மனிதனாகப் பிறந்தும், தான் மனித இனம் என்று அறிந்து கொள்ள முடியாத பருவம் ஒன்று....
மனிதன் என்று அறிந்தும் மனிதனாக நடந்து கொள்ளத் தெரியாத பருவம் ஒன்று.
மனிதனாக வாழத் தெரிந்தும் அதுவரையில் அறியாமையால் கொண்ட பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தெரியாததால் உணர்ச்சி, ஆராய்ச்சி என்ற இருவகை போட்டிகளுக்கிடையே வாழும் பருவம் ஒன்று.
அறிவும் செயல்களும் ஒன்றுபட்டு மனிதன் மனிதனாகவே வாழும் பருவம் ஒன்று.
தான் நெறியோடு வாழ்ந்தும் தெளிவற்றவர்களால் தனக்கும் சமுதாயத்திற்கும் விளையும் கேடுகளை நீக்கி தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியறிந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முனைந்து செயலாற்றும் பருவம் ஒன்று.
ஆக ஐவகைப் பருவங்களில் மக்கள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் பல நிலைகளில் உள்ளார்கள்.
இவ்வளவு பேதை நிலைகளில் வாழும் மக்கள் அனைவரின் கூட்டுறவின் இணைப்பாலே ஒவ்வொருவரும் தினசரி வாழ்வை நடத்தி வருகிறோம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதன் மனிதனுக்குச் செய்யக்கூடிய துன்பம் தவிர,
இயற்கையில் வேறு எந்தத் துன்பமும் இல்லை.
அப்படி ஏதேனும் இயற்கையில் துன்பம் வந்தால்,
அதைச் சரிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு
மக்களிடம் ஆற்றல் மலர்ந்து விடுகிறது .
அந்தத் துன்பம் நிலைப்பதும் இல்லை".
.
முக்கால உணர்வு:
"முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,
இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,
பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்.
முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே."
.
நிறைநிலை:
"இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க,
நிறைநிலையே தானாக உணர்வதாகும்
நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்;
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்,
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக