தெய்வ நிலையை அறிவதை இறையுணர்வு என்றும் ,பிரம்ம ஞானம் என்றும் கூறுகிறோம்.இந்த உயர் நிலையைப் போன்று பெருமதிப்புடைய ஞானம் தான் கருமைய ஞானமாகும்.
காந்த நிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
காந்தஆற்றல் உட்பொருள்,கருமையத் துட்பொருள்,
கடவுளெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,
கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளதுவெளியோடு...
எனவே கருமையத்தை அறியவேண்டுமென்றால் காந்தமென்ற பேராற்றலைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
எல்லாம் வல்ல இறையாற்றல் தன்னிறுக்க ஆற்றலால் துகள்களாகி ,அதே இறை நிலையின் சூழ்ந்தழுத்ததினால் விரைவான தற்சுழல் பெற்று(Spinning Action) ,அலை நிலையாகி,காந்தமென்ற பேராற்றலாகத் தன்மாறமடைந்தது.இதனால் காந்தமென்பது,இறை நிலையே இயக்கச் சிறப்பு பெற்ற மதிப்புமிக்க ஆற்றலாகும்.இக்காந்த ஆற்றல் அலை நிலை பெற்றுள்ளதால் அது எங்கும்,எதிலும் நிறைந்த தெய்வீகப் பாய்மப் பொருளாகும்.
இந்த மதிப்புடைய பேராற்றல் இறைத்துகள் முதலாக அதன் அணுக்களின் கூட்டு இயக்கமான பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.எந்த சடப்பொருளோ,சீவ இனமோ உருவத்தில் தனித்தனியாகத் தோற்றமளித்தாலும் அவற்றிற்குள் ஊடுருவி இயங்குகின்ற காந்த ஆற்றலானது ஒரே தத்துவமாக அலைகுள்ளாக கடல் நீர் போன்று நிறைந்து அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இக்காந்த நிலையை,அதன் பெருமையை உணர்ந்து கொள்கின்ற போது ,அதன் தன்மாற்ற மூலமான கடவுள் நிலையையும் உணர்ந்து கொள்கிறோம்.
இதே காந்த ஆற்றல் பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்திருக்கின்றது.எல்லா உயிரினங்களுக்குள்ளாகவும் ஊன் காந்தம் அல்லது சீவகாந்தம் என்று மதிக்கக்கூடிய பேராற்றலாக விளங்குகிறது.
காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அது தற்சுழற்சி நிலையிலேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி விரைவான் காந்த அலை ஒரு சீவனின் உடலில் இயங்குகின்ற போது அந்த உடலுக்குள் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி பெற்று இயங்கினாலும் அதற்கு துல்லிய சமதளச் சீர்மை என்னும் Specific Gracity தன்மை இயல்பாக அமைந்துவிடுகிறது.இதனால் உடல் முழுவதும் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கும் காந்த அலையானது,அதன் மையப் பகுதியில் திணிவு பெற்றுச் அந்தச் சீவனின் உடல் மையத்தில் இயடம் கொண்டு இயங்குகிறது.
இந்த காந்த அலையின் திணிவு மையம் தான் மூலாதாரம் என்னும் கருமைய நிலையமாகும் . இத்தகைய மதிப்புமிக்க கருமையமானது முதன்முதலில் சிற்றுயிர்களில் அமைந்து அதே உயிரினம் பரிணமாச் சிறப்பால் உடலளவில் பல சீவ இனங்களாக மாறி வந்து ,முடிவில் மனிதன் வரையில் இடம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக