குற்றம்
எவருக்கேனும், எப்பொழுதேனும், துன்பத்தை விளைவிக்கத் தகுந்த எண்ணம், சொல், செயல்களைக் குற்றம் என்று அனுபவ அறிவால் மதிக்கின்றோம்.
அறிவு
அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும், நல்முடிவும் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே 'அறிவு' எனப்படும்.
ஆசை
எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.
நான் யார்
"நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். . எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.
இன்ப துன்பம்
இன்ப துன்ப தோற்ற மாற்றம் இயல்பாராய்ந்தறிந்திடில்
அன்பெனும் பேரூற்று அறிவிற் சுரந்திடும்.
இன்பத்தும் துன்பத்தும் இயற்கையும் கற்பனையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்.
வாழ்த்து
எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும்.
எண்ணம், சொல், செயல்
எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும். எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
உயர்புகழ்
புகழ் என்பது தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வரவேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன்செயலின் மூலமாக மக்கள் காட்டும் மனநிலைதான் புகழாக இருக்கும். அதுவே உயர்புகழாகும்.
மனத்தின் நிலைகள்
தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே உறுப்புப் பதிவுகள். இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல்மனம் அல்லது புறமனமாகும். தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாவது நடுமனம். இவை அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத்திரளில் பதிவாகிவிடுவது அடிமனம். இவையே conscious mind, sub-conscious mind & super-conscious mind எனப்படுகின்றன.
சினம்
பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முடியாது.
மனம்
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அது தான் அதன் இயல்பு, தன்மை. அதாவது எண்ணங்கள் பிறந்து கொண்டு தான் இருக்கும். இந்த விதியை உணர்ந்து விழிப்புடன் இருந்தால் உயர்வு. அறியாமல் மனத்தின் போக்கிற்கு எண்ணத்தை விட்டு விட்டால் தாழ்வு.
ஐவகைப் பற்று
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை.
செயல் விளைவு
நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம்.
எண்ணம்
எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
பேரற வாழ்வு
குற்றம், குறை, பகை, கோள்சொல்லல், வஞ்சம் ஐந்தும் ஒழித்து
நற்றவம், நட்புணர்வு, நலம் பிறர்க்குச் செய்தகுதி,
ஞானநெறி நாட்டமொடு மன்னிப்பு ஐந்தும்
பெற்று அதன்படி வாழ்ந்தால்
பேரற வாழ்வாகும் அது
உறவும் துறவும்
உலக வாழ்வில் பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்ற நான்கிலும் பற்று ஏற்படுவது இயல்பேயாகும். கடமை உணர்வோடும், அளவு-முறை அறிந்த விழிப்போடும் ஆசைகளை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப்பயனை எய்த அவசியம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக