கடவுளிடம் போய், "ஐந்து தேங்காய்கள் உடைக்கிறேன். அந்த வேலையை முடித்துக் கொடு" என்று கேட்கிறோமே! இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. கடவுள் இறங்கி வருபவன் இல்லை. 'ஆயிரம் கோடி தேங்காய்களை உற்பத்தி பண்ணுபவன் நானாக இருக்கிறேன். ஒவ்வொரு தேங்காயிலும் அணுவாக இருப்பவன் நானாக இருக்கிறேன். ஐயோ பாவம்! இவர் எனக்குத் தேங்காய் கொடுக்கிறாராம்..!' ...என்று தான் எண்ணுவானே தவிர, ஒரு தேங்காயாக இருந்தாலும் ஆயிரம் தேங்காய்களாக இருந்தாலும் நமது வாய்க்குத்தான் தேங்காயே தவிர, கடவுளுக்கு 'அதைக் கொடுக்கிறேன். இதை கொடுக்கிறேன்' என்று பேரம் பேசுவது உதவாது. அனாவசியமான கற்பனைகள் ஏமாற்றத்தைத் தான் வாழ்க்கையில் உண்டாக்கும். அதை எல்லாம் விட்டு விட்டு, இன்றிலிருந்து செய்ய வேண்டியதைச் செய்தால் பெற வேண்டியதைச் சரியாகப் பெறலாம்.
'என் கணவரிடத்திலிருந்து நான் இன்னது பெற வேண்டும். அதற்கு நான் என்ன செய்து, அவர் மனம் திருப்தியடைந்து அவர் செய்வார்' என்பதை மனைவி தெரிந்து கொள்ள வேண்டும்.
'மனைவியிடத்திலிருந்து இந்தந்த முறையில் இன்னது வேண்டும், அதற்கு என்னென்ன கடமைகளைச் செய்தால் அது கிடைக்குமோ, அதைச் செய்ய வேண்டுமே தவிர, எதிர்பார்த்து பயமுறுத்தினால் ஒரு நாளைக்குத்தான் கிடைக்கும். அதற்கு மேல் விரோதத்தைத்தான் உண்டு பண்ணும்'.
நம் மனதை மாற்றிக் கொள்ளக்கூடிய வளம் பெற வேண்டும். மனப்பயிற்சி பெற தவத்தையும் (Kundalini Yoga), அகத்தாய்வுப் (Introspection) பயிற்சிகளையும் செய்து வந்தால் தெளிவு உண்டாகும். இதுவரைக்கும் தெரிந்து கொள்ளாத இயற்கை இரகசியங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் மேலும் அறிவு உயர்ந்து, மனவளம் பெற்று, உடல் நலம் பெற்று, வாழ்க்கையில் மேம்பட்டு சிறப்பாக வாழ்வதற்கு "மனவளக்கலைப் பயிற்சி உதவும்".
குறை கூறுதல் (Comments), கட்டளையிடுதல் (Commands), வற்புறுத்துதல் (Demands) என்ற மூன்றையும் ஒழித்துவிட்டோம் என்று சொன்னால் நாம் எல்லோருக்கும் நல்லவர்களாக மாறி விடுகிறோம். உலகமே நமக்கு நட்பாக மாறி விடும். அந்த முறையில் நம்மை மாற்றியமைத்துக் கொண்டால்தான் அமைதி வரும். வேறு எந்த வகையிலும் பிறரைப் பயமுறுத்தி, வேண்டி, அமைதியைப் பெற முடியாது.
"ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்"
என்று திருமூலர் சொல்கிறார். ஆசை என்றால் கற்பனையாக எதிர்பார்ப்பதாகும். அந்த எதிர்பார்ப்பு வேண்டாம். ஏன்? ஏதாவது வரவேண்டும் என்று சொன்னால், என்ன செயல் செய்திருக்கிறோமோ, அந்த வினைப்பயன் வழியாகத்தான் விளைவு வரவேண்டும். கேட்டுக் கேட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக