வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும்.
அவை
(1) அறிவியல்,
(2) சுகாதாரம்,
(3) பொருளாதாரம்,
(4) அரசியல்,
(5) விஞ்ஞானம்
ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள். வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்து பிரிவுகளிலும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும். மேலே விளக்கிய ஐவகை இணைப்பான வாழ்க்கை விஞ்ஞானம் குறைபட்டிருத்தலின் வெளிப்பாடுதான் பிறர் வளம் பறித்து வாழும் விலங்கினப் பண்பாடு.
ஆகையால்தான் நல்லாட்சி வரவேண்டுமென்று எல்லோரும் விரும்புகின்றோம். பாராளுமன்ற அடிப்படையிலான குடியரசு (Parliamentary Democracy) என்று சொல்லக்கூடிய சுதந்திர நாடுகளிலே ஓட்டுரிமை என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஓட்டுரிமை என்றால் என்ன? எனக்கு இத்தகைய ஆட்சிதான் வேண்டும் என்று விரும்பி, அந்த ஆட்சியை வகுத்துக் கொடுப்பதற்கு உரிமையுடையவர்கள் தான் ஓட்டுரிமை பெற்றவர்கள். இவ்வாறு ஓட்டுரிமை பெற்றவர்கள் எல்லோரும் ஆட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றி, பொருளாதாரத்தைப் பற்றி, இன்னும் சமூக இயலைப் பற்றி, சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் எவ்வாறு நல்லதோர் பண்பாடு உடைய அரசியல் தலைவரைத் தேர்ந்து எடுக்க முடியும். குருடனும் குருடனும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழும்வாறுதான். இந்தக் குறைபாடு தான் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நாட்டிலே வேறு ஏதேனும் வளம் குறைவா, அல்லது அறிவு குறைவா, நிபுணத்துவம் குறைவா? எல்லாம் நிறைவாகவே உள்ளன. நமது தேவைகளை நாம் நிறைவு செய்து கொள்ள முடியும்.
எனது சிந்தனைக்கு எட்டிய சிறியதொரு பண்பாட்டை நான் கூறுகின்றேன்; படித்தவர்கள் இருக்கின்றார்கள், இளைஞர்கள் இருக்கின்றார்கள், இவர்கள் மத்தியிலே எத்தனையோ இயக்கங்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன. இன்று பதவிகளில் எல்லாம் நம்மவர்களே இருக்கின்றார்கள்; அவர்கள் ஒரே ஒரு உறுதிமொழி, சிந்தித்து முடிவு காணும் உறுதிமொழி எடுத்துக் கொண்டால் போதும். என்னவென்றால், "நான் இங்கே இருக்கின்றேன், இவ்வாறு இருக்கின்றேன், என்னுடைய வலிமை இவ்வளவு, என்னுடைய அதிகார வரம்பு இவ்வளவு இருக்கின்றது, எனக்குக் கல்வி இவ்வளவு இருக்கின்றது, இதை வைத்துக் கொண்டு எந்த முறையிலே யாருக்கு என்ன நன்மை செய்ய முடியும்?" என்பதை சிந்தித்து, இவ்வாறு சிந்தித்த முடிவிலே தனக்குள்ள ஆற்றலை உணர்ந்து கொண்டு சமுதாயத்திற்கு எனது கடமையாற்ற, "நான் தயாராக இருக்கின்றேன். என்னால் முடிந்த வரையிலே என்னுடைய தொண்டினைச் சமுதாயத்திற்கு செய்யக் கடமைப்பட்டு இருக்கிறேன். பிறர் பொருளை அல்லது சுதந்திரத்தைப் பறிக்காமல் இதைச் செய்வேன்" என்ற அளவிலே எல்லோரும் முனைய வேண்டும்.
" வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்;
கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,
ஏழை, நோயிற்றோர் எங்குமே சாட்சியம்".
"சமூகத்தில் ஓர்உறுப்பே உலகில் உள்ள
தனிமனிதன் என்று எவரும் உணர்ந்துகொண்டால்
சமூகத்தின் கூட்டுறவில் இன்பம் துன்பம்
சரிசமமாய் அனுபவிக்கும் சகிப்புண்டாகும்
சமூகத்திற் கவசியமாம் செயல்கள் அல்லால்
சதிஏதும் எவருமே செய்யதவாறு
சமூகத்தின் சூழ்நிலைகள் அமைந்து விட்டால்
சன்மார்க்க நெறியினிலே மனிதர் வாழ்வார்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக