உடலியக்கத்தால் இயற்கையாக எழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ள உணவு, உடை, வீடு, வாழ்க்கைத்துணை இவைகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன.
...
இந்தத் தேவைகளை தேட, பெற, வைத்திருக்க, அனுபோகிக்க பிறர்க்களித்து உதவ, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு.
இயற்கையான இந்த உரிமையின் அடிப்படையில் மனிதனின் உடல் வலிவு, அறிவாற்றல் என்ற இருவகையும் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தும் முறையைப் பொதுவாகச் 'செயல்' என்று சொல்லுகின்றோம்.
மனிதனுடைய செயல்கள் அதற்கு உரிய நோக்கங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டதில் அவை தொழில், கடமை, தியாகம், தொண்டு என நான்கு வகையாகிவிட்டன.
தன உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு ஒருவர் புரியும் செயல் 'தொழில்' எனப்படும்.
தான் வாழ்வதற்காக உதவியுள்ள சமுதாயத்திற்கு பிரதி பலனாக ஒவ்வொருவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை என்று வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்த அறிஞர்களால் வரையறுத்துக் கூறப்பட்ட, உடல், குடும்பம், பந்து, ஊர், தேசம், உலகம் என்று அறுவகை நலன்களுக்காகவும் புரிய வேண்டிய செயல்கள் 'கடமை' எனப்படும்.
குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனிதக்குழு ஒன்றிற்காகவோ, உணர்ச்சிவயப்பட்டுத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் செயல் 'தியாகம்' என்று சொல்லப்படும்.
இயற்கை நிலையினையும், எண்ணத்தின் நிலையினையும், இன்ப துன்ப இயல்பினையும் அறிந்த பேரறிவின் எல்லையில் நிலைத்து, தான் தனது என்று குறுகி நிற்கும் எல்லையைக் கடந்து தன்னை உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அர்ப்பணித்து, எண்ணம், சொல், செயல் என்ற மூன்று வித ஆற்றல்களைப் பயன்படுத்தும் பெரு நோக்கச் செயல் 'தொண்டு' என்று மிகவும் சிறப்பாகக் கருதப்படும்.
-வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக