அகத்தவம்
அக நோக்குத் தவத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை 1. தன் வயமாகி விழிப்பு நிலையில் இருக்கும் திறன் பெறுதல்(ஆக்கினை), 2. நிலை பேற்றறிவு(துரியம்), 3. நிறை பேற்றறிவு(துரியாதீத தவம்) என்பனவாகும்.
தவம்
தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும்.
தவம்
அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’.
தவம்
மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன அழுக்கை நீக்கும்.-
கவலையும் கடமையுணர்வும்
கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறந்து விடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும். கடமையுணர்வு வந்தால்தான் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அளவுக்குத் துணிவும் தெளிவும் வரும். கடமையைத் தெரிந்து செயலாற்றும்போது கவலை ஏற்படாது.
அறிவு
தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.
ஆசை
ஆசையின் மறுமலர்ச்சியே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்கள்.
வினைத்தூய்மை
ஒரு தடவை ஏற்பட்ட பதிவு, மீண்டும் அதற்கேற்ற முறையான மாற்றுச் செயல், அனுபோக, அனுபவ நிலைகளால்தான் மாறமுடியும். இத்தகைய மாறுதலை வினைப்பதிவின் தூய்மை என்று கூறுகிறோம்.
வெற்றி
வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும்.
அன்பு
இறை நிலை தெளிந்த இன்பத்தில் உயிர்கள் பால் எழும் நட்பே அன்பாகும், ஈகை, ஒழுக்கம் இயல்பாம்.
கவலை
இயற்கையை ஒட்டிய எண்ணத்தை விட்டு, கற்பனையான எண்ணத்தை ஒட்டி செல்லும்போது கவலை ஏற்படுகிறது.
ஞானம்
வாழ்க்கையையும் வாழ்வின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம்.
ஆசைகள்
நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.
தொண்டு
உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பற்று
ஆசையின் பேரிலும், அனுபோகத்தின் பேரிலும் மனத்தை சிக்க விடுவதே பற்று. -
வஞ்சம்
சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.
கடும்பற்று
ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்).
சினம்
ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம்.
கருமையம்
சிற்றுயிரிலிருந்து சிறப்பு நிலையான மனிதன் வரையில் பரிணாமம் அடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்புப் பெட்டகம் கருமையம்.
வளர்ச்சி
உடல்வளர்ச்சி - பருவம், உணவு இவற்றால் உண்டாகும்.
அறிவு வளர்ச்சி - கருவமைப்பு, கல்வி இவற்றால் உண்டாகும்.
மன வளர்ச்சி - சிந்தனை, ஒழுக்கப் பழக்கங்கள் இவற்றால் உண்டாகும்.
இவை மூன்றுக்கும் தொடர்பு உண்டு.
கணிப்பு
நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக் கொள்வீர்
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.
விதி மதி இரு நிலை இயக்கம் :
தப்புக் கணக்கு :
தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்.
இயற்கையின் பேராற்றல் :
இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?
விதி மதி இரு நிலை இயக்கம் :
ஓர் கல்லை நீ எடுத்துத் தூர வீச
உண்டாகும் இருவிதமாம் இயக்கம் அங்கே;
ஈர்க்கிறது விதி கல்லை பூமிநோக்கி;
எதிர்த்தோடும் அது மதியின் ஆற்றலாலே,
பார்க்கின்றோம் அது செல்லும் வேகம் குன்ற,
படிப்படியாய் கீழ் இறங்கி பூமி சேர,
போர்க்கோலம் போல், விதியும், மதியும் அங்கே
புரிகின்ற போட்டிகளின் முடிவைப் பாரீர்.
கோபம்
நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை எனில் பிறர் மீது எப்படி, ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.
எண்ணம்
நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ வளரவோ விடக் கூடாது.
சினம்-வஞ்சம்
சினம் எழும்போதே யார் மேல் எழுந்ததோ அவர்களை மன்னித்துச் சினத்தை ஒழித்துவிட்டால் வஞ்சம் கொஞ்சமும் மிஞ்சாது.
இச்சை
இச்சை என்பது இயற்கை. அந்த இச்சையை அளவுக்கு மேல் வளர விடுவதுதான் நமக்குத் துன்பத்தைத் தருவதாகும்.
மனம்
உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துவிதமான படர்க்கை நிலையில் ஒரு உயிர் உடலில் இயங்கிப் பெறும் சிறப்புத் தன்மையே மனம் எனப்படுகிறது.
எண்ணம்
"தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடுதான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்".
கற்பு நெறி
கணவன் மனைவி இருவரும் கற்பு நெறி காத்து ஒழுக்கத்தோடு இருக்கும் போது அந்த உறவு நிறைவானதாகவும் புனிதமாகவும் இருக்கும். சலனமற்ற உள்ளம் பெற்றிருப்பார்கள். இருவரும் பிணக்கு ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 'கருவிலே திருவுடையார்' என்பதைப் போல அறிவும் ஆற்றலும் ஒரு சேர அமைந்த தெய்வீக குழந்தைகளைப் பெறலாம்.
இனிமையான வாழ்வு
நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால் உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும், மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.-
எண்ணம்
உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்கள் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும். ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.-
ஈதல்
எப்போதுமே தன்னிடமுள்ள ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்து இருப்பதுதான் ஈதலாகும். -
எண்ணங்கள்
தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே உடலையும் கெடுக்கின்றன.
இயற்கை நீதி
விளைவு இலா வினையில்லை. வினையினூடே விளைவு பல தொக்கி நிற்கும் இயற்கை நீதி.-
அமைதி
பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.
வாழ்த்து
பகைமை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது.
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.
எண்ணம்
உயிர்ச்சக்தியின் இயக்க விளைவுதான் எண்ணம். அது அறியும் திறனுடையதால் அறிவு என்றும் கூறப்படுகிறது
தற்சோதனை
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுக்கும் முயற்சியே தற்சோதனை.-
பற்று
ஆசையின் பேரிலும், அனுபோகத்தின் பேரிலும் மனத்தை சிக்க விடுவதே பற்று. -
அமைதி
எல்லோரும் அமைதியாக வாழக் கூடிய ஒரு இருப்பு - ஒரு providence - மனித மனத்திற்குள்ளாகவே இருக்கிறது. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அதை தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி