Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 30 ஏப்ரல், 2015

நமது சொத்துக்கள்


புதிதாக பயிற்சி ஏற்ற அன்பர்கள் தவத்தின் போது நினைவு ஓடுகிறது, எண்ணங்கள் பல எழுகின்றன, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமெனக் கேட்கிறார்கள். மனித உயிரைத் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கும் வரக்கூடிய சொத்து வினைப்பதிவுகள் மாத்திரமே தான். இது வரையில் பல பிறவித் தொடராகச் சேர்ந்தும், இப்பிறவியிலும் கூட்டப்பட்டதும் ஆகிய நமது வினைப்பதிவுகள் அனைத்தும் உடலில் நோயாகவும், மனதில் களங்கங்களாகவும் உள்ளன. எனவே, எழும் எண்ணங்கள் அனைத்தும் நாம் சேர்த்துவைத்த நமது சொத்துக்களே. அவை எங்கு போகும்? நாம் வேறு வகையில் மனதை, உடலை, வாழ்வில் பழக்கி, புதிய பதிவுகளை ஏற்படுத்தி பழைய பதிவுகளின் வேகத்தைக் குறைக்க வேண்டும். தவம் செய்து உயிரின் அசைவையே கவனிப்பது ஒரு புதிய திருப்பம்,. சிறிது காலம் பயின்ற பின் தான் மனம் நாம் விரும்பும்வாறு ஒரே எண்ணத்தில் நிலைபெறும். அதுவரையில் விடா முயற்சியோடு பழகி பழைய பதிவுகளுக்கு மேல் பதிவுகளைக் கொடுக்க வேண்டும்.
.

நாம் சமையலறையில் அலமாரியில் சமையளுக்கேற்ற ஐம்பது பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறோம் என்று உதாரணத்துக்காக வைத்துக் கொள்ளுங்கள். மிளகு வேண்டுமென்று எடுக்கப் பார்க்கிறோம். அந்த வேலையில் கடுகு, பூண்டு, சீரகம் இன்னும் மற்ற சாமான்களும் கண்களுக்குத் தென்படுகின்றன. நான் மிளகு தானே தேடுகிறேன். இவையெல்லாம் ஏன் தென்பட வேண்டும் என்று சலித்துக் கொள்ள முடியுமா? எல்லாமே நாம் வைத்தவைதாம். தேவையான போது அவையும் உதவும். இப்போது மிளகை மாத்திரம் தேடி எடுத்துக் கொள்வோம் என்று மிளகை எடுத்துக் கொள்வது தான் சரியான வழி. இதே போன்றே நமது சொத்துக்களாம் வினைப்பதிவுகள் அனைத்தும் எண்ண அலைகளாக எழுச்சி பெற்றுக் கொண்டே தான் இருக்கும். வேண்டும் போது அவையும் பயன்படும். இப்போது குண்டலினி சக்தியின் மீது மனம் வைத்து தவம் செய்வோம் என்று விழிப்பு நிலைக்கு மனத்தைக் கொண்டுவந்து தவத்தை தொடர்ந்து ஆற்றவேண்டியது தான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்; அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்; அகத்தவத்தால் இல்லறத்தை 'அன்பகமாய்' ஆற்றிடலாம்; அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம்".
.

பேரின்பமும் அறிவின் உயர்வும் :

"சூடளக்கும் கருவியிலே ரசத்தைப் போல,
சோதிவிந்து சூடேறி நெற்றி முட்ட,
நாடளக்கும் அறிவிற்கோர் புதுமை தோன்றும்;
நாடிநிற்கும் தன் மூலஸ்தானம் பட்ட
பாடளக்கும், பயனடைந்த பக்குவத்தால்,
பண்டைநிலை உற்றுணர்ந்து பேரானந்த
வீடளந்து, முடிவுகண்ட அனுபவத்தால்
விருப்புவெறுப்புணர்ந்த பெருவாழ்வாய் நிற்கும்.
.

எண்ணம் சீர்பட தற்சோதனை:

"அறிவு தன் தேவை பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 29 ஏப்ரல், 2015

மனவளக்கலையென்னும் வாழ்க்கை விஞ்ஞானம்


 1) இறைவெளி - இருப்பு நிலை (Unified Force)
.

2) விண்துகள் ( Infinitesimal Whirling Wave Particle) இதனை உயிர் (Energy Particle) என்றும் வழங்குகிறோம்.
.

3) காந்த ஆற்றல் (Magnetism). இது இறைவெளியும் விண்துகள் சுழலிலிருந்து பிறக்கும் விரிவலையும் சேர்ந்த கூட்டு ஆற்றல்.
.

இந்த மூன்றையும் உணர்ந்து கொள்ளும் கருவி மனித மூளைதான். இந்த அற்புதமான ஆற்றல்தான் ஆறாவது அறிவு ஆகும். இந்த ஆறாவது அறிவு மறை பொருட்களை உணர்வதோடு உடல் கருவிகளுக்கு உப கருவிகளை உற்பத்தி செய்து இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்கும் செயல்களைத் துரிதமாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க உதவுகிறது.
.

ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால்தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும், இட்டுண்டு வாழும் ஏற்றமுள்ள "அறிவாட்சித்தரம்" பண்பாடாக அமையும். ஆறாவது அறிவைக் கொண்டு மறைபொருள் விளங்கிக் கொள்ள முடியாத போது அறிவு தடைபட்டு, தேக்கமுற்று, தன்முனைப்பாகி, ஆறுகுணங்களாகவும், ஐம்பெரும் பழிச்செயல்களாகவும் மாறி செயல்படும்போது வாழ்வில் அளவு மீறியும், முறை மாறியும் செயல்கள் செய்து, அதன் விளைவாக சிக்கல், துன்பம், நோய்கள், அகால மரணம் இவை உண்டாகி தனி மனிதனும் சமுதாயமும் துன்பக் கடலாகின்றது. இந்த நிலையில்தான் மனிதன் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், மயக்கம், பழக்கம் எனும் அறிவு வறுமையில் சிக்கி பிறர்வளம் பறித்து வாழும் பண்பாடு மனிதனிடம் பிறந்து ஓங்கி வளர்கின்றது.
.

இவ்வுண்மைகளை ஆராய்ந்து அறிந்த அறிவில்தான் 'மனவளக்கலையென்னும்' (Simplified Kundalini Yoga) போதனைகளோடு கூடிய சாதனை முறையாக வாழ்க்கை விஞ்ஞானம் மலர்ந்தது. எல்லாரும் அத்தகைய ஆக்க வழி வாழ்க்கை விஞ்ஞானக் கல்வியை (Simplified Kundalini Yoga) எளிய முறையில் பயின்றும், பரப்பியும் அமைதியான வாழ்வை மனித குலத்தில் பரவச் செய்வோம். ஆண்டுகள் பல ஆனாலும், தலைமுறைகள் பல ஆனாலும் நமது தொண்டு நிச்சயம் மனித குலத்தில் அமைதியென்னும் சிறந்த பயனைத் தரும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஓரறிவு முதலாய் ஆறறிவு பெற்ற
உறவு கருத்தொடர் மூலம் நீடித்தோங்கி
சீர்அறிவு படிப்படியாய்ப் புலன்கள் மூலம்
சிறப்படைந்து சிந்தனையாய் உயர்ந்த போது
பேர்அறிவாய் நிறையுணரும் பேறு பெற்றோம்
பிறப்பு இறப்பென்னும் சூழலைக் கடக்க ஏற்ற
நேர்அறிவு வாழ்வில் நல்ஒளியாய் ஆற்ற
நினைந்து நினைந்தக மகிழும் நிறைவில் உள்ளோம்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

அலையாக இயங்கும் மனம் நிலைத்து இருப்பு நிலையாக


"மெய்ப்பொருளாகவும், இருப்பு நிலையாகவும், சுத்தவெளியாகவும் உள்ள இறைநிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலில்லாத குழந்தை வயதிலும், அந்த அரூப நிலையை யூகித்து உணர்ந்து கொள்ள ஏற்ற சிந்தனையாற்றல் உயராத மக்களுக்கும் தெய்வ நம்பிக்கையூட்டி அறிவுக்குப் பிடிப்பு கொடுப்பதற்காக, கண், காது, மூக்கு, முகம் உடைய உருவங்களைக் கற்பனை செய்து காட்டியும், அக்கற்பனை உருவங்களைக் கண்ணால் பார்க்கத்தக்க சிலைகளாகக் காட்டியும், பக்தி வழியில் கடவுள் என்று மனித மன இயல்பு அறிந்த பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள். நாம் எல்லாரும் நமது அறிவால் அத்தகைய வடிவங்களை நினைத்து நினைத்து அதுதான் தெய்வம் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பழகியிருக்கிறோம்.
.

அந்தப் பழக்கம், தெய்வம் என்று எண்ணும்போதே நமது அறிவு அந்த சிலைவடிவமாகவோ, கற்பனை உருவங்களாகவோ வடிவம் எடுத்துக் காட்சியாகவும், சாட்சியாகவும் அமைகிறது. எந்த அறிவு ஒடுங்கி அரூபமாக, எல்லையற்றதாக தன்னை விரித்து இருப்பு நிலையடைந்து இறையுணர்வும், அறிவறியும் பேறும் பெற வேண்டுமோ, அதுவே தன்னை மாற்றி அமைத்துக் கொண்ட நிலையில் அழுத்தமாக நின்றால், எவ்வாறு அரூபமான தன்னையறியவும், அதுவே அகண்டாகார இருப்புநிலையாக உள்ள இறைநிலையை உணரவும் முடியும்? மனம் எல்லை கட்டி வடிவம் எடுத்தும், குணங்களாக மாறியும், அலையாக இயங்கும் நிலையிலிருந்து பயிற்சியால் அது நிலைத்து இருப்பு நிலையாக மாறும் அகத்தவப் பயிற்சியில் (குண்டலினியோகத்தில்) முழுமை பெற்றாலன்றி அறிவு தனது உண்மைநிலையை உணர்வது முடியாது.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கலையுணர்வால் மெய்ப்பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணர் வோம்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 27 ஏப்ரல், 2015

எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன 'அலை' வந்து சேர வேண்டுமோ அதை நம் 'மனமானது' தானாகவே இழுத்துக்கொள்ளும்

"தியானத்தின் மூலம் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து "வாழ்க வளமுடன்" என்று ஒருவரை வாழ்த்துவது என்றால் அந்த வாழ்த்துதலினுடைய பலன் இந்த "அலை இயக்கத்தில்" ஒரு தன்மையுடையதாகிறது. முதலில் நம்மை வாழ்த்திக் கொள்கிறோம். பிறகு வாழ்த்தானது அது போகும் இடமெல்லாம் அதே அலைத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவருடைய தன்மையை மாற்றி வாழ்வை வளப்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலை முடிப்பதற்கு அறிவை உயர்த்துகிறது. எனவே நல்ல எண்ணம், நல்ல செயல் இரண்டும் வேண்டும். நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) - அதாவது "அகத்தவம்" (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய "அறநெறி வாழ்வு" வேண்டும்.
.

இந்த இரண்டின் வழியே தான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும். எல்லாம் வல்ல இறைநிலை (Almighty), எந்த செயலுக்கும் ஒரு விளைவைத் தருவது என்றால் அது ஊடுருவி நின்று செயல்படுவது. எதுவும் தவறு செய்யாது. யார் என்ன நினைத்தாலும் நம் வினைப்பதிவிற்கு ஏற்றவாறு அதற்குத் தக்கவாறு எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அதை நம் மனமானது தானாக இழுத்துக் கொள்ளும். நம்மை தயார் செய்து கொள்ள நல்ல தன்மை, ஏற்பு சக்தி (Receptivity) மட்டும் தான் நமக்கு வேண்டும். அதற்கு நம்மை நம் சிந்தனை ஆற்றல் துணை கொண்டு மனதை தயார் படுத்தி அவ்வுயர்ந்த நிலைக்குத் தகுதியாக்கிக் கொள்ள குருவின் மூலம் முறையாக கற்றுக்கொள்ளப்படும் உளப்பயிற்சியாகிய தியானப் பயிற்சியின் (Sky Kundalini Yoga) மூலம் தான் சாத்தியமாகும். அவ்வளவு தான்".
.

"ஆகாசம் சுழலும் அலை, இயங்கும் பிரம்மம்;
அதிலிருந்து எழும் விரிவு அலைஅழுத்தம்
ஆகாசத் துகள் ஒன்றை ஒன்று மோதும்,
அது திரும்பும், சிதறும், ஊடுருவும் மேலும்
ஆகாச அலைஇடையே முன்பின் ஓடும்
அவ்வைந்து வகை இயக்கம் அனைத்துமான
ஆகாசத் துகள்களிலே பதிவு ஆகும்
அப்பதிவே எப்பொருளின் தன்மை ஆகும்."
.

"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்;
உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை;
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்;
ஒரு தொகுப்பில் கோடானகோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
உண்டாகும் விரிவுஅலை சீவகாந்தம்
உயிர்அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
உண்மைசிவம் உணர்வதுவே மனம்ஆம் காணீர்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

இயற்கை / தெய்வ சக்தி / அருட்பேராற்றல் / பிரபஞ்ச சக்தி :

"இறை" என்பது தெய்வ நிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல், "தெய்வம்" என்பது அரூபமான "பேராதாரச் சக்தி". மாபெரும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலன்களைக் கொண்டு காலம் (Time), தூரம் (Distance), வேகம் (Force), பருமன் (Volume), என்ற நான்கு அளவைகளாலும் கணிக்க முடியாததும், அறிவு (Consciousness) புலன்களின் மூலமாகத் தேடும்போது இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும் போது உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மை நிலை எதுவோ அதுவே 'தெய்வம்' என்று வழங்கப்படுகிறது.
.

Nature is identified as Unified Force. The source of all forces - இயற்கை என்பது எல்லா அற்றல்களுக்கும் அடிப்படையான மூல ஆற்றல். "Unified Force" - ஒருங்கிணைப்புப் பேராற்றல் - இது விஞ்ஞானிகளின் வார்த்தை. இதையேதான் தத்துவ ஞானிகள் எல்லோரும் தெய்வம், பிரம்மம், கடவுள் என்கிறார்கள்.
.

"எல்லாம் வல்ல ஆதியான, எங்கும் நீக்கமற நிறைந்த மெய்ப்பொருளாகிய வெட்டவெளியின் நுண்ணியக்க ஆற்றலே 'பரமாணு' என்னும் சிறப்பாற்றல். இப்பரமாணுவே பேரியக்கத் தொடர்களத் தோற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படையான மூலக்கூறு. இக்கூறு பல சேர்ந்த ஆற்றல்தான் அணு (Atom) எனப்படுகிறது. இவ்வணுக்கள் பல இணைந்த இயக்க ஆற்றல் பேரணு அல்லது அணுத்திறள் (Molecule) எனப்படுகிறது. இவ்வணுத்திறள்கள் கூடிய தோற்றங்களே பேரியக்கத் தொடர்களாக விளங்குகின்றது. மெய் (Truth) என்னும் தெய்வநிலையின் ஆற்றலாக இருப்பதால் இவ்வாற்றலே "உயிர்" என அழைக்கப்படுகின்றது. பொருளைச் சிவமெனக்கொண்டு அதன் ஆற்றலாகிய "விண்" நிலையைச் சக்தியெனவும் வழங்கப் பெறுகின்றது. இந்த நுண்ணியக்க மூலக் கூறுகள் நெருங்கி இயங்கும் விரிந்த ஒரு தொடர்களமே மற்ற தோற்றங்கள் யாவும் இயங்கவும் முடியவும் அடிப்படையான பேராற்றல் களம். இதுவே பிரபஞ்ச காந்த களம் (Universal field). இதனை பேரான்மா என்றும் பேருயிர் என்றும் வழங்குகின்றோம்"
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 25 ஏப்ரல், 2015

ஆறாவது அறிவு

"மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மூன்று மறைபொருட்களை உணரத்தக்க ஆற்றலே ஆறாவது அறிவாகும். இவ்வாறு அந்த ஆறாவது அறிவைப் பெற்ற மனிதன், ஏன் அறிய வேண்டியதை அறிய முடியாமல் தவிக்கின்றான். தவறுகள் அல்லது தீமைகள் செய்து அதன் வழியாக ஏன் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறான் என்று நாம் பார்த்தோமேயானால், சஞ்சித கர்மம் என்று தொடர்ந்து வந்த பழக்கத்தினால் என்னென்ன காரியங்கள் செய்தானோ அவையெல்லாம் பதிவாகி இருப்பதாலே,... அவ்வப்போது அந்த பதிவுகள் தூண்டுதல் பெற்று இயக்கம் உண்டாகி, சாதாரணமாக ஐயுணர்வு வயப்பட்ட செய்கைகளிலேயே மனிதனை இழுத்துக் கொண்டு போகின்றன.
.

அறிவானது உயர்ந்து மனதை அறிய வேண்டிய அளவுக்கு வராது தவித்துக் கொண்டு இருக்கின்றது; போதிய சக்தி மனத்திற்குக் கூடி வராததே இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கின்ற முயற்சியிலே அகத்தவத்திலும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்விலும் (Introspection) ஈடுபடவேண்டும்.".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சிக்கல்கள் வெள்ளம்போல் வந்தாலும் அறிவெனும் தோணியில் ஏறி அவ்வெள்ளத்தில் மிதக்க வேண்டும். முழுகிவிடக்கூடாது

.
"சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால், பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே, மற்றொரு சிக்கல் முளைத்து விடும். சிலருக்கு சில சமயம் ஏற்படுகின்ற எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கண்டு அதனால் ஏதேதோ விளையும் எனக் கற்பனை செய்து கொண்டு வருந்திக் கவலை கொள்வார்கள். கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக வந்துவிட்ட சிக்கலை மறந்துவிடலாகாது. சிக்கலை ஏற்கத்தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும். சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
.
எந்த நிகழ்ச்சியானாலும் என்ன? முடிந்த வரை ஏற்றுக் கடனாற்றுவோம். பிறந்துவிட்டோம். ஆனால், இப்படித்தான் வாழவேண்டுமெனத் தெரிந்து வாழ வேண்டும்; தைரியமாக வாழ வேண்டும். சிக்கல்கள் வெள்ளம்போல் வந்தாலும் "அறிவெனும்" தோணியில் ஏறி அவ்வெள்ளத்தில் மிதக்க வேண்டும். முழுகிவிடக்கூடாது.
.
தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனத்தின் தரத்தையும் மனத்தின் திறத்தையும் - அதாவது மனத்தின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும். தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த "மனவளக்கலைஞனுக்கு - குண்டலினியோகிக்கு" - எவ்விதத்தும் கவலை வர வாய்ப்பே இல்லை. அத்தகைய "அறிவுடைமையை" நாம் பெற்றாக வேண்டும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 23 ஏப்ரல், 2015

வினைப்பதிவுகள்

'ஈரறிவு முதற்கொண்டுதான் 'வினைப்பதிவுகள்' (Sins & Imprints) ஆரம்பமாகின்றன !.....
-----------------------------
.

"இறைநிலையிலிருந்து நேராக மனிதன் தோன்றிவிடவில்லை. பரிணாமத் தொடர் என்ற பயணத்தில் கோடிக்கணக்கான சீவ இனங்களில் நடைபெற்ற இயக்கங்கள் அனைத்தும் வினைப்பதிவு நியதிகளினால் தொடர்ந்து வந்து மனிதனிடம் முடிந்திருக்கின்றன. ஆங்காங்கு ஏற்பட்ட தேக்கம், தாக்கம், தடமாற்றம் இவைகள் தான் தீய வினைப் பதிவுகளுக்கு காரணம்.
.

இறைநிலையான தெய்வம் அணுவாகி, அண்டங்களாகி, உலகின் மீது ஓரறிவான தாவரம் ஆன வரையில், எந்த பழிச்செயலும் விளையவில்லை, பதிவுகளும் இல்லை. 'ஈரறிவு முதற்கொண்டு ஐயறிவு விலங்கினங்கள் வரையில் உயிர் வகைகளின் வாழ்க்கை முறையின், செயல்களின் மூலம் எழுந்த காந்த அலைகள் அனைத்தும், அதாவது - பிற உயிர் வருத்தல் அல்லது கொலை செய்தல், அதன் உடலைப் பறித்து உண்ணுதல், அதன் வாழ்க்கைச் சுதந்திரம் பறித்தல், ஆகியவை கருமையத்தில் (Genetic Center) பதிவுகளாகி விடுகின்றன. அப்பதிவானது (களங்கங்கள் - Sins & Imprints) வித்தின் மூலமே மனித இனத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 22 ஏப்ரல், 2015

Q : Swamiji, how can we know if a person is “possessed” by the soul of a dead person?


  A : Their actions will be disparate, contradictory and subject to swings in their moods. They will be shifty eyed and incapable of looking into the eyes of people like us. They will also be restless, and often violent

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

குழந்தைகளிடம் Soul Attachment ஆகுமா?


 .
விளக்கம் :
...
ஆகாது, மூளை வளர்ச்சி  முழுமை அடைந்த பிறகே  மற்ற ஆவிகள் இணைய
முடியும். அவ்வாறில்லாமல்  ஒரு குழந்தைக்கு வேறு  உயிர்த்தொடர்பு இருக்கிற  தென்றால் அது அவர்களுடைய   பெற்றோரின் கருவின் மூலம்
இணைந்து வந்ததாகத்தான்  இருக்க முடியும்.
.
.
குழந்தை தனது மூளையை மூன்று வயதில் ழுமையாகக் கட்டிக்கொள்ளும். கரு வழியே  இணைந்து வந்த ஆவி அந்த வயதிலிருந்து தன்னிச்சையாக
செயல்பட ஆரம்பிக்க முடியும்.
.
.
12 ஆண்டுகள் வரை அது குழந்தையிடம்  தனது ஆட்சியை நடத்தும். அப்போதுதான்  இது சங்கீதம் கல்லாமலேயே கேட்டவுடன் இன்ன இசை என்று சொல்வது, திருக்குறளை முழுவதும்  சொல்வது இவையெல்லாம்.
.
.
12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் அறிவு முழுமையாக
சுயாட்சி பெறும்போது, வந்திருந்த ஆவி மறைந்துவிடும். அப்படியில்லையென்றால், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டு அதன் காரணமாக அக்குழந்தை இறந்தே விடும்.
.
.
இதுவும் இல்லையெனும் போதுதான் இரண்டு உயிர்களுமாக
சேர்ந்திணைந்து இயங்கும் சிறப்பிலே, அவர் ”அவதார புருஷராக”
விளங்குவார், பல வியத்தகு காரியங்களை சாதிப்பார்.
.
வாழ்க வளமுடன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

திங்கள், 20 ஏப்ரல், 2015

அறிவும் குணங்களும் :


தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தால் மனிதனுடைய உருவம் பலதரப்பட்ட ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எண்ணிறந்த உடல்களின் தொகுப்பே என்பது தெளிவாக விளங்குகிறது. மூதாதையர் விந்துநாதத் தொடர்பை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு உடலுக்கும் ஆதாரமான விந்து நாதத்தில் பல்லாயிரம் ஜீவன்களின் உடலில் விளைந்த ரசாயனங்கள் அனுபவித்த உணர்ச்சி நிலைகள் சேர்ந்தே இருக்கரங்களில் தொழில், திறமை, பழக்கம் அமைந்திருப்பது போல உடலில் பரிணாமத்தால் பல உருவங்களில் அடைந்த அனுபோகங்கள் தேவையுணர்ச்சிகள், செயலாற்றும் வேகம் இவைகள் அமைந்திருக்கின்றன.
ஆராய்ச்சியறிவின் பூரண அமைப்பைப் பெற்ற மனிதனுக்கு அறிவு வேகம் மீறி, தன் ஆதி நிலையாகிய அரூப சக்தியை அறிந்து கொள்ளும் ஆர்வம் எழுகிறது. உடலில் அமைந்துள்ள உணர்ச்சிகள் அறிவை அவ்வப்போது அதன் வழி ஈர்க்கிறது. இத்தகைய உணர்ச்சி, ஆராய்ச்சி, போட்டிகளே மனிதனுடைய வாழ்வாகிறது.
ஆகையால் மனிதன் உணர்ச்சிகளின் இயல்பறிந்து ஒழுங்காக உடல் தேவைகளை முடித்துக் கொள்ளவும் அனுபவங்களையும் ஆராய்ச்சியையும் கொண்டு, அறிவை உயர்த்தித் தன்னிலை அறிந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறான், தகுதியுடையவனாகிறான்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

வினைப் பயன் :

கூர்ந்து பார்க்கின்ற போது ஒவ்வொரு செயலுக்கும், விளைவு இருக்கின்றது என்பது நிச்சயமாகப் புலனாகும். ஒரு சில செயல்களுக்கு விளைவு விரைவில் தெரிவதில்லை. காரணம் என்னவென்றால் மனிதனுடைய ஆயுள் சொற்பம் - ஒரு குறிப்பிட்ட எல்லை உடையது. சில செயல்கள் நீண்ட காலத்திற்கு பின் விளைவாக வரலாம். அதுவரையிலே அறிவை நீட்டிப் பார்க்கவோ, வயதைக் கூட்டிப் போடவோ முடியாது. அதனால் சாதாரண அறிவு நிலையில் மனிதன் ஒரு முனையை விட்டுவிட்டு, ஒரு முனையை மட்டும் பிடித்துக் கொள்கின்றான். செயலை மட்டும் எடுத்துக் கொள்கிறான். விளைவே இல்லை என்று எண்ணுகின்றான்; அல்லது விளைவை மட்டும் எடுத்துக் கொள்கின்றான். அதற்குரிய காரணம் பிடிபடவில்லையே என்று சொல்லுகின்றான். இவ்வாறு பகுதிபடுத்தப்பட்ட நிலையிலே "வினைப் பயன்" என்பதே பொய்யான தத்துவம் என்று குறுகிய மனத்தாலே முடிவுகட்டிவிடுகின்றான்.
.

எந்தச் செயலை செய்தாலும் விதையைப் போட்டால் நான்கு நாட்களிலோ, நான்கு வாரங்களிலோ முளைப்பது போல, அந்தச் செயலுக்கு ஒரு விளைவு நிச்சயமாக உண்டு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், இந்த ஆறு குணங்கள் வயப்பட்டு மனிதன் செய்கின்ற செயல்களெல்லாம் அவனிடமே பதிந்து, பதிந்து, மீண்டும் அந்தச் சக்தி உந்தி எண்ண அலைகளாகவோ, செயல் வடிவங்களாகவோ வந்து கொண்டு தான் இருக்கும். அப்படியே வந்து விட்டால் அதே எண்ணப் பதிவுகள் மீண்டும் மீண்டும் பதிந்து எழுந்து செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருப்பதனால் மனிதன் துன்ப வயப்படுகின்றான். அதிலிருந்து மீட்டுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"செயலிலே விளைவாகத் தெய்வ ஒழுங்கமைப்பிருக்க,
பயனென்ன தவறிழைத்துப் பின் பரமனை வேண்டுவதால்?".
.

"தப்புக்கணக்கிட்டுத் தான் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி?, ஒழுங்கமைப்புக்கேற்றபடி, அப்போதைக்கப்போதே அளிக்கும் சரி விளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்".
.

"திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைக்
கண்டுபிடிக்காதவர் தான் உண்டு".
.

புத்தர் கேள்விகள்:

"ஏழ்மைக்கு மூலம் யார்? உயிர் தான் என்ன?
எந்த விதம் மரணம் நோய் முதுமை மூன்றும்
வாழ்விலே தோன்றி பெருந்துன்பமாகும்
வகையென்ன? என்றன்று புத்தர் கேட்டார்;
ஊழ்வினையால் தெய்வத்தால் இவைகள் எல்லாம்
உண்டாகும் என்றமைச்சர் அவர்க்குச் சொன்னார்,
ஆழ்ந்த பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தார்
அறிவிற்குப் பொருந்தவில்லை, துறவு பூண்டார் !."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 18 ஏப்ரல், 2015

"முழுமையான அறிவு" :


முதல் நிலை: ...

"எல்லாமே உயிரற்ற பொருட்கள் என்று நாம் எண்ணுகிறோமே அவை எல்லாம் கூட அறிவுடையவை தான். ஒவ்வொரு அணுவுக்கும் அறிவு [Consciousness] என்ற ஒன்று உண்டு. அணுவும் அணுச் சேர்ந்த கூட்டும் - Pattern, Precision, Regularity என்ற முறையிலே வடிவம், தன்மை, இயக்க ஒழுங்கு என்ற மூன்று தன்மைகளோடு எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன."
.

இரண்டாவது நிலை:

"அதே அறிவு தான் உயிர்த்தன்மை ஏற்பட்ட பிறகு புலன்கள் வழியாக இயங்குவதற்குப் பொருளை உணர்தல், அதனோடு இன்ப துன்ப உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஒன்றோடு ஒன்று பிரித்து ஒப்பிட்டு நோக்குதல், அதாவது Cognition, Experience and Discrimination இவையாக மலர்கின்றன. இது தான் Perceptional ability. இது இரண்டாவது நிலையாகும் அறிவுக்கு."
.

மூன்றாவது நிலை:

"அதே அறிவு மனிதனிடத்திலே இந்த இரண்டோடு கூட, அதாவது Pattern, Precision, Regularityமுதல் தன்மை; இரண்டாவது Perceptional ability - Cognition, Experience and Discrimination என்ற இரண்டாவது பிரிவும், மூன்றாவதாக மனம், உயிர், மெய் [ Mind, Life Force otherwise known as Spirit, and Truth ] என்பதாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய - அறிவையே அறிவால் அறிந்து கொள்ளத்தக்க ஆற்றல் தான் மனிதனிடத்திலே உள்ள முழுமையான அறிவு."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

பொருளும் நிகழ்ச்சியும்

நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் வைத்திருக்கின்றீர்கள். அதையே நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். பேனாவைப் பார்த்து இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்ற வினா எழுப்புங்கள். கையினால் தொட்டு உணர முடிவதாலும் கண்ணால் பார்த்து உணர முடிவதாலும் பேனா ஒரு பொருள்தான் என்று கருத நேரும்.

மேலே செல்வோம். அந்தப் பேனாவை எரியும் நெருப்பிலிட்டால் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போகும். பேனா என்ற வடிவம் இப்போது அதற்கு இல்லை. பேனா எங்கே? அழிந்து விட்டது. இவ்வாறு அழிவது பொருளாகுமா? பேனா என்னவாயிற்று? ஆராய்வோம். நெருப்பிலிட்டவுடன் அதில் இணைந்திருந்த பலதரப்பட்ட அணுக்கள் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப் பெற்று இயக்க விரைவு பெற்று ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போயிற்று. அதனால் அணுக்கள் கூட்டால் அமைந்த பேனா என்ற வடிவம் மறைந்து போயிற்று. எது பேனாவாகக் காட்சியளித்தது? அணுக்கள். பேனா பொருளன்று. அணுக்கள் கூடிய ஒரு நிதழ்ச்சி தான் என்பது விளங்கக் கண்டோம். பேனா மட்டுமென்ன? நாம் காணும் இப்பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அத்தனையும் அணுக்களின் கூட்டு இயக்கம் தானே? ஒரு கூட்டுத் தோற்றமாக நாம் காணும் எப்பொருளிலும் ஒவ்வொரு அணுவும் தனித்தனியாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கிறன. அவற்றின் இடையில் உள்ள இடைவெளியைக் காணும் திறமை புலனறிவுக்கு இல்லை.

அதனால் ஒரே கொத்தாக ஒரு தோற்றம் காட்சியாகின்றது. இவ்வாறு இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் பிரபஞ்சத் தோற்றங்கள் அத்தனையும் நிகழ்ச்சிகளே என்ற முடிவுக்கு வருகிறோம். அடுத்து ஒரு வினா. எல்லாத் தோற்றங்கட்கும் அடிப்படைத் துகளான அப்பரமாணு பொருளா? நிகழ்ச்சியா? இதனையும் ஆராய்வோம். அப்பரமாணுவின் இயக்கத்தைக் கழித்து யார் அல்லது எது இயங்குகின்றது என்று உணர்ந்து கொள்ளலாமல்லவா? அது தானே பொருளாக இருக்க முடியும்? பரமாணுவின் இயக்கத்தைக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சும்? ஒன்றுமேயில்லை. வெட்டவெளி தான் மீதி. அகன்று நின்று பூரணமாக இருக்கும் வெட்டவெளி என்ற பொருள் தான் நுண்ணிய இயக்கத்தில், கண்ட நிலையில் பரமாணுவாக இருக்கின்றது. இப்போது பொருள்நிலை விளங்குகிறதல்லவா? வெட்ட வெளி என்ற ஒரு நிலையே பொருள் நிலையாகும். அதன் இயக்க நிகழ்ச்சியே பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுக்களின் கூட்டு அல்லது தொடர் நிகழ்ச்சியாகும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

சத் - சித் - அனந்தம் :

"கண்ணும், ஒளியும், காண்பவனும் ஒன்றேபோல், எண்ணம், இயற்கை, ஈசன் எனும் மூன்றும் ஒன்றாகும்".
.

கண்டவர் ஏன் விண்டதில்லை :

"ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு
அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்
ஆதியாம் நிலையடைந்தார் அறிவு அங்கேது?
அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார் யார்
ஆதியே அணுவான காரணத்தை
அறிஞரெலாம் விளக்காதது இதனால் என்று
ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி
அறிந்தநிலையில் விளக்கம் பெற்று விட்டேன்."
.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான திருமந்திரமாகும்

 "வாழ்த்து "என்றாலே அதை நினைக்குந்தோறும், அதைச் சொல்லுந்தோறும் மனதிலே ஒரு அமைதியான இயக்கம் ஏற்படும். ஏனென்றால் பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். அந்த வாழ்த்தோடு "வாழ்க வளமுடன்" என்று சேர்ந்து சொல்லி விட்டோமானால் எல்லாப் பேறுகளையும் உங்களுடைய வாழ்க்கையிலே பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் என்ற விரிந்த ஆழ்ந்த கருத்தினை உடையதான வாழ்த்தாக அமையும். எனவே நாம் எப்போதும் பிறரை வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகைப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம். பகைமையைத் தவிர்க்கலாம். அதோடு மட்டிலுமின்றி நாம் "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்பொழுது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஒரு இனிய நட்பை வளர்க்கிறது.
.

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை "வாழ்க வளமுடன்" என இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். "வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில், இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும்". ஒரு செடியைப் பார்த்துக்கூட "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த வாழ்த்த, அந்தச் செடியில் உள்ள பலவீனம் மாறி அது நல்லதாக மாறும்.
.

ஜீவனிலிருந்து, உயிர்ச் சக்தியிலிருந்து சுழன்று வரக்கூடிய அலை இருக்கிறதே அது என்ன கருத்து கொள்கின்றோமோ, அந்தக் கருத்தோடுதான் அந்த அலை வீசும். அந்த அலை எங்கெங்கே பாய்கின்றதோ அதே கருத்துக்கு ஏற்ற விளைவுகளை அந்தப் பொருளிலிருந்து கொடுக்கும். இது தான் psychology. நீங்கள் இருக்கக்கூடிய அலை நீளத்திற்கு (frequency) தகுந்த வாறு, அத்தகு உள்ளத்திலிருந்து நீங்கள் யாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, அந்த ஜீவகாந்த அலையோடு ஒருமித்துப்போகிறது.
.

"வாழ்க வளமுடன்" என்று சொல்லும்பொழுதே அந்த வார்த்தையிலே உள்ள ஒரு கருத்தாழத்தை நினைந்து பாருங்கள். "வாழ்க" என்று சொன்னாலே எல்லாம் பெற்று இனிதாக நீங்கள் வாழ வேண்டும் என்ற பொருள் உள்ளடங்கியிருக்கிறது. "வளமுடன்" என்று சேர்க்கும்பொழுது வாழ்க்கையிலே உங்களுக்குத் தேவையான எல்லாப் பேறுகளையும், பெற்று வாழவேண்டும் என்று அமைகிறது. ஆதலினால் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துவது மிக்க வலுவுடைய, ஆழமான கருத்துடைய, நல்ல ஆற்றலைப் பிறருக்குப் பாய்ச்சக் கூடிய ஒரு வார்த்தையாகும். "வாழ்க வளமுடன்" "வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல உடல் நன்றாக இருக்கும் மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் (Vibration) இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"வாழ்த்தி வாழ்த்தி, ஒருவருடைய செயல்களைத்
திருத்திவிடமுடியும்.
வாழ்த்தி வாழ்த்தி, அவருடைய எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்;
வாழ்த்தி வாழ்த்தி, எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்".
.

"உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்" என்று நமக்குள்ளாகவே பல தடவை சொல்லிக்கொள்ளும் பொழுது, நமக்குள்ளாகவே இருக்கக்கூடிய உயிரியக்கத்திற்கு ஒரு ஒலிப்பதிவை ஏற்படுத்திவிடுகிறோம். இந்தப்பதிவு தானாகப் பலமுறை விரிந்து விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். அதிலுள்ள ஆழமான பொருளும் மனதிற்கு இயல்பாகிவிடும். இவைகளையெல்லாம் அடையவேண்டிய அளவுக்குச் செயல்புரியும் வாய்ப்பும், செயல்புரிய வேண்டிய பொறுப்புணர்ச்சியும் எழுந்துவிடும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 16 ஏப்ரல், 2015

வாழ்க வளமுடன் :

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது, அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை, இவை எல்லாம் அதிகமாகும்.
.

அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது; ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை, நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; அந்த தொடர் அறுபடாது இருக்கும். அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும்; அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.
.

தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். "வாழ்க வளமுடன்" என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.
.

எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதக பயன் விளைவிக்கும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய
நட்புறவை வளர்க்கிறது".
.

"வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு
அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு
வலுவும் தெளிவும் ஏற்படுகிறது".
.

"வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன்"-
"வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல
உடல், மனம் நன்றாக இருக்கும்".
.

வாழ்த்து:

"வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம்
வாழ்க வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்!".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 15 ஏப்ரல், 2015

அறிவே சிவம், சிவமே அறிவு:


 ....

இந்த ஆப்பிளை எடுத்துக் கொள்வோம். ஆப்பிள் என்பது என்ன? இறைவன் என்பது யாது? கண் புலனாகப்பார்க்கக் கூடிய ஆப்பிள். அந்தக் காட்சி கடந்தால் விஞ்ஞான அறிவுக்குப் போகையில் அணு. அதற்கு மேல் விஞ்ஞான அறிவுக்குப் போகும்போது இந்த அணு என்பதாக ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனே இயங்குநிலையில் அணுவாக இருக்கிறான்; கூடிய நிலையிலே ஆப்பிளாக இருக்கிறான். ஆப்பிளிலே இப்போது சிவத்தைக் காண்கிறோம். சிவமே, பிரம்மமே, மெய்ப்பொருளே, தெய்வமே அசைவிலே அணுவாகி, அணுக்கள் கூட்டிலே ஆப்பிளாகக் காட்சியளிக்கிறது. இப்போது ஆப்பிளிலே நாம் இறைநிலையைக் காண்கிறோம். அது மாத்திரமா?
.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்று உண்மைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய பழக்கம் இன்றிலிருந்து வைத்துக் கொள்ளுங்கள். "எப்பொருள் எத்தன்மையாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிது". பொருள், தோற்றம் இரண்டும் ஒன்றுதான். ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதனை, ஒரு மிருகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உருவத்திலே தான் பேனா, மனிதன், மிருகம். ஆனால் அதைக் கடந்து விண்ணரிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய்விட்டால், எந்த பொருளுமே சிவம்தான், இறைநிலையே தான், இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மணியின் ஓசை போல..
பூவின் மணம் போல..
நெருப்பிலே வெளிச்சம் போல..
உயிரின் ஆற்றலே, நம் 'அறிவாக' விளங்குகிறது".
.

சுழல் அலை - விரிவு அலை :

"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்;
உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை;
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்;
ஒரு தொகுப்பில் கோடான கோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
உண்டாகும் விரிவு அலைசீவகாந்தம்
உயிர் அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
உண்மைசிவம் உணர்வதுவே மனம் ஆம்காணீர்".
.

ஒன்றுக்கு பெயர்கள் பல :

"ஒன்றுமிலா ஒன்றரிந்தேன் விளக்கிக் காட்ட
உவமையில்லை எனினும் ஒருவாறு சொல்வேன்;
என்றுமே மாறாத இயற்கை ஈது,
எங்கும் நிறைவாயுளதால் சிவமாம் என்றும்
நின்றும் நிலைத்தும் மற்ற தோற்றமெல்லாம்
நிலைக்க விடாது இயக்குவதால் சக்தியாகும்
இன்று இந்தச் சரீரத்தில் இரத்த ஓட்டம்
இருக்குமட்டும் நான் என்னும் அறிவு மாகும்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

எளியமுறை உடற்பயிற்சி (Simplified Physical Exercises) :


 "ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்துள்ளார்கள். உடற்பயிற்சி அதிகமான வேகம் கொடுக்காத தன்மையுடையதாகவும்... அமைந்துள்ளது. இந்த உடற்பயிற்சியின் நோக்கமானது உடலினை உறுதி செய்து கொள்வது மட்டுமல்ல; உடலமைப்பின் இயக்கத்தைச் சீர்படுத்தி, உள்ளத்தையும் வலுவாக்குவதன் மூலம், நம்மை பலவீனப்படுத்தி வந்த பழைய பதிவுகளிலிருந்து (Sins and Imprints) விடுதலை பெறும் வழியையும் உள்ளடக்கியது. அவைகள் :
.

1) கைப்பயிற்சி (Hand Exercise)
2)கால் பயிற்சி (Foot Reflexology)
3) மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)
4) கண் பயிற்சி (Eye Exercise)
5) மகராசனம் (Maharasanam)
6) உடல் வருடல் (Massage)
7) ஓய்வு தரும் பயிற்சி (Accu Pressure & Relaxation) என்பனவாகும்.
.

பயிற்சியை கற்றுக்கொள்ள ஆர்வம் உடையவர்கள் அருகாமையில் உள்ள "உலக சமுதாய சேவா சங்கத்தின்" (World Community Center) 'அறிவுத் திருக்கோயில்' (Temple of Consciousness) உள்ள இடத்தை விசாரித்து நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து பயிற்சிகளை கற்று நல்ல பலனடையலாம். முகவரியைக் காண :

http://www.vethathiri.edu.in/centers/

திங்கள், 13 ஏப்ரல், 2015

வினைப்பதிவின் கருவி:


எண்ணம் நின்றுவிட்டால் நலமாக இருக்கும் என்று இயற்கைக்குப் பொருந்தா நினைவு கொள்ள வேண்டாம். உயிர் வாழும்போது, விழித்திருக்கும்போது, எண்ணங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். தூங்கும் போது எண்ணங்களில்லையே அதனால் என்ன பயன் பெற்று வருகிறீர்கள். மரணத்தில் எண்ணம் அடியோடு நின்றுவிடும். பிறகு என்ன உயர்வைக் காண முடியும். எண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே முறைபடுத்தி பயன் கண்டு சிறப்படையுங்கள். தவத்தில் பழக்கும் எண்ணம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் சிறப்பளிக்கும்.
.

வாழ்த்துக் கூறுவதைப் பற்றி சில அன்பர்கள் வினா எழுப்புகிறார்கள். வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு ஒருவர் எனக்குத் தீங்கு இழைக்கிறார், துன்பம் தருகிறார் என்றால் அவரை எப்படி வாழ்த்தமுடியும்? ஏன் அத்தகைய கொடுமையாளரை வாழ்த்த வேண்டும்? என வினவுகின்றனர். எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் அவர் விருப்பம் போல் செய்துவிட முடியாது. ஒவ்வொருவரிடத்தும் வினைப் பயன் பதிவுகள் உள்ளன. அப்பதிவுகளை வெளியாக்கி தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்கு துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம்.
.

பெரும்பாலும் இயற்கை வேற்றுமனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக்கொண்டு வருகிறது. ஒருவர் இன்னொருவருக்கு தீமை செய்கிறார், அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை ஒருவர் வினைப்பதிவை வெளிக் கொணர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கின்றது என்று தான் பொருள். எனவே, தீமை செய்தவர் தானே விரும்பி இன்னொருவருக்குத் துன்பம் அளித்தார் என்று கொள்வதைவிட துன்பம் கண்டவர் வினைப்பதிவை இன்னொருவர் இயற்கையின் ஒருங்கிணைந்த பேராற்றல் உந்துதலால் வெளிக் கொணர்ந்து நேர்செய்து விட்டார் என்று கொள்வதே சரியான விளக்கம்.
.

தனது வினைப்பதிவே இன்னொருவர் மூலமாகத் துன்பமாக விளைந்தது என்று உணர்ந்து கொண்டால் பிறர் மீது வெறுப்பு எவ்வாறு எழும்?
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:

"விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர் தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு,
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி".
.

எல்லார்க்கும் உதவி செய்வோம் :

"தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலைப் பிறரைக் குறைகூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில் ;
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துய்ய
நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்;
நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஞானமும் - அரசியலும்


"இன்றுள்ள நிலையில் தத்துவத் தெளிவு பற்றிய "ஞானம்" என்னும் துறையும், பொருளாதாரம், ஒழுக்கம் இவற்றைப் பற்றிய சமுதாய நிர்வாகமாகிய "அரசியல்" என்ற துறையும் இரண்டும் தூய்மை பெறல் வேண்டும். இவ்விரண்டில் எதைக் கொண்டு எதனைத் தூய்மைப்படுத்துவது? ஆட்சி சட்டங்களைக் கொண்டு "ஞானம்" என்ற துறையைத் தூய்மைப்படுத்துவது அரிது....
.

விஞ்ஞான அறிவு மிகுந்துள்ள இக்காலத்தில் தத்துவ ஞான விளக்கத்தைப் பரவலாக்கி, மக்கள் அறிவையும் பண்பாட்டையும் உயர்த்தி, அதன் மூலம் அரசியலைத் தூய்மைப்படுத்துவதுதான் சிறந்த முறை. தாமதமான போதிலும் நிச்சயமாக பயனளிக்கத்தக்க எளிய உயர் முறை. எனவே ஆன்ம ஞானம் உலகெங்கும் மக்களிடையே பரவுதல் வேண்டும்; பரவச் செய்தல் வேண்டும். ஆகவே அறிவையறிந்து அறவழி பிறழாது வாழும் 'மெய்ஞ்ஞானத்தின்' மூலமே நாம் "உலக நலம்" காண முயற்சிப்போம்".
.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் "மனவளக்கலையைக்" (Simplified Kundalini Yoga) கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மனம் ஒடுங்குகிறது, அடங்குகிறது, அறிவு நுட்பம் பெருகுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல் அறிவு நுட்பம் இவை கிடைத்துவிட்டால் அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும். எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும்கிட்டும்."
.
ஞானமும் அரசியலும் :
"அரசியல் கொந்தளிப்பால் மக்கள் வாழ்வு
ஆன்மிக நெறியை விட்டகன்று போச்சு;
அரசேற்ற சிலருக்குப் பயந்தொடுங்கி
அறிவுடையோரும் அடிமை வாழ்வை ஏற்றார்;
அரசு முறைத் தூய்மைபெற சிற்றூர் மக்கள்
அறிவு பொருள்நிலை கடமை உயர்த்த வேண்டும்,
அரசாட்சி மூலம் பின் ஆன்ம வாழ்வை
அடையலாம் அறிஞர்களே வாரீர் சேர்வீர்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 11 ஏப்ரல், 2015

வாழ்க்கைத் துறைகள் :


...
சுகாதாரம் :--
உடலின் உற்பத்தி, இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி என்ற இவைகளிலும், கருவமைப்பு, ஆகாரம், செயல்கள், எண்ணங்கள் என்ற இவைகளினாலும், வெட்ப தட்ப தாக்குதல், சந்தர்ப்ப மோதல் என்ற இவைகளாலும், நம் உடலிலுள்ள ரசாயனங்கள் மாற்றமடைகின்றன. இவைகளால் நம் உடல் ரசாயனங்கள் அளவிலும் செறிவிலும் குறைந்து விடுகின்றன; அல்லது அதிகரித்து விடுகின்றன. அவைகளால் ரத்த ஓட்டச் சுழலின் தன்மையும், அதனால் ஏற்படும் உடலியக்க அறிவியக்க நிலைகளும் மாற்றமடைந்து விடுகின்றன. இத்தகைய மாற்றங்களைச் செயற்கை முறைகளினால் தகுந்தபடி சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே மருத்துவமாகும். அளவுக்கு மிஞ்சி ஏற்பட்டிருக்கும் ரசாயன அதிகரிப்பையும், இரத்த ஓட்டத்தையும், அழுத்தத்தையும் அளவுக்குக் குறைந்துபோன ரசாயனக் குறைவையும், இரத்த ஓட்ட தளர்ச்சியையும் - மருந்து, உணவு, பட்டினி, நீராடல், ஓய்வு, உடற்பயிற்சி முதலியவற்றால் சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே சுகாதார முறை எனப்படும்.
.
பொருளாதாரம் : --
மனிதர் வாழ்வதற்கு அவசியமான உணவு, இடம், உடை முதலியவைகளையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்க்கும் பல வசதிகளையும், உற்பத்தி செய்தல், சேமித்தல், பாதுகாத்தல், நிரவுதல், அனுபவித்தல் என்பன எல்லாம் சேர்ந்த ஒன்றே பொருளாதாரம் எனப்படும்.
.
அரசியல் : --
பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையின் இன்பத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும் - போக்கவும், திட்டமிட்டுச் செயலாற்றவும், தனி மனிதனால் ஆகாத காரியத்தைப் பலரின் சக்தி கொண்டு நிறைவேற்றவும், பலமுடையான் பலமில்லானைத் துன்புறுத்தாதபடி பாதுகாக்கவும், ஏற்படுத்திக் கொண்ட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தமே - கட்டுப்பாடு விதிமுறைகளே அரசியல்.
.
விஞ்ஞானம் : --
விண் என்றால் அணு. ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் விண் + ஞானம் அணுவின் தத்துவம் அறிந்து கொண்ட அறிவின் தெளிவே விஞ்ஞானம். அணுவையும் அணுவின் தத்துவத்தையும் அறிந்தால், அணுவில் உள்ள எழுச்சி கவர்ச்சி எனும் சக்தியை அறியலாம், அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, பலவுடன் பல கூடுவதால் உருவங்களும் அவற்றில் காந்த சக்தியும் ஏற்படுகின்றது. அக்காந்த சக்தியே ஒலியாய், ஒளியாய், வெட்பதட்ப மாறுபாடுகளாய், குவிதல், பரவுதல், கவர்தல், விலகுதல், கூடுதல், பிரிதல் என்னும் பல்வேறு இயக்கங்களாகி, அதன் விளைவாக ஒவ்வொரு பொருளிலும் ரசாயனம் தோன்றி கூடி - குறைந்து - மாறி உருவங்களாய், உலகங்களை, உலக கோள்களாய், பொருட்களை, ஜீவராசிகளாய் உருவாகி இருக்கும் இயல்பறிந்து கொள்வதே விஞ்ஞானம் எனப்படும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அஞ்ஞானமோ அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை".
.
"இயற்கை சக்தியே விதி.
இதை யறிந்த அளவே மதி".
.
"அறிவு, சுகம், பொருள்,
அரசியல், விஞ்ஞானம்
ஐந்து தத்துவங்கள்
அறிந்தவன் பெரியோன்".
.
"வாழ்க்கையே அறிவு உடல் நலம் பொருட்கள்
விஞ்ஞானம் அரசியல் இவ்வைந்தில் ஆகும்;
வாழ்க்கையிலே இவ்வைந்து தத்துவத்தின்
வகையறிந்தோர் மனிதஇனம் அன்பாய்ச் சேர்ந்து
வாழ்க்கை இன்ப நலம்துய்க்க அறிவில் தேற
வறுமை ஐந்துபழிச் செயல்கள் ஒழிந்து வாழ
வாழ்க்கை ஒழுக்கங்கள் பல கற்பித்தார்கள்;
வந்த பயன், இன்றைய நிலை, கணித்துத் தேர்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தல் :


 ....

பயங்கரமான வேகம் கொண்டு பாயும் நதியின் வெள்ளத்தை, அணைகள் மூலம் தடுத்து ஒரு தக்க இடத்தில் தேக்கி, அந்தத் தண்ணீரை நமக்கு வேண்டிய இடத்திலும், நமக்கு வேண்டிய அளவிலும் உபயோகித்துப் பயன் பெறுகிறோம். புலன்கள், உடற் கருவிகள், அறிவின் ஆற்றல் என்ற இவற்றில் சிறந்த மனிதர்களின் உடல் பலமும் அறிவின் நுட்பமும் இக்காலத்தில் கவலையில்லாது ஓடிப்பாயும் வெள்ளம் போல் பல்வேறு துறைகளில் அழிவைச் செய்து விடுகிறது. அவைகள் அவ்வாறு செய்யாது, வாழ்க்கைத் துறைகளாகிய மனோ தத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலும் நன்றாகப் பயன்படும்படிச் செய்து, அப்பயன்களின் உதவியால் உலக மக்கள் அனைவரையும் நீதி, அன்பு, அமைதி, இன்பம் என்னும் குறிக்கோளுடன் வாழச் செய்ய முயற்சி செய்வோம்.
.

மனோதத்துவம் என்றால் என்ன?

உடலில், அரூபமாய் நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, என்பன உணர்ச்சிகளாய் மனத்திலே எழுகின்றன. அறிவின் பண்பாட்டினால் இவையணைத்தும் கடந்த நடுவு-நிலைமையும், அந்த மனத்திலே தான் ஏற்படுகின்றது.
.

கடந்தகால, எதிர்கால, சம்பவங்களை யூகித்துப் பார்த்து அறிவின் இயல்பு, இருப்பிடம், இயக்கம் என்பனவற்றை நன்றாய் உணர்ந்து, அறிவின் மூலமும் முடிவும், அதன் இயல்பினையும் செவ்வனே உணர்ந்து, வளர்த்துப் பயன்படுத்தும் கலை தான் மனோதத்துவம் ஆகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதனின்
வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெறவேண்டும்".
.

"ஞாலத்தை அறிவது விஞ்ஞானம்
மூலத்தை உணர்வது மெய்ஞ்ஞானம்".
.

"சிறுகச் சிறுகப் பயின்றால்
சித்திக்கும் உண்மை நெறி".
.

அறிவை விளக்கும் அருட்பணி இல்லம் :

"அகத்தவமும் அருட்பணியும் அனைத்து மக்களுக்கும்
அறிவறிய அறம் நிற்க வழிகாட்ட வேண்டி
மிகத்தெளிந்த அறிவோடு மேலும் மேலும் எண்ணி
மென் மனத்தார் ஒத்துழைப்பும் பொருள் வளமும்கொண்டு இகத்துக்கும் பரத்துக்கும் நேர் வழியைச்
சீராய் எல்லார்க்கும் காட்டும் அருட்தொண்டு இல்லம் கண்டேன் பகுத்தறிவும் தொகுத்துணர்வும் பண்பாடும் ஓங்க பலநாட்டு அறிஞர்களும் பயன் விளைக்க வாரீர்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 9 ஏப்ரல், 2015

"அறிவே தெய்வம்" :


 " எல்லா மனிதர்களும் இயற்கையின் பரிணாமச் சிறப்பின் ஒரு கூறுதான் - என்ற உண்மையில் ஆதியில் இயற்கையின் இறைவெளி நிலையே அறிவும் விரைவுமாக எல்லாமாக மலர்ந்திருப்பதால் எந்தத் தோற்றத்தைத் தெய்வம் என மதித்தாலும் அது அவன் அறிவின் வெளிப்பாடேயாகும். எனவே யார் எந்த உருவில் எந்தக் கருத்தில் தெய்வமென்று வழிபட்டாலும் அவர் அறிவையே வழிபடுகிறார் என்றுதான் பொருள். த...ெய்வம் எனும் இறைநிலையே அறிவாக விளங்குவதால் அனைவரும் வணங்குவது ஒரே தெய்வம் தான். இக்கருத்தினை :
.

"கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் நீ".
.

என்ற சூத்திரம் எழுதியிருக்கிறேன். இந்தக் கருத்தில்தான் நான் உலகப் பொது அருள்நெறி சமயம் என்று எல்லோருடைய வணக்க முறைகளும் ஒன்றே என்று ஒப்புக்கொண்டு மனித நேயமே பெரிது என மதித்து வாழ்வோம் என்று கூறி வருகிறேன்..
.

எனவே சிலை வணக்கம் என்பது மனித இனத்தின் பிரிவுபடாத கருத்து ஆகும். காலத்திற்கும் இடத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ப சிலை வணக்கத்தோடு சில சடங்கு முறையை மனித இனம் கூட்டிக் கொண்டது. இந்த சடங்கு முறையோடு கூடிய இறை வணக்கம் மதம் எனப்படுகிறது.
.

விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. சடங்குகளைக் கொண்டு மனிதக் குழுக்களைப் பிரித்து நோக்கும் கருத்து நாட்கள் செல்லச் செல்ல மாறிவிடும். இறைநிலையை உண்மைக் கருத்தோடு உள்ளது உள்ளவாறே அறிந்து கொண்டால் உலக மக்கள் கருத்தில் இறைவழிபாடு சீரமைந்து வழிபடும் முறையே அனைத்துலகும் ஒத்த முறையில் மாறி விடும்.
.

அறிவை அறிந்து இறைவழிபாடு நடத்துவதற்கு உலகெங்கிலும் இப்போது அகத்தவ முறை (Meditation) பரவி வருகிறது. இதன் விளைவாக மனித அறிவில் ஒரு உயர்ந்த வியத்தகு ஆற்றல் வெளிப்படும். மனித இன வாழ்வின் புலன் உணர்வுகளில் ஏற்பட்ட பழக்கத்தால் மன அலைச்சுழல் (Mind Frequency) வினாடிக்கு 14 முதல் 40 வரையில் நிகழ்கின்றது. இந்த நிலையில் நுண் பொருள் உணர்வு கிட்டாது. உணர்ச்சிவயப்பட்ட மனநிலைகளான பேராசை, கடும்பற்று, சினம், முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாகவே இயங்கும். இதன் விளைவாக பிறர் வளம் பறித்து வாழவேண்டும் என்ற வேட்கையினால், பொய், கொலை, களவு, சூது, கற்பழித்தல் ஆகிய ஐந்து பழிச்செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கை இன்பத்தை இழந்து மனிதன் வலி, நோய், பிணக்கு, பகை, போர், அகால மரணம் இவற்றால் வருந்துகிறான். இத்தகைய செயல்களும் பதிவுகளும் கருமையம் (Genetic Center) எனும் ஆன்மாவின் தூய்மையை கெடுத்து வாழ்நாள் முழுதும் வருந்துவதோடு அவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கருத்தொடராக அதே துன்பங்கள் தொடர்கின்றன.
.

அகத்தவச் சாதனையால் (Simplified Kundalini Yoga) மன அலைச்சுழல் விரைவு குறைந்து கொண்டே வரும். இயற்கையை ஒட்டிய சிந்தனை உண்டாகும். முடிவாக இறைநிலையும் அறிவும் ஒன்றுதான் என்று உணரத்தக்க நுண்மாண் நுழைபுலன் அறிவு (Super Active Transcendental State of Consciousness) சித்தியாகும். மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்றாலும் மனிதன் இந்த உயர் நிலைக்குத்தான் வந்து சேருவான். அன்பும் கருணையும் மனித குல வாழ்வில் தழைத்தோங்கும். அகத்தவச் சாதனையால் (Meditation) அறிவு உயர்ந்து இறையுணர்வு கிட்டும் வரையில் மனிதருக்குச் சிலை வணக்கம் அவசியம். இறையுணர்வு கிட்டிய பின்னர் சிலை வணக்கம் தானாகவே மாறி, இறை வழிபாடு கருத்திலும் செயலிலும் அடியோடு மாறிவிடும். சிலை வணக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த இடத்திலும் நன்மை அல்ல. முற்றாத காயை அடித்துக் கனிய வைப்பது போலாகும்.
.

அகத்தவச் சாதனையால் (Simplified Kundalini Yoga) மன அலைச் சுழல் விரைவைக் குறைத்து அந்நிலையில் இறைநிலை உணர்வு பெற்ற பிறகு, எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே, எல்லாம்வல்ல இறைநிலை மனம், உடல் இரண்டையும் எவ்வாறு நடத்தி வருகிறது என்பது தெளிவாக விளங்கும். இறையுணர்வு பெற்றவர்களுக்கு வினை - விளைவு (Cause and Effect) தத்துவம் இயல்பாகி இறையுணர்வு எனும் ஞானநெறி உலகில் பரவி இறைவழிபாடும் இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் சீரமையும்.
.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உள்முனைப்பை உள்ளடக்கி உயிரில் பாய்ச்சி
உட்பொருளே அறிவென்று அதுநீயென்று
சின்மயமாய் அமைதிபெற சிறந்த ஆற்றல்
சிந்தனையை ஊக்குவிக்கும் இறையுணர்வாய்;
தன்முனைப்பு கரைந்து விடும் ஆறுகுணங்கள்
தணிந்து நற்குணங்களாய் மாறும்மேலும்
முன்செய்த வினையகலும் பின் செயல்கள்
பிழையின்றி அறமாம் பேரின்பம் கிட்டும்."
.

மனதின் அடித்தளம் இறை நிலை:

"அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும் உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".
.

"இறைநிலையே அறிவாக இருக்கும்போது
இவ்வறிவை சிலைவடிவத் தெல்லை கட்டி
குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 8 ஏப்ரல், 2015

அலை இயக்கம் :


ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே. ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.
.

அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும். எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"நின்றிடு அகண்டாகாரம் நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும்; வெற்றியே"
.

"ஆன்மீகத்துறையினிலே முன்னேறும் அளவிற்கு
அமைதியும் இன்பமும் உண்டாகும் மனிதனுக்கு".
.

"இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும்
முயற்சி வெற்றி பெற முழு அமைதி என்றும் இன்பம்"
.

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சீர்திருத்தமே வாழ்வின் வளம் :


 மனித இன வாழ்வு, முன்னேற்றம் சீர்திருத்தம் என்ற இருவகையாலும் வளம் பெறுகின்றது. தேவையுணர்வு, தொழில்திறமை, இன்ப துன்ப அனுபோக அனுபவங்கள், சிந்தனை, அறிவின் தெளிவு இவைகளுக்கேற்ப, மனிதர் வாழ்வு அறிவியல், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. முன்னேற்றம் வேகம் கொள்ளுகிறது.
.

முனேற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப சீர்திருத்தம் உயர்ந்தாலன்றி அது போதிய அளவில் நல் விளைவுகளைத் தராது. சீர்திருத்தத்தின் வளர்ச்சி குறைந்திருக்கும் அளவிற்கேற்ப முன்னேற்றத்தாலேயே தீய விளைவுகளும் உண்டாகிவிடும்.
.

வேகம் என்பதை முன்னேற்றமாகக் கொண்டால் அதை நிர்வகிக்கும் நுட்பம், திறமை இரண்டையும் சேர்த்து சீர்திருத்தமாகக் கொள்ளலாம். எளிதாகவும், வேகமாகவும் வாழ்க்கைத் தேவைப் பொருட்களை பெருக்கிக் கொள்ளும் சக்தி உயருகின்றதென்றால் அதுவே முன்னேற்றமாகும். பெருகும் பொருட்களைச் சேமித்து, நிர்வகித்து, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அப்போதும் பிற்காலத்திலும் தீமை பயக்காத வகையில் அளவுடன் அனுபவிக்கும் முறையே சீர்திருத்தமாகும்.
.

இத்தகைய சீர்திருத்தமே ஒழுக்கம் என்றும் பேசப்படுகின்றது. கற்பனை, சிந்தனை, உடல் கருவிகளுக்கு உபகருவிகளை உபயோகிக்கும் திறன், இவைகளினால் ஒருவர் பலர் வாழ்விற்கு நன்மையோ, தீமையோ விளைவிக்கும் ஆற்றலைப் பெற்று முன்னேற்றத்தில் விருப்பங் கொண்டுள்ள மனித இன வாழ்வில் எப்போதுமே சீர்திருத்தம் தேவையாகவே இருக்கின்றது.
.

சீர்திருத்தம் என்பது உயர்ந்த அறிவின் நிலையையே உணரப்படுகின்றது. அது மதம், அரசியல் என்ற இரு வகையில் போதனைகளாகவும் சட்டங்களாகவும் சமுதாய வாழ்வில் பயன்படுகிறது.
.

இத்தகைய இலக்கணத்திற்கு முரணாக ஏதேனும் ஒரு விதிமுறை ஒரு மதத்திலேனும், அரசியல் நிர்வாகத்திலேனும் இருக்குமேயானால், அது மனித இனம் அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத காலத்தில் சந்தர்ப்ப தேவையாகக் கொண்டு பழக்கத்தில் தொடர்ந்து வரும் ஒன்றாகவும், அதை அக்காலம் வரை சீர்திருத்தம் மக்களிடம் பக்குவம் இல்லாமலும் இருந்திருக்க வேண்டும். அவை இவ்விலக்கணத்தின் கீழ் அக்காலத் தேவைக்கேற்ப தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது மயக்கவாதிகளாலோ, கயவர்களாலோ சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தேவையுள்ள போது சீர்திருத்தமாகக் கொள்ளப்பட்டது ஒரு முறை. அது தேவையற்ற போது சீர்கேடாகவும் மாறிவிடக் கூடும்.
.

இயற்கையமைப்பு, எண்ணத்தின் ஆற்றல், பொருட்களின் தரம், அவைகளை அனுபவிக்கும் முறைகள், இன்ப துன்ப இயல்பு என்ற ஐவகையும் அறிந்து, நெறிதவறாது ஒழுக்கமுடன் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் ஆற்றலும் கருணையும் உடையோன் சீர்திருத்தவாதி என்ற உயர்ந்த சொல்லுக்கு தகுதியயுடையவனாகிறான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதற்கு முன் கவனித்துச்
சீர்திருத்திக் கொள்வீர்".
.

"அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து
பயன் பெறுவதற்கும் மனிதனிடம் போதிய
அறிவு அமைந்துள்ளது".
.

சீர்திருத்தத்திற்கு முறை:

சீர்திருத்தம் எனில் அது நம் நல்வாழ்விற்குச்
சிறந்த தெனப் பலர் உணர்ந்து ஏற்க வேண்டும்
சீர்திருத்தம் படிப்படியாய் மக்கள் வாழ்வில்
சிறிது சிறிதாய்ச் செயலில் மலர வேண்டும் ;
சீர்திருத்த விளக்கமது மக்கள் வாழ்வைச்
சிதைக்காமல் முன்னேற்றம் அளிக்க வேண்டும்
சீர்திருத்தம் புகுத்துதற்கே இத்தகைய
சீர்திருத்த முறையைப் பின் பற்ற வேண்டும்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 6 ஏப்ரல், 2015

"கிரகண நாட்களில் உண்ணாநோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறார்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன? கிரகணம் முடிந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்?"

சந்திரகிரகணம்" பற்றி மகரிஷியிடம் அன்பரின் கேள்வி :-...
----------------------------------------------------------------------------------------


 .
மகரிஷியின் பதில் :-
------------------------------
"ராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் போது நம் உடலில் உள்ள இரசாயனமும் வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம் போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
.
ஆகவே இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களையும், நேரத்தையும் விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் Immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போலத்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்துவிட்டுச் செய்வது ஒரு சடங்குதான்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

"கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது ?" :-

 .
மகரிஷியின் பதில் :-
----------------------------
"சூரியனுடைய மையத்தில் ஏற்படுகின்ற காந்த அலைப்பாதையை (Black Hole) ராகு, கேது, என்று பார்த்தோம். அந்த ராகு, கேது காந்த அலைப் பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இந்த மூன்றும் வரும்போது அங்கு மறைவு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன. அனால் கிரகணம் வருவதில்லை. ராகு, கேது என்ற அந்த Black Hole க்கு நேரில் இவை மூன்றும் வருகின்ற பொழுதுதான் அந்த மறைவு உண்டாகிறது. அதை கிரகணம் பிடித்துவிட்டது என்று சொல்கிறோம்.
.
சந்திரன் மத்தியில் வந்து சூரியனை மறைக்கும் பொழுது நேரடியாக அந்த இடத்தில் ராகு அல்லது கேதுவினுடைய காந்த அலைப்பாதை அமையும்பொழுது அது சூரிய கிரகணம். பூமி நிழல் சந்திரனுடைய ஒளியை மறைக்கும் பொழுது அது சந்திர கிரகணம் என்கிறார்கள்.
.
சந்திரனை பூமி மறைக்கும் போது அதாவது பூரண சந்திரன் தினத்தில் (Full Moon) சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுமையத்தில் பூமி இருக்கும். அப்பொழுது பூமியின் நிழல் சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைக்கும். அதைத் தான் "சந்திரகிரகணம்" என்கிறார்கள். அதுவும் ராகு, கேது என்ற Black Hole க்கு நேரில் வந்தால்தான் அந்த நிழல் தெரியுமே தவிர மற்றபடி மறைப்பதில்லை. ஆகையினால் ஒவ்வொரு கிரகணத்தின் பொழுதும் ராகு பிடித்து விட்டது என்றும் இவற்றை சூரியனை பாம்பு விழுங்குகின்றது என்றும், சந்திரனை பாம்பு விழுங்குகின்றது என்றும் சொல்கிறார்கள. ராகு, கேது இரண்டும் கரு நிறமான நீண்ட காந்த அலைப்பாதைகள். நீளமாக வருவதையெல்லாம் பாம்பு என்றுச் சொல்லிக் கொள்வது வழக்கம். அதேபோல் இராகு, கேது இரண்டையும் பாம்பு என்று சொல்லி நம்ப வைத்துள்ளார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 4 ஏப்ரல், 2015

"மகரிஷி அவர்களே, எண்ணமற்ற நிலை தான் யோகம். எனவே சில தியான முறைகளில் மனத்திலிருந்து எண்ணங்களை அகற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தங்களது எளிய முறை குண்டலினி யோகத்தில் அவ்வாறு எண்ணங்களை மனதில் இருந்து அகற்றுவது பற்றி கூறப்படுவதில்லையே? ஏன்?


மகரிஷியின் பதில் :-
-----------------------------
"சாதாரணமாக சாதகன் மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத காரியம். தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்குபடுத்துவது தான். அவ்வாறு ஒழுங்குபடுத்தல் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் சாத்தியமான ஒன்றே.
.
இயல்பாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சி வயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மலை நீரானது புவிஈர்ப்பு விசைகேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழை வரும் போது அது பழைய பாதையையே சேரும். அது அதனுடைய இயல்பு.
.
மனதின் தன்மையும் அது போன்றது தான். ஆனால் எளிய முறை குண்டலினி தியானத்தில் (Simplified Kundalini Yoga) உயிர் மேல் மனம் வைத்து நிற்கப் பழகுவதால் மனம் உயிரில் ஒடுங்கி மன அலை சுழலில் விரைவு குறைந்து எண்ணமெழாத நிலை தானே கிட்டும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலமாகும். ஆனால் இடையில் மனந்தளராமலும் முயற்சியைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்.
.
எண்ணத்தை அகற்றும் முயற்சியானாலும் மனம் அதோடு உறவாடிக் கொண்டே இருப்பதால் எண்ணத்தை அகற்றுவது என்பது இயலாது."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
******************************************************************************
.
"மன அலைச்சுழல் விரைவை (mind frequency) குறைத்து
நுணுக்கமான அமைதி நிலைக்கு மனதை பழக்க,
மனம், உயிர், மெய்(Truth) ஆகிய மறைபொருட்களை
உணர்ந்துகொள்ள - உயிர்ச்சக்தி (Life Force) யின் மேல்
மனம் வைத்துப் பழகும் (Energy Meditation) எளிமைப்படுத்தப்பட்ட
குண்டலினி தவத்தால் (Simplified Kundalini Yoga) தான் சித்தியாகும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சினம் எழாத மனம் :


 ....

வாரம் ஒருமுறை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மணி நேரத்தில் அகத்தாய்வு (Introspection) செய்து ஆராய வேண்டும். சினம் தோன்றும் காரணம், சினத்தின் தீமை, சினத்தை ஒழிக்க எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியின் அளவு, இனியும் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ற முறையிலே ஆராய வேண்டும். மீண்டும் சங்கற்பம், மீண்டும் வாழ்த்து என்று முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏன், ஒவ்வொரு கனமும் கூடத் தற்சோதனையாகவே இருக்க வேண்டும். "சென்ற கணம் நான் பேசியது சரியா? சென்ற கணத்தில் எனக்கு ஏற்பட்ட மனநிலை சரிதானா?", என்று ஒவ்வொரு கணமும் சோதனையாகவும் ஆராய்ச்சியாகவும் கழிய வேண்டும். தவத்தினால் ஏற்பட்டிருக்கும் மனத்தின் விழிப்பு நிலை இந்த வழியில் பெரிதும் துணையாக இருக்கும்.
.

இவ்வாறு செய்துவந்தால் ஓர் ஆறு மாதங்களுக்குள்ளாக சினம் அழிந்து பொறுமையின் திருவுருவாகவே திகழலாம். சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும். சினம் அகன்ற ஒருவரிடம் அவர் மனைவியும், மக்களும் மற்றவர்களும் எவ்வளவு இனிமையோடும் அன்போடும் பழகுகிறார்கள். அவர் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கவனித்துப் பார்க்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வெற்றிமேல் வெற்றியாக எல்லாத் துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

கவலை சினம் ஒழிக்க வழி :

"சினம் கவலை என்னும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்
தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி
சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு -
இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு; வெற்றிகிட்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்". - திருவள்ளுவர்.
.

"சினம் மாண்டுபோக அருள் சேர்ந்திருப்ப தெக்காலம்" - பத்திரகிரியார்.
.

"அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்"

- அருட்பிரகாசவள்ளலார்.
.

"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"

-- இடைக்காட்டுச் சித்தர்.
.

"நாணத்தை கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போதே சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின்சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர்' மேதினியில் மரணமில்லை". - பாரதியார்.
.

"கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய் தந்தை
கோபமே குடி கெடுக்கும்,
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது
கோபமே துயர் கொடுக்கும்..... -- சதுரகிரியார்

வியாழன், 2 ஏப்ரல், 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-


*எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
...
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே
கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.
-வேதாத்திரி மகரிஷி

புதன், 1 ஏப்ரல், 2015

"இயற்கை விதி (Law of Nature)"

ஆகர்ஷண சக்தி (Attractive Force), பிரதிகிருஷ்ண சக்தி (Repulsive Force) என்ற இரண்டுதான் பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகட்கும் அடிப்படை. அணுவின் இயக்கத்தால் பிரதிகிருஷ்ண சக்தியும், வெட்ட வெளியின் அழுத்தத்தால் ஆகர்ஷண சக்தியும் உண்டாயின. ஆகர்ஷண சக்தியை எதிர்த்துப் பிரதிகிருஷ்ண சக்தி இயங்குகின்றது. பிரதிகிருஷ்ண சக்தி தோல்வியுறும் போது அந்த அளவில் ஆகர்ஷண சக்தி செயல்படுகிறது....
.

ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி என்ற இரண்டும் வெட்ட வெளியின் அழுத்தச் சக்தி என்ற ஒரே சக்தியின் பிரிவு இயக்கங்களே. பரம அணுக்களும் வெட்ட வெளியும் ஒரு மண்டலத்தில், அல்லது கொத்து நிகழச்சியில் எந்த அளவு விகிதத்தில் அடங்கியுள்ளனவோ அதற்கு ஏற்ப அந்த மண்டல நிகழ்ச்சி சிறப்புறும். ஆகர்ஷண சக்தி, பிரதிகிருஷ்ண சக்தி இவற்றின் இயக்க விதியும் அதன் விளைவுகளும் தான் இயற்கை விதி (Law of Nature) யாக மதிக்கப் பெறுகின்றன. இந்த விதி அணு முதல் அண்டம் வரையில் ஒரு சீரானது, மாறாதது, தவறாதது.
.
ஆகர்ஷண சக்தியின் அடித்தளத்தையும் அறிவின் மூலத்தையும் விஞ்ஞானம் உணரும்போது அது மெய்ப்பொருள் விளக்கமாக, தத்துவ ஞானமாக ஆகிவிடும்.
.
தத்துவஞானம் வேறு, விஞ்ஞானம் வேறு என்று கூற முடியாது. பொருள் நிலையை யூகித்து உணர்ந்து அதன் நிகழ்ச்சி நிலைகளைக் கூறுபடுத்தி விளக்குவது தத்துவம். பொருள் நிலையை மறந்து அல்லது காணமுடியாமல் விடுத்து அதன் நிகழ்ச்சிகளையே பொருள் என மதித்தும் விளக்கிப் பிரித்தும் பேசுவது விஞ்ஞானம். தத்துவ ஞானத்தில் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. விஞ்ஞானம் தத்துவ ஞானத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறது.
.
விஞ்ஞானமாயினும் தத்துவஞானமாயினும் இன்ப துன்ப உணர்ச்சிகளை முறைப்படுத்த மனிதன் எடுத்த முயற்சியின் விளைவுகளே. எனவே வாழ்வின் நலத்திற்கே - தெளிவிற்கே - இனிமைக்கே - விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் உரியன."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
விஞ்ஞானத்தோடு மெய்ஞ்ஞானமும் வளர வேண்டும் :
" விஞ்ஞான அறிவு வாழ்வில் இன்பம்
விளைக்கவெனில் பொறுப்புடைய தலைவரெல்லாம்
மெய்ஞ்ஞானம் பெறவேண்டும் அகத்தவத்தால்
மெய்யுணர்வும் உயிர்த்தொண்டும் உலகைக்காக்கும்."
.
விஞ்ஞானிகளுக்கு:
" அறிவினிலே மிக உயர்ந்து நுட்பத்தோடு
அணுவினிலும் நின்றொடுங்கி ஆழ்ந்தாராய்ந்து
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்
அறிந்து விட்டீர் விஞ்ஞான நிபுணரே ! நம்
அறிவு எது? எங்குள்ளது? அந்தமென்ன?
அணுவினிலே உள சக்தி பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றி ஒன்றி ஆய்ந்து பாரீர் !
அணுநிலைக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.