உனக்குள்ளாக இருக்கக் கூடிய அறிவினைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, என்றால் அதற்கும் அப்பால் ஆதியாக இருக்கக்கூடிய ஐம்புலன்களால் உணர முடியாத இறைவனை எப்படி அறிய முடியும்? அதனால் முதல் கட்டமாக அறிவை அறிந்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் அனுபவத்தால். வாழ்க்கையிலே நம்முடைய அறிவு அந்த எல்லையை நோக்கி தான் வளர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கிறது. மனிதனுடைய அறிவு இறைநிலையின் ஒரு பகுதி தான்.
அந்த இறைநிலையையும் அதன் ஒரு பகுதியாகிய இயற்கையையும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவு விரிந்து கொண்டே இருக்கிறது. எனவே இறைவனை பரிந்து கொள்வது என்றால் முதலில் அறிவைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அறிவுக்கு மூலமான ஒரு நிலையை நாடிச் செல்ல வேண்டும். அந்த நிலை தான் இறைநிலை எனவே அறிவை அறியாது இறைவனை அறிய முடியாது. ஏனெனில் இறைவனே தான் அறிவாக இருக்கிறான்.
இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல், அதனுடைய தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில் ஊடுருவி நிறைந்திருந்தால் அதுதான் நீங்கள் இறைவனுக்குச் செய்யக் கூடிய கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள், இறைவன் மகிழ்ச்சி அடைவான். ஏனெனில் அவன் அன்பும் கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான். அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும், குடலும் அற்ற இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து இறைவனை மகிழ்விக்க நினைப்பது அறியாமையே.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக