வாழ்க்கையில் அனுபோக அனுபவங்களால் அறிவிலும், உடல் இயக்கத்திலும், செயல்களிலும் அறிவால் உயர்ந்து வரும் மனிதன் அவ்வப்பொழுது காலத்திற்கேற்ப வாழ்க்கையில் சிறப்பான பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தான் செழிப்பாகவும், அமைதியாகவும...் வாழமுடியும். முதலில் மனிதனின் தவிர்க்கமுடியாத தேவைகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்து தெளிந்து கொள்வோம்.
மனிதனுக்குத் தேவையானவை
“மனிதனுக்கு உணவு, உடை, வீடு வேண்டும்
மற்றவர்கள் கருத்தறிய மொழியும் வேண்டும்
இனியும் ஒருவர் உற்ற வயதடைந்தால்
ஏற்றபடி வாழ்க்கைக்கோர் துணையும் வேண்டும்
தனிமனிதன் சக்திகளை ஒழுங்கு செய்து
சகலவிதமாம் வாழ்க்கை வசதி எல்லாம்
புனித முறையில் பகிர்ந்து துய்த்து வாழ
பொதுவான கூட்டாட்சி முறையும் வேண்டும்.”
இத்தகைய இன்றியமையாத தேவைகளை அடைவதற்கு ஏற்றபடி மனித முயற்சியும், அவ்வப்பொழுது சமுதாயப் பண்பாட்டில் தகுந்த சீர்திருத்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தமில்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மனிதனால் அனுபவிக்க முடியாது. மன நிறைவும் கிட்டாது. எனவே, ஐந்தொழுக்கப் பண்பாட்டில் வரும் கவியைப் பார்ப்போம்.
கவி
“புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்
போதை, போர், பொய், புகைஒழித்து அமுல்செய்வோம்.
அதிகசுமை ஏதுமில்லை (1) அவரவர்தம் அறிவின்
ஆற்றலினால், உடல்உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்;
(2) மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம், உடல்வருந்தா
மாநெறியும்; (3) உணவுக்கு உயிர் கொல்லா நோன்பும்; (4) பொதுவிதியாய் பிறர்பொருளை, வாழ்க்கைச்சுதந்திரத்தை போற்றிக்காத்தும் (5) பிறர்துன்பம் போக்கும் அன்பும்வேண்டும்.”
நமது வாழ்வில் அரசியல் தேவை. இறையுணர்வும், அறநெறியும் கற்றுக் கொள்ளவும், பழகவும் மதங்கள் தேவை. இந்த தேவைகள் அனைவருக்கும் பொதுவாகத் தானே இருக்கின்றன. ஏன் மனிதன் அரசியல், மதம், பண்பாடு இவைகளில் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திக் கொண்டு, பகை, பிணக்கு, போர் இவற்றால் துன்புற வேண்டும்? எனவே இக்காலச் சமுதாயத்துக்கு ஒரு முறையான சீர்திருத்தமும் தேவை. அந்தத் தேவைகளில், ஆட்சிமுறை உலகுக்கு ஒன்று போதும். மதம் என்ற போதனை முறை ஒன்று போதும், ஒருவரைப் பிறர் மதித்து வாழ, ஒத்தும், உதவியும் வாழ்வதற்கு ஏற்றபடி பண்பாடும் தேவை.
தேவையில்லாத பழக்க வழக்கங்களால், அவை தொடர்ந்து வருவதால் மனித சமுதாயத்தில் ஆங்காங்கே குழப்பங்களும், பகை, போர், இவைகளும் நிகழ்கின்றன. போர் அவசியம் தேவைதானா? யாருக்குப் போர் தேவை? இந்த வினாவுக்கு விடை காணும்பொழுது போரில்லா உலக சமுதாயம் அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முடிவு கொள்ள வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் பதினான்கு திட்டங்கள் அடங்கிய உலக சமுதாய சீர்திருத்த நெறிகளில் போரில்லா நல்லுலகம் என்ற கருத்தை முதல் திட்டமாக வலியுறுத்தியிருக்கிறேன். இந்த இடத்தில் கீழே சொல்லியுள்ள பதினான்கு திட்டங்களையும் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
கவி
போரில்லாநல்லுலகம், பொருள்துறையில் சமநீதி
நேர்மையான நீதி முறை, நிலவுலக்கோர் ஆட்சி,
சீர்செய்த பண்பாடு, சிந்தனையோர்வழி வாழ்வு,
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வநீதிவழி வாழ்தல்,
தேர்த் திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு,
செயல் விளைவு உணர்கல்வி, சீர்காந்த நிலை விளக்கம்,
பார்முழுதும் உணவுநீர்பொதுவாக்கல், பலமதங்கள்
பலகடவுள்பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை வழிபடுதல்.
இந்தப் பதினான்கு திட்டங்களும் வாழ்க்கைப் பண்பாடாக மாறவேண்டுமென்றால் முதலில் உலகப் பொதுவான ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக மதம் என்ற தலைப்பில் நிலவி வரும் கற்பனையான உருவக் கடவுள்களையும், அததற்குரிய கட்டுக் கதைகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.
முதலில் ஓராட்சி உலகுக்கு எப்படிக் கொண்டு வரலாம் என்று சிந்திப்போம். இந்தச் சிந்தனைக்கு உலகிலுள்ள அறிஞர் பெருமக்களெல்லாம் ஒருங்கிணைந்து கூடிப் பேசி முடிவு எடுத்துதான் கொண்டு வரவேண்டும். இதற்கு உலகப் பொதுவான, அதிகார பூர்வமான மையம் ஒன்று வேண்டும். இதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அதிர்ஷ்டவசமாக நமது முன்னோர்கள் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து “ஐக்கிய நாடுகள் சபை” என்ற உலகப் பொது வாழ்க்கை நல மேம்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளார்கள். அந்த மையத்தில் தேவையற்ற சில முறைகளை நீக்கித் தூய்மை செய்து கொண்டால் ஐக்கிய நாடு சபை ஒன்றே உலகப் பொது நலமையம் என்ற சிறப்பு பெற்றுவிடும்.
அந்த உலகப் பொது மையத்தில் இரண்டு தீர்மானங்கள் முதலில் அமுல்படுத்த வேண்டும். 180 நாடுகளும் சேர்ந்து U.N.O. என்னும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சபையில் நிர்வாகப் பிரிவாக இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒன்று பொதுச்சபை (Genaral Assembly), மற்றொன்று பாதுகாப்பு சபை (Security Council). இந்தப் பாதுகாப்புச் சபையில் யுத்த தளவாடங்கள் விற்று அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துக் கொள்ள ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை (Veto Power) அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அநீதியான முறையால், உலகப் பொதுவான போர் ஒழித்தல் முதலான தேவைகளை முறையாகச் சீர்திருத்தம் செய்து உலக நாடுகள் நிரந்தர அமைதியின் மூலம் பயன் பெற முடியவில்லை.
இந்த ரத்துரிமை நீக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் அநீதியான ரத்துரிமையை ஒழித்து, போரில்லா நல்லுலகத்தை அமைத்துக் கொள்ளலாம். அதற்காகவே, மற்றுமொரு தீர்மானமும் தேவை. உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ள இராணுவம் என்ற போர் நிர்வாகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம்தான். எனினும் ஒவ்வொரு நாட்டாலும் ஏற்படுத்திக் கொள்வது என்றைக்கும், எந்தக் காலத்துக்கும் பிணக்கு, பகை, போர் இவற்றை உண்டு பண்ணிக் கொண்டேயிருக்கும். இந்த அடிப்படையை மனதில் ஆராய்ந்து கொண்டு இதற்கு ஒரு தீர்மானம், பாதுகாப்புச் சபையின் சார்பில் கொண்டு வர வேண்டும். அது மிக சுருக்கமான தீர்மானம்தான்
எந்த நாடும் தனித்தனியே போரமைப்பை உருவாக்கிக் கொண்டு தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமில்லை. உலகில் உள்ள எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் பணியை ஏற்று, ஒற்றுமையாக நடைபெற ஐக்கிய நாடு சபையில் பாதுகாப்பு பிரிவின் ஒரு தீர்மானம் அவசியம். ஐக்கிய நாடு சபை என்பது உலகில் உள்ள எ...ல்லா நாடுகளின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.
ஆகவே, “எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பொறுப்பை உலகப் பொதுவான ஐக்கிய நாடு சபையின் பாதுகாப்பு பிரிவே பொறுப்போடு ஏற்று நிர்வகித்து வர வேண்டும்.” இதற்கென ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். எந்த நாடும் தனித்தனியே போர் அமைப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது உலகப் பொதுவான அறிஞர் பெருமக்கள் ஆழச்சிந்தித்து, உலக மக்கள் நலத்துக்கு ஏற்ற முறையில் நல்ல வாசகங்களை அமைத்து, இந்த உலகப் பொது பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி அமுல் நடத்த வேண்டும்.
இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி, அவற்றை அமுலாக்கி உலக மக்கள் வாழ்வில் எவ்வளவு அமைதியும், செல்வப்பெருக்கும், ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் வாழக்கூடிய பண்பாடும் உருவாகும் என்பதைச் சிந்தனை ஆற்றலால் கணித்துப் பாருங்கள். மற்றொரு அவசியமான தவிர்க்க முடியாத மாற்றம், மதங்கள் ஒன்றாக வேண்டும். இறையுணர்வும், அறநெறியும் தெரிந்து கொண்டு வாழ்வதற்கே மதங்கள் ஏற்பட்டன. இங்கு இறைநிலை உணர்வில் எண்ணிறந்த கடவுள் பெயர்களை உருவாக்கிக் கொண்டு ஒவ்வொரு கடவுள் பெயராலும் மக்கள் பிரிந்துபட்டு துன்பம் அடைகிறார்கள். இந்த நிலைமையைத் திருத்தியமைக்க ஒரு தீர்மானம் அவசியம்.
ஒரு உலகப் பொது மகாநாடு கூட்டி, மதத் தலைவர்கள் அனைவரையும் மதிப்போடு வரவேற்று, அவர்களிடம் இரண்டு வினாக்களை முன் வைக்க வேண்டும்.
1. கடவுள் என்பது ஒன்றா? பலவா?
2. ஒன்றுதான் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள எந்த மகாசக்தியை கடவுளாக ஏற்றுக் கொள்ளலாம்? ஏன் உலகில் பல கடவுள் பெயர்களை வைத்துக் கொண்டு நாம் துன்புற வேண்டும்?
இந்த இரண்டு வினாக்களுக்கும் ஆராய்ந்து பதில் கூறுமாறு அங்கு கூடியிருக்கும் மதிப்புமிக்க மதத் தலைவர்களை வேண்டிக் கொள்வோம். இதற்கு முடிவாக என்ன விடை கிடைக்கும்? கடவுள் என்பது ஒன்றுதான் என்பார்கள். உலகிலுள்ள மக்களெல்லாம் முற்காலத்தில் சிறுசிறு பிரிவுகளாகக் கூடி வாழ்ந்தார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் வேறுபட்டிருந்தன. கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு அந்தந்த மொழியில் உச்சரிப்புகள் வேறுபட்டன. அந்த உச்சரிப்புகள் பேதத்தைக் கொண்டு கடவுள்கள் தனித்தனியாகவும், எண்ணிலடங்காத கடவுள்களாகவும் வழக்கத்தில் வந்து விட்டன.
இவற்றையெல்லாம் மக்களிடம் உணர்த்தி நல்ல முறையில் உண்மையான தெய்வ நிலையை உணர்வதற்கு நாம் முதன் முதலில் விளக்கியுள்ள கருத்துக்களை நல்ல முறையில் சீராக்கி அமைத்து, எல்லா மதத் தலைவர்களும் உண்மையான கடவுள் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இந்த முயற்சி மிகவும் அவசியமானது. செயல் முறைக்கும் எளிதானது. இந்தத் தீர்மானத்தின் மூலம் மக்களிடம் ஒரே கடவுள்தான் என்ற விளக்க அறிவு மலர்ந்து விட்டால் மதங்கள் ஒன்றைவிட அதிகமான அளவில் தேவை இருக்காது. இதன் மூலமே வாழ்க்கையின் தேவைகளை முறையாகப் பெறவும், அனுபவிக்கவும் மக்களிடம் ஒரே ஒரு பண்பாடு உருவாகிவிடும். இதன் மூலம் பல மதங்களையும் ஒன்றுபடுத்தி ஒரே மதமாக்கி உண்மையான தெய்வநிலையை வழிபடும் திருத்தத்தை உண்டாக்கலாம்.
உலகப் பொது ஆட்சியும், மதங்கள் ஒன்றுபட்டு ஒரே கடவுள் என்ற கருத்தும் மக்களிடம் உருவாகிவிட்டால் மற்ற தேவையற்றச் சடங்குகளும், கற்பனைகளும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பிணக்கு, பகை இவைகளும், அவ்வப்பொழுது உலகில் நிகழ்ந்து வரும் போர்களும் அடியோடு நின்றுவிடும். அறிஞர் பெருமக்கள் தக்க முயற்சி எடுத்து மனித சமுதாயத்தில் மக்களுடைய அறிவைக் கல்வியின் மூலமும், வாழ்க்கைத் திருத்த பண்பாட்டின் மூலமும் திருத்தி அமைத்து விடலாம். அதைச் செய்வோம்.
உலக நலம், உலக அமைதி, மனித குல ஒற்றுமை இவைகளையெல்லாம் அமுலுக்குக் கொண்டு வரலாம். அறிஞர் பெருமக்களை வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். உலக ஆட்சியும், உலக மதமும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். உங்கள் முயற்சியினால் உலகம் மேன்மை அடையட்டும். உலக மக்கள் வாழ்வில் அமைதியும், மனநிறைவும் உண்டாகட்டும். வாழ்க வையகம்.
- வேதாத்திரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக