மகரிஷியின் விடை:
சினவயப்பட்ட ஒருவன் தன் மனைவியைக் காலால் ஓங்கி உதைத்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். உதைபட்ட அவள் வலியால் துடிக்கிறாள். அந்த வலியை, துன்பத்தை உணர்வது அந்த உயிரில் விளங்குகின்ற இறைவன் தானே. 'என்னை உதைத்த உன் காலில் கரு நாகம் தீண்ட' - அந்த உயிரின் துன்பம் சாப அலையாக அவள் கருமையத்திலிருந்து ஓலமிடுகிறது....
இந்தத் துன்ப அலை சாப அலையாக மாறி உதைத்தவன் கருமையத்தில் வினைப்பதிவாகிறது. சாபமிட்டவர் கருமையத்திலும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அத்தோடு ஒரு கருநாகத்தின் கருமையத்திலும் பதிவாகிறது.
வினைவிளைவாகும் காலம், இடம் கனிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்று உதைத்தவன் இருட்டில் நடந்து செல்கிறான். அவன் கால் வைத்த இடத்தில் அப்பதிவைப் பெற்ற கரு நாகம் அது தன் வினையை முடிக்க அவன் காலில் கடிக்கிறது. அவன் வலியால் அலறித் துடிக்கிறான்.
மனிதன் எப்பொழுதும் எல்லோருக்கும் கெட்டவனாக இருப்பதில்லையே! அதே மனிதன் ஒரு காலத்தில் செய்த நன்மையால் நெகிழ்ச்சியுற்ற ஒருவர், "நீ, மகராசனா இருக்கணும், உனக்கு வாழ்க்கையில் ஒரு குறையும் வரக்கூடாது" என்ற வாழ்த்துதலைப் பெற்ற பதிவும் அவன் கருமையத்தில் இருக்கிறது.
எப்படி கருநாகத்திற்கு அந்த சாப அலை பதிவானதோ அதே போன்ற 'இவருக்கு குறை வரக்கூடாது, வந்தால் நீங்க வேண்டும்' என்ற பதிவைப் பெற்ற ஒரு பச்சிலை மருத்துவர் அந்த வழியாக வந்து கொண்டு இருக்கிறார். பாம்புக்கடிபட்டவருக்கு உடனே வைத்தியம் செய்து அவரைக் குணப்படுத்துகிறார்.
இறைவனே மனிதனாக வந்துள்ளான் என்பதை இங்கு தான் மனிதன் உணர்ந்து கொள்கிறான். 'கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்' என்று வாய்விட்டுச் சொல்கிறான். இவ்வாறு தீமையான செயலில் விளைவு துன்பமாக வர, மற்றோர் நன்மையான செயலின் விளைவு அந்தத் துன்பத்தைத் துடைக்க, இப்படி வாழ்கை முழுவதும் செயலின் விளைவுகள் பின்னிப் பிணைந்து இன்ப துன்பமாக விளைந்து கொண்டேயிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக