Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
September - 10 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
September - 10 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 செப்டம்பர், 2015

தவம், அறம் :



ஞானிகள் உலகோர்க்கு நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவை [1] அறம் [2] தவம். தனி மனிதனையும், சமுதாயத்தையும் வளம் பெறச் செய்வதும் மகிழ்ச்சியில் வைப்பதும், அமைதியோடு வாழச் செய்வதும் அறம், தவம் என்னும் இரு உயர் முறைகளேயாகும்....

அறம் என்னும் நெறி மூன்று உறுப்புகளையுடையதாகும். அவை [1] ஒழுக்கம், [2] கடமை, [3] ஈகை என்பனவாகும்.

இயற்கையாக அவ்வப்போது தோன்றும் துன்பங்களைச் சமப்படுத்தி இன்பமாக வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறோம். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றில் எது ஒன்றாலும் ஆற்றும் எச்செயலும் வினை எனப்படும். தனது துன்பத்தைப் போக்க, இன்பத்தை நுகர அல்லது தனது கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவாகத் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ, துன்பம் விளையாத அளவோடு, முறையோடு ஆற்றும் செயல் நெறி 'ஒழுக்கம்' எனப்படும்.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். காக்கப் பெறுகிறோம். வாழ்வளிக்கப் பெறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளிலும் எண்ணிறந்த மக்களின் உழைப்பும் உதவியும் பயனாகின்றன. ஒருபிடி உணவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது எத்தனை மக்களின் உழைப்பால் நம் கைக்கு வந்துள்ளது எனும் உண்மை விளங்கும். இது போன்று உடை, உறைவிடம் மற்றும் பல வசதிகளும் பல மக்கள் உழைப்பாலும் உதவியாலும் ஒருவருக்கு கிடைப்பது விளங்கும். எனவே ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவரேயாவார். இந்தக் கடனை எவ்வாறு தீர்ப்பது ?

தான் அடைந்துள்ள உடல் வளம், கல்வி, தொழில் திறம், செல்வாக்கு ஆகிய நான்காலும் நலமும் வளமும் ஓங்கும் வகையில் தொண்டாற்றிச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பித் தந்து கொண்டிருக்க வேண்டும். கடன் திருப்பும் கருத்தே கடமை எனும் சொல்லாக [கடன் + மை = கடமை] வழக்கில் வந்துள்ளது.


விரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:-

"இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;
இயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் -
எஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்."

.
வினைப் பயன் :

"வினைக்கு ஒரு விளைவுண்டு. உடல் உள்ளத்தின் விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்.
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க் கொள்ளும்.
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 10 செப்டம்பர், 2015

இயற்கைக்கும், அறிவிற்கும் உள்ள உறவு

ஒடுங்கியும், விரிந்தும், பொருளாகவும், கருத்தாகவும், நன்மையாகவும், தீமையாகவும், இன்பமாகவும், துன்பமாகவும் இயங்கும் அறிவை உடைய மனிதன் எந்த அளவுக்கு, எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை, அதன் உண்மைகளை, இரகசியங்களை உணர்ந்து கொள்ளுகின்றானோ அந்த அளவிற்கே அவன் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறுகிறான். இயற்கையை, அதன் விரிவான இயக்க ஆற்றல்களை, மனிதன் அறியாமலோ, அல்லது அறிந்தும் மறந்தோ, புலனளவில் குறுகி இயங்கும்போது அறிவு, காலம், தூரம், வேகம், பருமன் என்ற பரிணாமங்களால் கருத்தாகவும், வடிவமாகவும் மாற்றம் பெற்று உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றது.

இந்த நிலையில் அறிவுக்குத் தன்முனைப்பு (Ego) எனும் சிறுமை நிலை உண்டாகின்றது. இந்த சிறுமை நிலையில், மயக்கம், உணர்ச்சி, பயம், மிரட்சி, விளைவறியாச் செயல்கள், சிக்கல், கவலை இவை தோன்றிப் பெருகித் துன்பமடைகின்றது. இயற்கையோடு விரிந்தும், ஆழ்ந்தும், அதன் பெருமையோடு ஒன்றும்போது விளக்கம், விழிப்பு, அன்பு, கருணை, நிறைவு, அமைதி, மகிழ்ச்சி இவை பெற்று அமைதி பெறுகிறது. இங்கு 'தன்முனைப்பு' என்ற திரை விலகி இயற்கை என்ற அருட்பேராற்றலோடு இணைந்து மனிதன் பேரின்பமடைகிறான்.

எனவே, இயற்கையோடு ஒன்றி, உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மனமே எல்லாம் :

"மனம், அறிவு, ஆதியெனும் மூன்றும் ஒன்றே
மறைகளெல்லாம் விரித்துணர்த்தும் உண்மை ஈதே;
மனம் வடிவாய்க் குணங்களாய் எல்லைகட்டும்
மதிஉயர்ந்த சிறப்பில் இந்த விலங்கை நீக்கி
மனத்தினது ஆதிநிலை யறிய நாடும்;
மனிதனிடம் இச்சிறப்பே பிறவி நோக்கம்
மனம்விரிந்தோ ஒடுங்கியோ தன் முனைப்பு அற்றால்
மறைமுடிவாம் ஆதியாம் மூன்றும் ஒன்றே".

.
"அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.