் தவத்தில் முழு ஆற்றல் பெற்ற ஆசான் அருளைநாடி அவர்மூலம்
முறையாக நோன்பு ஆற்றியே மனிதன் உய்ய வேண்டும், என்ற விசிட்டாத்வைத தத்துவமும்
எனக்கு விளங்கிவிட்டது.
அறிவறியும் விளக்கத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வந்தேனோ, அந்த அளவிற்கு
என் வாழ்க்கையில் பல தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருந்தன. எனது
இல்லத்தரசி என்னை இரண்டாந் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, நாளுக்கு நாள்
அழுத்தமாக வற்புறுத்திக் கொண்டிருந்தாள், நான் காலம் கடத்திக் கொண்டே
வந்தேன்.
ஒருநாள் “காவேரி” எனும் மாத இதழில் ஒரு கதை வெளியாகி இருந்தது. அதைப்
படித்து முடித்த என் துணைவி அவ்விதழை என்னிடம் கொடுத்து அந்தக் கதையைப் படித்துப்
பார்க்கும்படி கூறினாள். படித்தேன்; என் கண்களில் நீர் மல்கியது. அக்கதையின்
சுருக்கம் இதுதான்;
அன்பு நிறைந்த கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை
நடத்திவருகிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை
பிறக்கவில்லை. உற்றாரும் மற்றவர்களும் அப்பெண்ணைத் தூற்றுகிறார்கள். மலடி என்று
மனம் நோகும்படி பழித்துக் கூறுகிறார்கள். அவள் உளம் நொந்து விட்டது. கணவனை வணங்கி,
“அத்தான் நீங்கள் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து
கொள்ளுங்கள். என்மீது பழிச்சுமையும் இறங்கும். நம்குடும்பத்துக்கும் ஒரு குழந்தைப்
பேறு உண்டாகும்” என்கிறாள். கணவன் மறுத்துப்பேசி அவளுக்கு ஆறுதல் கூறிவருகிறான்.
உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை, என் வாழ்வில் பங்குகொள்ள விரும்பவில்லை” என்று
உறுதியாகக் கூறிவிடுகிறான். ‘நான் இற்ந்துவிட்டால் அப்போது நீங்கள் மறுமணம் செய்து
கொள்வீர்களல்லவா?’ என்று கேட்கிறாள். ‘இவ்வாறெல்லாம் வீண் கற்பனையில் ஏன் மனதைப்
புண்படுத்திக் கொள்ளுகிறாய் அமைதியோடு இரு!’ என்று கூறிவிட்டுக் கணவன் வெளியே
போய்விடுகிறான். அன்று இரவு அவன் வீட்டுக்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. தேடிப்
பார்த்தார்கள். எங்கும் காணவில்லை, மறுநாள் காலையில் காவேரி ஆற்றோரத்தில் அவள்
பிணம் ஒதுங்கியிருந்தது என்ற செய்தி வருகிறது. இதுதான் கதை. “உற்றார் உறவினர் பழிச்
சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின; அந்த நிலைமையை உண்ர்ந்து இரண்டாந் திருமணம்
செய்து தன்னைப் பழிச்சொற்களிலிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம்
ஒருபுறம் அவளைப் புண்படுத்தியது. அவள் மேலும் இந்நிலையில் உயிர்வாழ விரும்பவில்லை”
என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அக்கதையை
எழுதினான்.
பிள்ளை இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து மலடி என்று உற்றார் உறவினர்
தூற்றுவது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கவே, அந்த ஆசிரியர் அக்கதையை எழுதினார்.
ஆயினும் அவர் சிந்தனையை மேலும் விரித்துக் கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதைச்
சற்று நீட்டி முடித்திருக்க வேண்டும். “கணவன் தனது அன்பு மனைவியின்
பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறினவன் பின்னர் விடு
திரும்பவே இல்லை. சில மாதங்கள் கழித்து ரிஷிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில்
பார்த்ததாக யாரோ கூறினார்கள்” என்று முடித்திருந்தால், என் கதையும் மாறி இருக்கும்.
முழுமை பெறாத அக்கதை தான், என் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கல் போல் நின்றது.
கதையைப் படித்தேன். எனக்கு ஒரே திகைப்பு எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
‘கதையைப் படித்து விட்டீர்களா’ என ஒரு வெற்றிப் பார்வையோடு என்னைப் பார்த்துக்
கேட்டாள் என் துணைவி. ஆழ்ந்த சிந்தனையோடு மெளனமாக ஒரு பெரு மூச்சு விட்டேன்.
அதற்குள் அவசரமாக அடுப்பண்டை போய் விட்டாள். இராஜம் என்று கூப்பிட்டேன். அவள் பெயர்
லோகாம்பாள். ஆயினும் இராஜாம்பாள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.
கூடுவாஞ்சேரியில் நாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில்தான் அப்போது இருந்தோம். நான்
கூப்பிட்டவுடன் அதற்காகக் காத்திருந்தவள்போல விரைவாக வந்தாள். அவள் முகத்தில் ஒரு
வெற்றி ஒளி வீசியது. அவள் இருகரங்களைப் பற்றிக் கொண்டேன். எனது கண்ணீர் தாரை
தாரையாக வடிந்தது. “உன் மனநிலையைப் புரிந்துகொண்டேன். இனி நான் தடை சொல்வதற்கு
இல்லை. உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்யையும் நிமிர்ந்துகூடப் பார்க்க விரும்பாத
எனக்கு இத்தகைய நிலைவரக் கூடாது. வந்து விட்டது, விதியை ஓரளவு மதியால் வெல்லலாம்.
ஆனால் அந்த விதி ஒரு சிக்கலில்-சுழலில் கொண்டுவந்து விட்டு, என் அறிவு செயல்பட
வொட்டாது செய்துவிட்டது. இரண்டாம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறேன். ஆவன செய்”
என்று குரல் தழுதழுக்கக் கூறினேன். அவள் பிரிவாற்றாமையைக் காட்டி அவளும்
அழுதுவிட்டாள். மேலும் கூறினாள். “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எந்த
விதத்திலும் எங்களுக்குள் சண்டை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று