எல்லா செயல்களுக்கும் மனம் தான் காரணம். மனமோ கருமையத்தில் பல தலைமுறைகளில் ஆன்மா அனுபவமாகப் பெற்ற வினைப்பதிவுகள், பிறந்த பின் ஒருவர் அன்று வரையில் ஆற்றிய செயல்களுடைய பதிவுகள் இவற்றிற்கேற்ற தொகுப...்பு விளைவாகும்.
பொருள், புகழ், புலன் இன்பம், அதிகாரம் இந்நான்கிலும் பற்றுக் கொண்டு மனம் இயங்கும்போது உணர்ச்சி வயப்பட்டு ஆன்மாவானது தன்முனைப்புப் பெறும் . தன்முனைப்பின் வெளிப்பாடு தான் பேராசை, சினம்,கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற ஆறு குணங்களின் வயப்பட்டு மனிதன் செயல்புரியும் போது தான் தனக்கும் பிறருக்கும் உடலுக்கும், அறிவிற்கும் துன்பம் விளைவிக்கும் செயல்கள் பிறக்கின்றன .
இந்த தன்முனைப்பு அடங்கினால்தான் இறையுணர்வு உண்டாகும். அன்பும் கருணையும் இயல்பாக மலரும். பிறகு செய்யும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களாகவே இருக்கும்.
ஏனெனில் எல்லாம் வல்ல பேராற்றல் தான் உலகமாக உயிர்களாக பரிணாமமடைந்து , தோன்றி, இயங்கும் அனைத்திலும் உட்பொருளாக மூல ஆற்றலாக அமைந்து எல்லாப் பொருளையும், உயிர்களையும் அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையினை அறியாத மனிதன் தனது உடல் வலிவு, அறிவு திறன், தனக்குச் சொந்தமான மக்கள், பொருட்கள் இவற்றை வைத்துக்கொண்டு அந்த அளவிலே பெரியவாக நினைக்கிறான். இந்த நினைவே தன்முனைப்பாகும். மெய்ப்பொருள் மறதி அல்லது அறியாமை என்று தன்முனைப்பைக் கூறலாம்.
ஆசான் மூலம் அகத்தவம் ஆற்றத் தன்னை உணர்ந்து இறைநிலையும் உணர்ந்தால் இறைநிலையென்ற எல்லையற்ற பேராற்றலின் தன்முமைப்பு அடங்கிப் போகும்.அன்பும் கருணையும் இயல்பாக மலரும்.
இந்தப் பேரறிவு நிலையில் பேராசை நிறைமனமாகவும்,சினம் சகிப்புத்தன்மையாகவும், கடும்பற்று ஈகையாகவும் , முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாகவும், உயர்வு தாழ்வு மனப்பான்மை நேர்நிறை உணர்வாகவும், வஞ்சம் மன்னிப்பாகவும் தன்மாற்றம் பெரும்.
தன்முனைப்பு அடங்கிய இந்த உயர் அறிவுநிலையைத்தான் "அமர்ந்த அருள்" என்றனர் .அவ்வாறு அடங்காத தன்முனைப்பு நிலை அறிவிற்கு மயக்க நிலையை, இருள் நிலையை ஏற்படுத்தும், வாழ்வு துன்பம் சூழ்ந்ததாகவே இருக்கும்.
பேராற்றலுள்ள இறைநிலையில் அதன் மதிப்புணர்ந்து அடக்கம் பெற்றால், அப்பெரு நிலையின் ஆற்றல்கள் அனைத்தும் நமதாக அருள் வெள்ளத்தில் நீந்தி அமைதியாக , மகிழ்ச்சியாக இருக்கலாம். இறைவனோடு அறிவால் இணைந்து கொண்டால் அருள் என்ற பேரின்ப வாழ்வு கிட்டும். இல்லையேல் இருள் என்ற மயக்க நிலையில் துன்புற வேண்டும்.
--அருள் தந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக