எண்ணம் நின்றுவிட்டால் நலமாக இருக்கும் என்று இயற்கைக்குப் பொருந்தா நினைவு கொள்ள வேண்டாம். உயிர் வாழும்போது, விழித்திருக்கும்போது, எண்ணங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். தூங்கும் போது எண்ணங்களில்லையே அதனால் என்ன பயன் பெற்று வருகிறீர்கள். மரணத்தில் எண்ணம் அடியோடு நின்றுவிடும். பிறகு என்ன உயர்வைக் காண முடியும். எண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே முறைபடுத்தி பயன் கண்டு சிறப்படையுங்கள். தவத்தில் பழக்கும் எண்ணம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் சிறப்பளிக்கும்.
.
வாழ்த்துக் கூறுவதைப் பற்றி சில அன்பர்கள் வினா எழுப்புகிறார்கள். வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு ஒருவர் எனக்குத் தீங்கு இழைக்கிறார், துன்பம் தருகிறார் என்றால் அவரை எப்படி வாழ்த்தமுடியும்? ஏன் அத்தகைய கொடுமையாளரை வாழ்த்த வேண்டும்? என வினவுகின்றனர். எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் அவர் விருப்பம் போல் செய்துவிட முடியாது. ஒவ்வொருவரிடத்தும் வினைப் பயன் பதிவுகள் உள்ளன. அப்பதிவுகளை வெளியாக்கி தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்கு துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம்.
.
பெரும்பாலும் இயற்கை வேற்றுமனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக்கொண்டு வருகிறது. ஒருவர் இன்னொருவருக்கு தீமை செய்கிறார், அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை ஒருவர் வினைப்பதிவை வெளிக் கொணர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கின்றது என்று தான் பொருள். எனவே, தீமை செய்தவர் தானே விரும்பி இன்னொருவருக்குத் துன்பம் அளித்தார் என்று கொள்வதைவிட துன்பம் கண்டவர் வினைப்பதிவை இன்னொருவர் இயற்கையின் ஒருங்கிணைந்த பேராற்றல் உந்துதலால் வெளிக் கொணர்ந்து நேர்செய்து விட்டார் என்று கொள்வதே சரியான விளக்கம்.
.
தனது வினைப்பதிவே இன்னொருவர் மூலமாகத் துன்பமாக விளைந்தது என்று உணர்ந்து கொண்டால் பிறர் மீது வெறுப்பு எவ்வாறு எழும்?
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:
"விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர் தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு,
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி".
.
எல்லார்க்கும் உதவி செய்வோம் :
"தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலைப் பிறரைக் குறைகூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில் ;
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துய்ய
நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்;
நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக