1.இறைநிலையை நோக்கிய நினைவில் இருக்கின்ற உயிரினங்களில் சில, அடுத்து என்ன வரப்போகிறதோ, அதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் தி...றன் பெற்றவையாக இருக்கின்றன. மழை வரப்போகிறதென்பதை எறும்பு, மயில் போன்ற உயிரினங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றன. ஆனால், மனிதன் விஞ்ஞானக் கருவிகளின் மூலம் தான் தெரிந்து கொள்கிறான். -
2.மழைநீரைப் போன்றே மனிதனுடைய ஆற்றலும் எல்லையற்றது. அதை உணர்ந்து கட்டுப்படுத்தி, தேக்கி, முறையாகச் செலவு செய்ய வழி கண்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலம் காக்கலாம். மனவளம் பெருக்கலாம். வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, இன்பம், அமைதி இவற்றை அடையலாம். இவ்வாறு ஒழுங்குப்படுத்தப்பட்ட மனிதனுடைய ஆற்றல் அவனது குடும்பத்திற்கும். சமுதாயத்திற்கும் வளம் பெருக்கும் ஆற்றலாக அமைகிறது. மனிதனுடைய ஆற்றலைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தித் திட்டமிட்ட முறையில் செயல்படுத்திப் பயன் காண்பதற்கு முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட ஓர் உளப்பயிற்சியே தியானம் ஆகும்
3.தியானம் என்பது வடமொழிச் சொல். இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அகத்தவம் ஆகும். உயிர் மீது மனம் செலுத்தி அமைதி நிலைக்குக் கொண்டு வந்து, அந்த அமைதியின் மூலம் சிந்தனையை உயர்த்தி, அறிவை வளப்படுத்தி, வாழ்வில் நலம் காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சிதான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாதத் தேவையாகும்.
4.இறைவன் என்றால் உண்மை என்று பொருள். எது மெய்ப்பொருளோ அது உண்மை. உண்மையை உணர்ந்து பிறகு, அந்த உண்மைப்பொருள் அனைத்து உயிரினங்களுக்குள்ளாக அறிவாக இருக்கிறது. எனவே, பிறர் மனம் நோகாமல், துன்பப்படாமல் இருக்கும் அளவில் எந்தச் செயலையும் செய்ய வேண்டும். அதை அறநெறி என்று சொல்கிறோம். துன்பம் செய்யாதிருப்பது ஒழுக்கமாகும். துன்பத்திலிருப்பவர்களுக்கு உதவி செய்வது ஈகையாகும். ஒழுக்கமும் ஈகையும் இல்லையானால் அறம் என்பது கிடையாது. இறையுணர்வு வந்தால்தான் அறநெறி என்பது இயல்பாக அமையும்.
5.நாமம் என்றால் ஏதோ இப்படி போடுகிற கோடுதான் நாமம் என்று கருதி வைத்திருக்கிறோம். நாம் என்று சொன்னால் மனிதகுலம். அம் என்றால் பிரம்மத்தைக் குறிக்கிறது. ஓங்காரத்தைக் குறிப்பது அம். நாம் + அம் = நாமம். நாமே இறைநிலையாக - பிரம்மமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
6.பாமரம் - பாமரன் பாமரம் என்பதுதான் பாமரன் என்றானது. பாய் + மரம் = பாய்மரம். பாய்மரமானது காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது. அதுபோல் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் பாமரன் ஆவான். பாமரன் என்றால் அறிவின் வழியில் செல்லாதவன்.
7.இக்காலத்தில் விஞ்ஞான அறிவு விரைவாக முன்னேறிக் கொண்டு வருகின்றது. செயலுக்கும், விளைவுக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாகச் சிந்தித்து உணருகின்ற ஆற்றல் மக்களிடம் பெருகி வருகின்றது. விளைவறிந்து விழிப்போடு செயலாற்றி வாழுகின்ற இக்காலத்தில், சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற எல்லோரும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுவகை மனோநிலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது இன்றியமையாததாகி விட்டது.
8.கடவுள் தன்மை, இயற்கைத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், ஞானம் முதலிய அனைத்துக்கும் குடும்பத்துள்ளேயே பாடங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி இருந்தும் பலர் தோல்வி அடைகிறார்கள். எங்கோ சிலர் தான் வெற்றி அடைகின்றனர். அந்தப் பாடங்களால் நாம் புரிந்து கொண்டதை மதித்து நடந்தால் வெற்றிதான்.
அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக