மன நிறைவு மனித வாழ்வின் வெற்றிக் கெல்லாம் சிகரமானது, அதை உணர்ந்து கொள்வது, பயிற்சி செய்வது, பயனடைவது இவை எளிது. முயற்சியே தேவை.
1] உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள். மனநிறைவும் மகிழ்ச்சியும் தான் தேவை என்பது விளங்கிவிடும். இதுவே மனிதப் பிறவியின் பெருநோக்கம்.
2] நீ எங்கு, எப்படி, எவ்விடத்தில் இருக்கிறாய் என்று கணித்துக் கொள்ள வேண்டும். அதாவது வயதிலே, வாழ்விலே, கல்வியிலே, செயல் திறமையிலே, அறிவின் நுட்பத்திலே, பொருள் வளத்திலே, அதிகாரத்திலே, எந்த நிலையிலே நீ இருக்கிறாய் என்று கணித்துக் கொள். இவற்றைக் கொண்டு, உனக்கு, குடும்பத்துக்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று கணித்துக் கொள். முடிந்த அளவிலே செய்து கொண்டிரு. இந்தத் தொண்டினை ஆற்றுவதற்கு என் திறமையை எந்தெந்த முறையில் வளர்த்துக் கொள்ள முடியுமென்று திட்டமிட்டு முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள். இங்கே ஒரு பெரிய இன்ப ஊற்று உள்ளத்திலே ஊறத் தொடங்கி விடும்.
3] பிறரிடமிருந்தும் அல்லது எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே. எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்தில் தான் முடிகின்றது. இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்துவிடும்.
4] ஒவ்வொருவருக்கும் அறிவு இருக்கிறது. பொறுப்புணர்ச்சி இருக்கிறது; செயல் திறமை இருக்கிறது; வாழ்வின் அனுபவம் இருக்கிறது; இதை ஒத்துக்கொள். பிறரை மேய்ப்பதோ அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றிக் கெடுத்துவிடும். நலம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்துவிடு.
5] அவசியமின்றி பிறர் செயலில் தலையிடாதே. புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாதே. உனது கடமைகளிலிருந்து தக்க நீதி உணர்வின்றி நழுவாதே. உன் மீது பிறருக்கு மதிப்பும் உன் உள்ளத்தில் அமைதியும் பெருகும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.
எல்லையில்லா மன நிறைவு:
"இறைநிலையில் தனை இணைத்துக் கரைந்து நிற்க
எல்லையிலா மனநிறைவு; பழகிக் கொண்டால்
குறையுணர்வு எத்துணையும் எழுவதில்லை,
குவிந்துமனம் 'தான்' என்ற முனைப்பற்றாலும்
நிறைந்து நின்று கோடான கோடி யண்டம்
நினைவுக்குள்ளே யடக்கி விரிந்து நின்று
மறைந்துதானற்றாலும் முனைப்புஅங்கு ஏது?
மறையும் அளவில் முழுமைப் பொருளாய் மாறும்".
.
முழுமையும் அமைதியும்:
"அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்
அது முழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் அறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதான் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக