இயற்கையின் ஆதி நிலையே தெய்வம் எனப்படுகிறது. அதனுள் அமைந்த வேகம், ஆகாசம் எனும் பரமாணுத்துகளாகி அவையே பிரபஞ்ச ஆற்றல் களமாகியது. அவ்வாற்றலின் திணிவின் வேறுபாடுகளும், காற்று வெப்பம், நீர், நிலமெனும் மற்ற நான்கு பூதங்களுமாகிய அவை கூட்டால் உயிர்கள் பலவாகியது. ஐம்புலன்கள் மூலம், தன்னிருப்பு நிலை, இயக்கச் சிறப்புகள், அழகு மதிப்பு இவற்றை உணர்ந்து நிறைவு பெறுகின்றது. கடைசியில் மனம், உயிர் தன் மூல நிலை இவையறியும் ஆர்வமே ஆறாவது அறிவாக விரிந்தது. ஐம்புலன்களோடு இயங்கிய உயிர்களின் தொடர்பாக மனித உருவம் வந்ததால் ஆறாவது அறிவு போதிய வளர்ச்சியும் விழிப்பும் பெறும் வரை, புலன்வழி மயங்கி, உணர்ச்சி வயப்பட்டு ஆறுகுணங்களாகிய துன்பம் விளைக்கும் செயல்களை ஆற்றி அவற்றின் விளைவாக பாவப்பதிவுகள் அதிகமாக்கிக் கொண்டது....
புலன் மயக்க மாயையும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும் பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று களங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதிநிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு செயல்படுகிறது. எனவே நாம் எந்த செயல் புரிந்தாலும், களங்கம் போக்கவும், அறிவு பெருகவும் அது உதவியாக அமைய வேண்டும். அப்போதுதான் இனிமை, அமைதி நிறைவு, மகிழ்ச்சி வாழ்வில் அமையும். குண்டலினியோகம் தவம், தற்சோதனை, குண நல மேன்மை முழுமைப்பேறு இவற்றை அடக்கமாகக் கொண்டதால் உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனையாகும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
தன்முனைப்பை நீக்க:
"தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல
உயர்குருவின் ஒளி, என்றே உணர்ந்தடங்கு.
'என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?' என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்! ".
.
சேர வாரீர் :
"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக