Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 30 செப்டம்பர், 2015

மிருகம், மனிதன், மாமனிதன்

 

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.

ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி
அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து
பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு".
.
"கடன், வறுமை, கல்வியின்மை என்ற மூன்று
.களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்.
உடன்பிறந்தார் போல் உள்ளம் ஒன்றி மக்கள்
உயர்நிலையில் வாழவைக்கும் ஆட்சி வேண்டும்".
.
சமாதான முயற்சி :
"ஓர் உலக ஆட்சியினை நிறுவி விட்டால்
யுத்தமே நிரந்தரமாய் நின்று போகும் "நாம்
யார்" என்ற கேள்விக்கு விடையைக் காணும்;
நற்றவத்தால் ஒழுக்கம் அருள் அன்பு ஓங்கும்,
பார் முழுதும் அறியாமை ஏழ்மை போக்க
பல அறிஞர் செல்வந்தர் இணைந்த வாழ்க்கை
சீர்திருத்த சங்கத்தால் மக்கட் கெங்கும்
திட்ட மிட்டுத் தொண்டாற்ற உலகம் உய்யும்".
.
"இறப்பதற்கே பிறக்கின்றோம் எனினும் அந்நாள்
எண்ணத்திற்கெட்டு மட்டும் இந்த உண்மை
மறக்காமல் மற்றவர்க்குத் தீங்கு இன்றி
மண்மீது உழைத்துண்டு அன்பாய் வாழ்வோம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆக்கினை

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை (14 to 40 cycles per second) அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது 'பீட்டா அலை' (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி - அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். 'பீட்டா அலை' (beta wave)யில் இருந்து 'ஆல்பா அலை' (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.

உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் 'ஆல்பா அலை' (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், 'ஆல்பா அலை' (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.

இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
குண்டலினி யோகம் :
"அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்
அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;
அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்
அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்
அறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு
அவ்வப்போ எழும் எண்ணம் ஆய்ந்து தேர்ந்து
அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்
அருள் வழியே குண்டலினி யோகம் ஆகும்".
.
குண்டலினி தீட்சை :
"இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்
எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான
தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு
தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்
கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு
கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்
புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்
பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 28 செப்டம்பர், 2015

கவலை ஒழித்தல்

 

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. நிகழ்ச்சிகளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனால், பிரச்சினைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.

ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அவை வந்து கொண்டும் போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சினை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள். அதே போன்று தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டு விடும்.

பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டுத் தைரியமாக அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரியான தீர்வு தானாகவே கிடைத்து விடும். இங்கு இயற்கைச் சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சினையும் பெரியதாகத் தோன்றும். அதற்குத் தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவறாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதைக் கடைபிடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால், மனதின் சுமையும் நீங்கிவிடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"மனதின் தப்புக்கணக்கே - கவலை.
(Worries are MisCalculation of Mind)"

.
"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இறைவனின் நிழல்

மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.

பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.

கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.

இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :

"காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,
மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உளம்,
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே".

.
"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 26 செப்டம்பர், 2015

வினையும் பயனும்

நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே" என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது "சொர்க்கம்", "நரகம்" என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்; தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு" என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். "இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம். செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். 'வினையும் பயனும்' என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"வினைத்தூய்மை பெறவேண்டின் மனத்தின் தூய்மை
வேண்டுவது இன்றியமையாத தாகும்.
வினைத்தூய்மை ஒழுக்கமுடன் கடமை, ஈகை,
விளங்கும் அறநெறி நிற்க விரைந்து ஓங்கும்;
வினைத்தூய்மை வித்தான மனத்தின் தூய்மை
விண்ணுணரும் அகத்தவத்தால் ஓங்கும் உய்ய
வினைத்தூய்மை மனத்தூய்மை ஒன்றை ஒன்று
உயர்த்தி மனிதன் தெய்வமறியச் செய்யும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஓர் உலகம்

மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக் கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை. மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.

மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.

அமைதி, பெற வாரீர் வாரீர்.. .. ..)

அன்பின் அழைப்பு :

"விருப்பம், சினம், வஞ்சம், மதம், பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்
உருக் குலைந்து நிறைந்த மனம், சகிப்புத்தன்மை,
உளமார்ந்த மன்னிப்பு, மெய்யுணர்வு,
கருத்துடைய கற்பு நெறி, ஈகை யென்ற
களங்கமிலா நற்குணங்களாக மாற்றும்
பொறுத்த முள உளப்பயிற்சி முறை பயின்று
புகழ், இன்பம், அமைதி, பெற வாரீர் வாரீர்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 24 செப்டம்பர், 2015

எளியமுறைக் குண்டலினி யோகம் :

உயிர்த் தொடர்பான இயக்கம், இருப்பு, இயல்பு ஆகியன மறை பொருள்களாகவே உள்ளன. அவைகளைப் பற்றிய முறையான விளக்கமும் தெளிவும் ஒருவரிடம் அமைந்தால் தான் அவரால் பொறுப்புள்ள ஒருவராக வாழ இயலும். அத்தகைய விளக்கத்தையும் தெளிவையும் தந்து வருவதே எளியமுறைக் குண்டலினியோகம்....

உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பின் கீழ் அளிக்கப்பட்டு வரும் எளிய முறைக் குண்டலினியோகப் பயிற்சியின் கீழ், தவம் (Meditation) தற்சோதனை (Introspection) குணநலப்பேறு (Sublimation) முழுமைப்பேறு (Perfection) என்ற நான்கு வகையான பயிற்சிகள் நல்கப்படுகின்றன. இவற்றுள் மூலாதாரத்தில் குண்டலித்துக் கிடக்கும் உயிர்ச்சக்தியை, கீழிருந்து மேலோங்கச் செய்து, ஒவ்வொரு மையத்தில் நிறுத்தி இயக்கி மேல் நிலைக்குக் கொண்டு வருவதே தவம் என்கின்றோம். இதனைச் செய்ய, பழங்காலத்தில் பல ஆண்டுப் பயிர்சியும் குருவினிடம் ஒடுக்கமும் இன்றியமையாதன என்றனர்; இதனைக் கடுமையான முறையாக்கிக் காட்டினர்; சில காலங்களில் இடையில் நிறுத்தி இக்கட்டையும் பெற்றனர். ஆனால் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' முறைப்படி ஏற்கனவே 'குண்டலினி சக்தி' பயிற்சி பெற்றவர்கட்கு ஆசிரியப் பயிற்சி அளித்து, விரும்புவோருக்கு வழிகாட்டி அதே உயிர்ச்சக்தியை மேலே கொண்டு வரச் செய்கின்றோம். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அந்த உணர்வை உணர்வர்; எளிமையைத் தெளிவர்.

இந்தத் தவமுறையைத்தொடர்ந்து பயில்கின்றவர்கட்கு அனுகூலங்ககள் பல ஏற்படும். கூறிய அறிவு, தெளிந்த சிந்தனை, விழிப்பாற்றல் ஆகியன உண்டாகும். மன அமைதி நிலவும். அளவறியாது உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தும் போது உடற் செல்கள் வலுவிழந்து, உறுத்தல்கள், உளைச்சல்கள், உறுமல்கள், சோர்வுகள், துன்ப உணர்வுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இன்னும் எல்லை மீறும் போது நோய்கள் வருகின்றன. இன்னும் எல்லை மீறும் போது மரணமே ஏற்பட்டு விடுகின்றது. எந்த உயிராற்றலின் ஒழுங்கான வளர்ச்சி இந்த நலன்களை எல்லாம் தருகின்றதோ அந்த ஆற்றலின் மீது கருத்தை வைத்துச் செய்யப்படுவதே இந்தத் தவமுறையாகும்.

உயிராற்றலின் மேல் கருத்தை வைத்துத் தவம் இயற்ற உயிராற்றல் குண்டலித்து மேலே எழ எழ ஆற்றற்கதிர் அலைகள் ஏற்படுகின்றன. அந்த அலை இயக்கத்தின் ஒரு பகுதி மன இயக்கமாகவும், ஒரு பகுதி உடல் இயக்கமாகவும் மாறுகின்றது. இந்த இரண்டையும் பண்படுத்தும் வன்மையதே குண்டலினியோகம்.



 "அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".

.
அழைப்புக் கவி : ( பாடல்)

அன்பர்களே வாரீர் !
அறிவின் இருப்பிடம்

.
அறிந்து இன்பமுற ( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

இன்பநிலையதை ஏகநிலையதை
அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று ( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

.
தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்தனுபவிக்க
இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
பூரணதூலமும் பொருந்து சூக்குமம்
காரணமான கருவையு மறிந்து
ஆரணமான அனுவறிந்து சுடர்
தாரக மவுன தவத்தில் நிலைபெற
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்
இவ்வுலகெங்கும் பேரண்ட முழுமையும்
அதன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்
அறிவை விரித்து அனைத்தும் துய்த்தின்புற
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
நீளாயுள் உடல்நலம் நிறைசெல்வம் மெய்ஞ்ஞானம்
ஓங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு
உள்ளொளிபெருக்கி உண்மைப்பொருள் காண
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 


புதன், 23 செப்டம்பர், 2015

பிரவிர்த்தி - நிவர்த்தி மார்க்கங்கள்

பெரும்பாலோர் வாழ்வில் இன்பம், துன்பம் இந்த இரண்டில், ஒன்றை மாற்றி ஒன்றை அனுபவித்து வருகிறோம். இந்த இன்ப, துன்பங்கள் எவ்வாறு உண்டாகின்றன என்று ஆராய்ந்தால் இரண்டு விதமான உணர்ச்சிகள் தான் நமக்குத் தெரியும். ஆனால், இன்னொரு உணர்ச்சி இருக்கின்றது. அதற்குப் பெயர் அமைதி அல்லது சம உணர்வு என்பது. அமைதியான உணர்விலிருந்து சிறிது ஊக்குவித்தலினால் ஏற்படுகிற உணர்வுதான் இன்பம். இந்த ஊக்குவித்தலினால் அணு அடுக்குச் சிதைவு ஏற்பட்டு, உயிர்ச்சக்திக்கு அழிவு ஏற்படுகின்ற காலத்தில் அதுவே துன்பமாக மாறுகிறது. அமைதி நிலையில் (Normal) இருக்கின்றபோது அதைச் 'சத்துவகுணம்' என்று கூறுவார்கள். அப்போது மனமானது நல்ல எண்ணத்தோடு தெய்வீக நிலையில் இருக்கிறது. அமைதி நிலையிலிருந்த உணர்வு ஊக்குவிக்கப்பட்டு ஏதோ ஒன்றை அனுபவிக்கும்போது ஏற்படும் இன்பம் இருக்கிறதே அதை 'ரஜோ குணம்' என்றும் அதற்கு மேலே துன்பப்படுகின்ற அளவுக்கு இயக்கமும், செயலும், வேகமும் உண்டாகின்ற போது 'தமோகுணம்' என்றும் பிரித்துச் சொல்லப்படுகின்றது.

நாம் பெரும்பாலும் இன்ப, துன்பம் என்ற இரண்டையும் உணர்ந்துள்ளோம். ஆனால், அமைதி என்ற ஒரு நிலை உண்டு. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பசி எடுக்கிறது. அது துன்பமாக உணரப்படுகிறது. அந்தப் பசியை உணவினாலே நீக்கிக் கொள்ளுகின்றோமே அது இன்பம். துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் ஒரு இதம் இருக்கின்றதல்லவா? அதை இன்பமாகத் தான் கொள்ள வேண்டும். இப்போது பசி நீங்கிவிட்டது. இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. அந்த இடத்திலே அமைதி இருக்கிறது. அதுதான் (Normal) அமைதி என்பது. இனபமும் அற்று, துன்பமும் அற்று அறிவு, மனம், உடல் என்ற நிலையிலே இருப்பது தான் அமைதி. இந்த அமைதி நிலைக்கு வருகின்றபோது தான் அறிவு தன்நிலை நாடித் தன்னோடு, தன்னுடைய முழுமையில் இணைகின்றது. அப்படித் தன் நிலையில் இல்லாமல் இருந்தால் முழுமை நிலை, பகுதி நிலை என்று இரண்டு பிரிவாகி அந்த இடத்தில்தான் "தன்முனைப்பு" (Ego) உண்டாகிறது. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தான் முனைப்பு உண்டாகின்றது. அங்கு பலவிதமான முரட்டுச் செயல்களும், நோய்களும், தீச்செயல் பதிவுகளும் உண்டாகின்றன. தன்முனைப்பை மாற்றி வாழ்வோம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
அகத்தவ மன்றம் :

"தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை, சினம், பொறாமை,
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல், பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்;
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார் ,
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்".

.
இன்பம் துன்பம் :

"இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்;
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது
ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்
இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஞான வாழ்வு

 யாரும் ஞானத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க தேவையில்லை; காஷாயம் தரித்து காடேக வேண்டியதில்லை; வாழ்வதற்குத் தான் ஞானம் பயன்படவேண்டும்" என்ற உண்மையை விளக்க முற்பட்டேன். விஞ்ஞானம் இன்று நம்மிடம் மிகுந்திருக்கலாம். அதெல்லாம் புலன்களுக்கான உப கருவிகளைத் தான் உண்டாக்க பயன்படுத்தப்பட்டது. உன்னை நீ யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அ...தற்கு எந்த உபகருவியும் பயன்படாது. நீ உன் உள் ஒடுங்கித்தான் பார்த்தாக வேண்டும். இப்பயிற்சி பகுத்தறிவோடு தொகுத்துணர்வு என்றும் சிறப்பை அளிக்கும்; அறிவு விரிந்த நிலையில் ஒவ்வொரு செயலையும் திறமையோடு ஆற்றி ஆற்றி வெற்றி பெறும்.

ஆகவே தான் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதையும் தன்னியக்கம் தொடர்பியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், எதிரியக்கம், விளைவு ஆகியவை மூலம் தன் செயலின் பயன் தன்னையே நோக்கித் திரும்பி வரும் என்ற பேருண்மையும், காரண காரிய விளக்கமும் மனத்திற்கு தெளிவாகப் புரியவரும். ஆக மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப்பொருள், என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப்பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறதென்கிற விழிப்பேற்படும். இந்த விழிப்பைத் தந்து முறையான பயிற்சி மூலம் முழுமைப் பேறடையச் செய்யும் பெரு நெறியே எளிய முறைக் குண்டலினி யோகம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
முயற்சியளவே ஞான விளைவு :

"வித்து, நிலம், உரம், தண்ணீர் காவர்கேற்ப
விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
அதற்கொழுக்கம் என்ற உரம், அறிவை ஒன்றும்
நித்த தவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
நீ சலனமுற்று அறுகுணங்களாகா
வித்தை எனும் காவல், இவையனைத்தும் வேண்டும்
விளைவாக நீயடையும் கனியே ஞானம்".

.
சுவாச அப்பியாசத்தால் மாத்திரம் ஞானம் உண்டாகி விடாது :

"இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர் ?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை;
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்,
அதற்கு இடம் உனது இருபுருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தவம், அறம் :



ஞானிகள் உலகோர்க்கு நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவை [1] அறம் [2] தவம். தனி மனிதனையும், சமுதாயத்தையும் வளம் பெறச் செய்வதும் மகிழ்ச்சியில் வைப்பதும், அமைதியோடு வாழச் செய்வதும் அறம், தவம் என்னும் இரு உயர் முறைகளேயாகும்....

அறம் என்னும் நெறி மூன்று உறுப்புகளையுடையதாகும். அவை [1] ஒழுக்கம், [2] கடமை, [3] ஈகை என்பனவாகும்.

இயற்கையாக அவ்வப்போது தோன்றும் துன்பங்களைச் சமப்படுத்தி இன்பமாக வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறோம். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றில் எது ஒன்றாலும் ஆற்றும் எச்செயலும் வினை எனப்படும். தனது துன்பத்தைப் போக்க, இன்பத்தை நுகர அல்லது தனது கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவாகத் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ, துன்பம் விளையாத அளவோடு, முறையோடு ஆற்றும் செயல் நெறி 'ஒழுக்கம்' எனப்படும்.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். காக்கப் பெறுகிறோம். வாழ்வளிக்கப் பெறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளிலும் எண்ணிறந்த மக்களின் உழைப்பும் உதவியும் பயனாகின்றன. ஒருபிடி உணவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது எத்தனை மக்களின் உழைப்பால் நம் கைக்கு வந்துள்ளது எனும் உண்மை விளங்கும். இது போன்று உடை, உறைவிடம் மற்றும் பல வசதிகளும் பல மக்கள் உழைப்பாலும் உதவியாலும் ஒருவருக்கு கிடைப்பது விளங்கும். எனவே ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவரேயாவார். இந்தக் கடனை எவ்வாறு தீர்ப்பது ?

தான் அடைந்துள்ள உடல் வளம், கல்வி, தொழில் திறம், செல்வாக்கு ஆகிய நான்காலும் நலமும் வளமும் ஓங்கும் வகையில் தொண்டாற்றிச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பித் தந்து கொண்டிருக்க வேண்டும். கடன் திருப்பும் கருத்தே கடமை எனும் சொல்லாக [கடன் + மை = கடமை] வழக்கில் வந்துள்ளது.


விரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:-

"இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;
இயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் -
எஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்."

.
வினைப் பயன் :

"வினைக்கு ஒரு விளைவுண்டு. உடல் உள்ளத்தின் விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்.
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க் கொள்ளும்.
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விழிப்பு நிலை :

இயற்கை நியதியை - ...ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்பமுடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு தவமும் தற்சோதனையும் மிகவும் உதவியாகும். இவற்றால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி (Receptivity) அதிகப்படும். பிறரோடு ஒத்துவாழும் நிலையும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptability) உண்டாகும். இதனால் தன்னலங்கருதாத தகைமையுணர்வு (Magnanimity) மேலோங்கும். இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை, ஆக்கச் செயலில் மட்டுமே ஈடுபடக் கூடிய தெளிவு (Creativity) தானே உண்டாகிவிடும். இவையே மன அமைதிக்கு அடிப்படையாகும். விரிவு, விளக்கம், விழிப்பு என்ற நிலைகளும் கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல் ஈடுபாடு ஆகியனவும் வளர்க்கப்படும் அளவுக்கு மன அமைதியும் கைகூடும்.

இவற்றை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அனுபவபூர்வமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து பயன் காண வேண்டும். உலகெங்கும் சமாதானத்தையொட்டி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளதை இன்று காணமுடிகிறது. உலகிலுள்ள அரசியல்வாதிகளும், அறிஞர்களும், யுத்தம் செய்து தான் வாழவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இவர்கள் ஒன்றுகூடிப் பேசுவார்களேயானால் யுத்தமின்றி வாழமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்து அதற்கான திட்டங்களையும் வகுப்பார்கள். ஆகவே சோர்வின்றி நம்பிக்கையோடு நம் கடமையை செவ்வனே செய்து வருவோமாக.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உலக நல வேட்பு :

"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்".

.
உலக ஆட்சி ஏற்படும் காலம் :

"ஆண்டு ஐம்பதுக்குள்ளே உலகோர் இந்த
ஆட்சி முறையை நன்றென் றேற்றுக்கொள்வார்.
மீண்டும் ஒரு நூற்றாண்டின் முடிவுக்குள்ளே
மேலோங்கி உலகெங்கும் அமுலாய் நிற்கும்.
நீண்டு விடுகிறதே நாள் அதிகம் என்று
நினைந்து, ஆதரவாளர் சோர்வு கொள்வார்.
வேண்டுமென்று நான் விரும்பிக் கணிக்கவில்லை;
விரிந்து நின்று ஆய்ந்து கண்ட முடிவு ஈது".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

 

சனி, 19 செப்டம்பர், 2015

சீரிய வழிகள்

நமது குண்டலினியோகம் நான்கு உறுப்புகளைக் கொண்டு உள்ளது. அவை அகநோக்குப் பயிற்சி, தற்சோதனை, மனவினைத் தூய்மை, முழுமைப்பேறு (Meditation, Introspection, Sublimation and Perfection). இந்நான்கும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. ஒன்றால் ஒன்று வளம் பெறுகின்றன. அறியாமையால் வந்த களங்கத்தைப் போக்கி, அதனால் விளைந்த வாழ்க்கைத் துன்பங்களைக் குறைத்து, அமைதியை மனிதனுக்கு அளிக்கவல்லது குண்டலினி தவம். சாதனை செய்து அதன் மூலம் பயனடைய வேண்டிய ஒரு பெரிய நற்பேறு இந்தத் தவம். இதன் மதிப்பு உணர்ந்து பயின்று பயன் பெறுவீர்களாக.

தவத்தில் உட்காரும் போது மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று சில அன்பர்கள் சலிப்படைகின்றார்கள். இதுதான் இயற்கை நியதி. நாம் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் யாவும் நம்மிலே பதிவாகி அவை எப்போதும் எண்ணங்களாகப் பிரதிபலித்துக் கொண்டே தான் இருக்கும். இந்தப் பதிவுகளே நமது வாழ்க்கை நியதி. நாம் சில காலம் தவம் பயின்றால் பிறகு நமது மனம் வலிவு பெறும்போது, நாம் எப்போதும் விழிப்பு நிலையில் நம்மைப் பழக்கிக் கொள்ளும்போது, மனம் அலையுறுவது படிப்படியாகக் குறையும். தவம் உயர, உயரத் தற்சோதனையில் ஆழ, ஆழ அந்த அளவிற்கு நமது மனம் நிலைபெறக் காணலாம்.




.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இறை நிலை :
"தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்;
தெய்வநிலை தெரிந்து கொண்டேன், திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்; தெய்வமெனும்பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?".
.
ஞானம் தேடும் பக்தர்கள் :
"தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ?"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

மன அமைதி :



முதலில் மனம் என்பது யாது, அதன் அமைதி குலையக் காரணம் என்ன என்பதை சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, நிறைவு செய்து கொள்ள ஆசை எழுகிறது. அதற்கு முயற்சி செய்ய வேண்டி ஏற்படுகிறது. முயற்சியால் வெற்றியடைகிறான். அதன் பயனை அனுபவிக்கிறான். அது இன்பமோ துன்பமோ கொடுக்கிறது. அந்த செயலை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறான். இது மனதில் பதிவு செய்யப்படுகிறது. இப்படி உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்று 10 படித்தளங்களில் விரிந்து செயல்படும் உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். ஆகவே இந்த மனதை முதலில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையமைப்புக்கு ஒத்து மனம் செயல்படும்படி பழக்க வேண்டும். இயற்கைக்கு முரண்பட்ட செயலை தவிர்க்க வேண்டும். விளைவை நன்றாக கணித்துக் கொண்ட பிறகே செயல்படத் துவங்க வேண்டும்....

நம்மிடம் பெரும்பாலும் பொருள் வயப்பட்ட உணர்வே தலை தூக்கி நிற்கிறது. புலன் வயப்பட்டு ஆசாபாசங்களுக்கு அடிமையாகி மயக்கத்தில் செயலாற்றுகிறோம். அதனால் துன்பம் விளைந்து அமைதி குறைகிறது. பலகோடி அணுக்கள் சேர்ந்த கூட்டியக்கமான உடல், இந்த உடலில் இயங்கும் உயிர், உயிரின் படர்க்கையாற்றலான மனம், இவற்றின் இயக்கத்தை உணரும் அறிவு இவையாவுக்கும் மூலாதாரமான பரம்பொருள், இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ஆறாவது அறிவாக இருக்கும் மனம், பரம்பொருளை உணர்ந்து முழுமையடையும் பொருட்டே எழுச்சி பெற்றுள்ளதாகும். இந்த மனத்தைப் பண்படுத்த எழுந்ததுவே அறமும் மதமுமாகும். பிற உயிர்படும் துன்பத்தை ஒத்து உணர்ந்து அதைப் போக்க வேண்டுமென்று எழுந்த கருணை உணர்வே அறமாகியது. தன்னலம் கருதி மயக்க நிலையில் புலன் வயப்பட்டு காமம், கோபம், பேராசை, கடும்பற்று, அகந்தை, வஞ்சம் என்ற ஆறு குணங்களாக மாறி செயல்படுவதால் தான் துன்பம் எழுகிறது. இத்துன்பத்திலிருந்து மீள வேண்டுமானால் மனவிரிவு வேண்டும்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 "அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்,
அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
முன்னாளில் சொல்லியுள்ளார்; முற்றுணர்ந்த தெளிவால்
வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
அந்த பெரும் நந்நாளை வாழ்த்திவர வேற்போம்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 17 செப்டம்பர், 2015

வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்

சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைத் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ, அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காணவேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழா. வளரா. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இரக்கமும், அமைதியும் ஓங்கும்.


இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்-மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெளி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளிவீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
இல்லற நோன்பு :

"அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லை தரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளக்கம் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள்இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை."

.
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம் :

"தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்,
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 16 செப்டம்பர், 2015

மனிதனும், இறைவனும்

ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன (God is omnipotent). இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது (God is omniscient). இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omnipresent). இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக்காட்சியாகப் பெற்று விட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.

மனிதனிடம் கடவுள் எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.

உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன் மூலத்தையும், வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :

"உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நிறைசெல்வம் :



சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள மடியும். எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதேபோல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என...்றால், ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்கு தெரிந்தவர்களோ, நெருங்கியவர்களோ ஒதுங்கிக் கொண்டே இருப்பார்களானால் முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.

ஆகையினால் எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்வதற்கு நம்முடைய செயலில், இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும், நமது ஆற்றலைக் கொண்டு, இன்முகம் காட்டி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து கொண்டே வரும் பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும், நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் அதுவே நல்லபடியாக அமையும். அந்த முறையில் எதிர்பார்ப்பதைத் தவிர்க்கலாம். இரண்டாவதாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை என்னென்ன முறையில் வகுத்து, வளர்த்துக் கொள்ள முடியுமோ, அதை வளர்த்துக் கொள்ளும் போது நிறை செல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஆராய்ந்து நட்புகொள் :
"நட்புக்கோர் நோக்க முண்டு நாடுபவர் தரம் ஒக்கும்
கட்புலனுக் கெட்டாது கருத்தை ஊன்றிக் காண்பீர்
உட் பகையைச் சுயநலத்தை உள்வைத்தும் நடிப்பார்கள்
நுட்ப முடன் ஆராய்ந்து நோதல் தவிர்த்தே வாழ்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

திங்கள், 14 செப்டம்பர், 2015

துன்பம் நீங்கிய தூயவர்

நான் ஒரு சாம்யம் (formula) அடிக்கடி கூறிவருகிறேன். அதாவது பாவப்பதிவு என்ன என்றால் அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச்செயல் பதிவுகளுமாகும். அதேபோன்று அந்தத் துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து நாளுக்கு நாள் அறிவு... மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவையெல்லாம் புண்ணியம். அந்த முறையில் பார்க்கப் போனால் இந்த உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப்பதிவுகளை எல்லாம் போக்கவல்லன. எவ்வாறு என்றால் நாம் முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்குச் சீர்குலைந்து அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு மனத்திலேயும் உடலியேயும் நோய் தோன்றி அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்கு கூடப் போவது. இந்தப் பழிசெயல் பதிவுகளிலிருந்து அதனால் விளையும் துன்பங்களிலிருந்து நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும். அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் பின்பற்றி வருகிறோம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வினைப் பதிவு:
"முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்தவினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
பெற்றப் பழக்கப் பதிவு உண்டு இம் மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினைப்பதிவுகளை மாற்ற,
தணிக்க, பொருள் செல்வாக்குப் பயனாகாதுணர்வீர்.
.
வினைப் பயன் :
"வினைக்கு ஒரு விளைவுண்டு உடல் உள்ளத்தின்
விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க்கொள்ளும்
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆன்ம விழிப்பு

உயிரை அறிய வேண்டுமாயின் படர்க்கை நிலையில் சென்று அலைந்து செயல்படும் மனதை உள் அடங்கச் செய்ய வேண்டும். மனம் எப்போதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். உடலில் இரத்தச் சுழல் உள்ளவரை மனமும் சுழன்று கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது மனம் ஒடுங்குகிறது என்கிறோம். அப்போதும் அது இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அது புலன்களைக் கடந்து சூக்குமத்தில் இயங்குகிறது. இதையே நடுமனம் (Sub-conscious) அடிமனம் (Super conscious) என்கிறோம். அலையும் மனதை வெளியில் அலைய ஓடாமல் தடுத்து உயிரிலேயே உள்ளொடுங்கும்படி செய்வது தான் அகத்தவம் - அக நோக்குப் பயிற்சியாகும். மனிதன் தான் பிற புறப் பொருள்களோடு தொடர்பு கொண்டு இன்ப துன்ப அனுபவங்களைப் பெறும்போது மனமாக விரிந்து, செயல்படுகிறான். தானே தான் உள்ளொடுங்கும் போது உயிரில் லயமாகி ஆன்மாவாக விளங்குகிறான். தானே தான் பரம்பொருளோடு கலந்து நிற்கும்போது - உயிரின் இருப்பு நிலையான மூல நிலையை அடையும் போது பரம்பொருளாகவும் இருக்கிறான். உயிர் வேறு, மனம் வேறு அல்ல என்ற பேருண்மையை உணர்ந்தும் ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பும் மதிப்பும் ஏற்பட்டு பிற உயிர்கள் மீது பெருங்கருணையும் தோன்றிவிடும்.

குண்டலினி யோகம் மனிதனை இந்த அளவிற்கு உயர்த்துகின்றது. இதைத் தான் மனவளக்கலை என்று சொல்கிறோம். ஓடித்திரியும் மனதை நம் விருப்பப்படி செயலாற்றும்படி செய்வதற்குத் தான் நமது எளியமுறைக் குண்டலினி யோகம் தேவைப்படுகிறது. ஓடும் மனதை உயிரில் லயிக்கும்படி செய்வது தான் (Apperceptive Meditation) மனதடக்கு முறைத்தவம், புறப்பொருட்களோடு நம் புலன்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது நம் மனம் - நாமே - அதுவாக மாறிவிடுகிறோம். நாம் ஒரு பொருளைக் காண்கிறோம். அப்பொருளை நினைக்கும்போது அந்தக் காட்சியே ஒரு அச்சாக (Mould) அமைந்து அதை நினைக்கும்போதெல்லாம் அதையே நமது அகக் காட்சியாகக் காண்கிறோம். ஆகவே அவற்றை புலன்கள் மூலம் ஒலியாகவோ, ஒளியாகவோ, உணர்வாகவோ, ருசியாகவோ அனுபவிக்கும் போது உயிராற்றல் நம்மிடம் மிகுந்திருப்பின் இன்ப உணர்வாகவும், உயிராற்றல் குறைந்து உடல் தாங்க இயலாத போது துன்ப உணர்வாகவும் பெறப்படுகின்றது. இதைத்தான் போத அறிவு (conscious mind) என்கிறோம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்:

"உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி, உடலைக் கெடுத்திடும்".

.
மனமே இயற்கையின் மாநிதி:

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்
மனத்திலே உல எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்?.

.
மனத்தூய்மை:

"பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் நான்கிலே
புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்;
இறை நிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள் நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச்செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 12 செப்டம்பர், 2015

எண்ணம் எங்கும் செல்லும் :...


.
எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும்போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை விழிப்புடன் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
.
"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது, அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும் அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".
.
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
பண்புப் பயிற்சி :
"விழிப்பு நிலை என்ற ஒரு வெளிச்சம் கொண்டு
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலைமனத்தின்
அழுக்கைத் தற்சோதனையால் துடைத்து வந்தால்
அன்பூறும் கடமை யுணர்வாகும் வாழ்வு;
பழுத்துவரும் அறிவு அந்தப் பக்குவத்தால்
பலப்பலவாய் வாழ்வில் வளர் சிக்கல் தீரும்,
முழுக்கல்வி இது, உண்மை அறிவிற்கு எட்டும்
முறையாகப் பயின்றிடுவீர் வெற்றி காண்பீர் ! "
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பிறவியின் நோக்கம்


இயற்கையின் ஆதி நிலையே தெய்வம் எனப்படுகிறது. அதனுள் அமைந்த வேகம், ஆகாசம் எனும் பரமாணுத்துகளாகி அவையே பிரபஞ்ச ஆற்றல் களமாகியது. அவ்வாற்றலின் திணிவின் வேறுபாடுகளும், காற்று வெப்பம், நீர், நிலமெனும் மற்ற நான்கு பூதங்களுமாகிய அவை கூட்டால் உயிர்கள் பலவாகியது. ஐம்புலன்கள் மூலம், தன்னிருப்பு நிலை, இயக்கச் சிறப்புகள், அழகு மதிப்பு இவற்றை உணர்ந்து நிறைவு பெறுகின்றது. கடைசியில் மனம், உயிர் தன் மூல நிலை இவையறியும் ஆர்வமே ஆறாவது அறிவாக விரிந்தது. ஐம்புலன்களோடு இயங்கிய உயிர்களின் தொடர்பாக மனித உருவம் வந்ததால் ஆறாவது அறிவு போதிய வளர்ச்சியும் விழிப்பும் பெறும் வரை, புலன்வழி மயங்கி, உணர்ச்சி வயப்பட்டு ஆறுகுணங்களாகிய துன்பம் விளைக்கும் செயல்களை ஆற்றி அவற்றின் விளைவாக பாவப்பதிவுகள் அதிகமாக்கிக் கொண்டது....

புலன் மயக்க மாயையும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும் பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று களங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதிநிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு செயல்படுகிறது. எனவே நாம் எந்த செயல் புரிந்தாலும், களங்கம் போக்கவும், அறிவு பெருகவும் அது உதவியாக அமைய வேண்டும். அப்போதுதான் இனிமை, அமைதி நிறைவு, மகிழ்ச்சி வாழ்வில் அமையும். குண்டலினியோகம் தவம், தற்சோதனை, குண நல மேன்மை முழுமைப்பேறு இவற்றை அடக்கமாகக் கொண்டதால் உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனையாகும்.


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
தன்முனைப்பை நீக்க:

"தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல
உயர்குருவின் ஒளி, என்றே உணர்ந்தடங்கு.
'என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?' என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்! ".

.
சேர வாரீர் :

"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்".

.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 10 செப்டம்பர், 2015

இயற்கைக்கும், அறிவிற்கும் உள்ள உறவு

ஒடுங்கியும், விரிந்தும், பொருளாகவும், கருத்தாகவும், நன்மையாகவும், தீமையாகவும், இன்பமாகவும், துன்பமாகவும் இயங்கும் அறிவை உடைய மனிதன் எந்த அளவுக்கு, எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை, அதன் உண்மைகளை, இரகசியங்களை உணர்ந்து கொள்ளுகின்றானோ அந்த அளவிற்கே அவன் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறுகிறான். இயற்கையை, அதன் விரிவான இயக்க ஆற்றல்களை, மனிதன் அறியாமலோ, அல்லது அறிந்தும் மறந்தோ, புலனளவில் குறுகி இயங்கும்போது அறிவு, காலம், தூரம், வேகம், பருமன் என்ற பரிணாமங்களால் கருத்தாகவும், வடிவமாகவும் மாற்றம் பெற்று உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றது.

இந்த நிலையில் அறிவுக்குத் தன்முனைப்பு (Ego) எனும் சிறுமை நிலை உண்டாகின்றது. இந்த சிறுமை நிலையில், மயக்கம், உணர்ச்சி, பயம், மிரட்சி, விளைவறியாச் செயல்கள், சிக்கல், கவலை இவை தோன்றிப் பெருகித் துன்பமடைகின்றது. இயற்கையோடு விரிந்தும், ஆழ்ந்தும், அதன் பெருமையோடு ஒன்றும்போது விளக்கம், விழிப்பு, அன்பு, கருணை, நிறைவு, அமைதி, மகிழ்ச்சி இவை பெற்று அமைதி பெறுகிறது. இங்கு 'தன்முனைப்பு' என்ற திரை விலகி இயற்கை என்ற அருட்பேராற்றலோடு இணைந்து மனிதன் பேரின்பமடைகிறான்.

எனவே, இயற்கையோடு ஒன்றி, உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மனமே எல்லாம் :

"மனம், அறிவு, ஆதியெனும் மூன்றும் ஒன்றே
மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே;
மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைகட்டும்
மதிஉயர்ந்த சிறப்பில் இந்த விலங்கை நீக்கி
மனத்தினது ஆதிநிலை யறிய நாடும்;
மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்
மனம்விரிந்தோ ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்
மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே".

.
"அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 9 செப்டம்பர், 2015

ஞான நெறி:


உயிர் ஆற்றல் கள வழிபாடு அனைத்தும் மனதை ஒருமை நிலைக்குக் கொண்டு வரவும், உயர்த்தவும், வாழ்வில் ஒற்றுமை, ஒழுக்கம், ஈகை, அன்பு இவற்றை வளர்க்கவும் பொதுமக்களுக்கு ஏற்ற உளப்பயிற்சி முறையே ஆகும். பக்தி வழியில் இவையெல்லாம் அவசியமே. பக்திவழியில்லாது போனால் சிறு குழந்தை முதல், சிந்தனை ஆற்றல் பெருகும் வரைக்கும், மனிதன் நல்ல செயல்களிலேயே பழக்கம் பெற, தீய செயல்களிலிருந்து விடுபட வழியில்லை. ஆயினும் பக்தி வழி மூலம் மக்களை சிலர் ஏமாற்றுவதும் அவர்களிடமிருந்து பொருள் சுரண்டுவதும் பெருகிவிட்டதால் இக்காலத்தில் பக்தி வழி பரிகாசத்திற்குட்பட்டுவிட்டது. உண்மையில் பக்தி வழி மூலம் பண்பட்டு ஞான வழிக்கு வருவதுதான் பாதுகாப்பானது, ஏனென்றால் கற்பனைகளாலும், சடங்குகளாலும் தீமை செய்யாதிருக்கவும், நன்மையே செய்யவும் பக்தி வழி உதவியாக இருக்கிறது. வயது உயரும் போது, அறிவு உயரும் போது உண்மை விளக்கம் மனிதன் பெறுகிறான். அப்போது அவனிடமிருக்கும் பழக்கங்கள் அவன் கண்ட விளக்கத்திற்கு ஒத்து இருந்தால் தான் அறிவு முழுமை பெற எளிதாக இருக்கும்.

.
விளக்கம் ஒரு விதமாகவும் பழக்கம் வேறு விதமாகவும் இருந்தால் வாழ்வு பொருத்தமாக அமையாது. மேலும் தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்வது கடினம். தீய பழக்கங்களின் விளைவாக உடலில் நோய்கள், மனதில் களங்கம் இவை ஏற்பட்டிருக்கும். இவை அறிவை முழுமை நிலைக்கு உயரவிடாமல் தடுக்கும். எனவே பக்தி வழி அறிவின் துவக்க நிலையில் எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகின்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஞான வழி மனிதனுக்கு இன்றியமையாததாகும். சிந்தனை ஆற்றல் பெற்ற அனைவரும் ஞான வழியில் பயின்று, தேறி விளங்கி வாழ்வது தான் பொருத்தமானது.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"அறிவை ஏடுகளில் பெறலாம்"
ஞானத்தை தவத்தால் பெறலாம்".

.
"அறிவு என்பது அறியப்படுவது
ஞானம் என்பது உணரப்படுவது".

.
"அறியாமை அழிவுக்குத் துணை போகும்.
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்".

.
"அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்".

.
இருள் போக்கும் யோகம் :

"அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்
அனைத்து நலனும் இழந்த துன்பம் ஏற்று
பொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்
போரிட்டு மடிகின்றார் அந்தோ! வாழ்வில்
மருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்றுள்ளத்தில்
இருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்
இனிதளிக்கும் குண்டலினி யோகம் கற்பீர்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தன்னிலை விளக்கம்


உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் என்ற நாலும் பொருள் நிலையில் ஒன்றே, விரிந்த மலர்ச்சியில் இயங்கும் நிலையில், உணரும் ஆற்றலில் பல பிரிவுகளாகி விட்டது. மெய்ப் பொருள், ஆகாசம் என்ற நிலையில் ஆற்றலாகி அதன் திணிவு நிலைகளின் வேறுபாடுகளால் பஞ்ச பூதங்களாகத் திகழ்கின்றது. உயிர்களிடத்து பஞ்ச பூதங்களைப் பிரித்துணர விளைந்துள்ள கருவிகளே பஞ்சேந்திரியங்கள். பஞ்சேந்திரியங்கள் மூலமாக எழுச்சி பெற்று ஐயுணர்வுகளாக விளங்குகின்ற விதமே பஞ்சதன் மாத்திரை. மெய்ப்பொருள் பஞ்சதன் மாத்திரைகளாக இயங்கும் போது பெறும் அனுபவமே, அடையும் தன்மையே மனம். 
.
மெய்ப்பொருள் தான் மனமாக இயங்குகின்றது. பர நிலைக்கும் மன நிலைக்கும் இடையே பஞ்ச பூதம், பஞ்சேந்திரியம், பஞ்சதன் மாத்திரை இந்நிலைகள் தொடரியக்க களமாகவிளங்குகின்றன. இவ்வைந்து நிலைகளையும் இணைத்துத் தனது மூலம், சிறப்பு, முழுமை எனும் நிலைகளை உணர்வதே தன்நிலை விளக்கமாகும். இதனால் ஆணவமெனும் திரை விலகி அருட்பேறு அகக் காட்சியாகும். அமைதியும் நிறைவும் அறிவுக்கு உண்டாகும்.
.
இதன் விளைவாக இனி ஒழுங்குற்ற முறையில் நினைக்கவும், செயல் புரியவும் தனது திறம் ஓங்கும். பாவப்பதிவுகள் ஏற்படா. உள்ள பதிவுகள் கழியும். மயக்கத்தால் ஏற்பட்ட பொருள் பற்று விலகி தன்னிறைவு உண்டாகும். இப்பெரும் பேற்றினைப் பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஒரு நல்வாய்ப்பு உங்களுக்கு இப்பேற்றினைப் பெறுவதற்கு கிட்டி விட்டது. குண்டலினி யோகம் இவ்வனைத்து நலன்களையும் தரவல்லது. நீங்கள் அனுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் உணர்ந்து வருகின்றீர்கள். குண்டலினி யோகத்தின் மூலம் மனதை அதன் அடித்தளமாகிய உயிரிலும் அதன் தொடக்க நிலையாகிய மெய்ப்பொருளிலும் நிலைக்கச் செய்ய முடிகிறது. இந்த முறையான பயிற்சி நிச்சயம் முழு பயனளிக்கும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
தன்னிலை விளக்கம் :
"இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்
எண்ணும், இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்;
இயற்கையினை ஈசன், உலகம், உயிர்கள்
எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்,
இயற்கையின் உச்ச நிலையாக உள்ள
எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆய்ந்தால்
இயற்கை, அறிவு இரண்டும் ஒன்றாய்க்காணும்,
இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்".
.
தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :-
"உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 7 செப்டம்பர், 2015

உள்ளத்தனைய உயர்வு :



தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து ம...னதில் வைத்திருங்கள். தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அது தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையில் அந்தந்த காலக் கட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பொதுவான தொரு சங்கற்பமாகவும் இருக்கலாம்.

அன்பர்களே ! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள். உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்புநிலையை ஊக்குவிக்கும்.

எண்ணம்தான் அனைத்துமே ! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை, நன்மையையும் தீமையும் எண்ணத்துள்ளே ! சிறிதும் பெரிதும் எண்ணத்துள்ளே ! வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே ! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. இன்பமோ துன்பமோ எண்ணத்திற்கு அப்பால் இல்லை.

எனவே அன்பர்களே ! எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார் மீதும் குறை சொல்லிப் பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தின் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.


எண்ணம் :

"எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்
எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்
எண்ணமே அதைப் பார்ப்போர் ரசிபோராம்
எண்ணமே அதன் நிர்வாகி உடையவன்".

.
"எண்ணு, சொல், செய் எல்லோர்ர்க்கும் நன்மை தர,
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.

.
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்,
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு".

.
"எண்ணம், சொல், செயலில் எழும் விளைவறிந்திடு,
உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கமாம்".

.
"எண்ணமே எக்காலத்திற்கும், வாழ்க்கையின் சிற்பி,
எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நூலோர் வழி முதலாய் எண்ணிய மூன்று



மனித உடலின் அமைப்பையும் அதன் இயக்கங்களையும் குறித்து முதலில் நாம் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும். ...

மானுட உடல் இயங்குவதற்கு உயிர்ச்சக்தி முக்கியமானதாக மூலகாரணமாக இருக்கிறது. உயிர்ச்சக்தி தங்கும் ஒரு பாத்திரம் போல் உடல் அமைப்பு இருக்கிறது. மனித உடலை நுணுகி ஆராய்ந்து நோக்கினால் பஞ்சபூதங்களின் அமைப்புக்கு இயைய ஐந்து அடுக்குகளாக இருப்பது தெரிய வரும். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என உடலமைப்பு பருப்பொருளாகவும், இரத்தம் நீர்ப்பொருளாகவும், சூடு மின்சாரமாகவும், பிராண வாயு காற்றாகவும், ஆகாசம் உயிர்ச்சக்தியாகவும் இருக்கின்றன. நீர், நெருப்பு, காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும் நுண்பொருளான உயிர்ச்சக்தியையும் இணைத்து நட்போடு இயங்கச் செய்கின்றன. இந்த மூன்று பொருட்களின் இயல்பான அளவும் தரமும் குறையுமாயின், அவற்றின் சுற்று இயக்கத்துக்குத் தடை நேருமாயின், உடலின்
உயிர்ச்சக்தி அதாவது மின்சார சக்திக்குத் தடை ஏற்பட்டு மின்சார ஓட்டம் தடைப்பட்டு உடலின் சிறுசிறு தசைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் வலியும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சீர்குலைவு ஏற்படும்போது அதை வலி என்கிறோம். சீர்குலைவும் வலியும் அதிகரிக்குமாயின் அந்த அளவுக்கு உயிர்ச்சக்தியின் களைப்பு அதிகரித்து விடுகிறது. இந்தச் சீர்குலைவு பெரும் அளவில் ஏற்பட்டு உயர்ச்சக்தி குறைந்துவிடுமாயின் உடலின் இயக்கம் தடைப்பட்டு அப்படியே நின்றுவிடுவதையே மரணம் என்கிறோம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உயிர் விளக்கம் :
"உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்
உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்
உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு
உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம்;
உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க
உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே
உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது
உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்".
.
"மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

சனி, 5 செப்டம்பர், 2015

யந்திரம், தந்திரம் :



ஓர்மையும், கூர்மையும், வேகமும், வலிமையையும் கூடப் பெற்ற மனதில் ஒரு குணத்தையோ, ஒரு சக்தியையோ, ஒரு உருவத்தையோ கற்பனை செய்து கொண்டு அதனால் வரும் வேறுபாட்டைத் தன் உயிராற்றலிலேயே உணர்வது யந்திரம் (Medium) இதுவே உயிர்க்கலப்பு (To become one with it)....

அந்த நிலையில் வாழ்வின் நலத்திற்கும், செம்மைக்கும் உயர்வுக்கும், லட்சியத்துக்குமான சங்கற்பங்களை (suggestions) தேர்ந்தெடுத்து அதனைத் திருப்பித் திருப்பி மனதில் சுழல விடுகிறோம். இதுவே தந்திரம். யந்திரத்தை வாழ்வின் பயனாக்கிக் கொள்ளல் தான் தந்திரம்.(To exploit it). பக்தி மார்க்கத்தில் இதை வேண்டுதல் (Prayer) என்பார்கள். மனம் குவிதலை பக்தி மார்க்க மந்திரம் என்றும், தோத்திரத்தைப் பக்தி மார்க்கத்தின் யந்திரம் என்றும் சொல்லலாம்.

நவக்கிரக தவத்தில் அவற்றின் குணங்களை எண்ணுகிறோம். அவற்றோடு உயிர்க்கலப்பு பெறுகிறோம். இது யந்திரம். வாழ்க்கை நலத்திற்கு அவற்றின் ஆற்றல் பயனாகும் என்று சங்கற்பம் செய்து கொள்கிறோம். இது தந்திரம்.

இதே மந்திர, யந்திர, தந்திரங்களைச் சடங்குச் சம்பிரதாயமாக (Traditional Rituals) செய்தால் அது ஹோமம், வேள்வி எனப்படுகிறது. பொருள் தெரிந்து, முறை தெரிந்து பயன் வரும் வழி தெரிந்து அறிவு பூர்வமாகச் செய்வது 'தவம்'.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இறைநிலையே அறிவாக இருக்கும்போது
இவ்வறிவை சிலைவடிவத் தெல்லை கட்டி
குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்."
.
இறைநிலை:
"தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும் திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்; தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை என்பர் சில்லோர்; தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே;
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

அறிவை அறியத் தகுதியும் முறையும் :



அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னையறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது. எனவே, அவ்வார்வம் எழுச்சி பெற்ற அனைவரும் அறிவை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகம் மூலமாகவோ வெறும் விளக்கங்கள் மூலமாகவோ அறிவுதனையறிந்து கொள்ள முடியாது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவை. தகுந்த வழிகாட்டி மூலமே இது எளிதில் கிட்டும்....

உயிர் ஆற்றலை உள்ளுணர்வாகப் பெற்றால் தான் அறிவு, படர்க்கை நிலையொழிந்து உயிராகி நிற்கும். அதன் பிறகு, மேலும் ஒடுங்கி நிற்கப் பரமாகியும் அனுபவம் பெறும்.

இவ்வாறு, தானே தன்மலர்ச்சி நிலைகள் ஒவ்வொன்றையும் உள்ளடக்கமாகக் கடந்து, முடிவில் தன்னையே மெய்ப் பொருளாக உணர ஏற்ற சாதனை தான் அகத்தவம் ஆகும். இதனை யோகம் என்றும் கூறுகிறோம்.

தானே அனுபத்தால் தன்னை மெய்ப்பொருளாக உணரும் நிலையே மெய்ஞ்ஞானம் ஆகும்., மெய்ஞ்ஞானம் மக்களிடையே மலரும் அளவிற்கு உலகில் அமைதியும் இன்பமும் ஓங்கும். எனவே நமது கடமைகளில் "மெய்ஞ்ஞானம்" உலகில் மலர ஏற்ற தொண்டினை மேன்மையுள்ள ஒன்றாக மதித்து செயலாற்றுவோமாக.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உயிரை உணர்தல் :
"தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்;
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில வார்த்தைகளால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட
தெய்வர்கலல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர்சொல்வேன்".
.
மனிதனும் தெய்வமே :
"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே
மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்;
மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயையாம்
மனம் உயர் வெளியினில் மருவித் தோய்ந்திட,
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே".
.
"மனிதனுடைய அறிவானது - பிரபஞ்சத்திற்கு
ஆதி பொருளாக உள்ள தெய்வநிலையே".
.
"அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

வியாழன், 3 செப்டம்பர், 2015

சினத்தை வெல்வோம் :



சினத்தின் மூலம் நீங்கள் பெற்று வரும் உடல் நல இழப்பை நினைவு கொள்ளுங்கள். சினம் கொள்ளும் போது உயிராற்றல் மிகுகின்றது. இரத்தம் சூடேறுகிறது. இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கின்றது. கண்கள் ஒளியிழக்கின்றன. இருதயம் துரிதப்படுத்தப் பெற்று அதன் துடிப்பு விரைவாகின்றது. நரம்புத் தளர்ச்சி ஏற்படுகின்றது. பொதுவாக உடலியக்க ஒழுங்கே சீர் கு...
லைந்து போகின்றது. சினத்தோடு நீங்கள் இருக்கும் போது உறவினர்கள், நண்பர்கள் கூட உங்களை நெருங்க அஞ்சுகின்றனர். உங்கள் சினமானது மற்றவர்களுக்கும் சினத்தை அல்லது வருத்தத்தைத் தூண்டுகிறது. இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சினம் ஒழிப்பு இன்றியமையாதது என முடிவு கிடைக்கும். தொடர்ந்து நினைவைச் செயல்படுத்துங்கள். இனி இந்த நபரோடு தொடர்பு கொள்ளும் போது சினம் கொள்ளமாட்டேன், மறதியின்றி விழிப்போடு இருப்பேன், "எந்த நிலையிலும் சினம் கொள்ளாமல் இருக்க அறிவைப் பாதுகாத்துக் கொள்வேன்" என்று நீங்களே மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். ஒருவாரம், காலை, மாலை, உட்கார்ந்து சினம் ஒழிப்பு உறுதி மொழிகளை உருப்போடுங்கள். நினைவு மறவாமல் குறிப்பிட்ட நபரோடு பேசுங்கள், பழகுங்கள் இம்முறையை ஒருவார காலம் நோன்பாகக் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி கண்டுவிட்டால் பிறகு எல்லாரிடத்திலும் சினம் கொள்ளாத வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"சினம் கவலை எனுமிரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்துகொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதிநுட்பம் ஆராய்ச்சி குலைந்துபோகும்;
தினம் சிறிது நேரமிதற் கென்றொதுக்கிச்
சிந்தித்துச் சீர்திருத்த, இவ்விரண்டு
இனமும் இனி என்னிடத்தே எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 2 செப்டம்பர், 2015

அகத்தவம் :



"தியானம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் "அகத்தவம்" ஆகும். உயிர் மீது மனத்தைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம் காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத தேவையாகும். இதனை மாணவப் பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல், உயிர், அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த, மேலான இரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக் காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"ஞானம் பெற தவப் பயிற்சி வேண்டும்.
தவத்தைப் பெற குருவை நாட வேண்டும்".

.
"மன அமைதியில் தான் அறிவு வளரும்".

.
"விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும்
உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை".

.
உபதேச மார்க்கம் :

"வாசியோக முறையொன்றும் இங்கு இல்லை
வாய்விட்டு உச்சரிக்கும் மந்திரமில்லை,
ஊசிமுனை வாசல் ஒன்றைத் திறந்து காட்டி
உன்னையே அங்குக் காவல் சில நாள் வைத்து
தேசிகனாய் அருள் ஒளிரும் பார்வை மூலம்,
தீட்சை மறுபடியும் ஈந்தழைத்துச் சென்று
மாசில்லா ஆதிநிலை யறியும் உச்சி
மன்றத்தில் அமர்த்திடுவேன் அமைதி காண்பீர்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

அறிவென்னும் ஆயுதம் :



சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.

மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார்...
. ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.

எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உலகில் பல அறிவறிந்த பெரியோர் தோன்றி
உண்மை நெறி பரப்பியுள போதும் இன்று
நில உலகில் எங்கணுமே அமைதியில்லை ;
நேர்மையினால் வந்த பலன் என்னவென்று
சில அன்பர் வினவுகின்றார் சிறுமை அந்தோ.
சீரழிந்த காரணமோ அறிஞர் சொன்ன
நல உரைகள் வழிகடமை மதித்திடாமல்
நடப்பதனின் விளைவாகும் சிக்கல்களெல்லாம்!"
.
உயர் வாழ்க்கைக்கு வழி:
"எண்ணிறந்த மதங்கள் உண்டு மனிதருக்கு
எனினும் தெய்வம் என்பதொன்றேயாகும்
நுண்ணி ஆராய்ந்தறிந்த அறிஞர் செய்த
நூல்கள் எல்லாம் மனிதர் தங்கள் முயற்சியாலே
எண்ணத்தைத் தியானத்தால் பண்படுத்தி
எங்கும் நிறை பூரணத்தின் தன்மைகண்டு
மண்ணுலகில் ஏழ்மை, பஞ்ச பாதகத்தை
மாற்றி உயர்வாய் வாழும் வழியைக் காட்டும்!".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி