.
"பேராதாரப் பெருவெளியில் தோன்றிய நுண்ணணு முதற்கொண்டு, அவற்றின் கூட்டத்தாலாகிய அண்டகோடிகள் அடங்கிய பேரண்டத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள இறைவெளியானது (தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் அருட்பேராற்றலால் - Self Compressive Pressure Force ) எல்லாவற்றையும் ஒன்றிணைத்துக் கொண்டு எதுவும் சிதறாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றது அல்லவா? இதுவே இறைநிலையின் ஒப்புவமையற்ற "அன்பு" ஆகும். தன் சூழ்ந்த...ழுத்தும் ஆற்றலால் அனைத்துக்கும் சக்தியை அளித்து எல்லாமே அததற்கு உரிய தற்சுழற்சியோடு இயங்க வைத்து, ஒவ்வொரு தோற்றத்திலும் பருமன், விரைவு, காலம், தொலைவு என்ற நான்கு பரிணாமங்களையும் சிதறாமல் காத்து வருகின்றதே இந்தத் திருவருட்செயலே "கருணை" ஆகும்.
.
அன்பும் கருணையும் என்ற மாயக்கயிறுதான் தெய்வ நிலையையும் எல்லா பொருட்களையும், உயிர்களையும், மனிதர்களையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து நடந்து கொள்வதற்கு வாய்ப்பான ஆறாவது அறிவு மனிதனுக்கு அமைந்திருக்கின்றது. இந்தப் பெருநிதியை மனிதன் அறிந்து கொள்ளாமலோ, அலட்சியப் படுத்தியோ, உணர்ச்சிவயப்பட்டோ, வாழ முற்பட்டால் கயிறு அறுந்த காற்றாடியைப் போல், நெறி பிறழ்ந்த வாழ்வு வாழ்ந்து மனிதன் துன்பங்களை ஏற்க வேண்டிவரும். எனவே அன்பும் கருணையும் மனித வாழ்வுக்கு இன்ப ஊற்று என உணர்ந்த விழிப்புடன் வாழ்ந்தால், இன்முகமும் இனிய சொல்லும் உதவும் கரங்களும் வெற்றி வாழ்வும் உருவாகும்".
.
"அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையிலுள்ளாய்
என்மனத் தைவிரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே
கன்ம வினைகள்எல்லாம் கழிந்தன உணர்கிறேன்
உன்னை உணர்ந்து உய்ய உலகோர்க்குத் தொண்டுசெய்வேன்! "
.
என்று ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக