" எல்லா மனிதர்களும் இயற்கையின் பரிணாமச் சிறப்பின் ஒரு கூறுதான் - என்ற உண்மையில் ஆதியில் இயற்கையின் இறைவெளி நிலையே அறிவும் விரைவுமாக எல்லாமாக மலர்ந்திருப்பதால் எந்தத் தோற்றத்தைத் தெய்வம் என மதித்தாலும் அது அவன் அறிவின் வெளிப்பாடேயாகும். எனவே யார் எந்த உருவில் எந்தக் கருத்தில் தெய்வமென்று வழிபட்டாலும் அவர் அறிவையே வழிபடுகிறார் என்றுதான் பொருள். த...ெய்வம் எனும் இறைநிலையே அறிவாக விளங்குவதால் அனைவரும் வணங்குவது ஒரே தெய்வம் தான். இக்கருத்தினை :
.
"கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் நீ".
.
என்ற சூத்திரம் எழுதியிருக்கிறேன். இந்தக் கருத்தில்தான் நான் உலகப் பொது அருள்நெறி சமயம் என்று எல்லோருடைய வணக்க முறைகளும் ஒன்றே என்று ஒப்புக்கொண்டு மனித நேயமே பெரிது என மதித்து வாழ்வோம் என்று கூறி வருகிறேன்..
.
எனவே சிலை வணக்கம் என்பது மனித இனத்தின் பிரிவுபடாத கருத்து ஆகும். காலத்திற்கும் இடத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ப சிலை வணக்கத்தோடு சில சடங்கு முறையை மனித இனம் கூட்டிக் கொண்டது. இந்த சடங்கு முறையோடு கூடிய இறை வணக்கம் மதம் எனப்படுகிறது.
.
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. சடங்குகளைக் கொண்டு மனிதக் குழுக்களைப் பிரித்து நோக்கும் கருத்து நாட்கள் செல்லச் செல்ல மாறிவிடும். இறைநிலையை உண்மைக் கருத்தோடு உள்ளது உள்ளவாறே அறிந்து கொண்டால் உலக மக்கள் கருத்தில் இறைவழிபாடு சீரமைந்து வழிபடும் முறையே அனைத்துலகும் ஒத்த முறையில் மாறி விடும்.
.
அறிவை அறிந்து இறைவழிபாடு நடத்துவதற்கு உலகெங்கிலும் இப்போது அகத்தவ முறை (Meditation) பரவி வருகிறது. இதன் விளைவாக மனித அறிவில் ஒரு உயர்ந்த வியத்தகு ஆற்றல் வெளிப்படும். மனித இன வாழ்வின் புலன் உணர்வுகளில் ஏற்பட்ட பழக்கத்தால் மன அலைச்சுழல் (Mind Frequency) வினாடிக்கு 14 முதல் 40 வரையில் நிகழ்கின்றது. இந்த நிலையில் நுண் பொருள் உணர்வு கிட்டாது. உணர்ச்சிவயப்பட்ட மனநிலைகளான பேராசை, கடும்பற்று, சினம், முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாகவே இயங்கும். இதன் விளைவாக பிறர் வளம் பறித்து வாழவேண்டும் என்ற வேட்கையினால், பொய், கொலை, களவு, சூது, கற்பழித்தல் ஆகிய ஐந்து பழிச்செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கை இன்பத்தை இழந்து மனிதன் வலி, நோய், பிணக்கு, பகை, போர், அகால மரணம் இவற்றால் வருந்துகிறான். இத்தகைய செயல்களும் பதிவுகளும் கருமையம் (Genetic Center) எனும் ஆன்மாவின் தூய்மையை கெடுத்து வாழ்நாள் முழுதும் வருந்துவதோடு அவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கருத்தொடராக அதே துன்பங்கள் தொடர்கின்றன.
.
அகத்தவச் சாதனையால் (Simplified Kundalini Yoga) மன அலைச்சுழல் விரைவு குறைந்து கொண்டே வரும். இயற்கையை ஒட்டிய சிந்தனை உண்டாகும். முடிவாக இறைநிலையும் அறிவும் ஒன்றுதான் என்று உணரத்தக்க நுண்மாண் நுழைபுலன் அறிவு (Super Active Transcendental State of Consciousness) சித்தியாகும். மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்றாலும் மனிதன் இந்த உயர் நிலைக்குத்தான் வந்து சேருவான். அன்பும் கருணையும் மனித குல வாழ்வில் தழைத்தோங்கும். அகத்தவச் சாதனையால் (Meditation) அறிவு உயர்ந்து இறையுணர்வு கிட்டும் வரையில் மனிதருக்குச் சிலை வணக்கம் அவசியம். இறையுணர்வு கிட்டிய பின்னர் சிலை வணக்கம் தானாகவே மாறி, இறை வழிபாடு கருத்திலும் செயலிலும் அடியோடு மாறிவிடும். சிலை வணக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த இடத்திலும் நன்மை அல்ல. முற்றாத காயை அடித்துக் கனிய வைப்பது போலாகும்.
.
அகத்தவச் சாதனையால் (Simplified Kundalini Yoga) மன அலைச் சுழல் விரைவைக் குறைத்து அந்நிலையில் இறைநிலை உணர்வு பெற்ற பிறகு, எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே, எல்லாம்வல்ல இறைநிலை மனம், உடல் இரண்டையும் எவ்வாறு நடத்தி வருகிறது என்பது தெளிவாக விளங்கும். இறையுணர்வு பெற்றவர்களுக்கு வினை - விளைவு (Cause and Effect) தத்துவம் இயல்பாகி இறையுணர்வு எனும் ஞானநெறி உலகில் பரவி இறைவழிபாடும் இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் சீரமையும்.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உள்முனைப்பை உள்ளடக்கி உயிரில் பாய்ச்சி
உட்பொருளே அறிவென்று அதுநீயென்று
சின்மயமாய் அமைதிபெற சிறந்த ஆற்றல்
சிந்தனையை ஊக்குவிக்கும் இறையுணர்வாய்;
தன்முனைப்பு கரைந்து விடும் ஆறுகுணங்கள்
தணிந்து நற்குணங்களாய் மாறும்மேலும்
முன்செய்த வினையகலும் பின் செயல்கள்
பிழையின்றி அறமாம் பேரின்பம் கிட்டும்."
.
மனதின் அடித்தளம் இறை நிலை:
"அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும் உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".
.
"இறைநிலையே அறிவாக இருக்கும்போது
இவ்வறிவை சிலைவடிவத் தெல்லை கட்டி
குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக