* உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் அருளால் மனதில் அமைதி நிலவுகிறது. உடல் முழுவதும் புத்துணர்ச்சியும், புதுபலமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வேண்டும்'' என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வாழ்த்தாகும்.
* நீங்கள் உங்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு உடல்பலம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மிகவும் அவசியமானவை. நாள்தோறும் உங்களுக்கு நீங்களே இந்த எண்ணங்களை வற்புறுத்தி சிந்திக்கும் போது அவை மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளைப் பதிக்கிறது. மொத்தத்தில் இது நமக்கு நாமே ஆசி வழங்குவது போலத் தான். அப்பதிவுகள் நம் செயல்களில் வெளிப்படத் தொடங்கும். அதனால், நம் வாழ்க்கை மேம்பாடு அடையும்.
* விழித்திருக்கும் போது மட்டுமின்றி, தூக்கத்திலும் நல்ல எண்ணஅலைகள் சிறந்த பலன்களை நமக்குத் தரும். நாளடைவில் நாம் தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் மனைவி,மக்கள், நண்பர்கள் என்று எல்லாத் தரப்பினரும் நலம் பெற சிந்திக்க வேண்டும். நல்ல மனதோடு எல்லோருக்கும் வாழ்த்து வழங்கும் போது நல்ல சமுதாயம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்புறவும் அன்பும் பலப்படுகிறது.
-அருட் தந்தை வேதாத்ரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக