மனித வாழ்வு சிக்கல் நிறைந்தது. பொறுப்பு மிக்கது. அறிவின் உயர்வும் விளக்கமும் செயலின் திறமையும், நேர்மையும்தான் வாழ்வின் தேவைகளை நிறைவாக்கி வெற்றி பெறச் செய்யும். வாழ்வின் விளக்கத்தைச் சிந்தனையாலும் செயல் விளைவுகளாலும் கண்ட முற்காலத்திய அறிஞர் பெருமக்கள் சுருக்கமாக மனிதகுல நல்வாழ்வுக்கு இறைவழிபாடும் அறநெறியும் இன்றியமையாத தேவைகள் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு உடல் நிலையில் எல்லை கட்டிய அறிவுடையோர்களுக்கு கற்பனையால் வடிவமைக்கப்பட்ட தெய்வநிலையையும், சடங்குகளாலும் திட்டமிடப்பட்ட அறநெறியும் கூடிய மதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். எல்லாத் தோற்றத்திற்கும் குணங்களுக்கும் உள்ளும் புறமும் நிறைந்து மறைபொருட்களாக இயங்கும், இயக்கும் உயிர், மனம், அறிவு, சீவகாந்தம், தெய்வம் ஆகிய மறை பொருட்களை உணர்ந்து கொள்ள ஏற...்ற போதனை சாதனை முறைகளாலும் செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நீதியை உணர்ந்து எண்ணம், சொல், செயல்களை அளவோடும் முறையோடும் ஆற்றி மெய்ப்பொருள் உணர்ந்த தெளிவோடு வாழத்தக்க சமய நெறியினை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
எனினும் இக்காலத்திலும் மக்களால் அவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளவோ, முறையாகப் பின்பற்றி பயனடையவோ முடிவில்லை. காலத்திற்கேற்றபடி விளக்கி வழிகாட்டக் கூடிய ஆன்மீக தலைவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். மக்கள் மனம் குழப்பம் அடைந்துள்ளது. விளைவாக உலக மக்கள் வாழ்வில் சிக்கல், பிணக்கு, பகை, நோய்கள், குற்றங்கள், போர்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது விஞ்ஞானயுகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பல நாட்டில் குடியேறியும், பலநாட்டு மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் குவிந்தும் வாழ்கின்றார்கள். போக்குவரத்து சாதனங்களாலும், செய்தித் தொடர்பு சாதனங்களாலும் மனிதகுலம் பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைப் பண்பாடு இவற்றில் ஒருங்கிணைந்து உள்ளது. இந்த நிலைமைக்குப் பொருந்துமாறு மனித அறிவுக்கு இறைநிலை உணர்வும், இறைவழிபாடும், அறநெறியும் விளங்கிக் கொள்ளவும் பின்பற்றவும் ஏற்றமுறையில் போதனை சாதனை வழிகள் தேவையாக உள்ளன.
அறியாமை, பழக்கம், உணர்ச்சிவயம் என்ற மூன்றாலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்றவாறு அறிவாட்சித் தரத்தோடு வாழும் மக்களைச் சட்டங்களைக் காட்டி அதிகாரம் செய்தோ, இறந்த பின்னர் சொர்க்கம், நரகம் கிட்டுமென்று ஆசைகாட்டியும், அச்சமூட்டியும் நல்வழிப்படுத்த முயலும் மதங்கள் மூலமோ திருத்தி வாழ்வில் அமைதி காண முடியாது.
இயற்கையாக அமைந்துள்ள பேராற்றலான சிந்தனையாற்றலைத் தூண்டி விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கூடிய விளக்கத்தின் மூலமும், பயிற்சிகள் மூலமும் தனி மனிதனின் அறிவிலும் அறத்திலும் சிறப்படைய வேண்டும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக