2. மனத்தூய்மை
பொருள், புகழ், செல்வாக்கு, புலன், இன்பம் நான்கிலே
புகுந்தழுத்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள்நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்
இறைநிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள்நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச் செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என.
விரிவுரை
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திலும் உடல் அமைப்பாலும் ஆளும் அறிவு நிலையாலும் மனிதன்தான் சிறந்தவன். எனினும் மனிதப் பிறவியின் நோக்கத்திற்கே பொருந்தாத வினைப்பதிவுகள் அவனிடம் கரு அமைப்பு மூலம் அடங்கியுள்ளன.
மனித உருவம் தோன்றுவதற்கு முன்னம் ஈரறிவிலிருந்து ஐயறிவு வரையில் பிற உயிரைக் கொன்று அவற்றின் உடலையே உணவாகக் கொண்டு வாழ்ந்த பதிவுகள் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன.
மனிதனாகப் பிறந்தும் ஆறாம் நிலையறிவு விரிவடைந்து சிந்தனையாற்றல் தோன்றிய வரையில் கரு அமைப்பு பதிவுகளாகிய சஞ்சித கர்மத் தொடராக விலங்கின வாழ்க்கை முறையிலே வாழ்ந்து விட்டான்.
பிற உயிரின் பிறப்புரிமையையும், சுதந்திரத்தையும் பறிப்பதாகிய, வருத்தியும் கொன்றும் வாழும் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுதலை பெற மனத் தூய்மையும் வினைத்தூய்மையும் எங்கோ ஒருவர் விழிப்புணர்வால் பெற்று விட்டார். உலகில் பெரும்பாலான மக்களுக்கு இந்த அருள் விளக்கம் ஏற்படவில்லை.
இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக அறிவாலும் செயலாலும் மாற்றி, ஒருவருக்கொருவர் உதவியும் ஒத்தும் வாழவேண்டிய சமுதாய அன்புநெறிதான் மனிதனுக்கு அவசியம்.
இது மனித அறிவுக்கும் வாழ்வுக்கும் பொருத்தமான வாழ்க்கை முறை.
இதற்குப் பயிற்சியால் மனத்தூய்மையும் வினைத்தூய்மையும் பெற வேண்டும். அதன் பயனாக அறிவு விரிவடைந்து குறுகிய எண்ணங்களிலிருந்தும் செயல்களிலிருந்தும் மனிதன் விடுதலை பெற்று அறிவு விரிந்து இயற்கை நியதிகளோடும் இறைநிலையோடும் கலந்து அமைதியும் இன்பமும் பெறுவான்.
அறிவை இறைநிலையோடு இணைத்து அறவாழ்வில் பழகிக் கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்குள் சஞ்சித வினையாக அமைந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மை பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கவர்ந்து கொள்ளும் ஆசையாகப் பெருகி இந்த நாலும் எவ்வளவு இருந்தபோதிலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற பேராசையாகி அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு, உள்ளம் கெட்டு, மனித உறவில் இனிமை கெட்டு, தனது செயல்களைத் தொடரவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் தேக்கம் கொண்டு மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
மனம் புண்பட்டு இந்த நிலையிலே அமைதியிழந்து தவிப்போருக்கு நான் எனது அனுபவங்களைக் கொண்ட விளக்கம் கூறுகின்றேன்.
மறைபொருள் காந்தமானது பேரியக்க மண்டலம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அதற்கு உட்பொருளாக இறைநிலை அமர்ந்து அழுத்தம் என்ற கவர்ச்சியாற்றலாக பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்தி வருகிறது. மனத்தால் விரிந்து அந்த இறைநிலையுணர்வோடு விழிப்பாய் இருங்கள்.
மேலும் அந்த இறைநிலையின் நுண்பகுதி விண்ணாகி விண்துகள்கள் இணைந்த பஞ்ச பூதங்களாகி சூரியன் முதலிய கோள்களாகி உலகமாகிய பரிணாம நியதியினை நினைந்து பாருங்கள். உலகில் ஓரறிவான தாவரங்களிலிருந்து ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு என பலகோடி உயிரினங்கள் தோன்றி அவற்றின் தொடராக நாம் தோன்றி இப்போது இங்கே மனித உருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நினைத்துப் பாருங்கள். மனம் எவ்வளவு விரிவடைந்து எல்லை கட்டிய உணர்வுகளிலிருந்து விடுபட முடிகிறது என்ற அனுபவத்தில் காணுங்கள். மேலும் உயிர்கள் தோன்றுகின்றன, வாழ்கின்றன, முடிகின்றன. மனிதனும் இவ்வாறேதான் இயற்கை நியதி என்ற வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். பிறப்பதற்கு முன்னம் எப்படியிருந்தேன், இறந்த பின் எப்படியிருப்பேன், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பத்திற்காக பிறர் வளம் பறித்து எவ்வளவு காலம் தான் வாழ முடியும்? இந்தச் செயல்களால் மனித குலத்தில் துன்பங்கள் அல்லவா பெருகிக் கொண்டிருக்கின்றன. இதே குற்றச் செயல்களையும் பழிச்செயல்களையும் நானும் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? என்று எண்ணி எண்ணி சிந்தியுங்கள். உலக ஆசைகளிலிருந்து எந்த அளவு அறிவு விடுபடுகிறதோ அந்த அளவிற்கு விரிந்த இறைநிலையோடு இணைந்து நிற்கும். மனம் அமைதி பெறும். வினைத்தூய்மையும் மனத்தூய்மையும் இயல்பாக உண்டாகும். இறையுணர்வு என்ற மனம் விரிந்த அகக்காட்சியால் பொருள், மக்கள் பற்றுக்கள் தேவைக்கு ஏற்ற அளவில் துய்க்கவும், கடமைக்கே வாழவும் ஏற்ற மனிதப் பண்பாடு ஓங்கும். மனதை விரிய விடுங்கள், விடுதலை பெறுங்கள். இந்த விடுதலைதான் பாவச் செயல்களிலிருந்து விடுதலை. இதுவே அறிவிற்கு முழுமைப் பேறாகிய முக்தி.
அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்
- வேதாத்திரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக