Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 31 ஜூலை, 2015

வெற்றி மேல் வெற்றி

தேலையில்லாத ஆசை என்றால் அமைதியாகச் சிந்திப்பது நல்லது. "இந்த ஆசை எழுந்ததே தவறு; இதை நிறைவு செய்தால் பல துன்பங்கள் வருமே; எனவே இந்த ஆசையை நான் விட்டு விடுவேன்" என்று தெளிவாக எண்ணி, தவம் இயற்றிச் சங்கற்பம் மேற்கொள்ள வேண்டும். பின்னொருகால் இந்த ஆசை மனதில் தோன்றினாலும், முன்பே எடுத்து வைத்திருக்கும் முடிவும் கூடவே வந்து, அந்த ஆசையானது காலப் போக்கில் மறையும்.

அதே போல் தேவை என்று கண்டவிடத்தும், நிறைவு செய்ய வசதி இல்லை என்றாலும் முன் சொன்னது போலவே ஆராய்ச்சியும் சங்கற்பமும் கூட பின் விளைவு தீங்கு தருவதென்றால், அந்த ஆசையையும் முன் சொன்ன அதே முறையில் சமம் செய்து கொள்ள வேண்டியது தான். நிறைவும் செய்யாமல் மாற்றவும் செய்யாமல் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டிருந்தால் மன அமைதி கெடும். உடலில் குன்மம் முதலிய நோய்கள் உண்டாகும்.

ஒரு ஆசையை இம்மாதிரி மனதில் வைத்திருக்கும் காலத்தில் எடுத்த காரியங்களிளெல்லாம் செயல் வேகம் குன்றி, திறமை மழுங்கி, தோல்வி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, திட்டமிடல், செயல் (desire, approach, achievement) மூன்றும் சரியாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டேயிருக்கும்.




* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"இச்சை எழும்போதே காரணம் கண்டிடு
இச்சை முடித்திடச் சூழ்நிலை பார்த்திடு,
இச்சை முடித்தால் எழும் விளைவை யூகி,
இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்".
.
"மண்மீது பெண்துணையால்
பொன் கொண்டே வாழ்கின்றோம்
மாற்றுவதேன் மூவாசை ?
மதிகொண்டே பயன்கொள்வோம்".
.
இச்சையின் வலிவு:
"எச்செயலும் மூலமெனும் நினைப்பாலாகும்.
இன்ப துன்பக் காரணமு மதுவே தேர்வோம்,
இச்சைஎனும் தீயெழுந்து எரியும்போது
இயங்கு முடற் கருவிகளா லறிவைக் கொண்டு
அச்சமற அனுபவித்தே அணைக்கலாகும்;
அதற்கு ஒரு மாற்றமில்லை யதனால் மேலோர்
நச்சுவிளை இச்சைகளை விளைவிக்காத
நல்லொழுக்க வாழ்க்கை முறை வகுத்துள்ளார்கள்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

வியாழன், 30 ஜூலை, 2015

மனநிறைவு மனிதனுக்கு மகிழ்ச்சிச் சுரங்கம்:



மன நிறைவு மனித வாழ்வின் வெற்றிக் கெல்லாம் சிகரமானது, அதை உணர்ந்து கொள்வது, பயிற்சி செய்வது, பயனடைவது இவை எளிது. முயற்சியே தேவை.

 1] உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள். மனநிறைவும் மகிழ்ச்சியும் தான் தேவை என்பது விளங்கிவிடும். இதுவே மனிதப் பிறவியின் பெருநோக்கம்.

2] நீ எங்கு, எப்படி, எவ்விடத்தில் இருக்கிறாய் என்று கணித்துக் கொள்ள வேண்டும். அதாவது வயதிலே, வாழ்விலே, கல்வியிலே, செயல் திறமையிலே, அறிவின் நுட்பத்திலே, பொருள் வளத்திலே, அதிகாரத்திலே, எந்த நிலையிலே நீ இருக்கிறாய் என்று கணித்துக் கொள். இவற்றைக் கொண்டு, உனக்கு, குடும்பத்துக்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று கணித்துக் கொள். முடிந்த அளவிலே செய்து கொண்டிரு. இந்தத் தொண்டினை ஆற்றுவதற்கு என் திறமையை எந்தெந்த முறையில் வளர்த்துக் கொள்ள முடியுமென்று திட்டமிட்டு முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள். இங்கே ஒரு பெரிய இன்ப ஊற்று உள்ளத்திலே ஊறத் தொடங்கி விடும்.

3] பிறரிடமிருந்தும் அல்லது எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே. எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்தில் தான் முடிகின்றது. இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்துவிடும்.

4] ஒவ்வொருவருக்கும் அறிவு இருக்கிறது. பொறுப்புணர்ச்சி இருக்கிறது; செயல் திறமை இருக்கிறது; வாழ்வின் அனுபவம் இருக்கிறது; இதை ஒத்துக்கொள். பிறரை மேய்ப்பதோ அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றிக் கெடுத்துவிடும். நலம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்துவிடு.

5] அவசியமின்றி பிறர் செயலில் தலையிடாதே. புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாதே. உனது கடமைகளிலிருந்து தக்க நீதி உணர்வின்றி நழுவாதே. உன் மீது பிறருக்கு மதிப்பும் உன் உள்ளத்தில் அமைதியும் பெருகும். 


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.
எல்லையில்லா மன நிறைவு:
"இறைநிலையில் தனை இணைத்துக் கரைந்து நிற்க
எல்லையிலா மனநிறைவு; பழகிக் கொண்டால்
குறையுணர்வு எத்துணையும் எழுவதில்லை,
குவிந்துமனம் 'தான்' என்ற முனைப்பற்றாலும்
நிறைந்து நின்று கோடான கோடி யண்டம்
நினைவுக்குள்ளே யடக்கி விரிந்து நின்று
மறைந்துதானற்றாலும் முனைப்புஅங்கு ஏது?
மறையும் அளவில் முழுமைப் பொருளாய் மாறும்".
.
முழுமையும் அமைதியும்:
"அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்
அது முழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் அறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதான் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 29 ஜூலை, 2015

உலக சகோதரத்துவம்

மூன்று மறைபொருள்களாகிய தெய்வம், உயிர், சீவகாந்தம் ஆகிய இவற்றைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளாததனாலேயே, மனித இனம் பெரும்பாலும் முடிவில்லாத துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. கல்வி முறையின் மூலமாக இந்த மூன்று மறைபொருள்களைப் பற்றிய விளக்கமானது தெளிவாக எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால் தான், மனித இன முன்னேற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமாகும்.

ஒவ்வொரு தனி நபரும், பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், அறிவியல் ஆகிய பல்வேறு கோணங்களிலே இந்தப் பரந்த உலகத்தோடு ஒரு இடைவிடாத தொடர்பை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். யாராவது ஒரு தனி நபர் இத்தகைய அறிவு விளக்கத்திலோ அல்லது வாழ்க்கை ஒழுக்கத்திலோ பின்தங்கி இருப்பாரானால், அது தொடர் நிகழ்ச்சி போல குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அளவில் மனித குலத்துக்குப் பெரிய அளவில் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரின் நலத்திற்காகவும், மனித சமுதாயம் முழுவதும் அறிவு வளமும், மன வளமும், உடல் நலமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். உலக சகோதரத்துவம் (Universal Brotherhood) என்பது ஒரு பேச்சளவில் இருக்கிற கொள்கையாக இருக்கக் கூடாது. அது மெய்ஞ்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும், சிந்தனையாளர்களாலும் வரையறுத்துச் சொல்லப்பட்ட உண்மை உணர்வாக இருக்க வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருடைய அனுபவ அறிவாக அறிவாட்சித் தரமாக அமைய வேண்டும்.





* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இறைநிலையை விளக்கும் கடமை :

"தெய்வம் உயிர் சீவகாந்தம் திருநடனம் மறைபொருள்
தெரியாமலே உலகம் திகைத்துச் சிக்கல் ஏற்றது;
ஐயமின்றி அனைவரும் இவ்வரும் பொருள் விளங்கியே
அனைத்து விஞ்ஞானம் மெய்யறிவு நோக்கி முழுமையாய்
உய்ய ஓர் சிறந்த வழி உயர்ந்த காந்தத் தத்துவம்,
உண்மை தெய்வம், உயிர், அறிவு, உணர்த்தி விட்டதிந்த நாள் செய்யவுள்ள கடமையோ இச்சீரறிவு உலகெலாம்
சிறப்புடனே பரவ ஏற்ற சீரிய தொண்டாற்றுவோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 28 ஜூலை, 2015

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை

 

 
.
"எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும் உயர்வும் அமைகின்றன. மனத்தின் அளவில் தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்டவும் வேண்டும்.
.
எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். எண்ணத்துக்குக் காவலாக எண்ணத்தைத் தான் நியமித்ததாக வேண்டும். ஏனென்றால் வேறு ஆள் இல்லை. மேலும், வேறு யாராலும் இக்காரியங்களை முடிக்க முடியாது. காரணம் ஒருவரது எண்ணத்தை அறிந்து கொள்ள அவருடைய எண்ணத்தைத் தவிர வேறு யாராலும் முடியாதே !
.
எண்ணம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் தற்சோதனை என்ற அகத்தாய்வு (Introspection). அந்த அகத்தாய்வை வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என்று அவ்வப்போதும் செய்ய வேண்டும். கணத்துக்குக் கணமும் செய்ய வேண்டும். அப்போது தான் குணநலப் பேறு வரும். முழுமைப்பேறு வரும்".
.

  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"எச்செயலும் மூலமெனும் எண்ணத்தாலாம்
இன்பதுன்பக் காரணமும் அதுவேயாகும்;
இச்சையெனும் தீஎழுந்து எரியும்போது
இயங்கும் உடற்கருவிகளால் அறிவைக்கொண்டு
அச்சமற அனுபவித்தே அணைக்களாகும்,
அதைத்தணிக்க வேறுவழியில்லை. அதனால்
நச்சுவிளை இச்சைகளை விளைவிக்காத
நல்லொழுக்க வாழ்க்கைக்கு முறைவகுத்தேன்".
.
"பாத்திரம் அளவைக் கண்டு பண்டத்தை அதனிலே வை
கோத்திரம் பார்த்தல் விட்டுக் குணத்தினை அறிதல் நன்றாம்;
ஆத்திரம் வரும்போதெல்லாம் ஆராய்ச்சி அதன் மேல் கொள்ளு; தோத்திரம் செய்யும்போது துதிப்பவன் நிலையைக் காணு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 27 ஜூலை, 2015

உறக்கம் :


இப்பொழுது ஒரு பத்து விதைகளைப் போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மண்; ஒரே தண்ணீர். ஆனால் அந்தப் பத்து விதைகளும் விதைகளிலே இருக்கக்கூடிய தன்மைக்குத் தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலேயிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக் கொண்டு, வேப்பம் விதை என்றால் வேப்பஞ்ச் செடியே தான் முளைக்கும். கரும்பு என்றால் கரும்பு தான் வரும். மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும்.

.
அது போலவே நமது உடலும், உயிர்ச்சக்தியை ஈர்த்துக் கொண்டு சேமிக்கவும் செலவிடவும் செய்கிறது. வரவு, செலவு இரண்டுக்கும் மத்தியிலே இருப்பு (Stock) ஒன்று எப்போதும் இருக்கும். அந்த இருப்பு மிகவும் குறைவாகப் போய்விட்டால் சோர்வு வரும், நோய் கூட வரும். நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால் மாலை நேரமானால் அந்த இருப்பு (Stock) குறைந்திருக்கும் பொதுவாக, அந்த இருப்பை அதிகரிக்கச் செய்வதற்குத் தான் உறக்கம் வருகிறது. உறங்கும் போது என்ன நிலைமை என்றால் மன இயக்கம் இல்லை; உடலியக்கம் மாத்திரம் நடக்கிறது. இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப் படுவதால் உயிர்ச்சக்தி சேமிக்கப்படுகிறது. காலையிலே அந்தச் சேமிப்பு சரியான இடத்துக்கு வருகிறபோது அதனுடைய திணிவு, அதாவது அழுத்தம் (Intensity), போதிய அளவு வந்து விட்டதானால் நரம்பு மண்டலத்திற்கு இயல்பான தொடர்பு (Automatic reconnection) மீண்டும் வந்து விடுகிறது, நாம் கண்விழித்து எழுகிறோம்.

.
பெரியவன் அங்கே இருக்கிறான், எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இருந்து கொண்டு காலத்தாலே இணைப்பை துண்டித்து (disconnecting) காலத்தாலே மீண்டும் இணைப்பு (reconnecting) ஏற்படுத்துகிறான். கூலி மட்டும் நாம் கொடுக்கிறதே இல்லை.

.
இம்மாதிரி ஒரு சக்தி இப்படி இருந்துகொண்டு என் உடலிலே இத்தனை வேலையும் செய்து கொண்டே இருக்கிறது என்பதை நினைத்தாலே போதும். அதற்கப்புறம் அந்த நினவுக்குள்ளாகவே ஓடி அவனே வந்து "நீயேதான் நானாக இருக்கிறேன்; நானே தான் நீயாக இருக்கிறாய்" என்று சொல்லுவான்.

.

 .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உண்மை நிகழ்ச்சிகள்:

"பிறக்கின்றோம், வளர்கின்றோம், வாழ்கின்றோம் நாம்
பேருலகில் இன்பதுன்பம் அனுபவித்து
இறக்கின்றோம். இதுவேதான் என்றும் என்றும்
எல்லா ஜீவன்களுக்கும் பொது. இவ்வுண்மை
மறக்காத விழிப்புடனே, ஒழுக்கத்தோடு,
மதி உடலைப் பயன்படுத்தி உலக வாழ்வைச்
சிறப்பாக அனுபவித்து, இயற்கைக் கொப்ப
சிந்தனையில் அமைதி பெற முயற்சி செய்வோம்".

.
"ஐந்து புலன்களையும் அடக்கி புருவத்திடையே
அறிவினது மூலத்தை ஆழ்ந்து நோக்கி அமர;
சிந்தை அடங்கிடும் சீவனே சிவனாகும்
சிறுகச் சிறுகப் பயின்றால் சித்திக்கும் உண்மை நெறி".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

தாய் சேய் நலம் (Welfare of Mother and Child)

 தாய், சேய் நலம் என்று சொல்கிறபோது அது பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ மாத்திரம் அல்ல; மனித குலத்திற்கே ஒரு பொதுவான, ஒரு மதிப்புடைய விஞ்ஞானம் அது. மனிதகுல மேன்மைக்காகவே, தாய்-சேய் நலம் என்ற ஒரு பிரிவை எல்லோரும் மதித்து அதற்கு ஒவ்வொருவராலும் ஆகவேண்டிய செயலைச் செய்ய வேண்டியது அவசியம். தாய்க்கும், சேய்க்கும் நோய் வராமல் தடுக்க வேண்டுமானால் கருவுற்ற நாள் முதற்கொண்டு பிரசவம் ஆகிற வரையிலே அதைக் கவனிக்க வேண்டியது பெண்களுடைய கடமை. ஆனால், பெண்கள் மாத்திரம் அதைக் கவனித்துக் கொள்ள முடியாது. குடும்பத்திலே முக்கியமாக உள்ள கணவன் இன்னும் பெரியவர்கள் எல்லோருடைய கடமையும் உள்ளது. அதற்கேற்ற அறிவு அனைவருக்கும் அவசியம்.

கருவுற்ற காலத்தில் ஒரு பெண்ணினுடைய மனம் சோர்வு அடையுமேயானால், பிணக்கு அடையுமேயானால், வருத்தம் அடையச் செய்வோமேயானால், ஒவ்வொரு வருத்தமும் அவர்களின் குழந்தைகளை மனத்தாலே பாதிக்கும். மனம் என்பது கருமையம், சீவகாந்த ஆற்றல், இருப்பு நிலையான அறிவு, இயக்க நிலையான மனம் என்ற அனைத்தும் அடக்கம் பெற்ற ஒரு இயற்கை நிதி. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருவுற்ற காலத்திலே எந்த விதத்திலே ஒரு பெண் ஒரு குடும்பத்திலே இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்; கணவன் எவ்வாறு அக்கருவுற்ற பெண்ணோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டார்களா என்றால் தெரிந்து கொள்ளவே இல்லை. அந்தகாலத்திலே ஏற்படக் கூடிய மனநிலை குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, விளைவறிந்து செயல்புரிந்து நலம் காண்போம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இல்லற நோன்பு :

"அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்;
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்துதலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்,
தன்புகழ் விளக்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள், இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை."

.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 25 ஜூலை, 2015

இயற்கையின் கருவூலம்

பேரியக்க மண்டலத்தின் மூலமான எல்லாம் வல்ல இறை நிலைக்கும், அதன் பரிணாமத்தின் உச்சகட்ட நிலையிலிருக்கும் மனித மனத்துக்கும் இணைப்பு இயக்க மையமாக உள்ளது மனிதனிடம் அமைந்துள்ள சீவகாந்தக் கருமையம். இது இயற்கையின் மூலதனக் கருவூலம். இதுவே, இயற்கையின் முத்திறமும் இணைந்து செயல்புரியும் தொழிற்சாலை.

இங்கு விளையும் சிறப்புகள் அத்தனையும் வெளிக் கொண்டு வரும் வாயில் தான் மனித மூளை. வெளிக் கொண்டு வந்து பரவ விடும் செயல் வீரன் தான் நமது மனம். மனதைக் கொண்டு உருவாக்கும் எண்ணங்கள், உடல் கருவிகள் மற்றும் புலன்களைக் கொண்டு செய்யும் செயல்கள், இவையனைத்தையும் காந்த அலைகளாகச் சுருக்கிக் கொண்டு வந்து கருமையத்தில் சேர்த்து, இருப்பு வைப்பது இயற்கையெனும் பேராற்றலின் செயல்களே! மனித மனம் செயல் புரிகின்றது. இறைவனாகிய இயற்கை அத்தனையும் அலைவடிவில் இறுக்கிச் சுருக்கிப் பதிவு செய்து இருப்பு வைக்கிறது.

மனித உருவில் மனம் விரும்பிச் செய்யும் செயல்களை மனம் விரும்பி இயக்கும் நரம்பு மண்டல ஆற்றல் (Central nervous system) என்றும், இயற்கையால் நடைபெறும் மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாத செயல்களைத் தானியங்கி நரம்பு மண்டல ஆற்றல் (Autonomous nervous system) என்றும் வழங்குகிறோம்.

இத்தகைய செயல்விளைவு வழுவாத நீதி மன்றத்தைக் கொண்ட கருமையம் என்னும் ஆட்சி மன்றத்தை அமைப்பாகக் கொண்ட மனிதன், விளைவு அறிந்த விழிப்புடன் செயல்புரிந்தால், அவன் வாழ்வில் துன்பமே தோன்றாது.




* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வினைப்பதிவு :
"முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு,
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு;
பின்னேநீ செய்தவினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
பெற்ற பழக்கப் பதிவு உண்டு; இம்மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்;
தன்னில் பதிவான வினைப் பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்குப் பயனாகா துணர்வீர்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 
 

வெள்ளி, 24 ஜூலை, 2015

உயிர் உணர்வு

உணர்ச்சிவயம் இல்லாத எண்ணங்களால் மனதின் இயக்க அலை நீளம் குறைகிறது. அதன் விளைவாக உயிரின் அதிர்வு வேகம் குறைகிறது. உடல் செயல்கள் எல்லாம் நல்ல ஒழுங்குக்கு வருகின்றன. நமது தவறு நமக்கே புலனாகிறது, திருத்தவும் முடிகிறது. நாமே தேடிக் கொண்ட அவசியமில்லாத பழக்கங்களிலிருந்து விடுபடவும் முடிகிறது. யோகத்தால் மனம் லயப்பட்ட பின்னரே இது நேர்கிறது. இந்த வல்லமை மனதுக்குக் கிட்டிய பின் மனிதர்கள் ஒவ்வொருவர் இடையில் உள்ள உறவும் சீர்படுகிறது.

உயிரைப் பற்றிய உணர்வு மறந்துள்ள நிலையை, பொருளுணர்வு என்கிறோம். (Material Consciousness) உயிரைப் பற்றிய தெளிவான அறிவும் அந்த விளக்கத்தை மறவாநிலையும் உயிருணர்வு [மெய்யுணர்வு அல்லது மெய்ப்பொருள் உணர்வு] எனப்படும் (Spiritual Consciousness). உயிருணர்வோடு செய்யப்படும் எச்செயலும் சிறக்கும். விளைவும் சிறக்கும். உயிருணர்வு பெறுவதற்காகவே எடுத்தது இந்தப் பிறவி. அவ்வுயிருணர்வின்படி மறவாது வாழ வேண்டும்; அதுவே ஆன்மீக வாழ்வு. ஒவ்வொருவரும் இப்படி வாழ்வோமாயின், உலகத்திலே அமைதி நிலவும். உண்மையில் இயற்கையில் ஒரு கோளாறும் இல்லை. பொருளுணர்வோடு மனிதர்கள் செயல்படுவதாலேயே வறுமையும், துன்பமும் தோன்றின; நிலவுகின்றன, வளர்கின்றன். இன்று உலகத்தில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான். மனிதனை மனிதன் மதித்து, புரிந்து கொண்டு ஒத்து, உதவி வாழும் உணர்வைத் தரும் உயிர் உணர்வு இல்லை. அதனாலேயே குழப்பங்கள், பஞ்சம் இன்று மேலிட்டிருக்கின்றன. உலகத்தில் பாதுகாப்புக்காக (Defence) உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களை நிறுத்தி, ஆக்கப்பூர்வமான உற்பத்தியாக மாற்றினால் வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் இரண்டு பங்காக உயரும்.

காலவெள்ளம் நம்மை அடித்துச் செல்கிறது. நாமும் இந்த வெள்ளத்தின் மத்தியில் தான் வாழ்கிறோம். வாழும் காலத்தில் செய்யும் எந்தச் செயலும் உயிரறிவு பெற்றாலன்றிச் சிறக்காது. விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆன்மீகம் தழைக்க வேண்டும்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வியாழன், 23 ஜூலை, 2015

தவம் :


இப்போது, இங்கே நாம் அமர்ந்திருக்கிறோம். நம் மனம் எங்கேயோ ஓடுகின்றதென்றால், நாம் எண்ணியது தான் அது. எதை ஏற்கனவே எண்ணி எண்ணி நம் எண்ணத்தை அதிகமாகச் செலவு செய்தோமோ, அதற்கே நமது மன அலைகளை ஆக்கி வைத்திருக்கிறோம். அதனால், நாம் ஒடுங்கி நிற்கிற போது அதற்கு ஒத்துவராமல் அலை நீளம் முன்னர் இயங்கி இயங்கி எங்கே கொண்டு வந்து வைத்தோமோ அங்கே உற்பத்தியாகிற போது, அதுவே இயக்கமாகிறது; அத்தனை செல்களும் உடலிலேயும், மூளையிலேயும் இயங்கி அதுவே இயக்கமாகிறது. அதனால், இதற்கு - இந்தத் தவத்திற்கு - நன்றாகப் பழக வேண்டும். பழகப் பழக மனம் தன்னுள்ளேயே ஒரு தன்மையை (Character) ஏற்படுத்திக் கொள்ளும்.

.
எந்தத் தொழிலை செய்யும் போதானாலும் சரி, துரியத்தில் மனத்தை வைத்துப் பழகி வரலாம்.

.
"கருதவத்தில் ஆரம்ப சாதகர்கள்
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அநேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்".

.
"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?," என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சி தான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குருவின் தொடர்பு :

"உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்
உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி
மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்,
மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க
ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்;
ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு
செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்
சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்."

.
வீண் காலம் போக்க வேண்டாம் :

"நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மவுனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 22 ஜூலை, 2015

Q : Swamiji, even today you say the same things that you had said in your poems more than 50 years ago. But many sages are seen to change their views over a period of time. Why is this?


      A : I started writing only after I had attained realisation and found answers to questions like “What is God?” “What is Life?” and “Why does poverty exist?” The questions had been haunting me since the age of 35. I have written more than 4000 poems in these 50 years, and in every one of them I have only said what I have fully understood. But the people who had been following Bhakthi Marga in their earlier years, only to change over to Gnana Marga subsequently, may alter their views also. This will be reflected in their speeches and writings.

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஐயா ! யந்திரம் என்றால் என்ன?


பதில் :
--------
மந்திரங்களை உச்சரிக்கும்பொழுது உச்சரிப்பவரின் சீவகாந்த ஆற்றல் உயருகிறது. அதே நேரத்தில் என்ன தேவையோ , அந்தக் கருத்தை மனம் இணைத்து அனுப்ப ஒரு மீடியம், ஒரு மையப் பொருள் வேண்டும். அது ஒரு உருவமாகவோ, படமாகவோ, மலராகவோ, தண்ணீராகவோ, தகடாகவோ இருக்கலாம். அதுதான் 'யந்திரம்' என்று சொல்லப்படுகிறது.

திங்கள், 20 ஜூலை, 2015

ஜீவ காந்த சக்தி

இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) வரக்கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது, பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு Tapeல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப் பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஒட்டுவதற்காக Cellotape வைத்திருக்கிறோமே அதை Tape Recorderல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு செய்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் Tapeக்கு முதலில் ஒரு காந்தப் பூச்சு (Magnetic treatment) கொடுக்க வேண்டும். பிறகு தான் அது பதிவை ஏற்கும். ஏற்ற பின் பிரதிபலிக்கும்.

அது போலப் பதிதல், பிரதிபலித்தல் (Functions) என்று மன இயக்கத்திற்கு உரிய செயலாக எண்ணும்போது அந்த உயிர்ச் சக்தி சுழலும் போது தானாகவே அந்த அலை வெளிவந்து கொண்டே இருக்கும். அப்படி உடல் முழுவதிலும் இருக்கக் கூடிய உயிர்சக்தி சுழன்று வெளியிடக்கூடிய அலையினுடைய அழுத்தம் உடலிலே ஜீவகாந்த சக்தி என்று சொல்லுகிறோம். அந்த அலை அழுத்தம் தான் ஜீவகாந்த சக்தி. உயிருக்கும் ஜீவகாந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம், இயங்கிக் கொண்டே இருப்பது. அதிலே இருந்து வெளிவந்து விரிந்து கொண்டே இருப்பது விரிவு அலை - அதுதான் ஜீவகாந்த சக்தி.



 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்
நிலைவெளியில் எழுப்புகின்ற நேர்அலைகள் காந்தமாம்; மறைபொருளாம் காந்தம் தன்மாத்திரைகள் ஐவகை,
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்,
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மா பிரம்ம ஞானமாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

ஞாயிறு, 19 ஜூலை, 2015

அணுவினிலே உள்ள ஆற்றல் பிறந்ததெங்கே ?

 "இறைநிலை ஆதியானது. அது தன்னைத்தானே அழுத்தி நொறுங்கிக் கொள்ளும்போது (Self Compressive Pressure Force) , இறைத் துகளாக ஈதர் என்னும் நுண்துகளாக (Primary Energy Particle) மாறுகின்றது. தன்மாற்றம் பெறுகின்றது. ஒவ்வொரு துகளைச் சுற்றியும் இறையாற்றல் சூழ்ந்தழுத்திக் கொண்டிருப்பதனால், அவையெல்லாம் எப்பொழுதும் தற்சுழற்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்தத் தற்சுழற்சி தான் இறைத்துகளுக்குக் காந்த ஆற்றலை உண்டு பண்ணித் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

.
இறைநிலையின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், இறைத்துகளை (Ethereal Particle) ஆங்காங்கு ஒன்றிணைக்கும் விளைவாகவே இருக்கின்றது. இவ்வாறு தோன்றும் சிறு முடிச்சுகள் அணுவென்ற (Atom) பெயர் பெறுகின்றன. ஒவ்வொரு அணுவும் இறைத்துகளின் கூட்டமைப்பேயாகும். இறைத்துகள்கள் ஒவ்வொன்றும் சுழன்று கொண்டே இருப்பதனால், அவற்றின் கொத்தியக்கமான அணுவும் தற்சுழற்சி உடையதாகவே இருக்கின்றது. இந்தத் தற்சுழற்சியினால் அணுவுக்குள் அடங்கிய இறைத்துகள்கள் மேலும் மேலும் காந்த அற்றலைப் பெற்று, தற்சுழற்சி விரைவு மீறி அவைகளுக்குள்ளாக ஏற்படக்கூடிய விலக்கும் வேகமாக மாறுவதால், அணுக்கள் எப்பொழுதுமே கரைந்து கொண்டே இருக்கும். அவைகளிலிருந்து வெளியேறும் நுண்ணலைகள் (ஈதர் என்னும் பரமாணுக்கள்) காந்த ஆற்றல் பெற்றவைகளாகவே இருக்கும்.

.
இறைநிலையோ ஒரு பாய்மப் பொருளாகும் (Fluid). அதிலிருந்து தோன்றுகின்ற இறைத்துகளும் அவ்வாறே. எந்த இறைநிலையிலிருந்து தன்மாற்ற விளைவான நுண்துகள் பரமாணு ( Ethereal Particle ) தோன்றியதோ அதுவே பரமாணு நிலையிலிருந்து காந்த ஆற்றல் பெற்ற பிறகு, அழுத்தம் முதலான ஐந்துவகைத் தன்மாத்திரைகளாக மாறி, இறைநிலையாகிவிடுகிறது.

.
இப்பொழுது பிரபஞ்சத்தை முழுமையாக ஆராய்ந்து பார்ப்போம். இறைநிலை ஒன்றுதான் பேராதாராப் பெருவெளி என்ற சக்தியாகும். அதன் தன்மாற்றம்தான் இறைத் துகள்கள் (ஈதர்) முதற்கொண்ட பேரியக்க மண்டலக் காட்சிகள் அனைத்துமாகும். மீண்டும் அவைகளையெல்லாம் காந்த ஆற்றல் பெற்ற அலைத்துகள்களாகித் தன்மாற்றம் பெற்று இறைநிலையில் இணைந்து விடுகின்றன.

.
இந்த உண்மையை நோக்கும்போது இறைநிலையின் ஒரு நுண்பகுதிதான் நாமும் என்ற உணர்வு தெளிவாக உண்டாகிறது. எனவே மனித அறிவின் சிறப்பு பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டு வாழத் தகுதியாக இருக்கிறது. பிரபஞ்சத்தையும் தன்னையும் உருவாக்கியுள்ள பேராற்றலான தெய்வநிலையை மறக்க முடியாது. மறந்து வன்முறைகள் மூலம் தவறான செயல்கள் செய்து ஒருவர் பிறருக்குத் துன்பம் அளிக்கவும் முடியாது. தனிமனிதன் வாழ்விலும் உலக சமுதாய வாழ்விலும் அமைதியே நிலவும். இந்தத் தெளிவிலே அன்போடும் கருணையோடும் நம்மோடு வாழும் ஜீவன்களின் உடலுக்கும் மனதுக்கும் துன்பமளிக்காது, எந்த ஜீவனுக்கும் உள்ள துன்பத்தை முடிந்த வரையில் போக்கிக் கொண்டு, அறிவுத் தொண்டாற்றி வாழ்வோம் என்ற முடிவை மறவாமல் செயலாற்றுவோம். அதே பேரின்ப நிலையில் அமைதி பெறுவோம்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்.
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்,
நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்.
மறைபொருளாம் காந்தம்தன் மாத்திரைகள் ஐவகை.
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்.
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்.
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மாபிரம்ம ஞானமாம் !".

.
விஞ்ஞானமும் - ஞானமும் :

"அறிவை அகண்டாகாரத்தே செலுத்தி,
அணுவினிலும் நின்றொடுங்கி, ஆழ்ந்தாராய்ந்து,
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்,
அறிந்துவிட்டீர்! விஞ்ஞான நிபுணரே! நம்
அறிவு எது? எங்குளது? அந்தமென்ன?
அணுவினிலே உள ஆற்றல் பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றிஒன்றி ஆய்ந்து பாரீர்.
அணுவுக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 18 ஜூலை, 2015

மனிதன் :



"அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது" என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிறவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப் போன்று போலி (Imitate) செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. தன்மூலத்தை உணர்ந்து தன்னைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிற எவர்க்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகின்றது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.
...
எனவே தான் மனிதன் என்ற பெயரைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத் தான் அழுத்தமாக உணர்த்துகின்றது. "மனம்" என்ற சொல் 'மன்' என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. 'மண்'என்றால் நிலையானது. அழியாமை என்று பொருள். ஆனால் நாமோ மனத்தைப் பேயாக, குரங்காக இருப்பதனை உணர்கிறோம்.

ஆனால் அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால் புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுணர்வு தோன்றுகின்றது. அப்போதுதானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத் தான் மனிதன் பெற வேண்டும்.

மனம் படைத்த மனிதன் [மன் + இதன்] நிலை பேரான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத் தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனத்தைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மனஇதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள். 

 -* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
மனித மாண்பு :

"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடை ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்;
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துரைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளகலையிதனைப் பரப்பி நலம் காண்போம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 17 ஜூலை, 2015

ஓங்காரம்

சப்தத்தின் மூலநிலையை 'ஓம்' என்ற சொல்லால் உணர்த்துகிறார்கள். 'ம்' என்னும் எழுத்தின் மூலம் தான் ஓங்காரத்தின் ஓர் இயல்பைப் பிறருக்கு உணர்த்த முடியும் என்று நினைத்தவர்கள் 'ம்' என்ற சப்தம் எழாமல் இருக்க அதை ஞாபக அளவில் உணர்ந்து கொள்ளும்படி விளக்கம் செய்தார்கள்.

ஓசையின் விரிந்துயர்ந்த உச்ச நிலையை உணர்த்த உயிரெழுத்தாகிய 'ஓ'வின் மூலம் சப்தத்தை எழுப்பி, உயர்த்திக் காண்பித்தார்கள். ஓசையின் ஒடுக்க நிலையை 'ம்' என்ற ஒலியை அளவில் படிப்படியாகக் குறைத்துக் குறைத்து இசைத்துப் பின் மெளன நிலையில் நினைப்பாகக் காட்டினார்கள். இவ்வாறு சப்தத்தின் விரிவு நிலை ஒடுக்க நிலை இரண்டையும் முற்காலத்தவர்கள் விளக்கி வைத்தார்கள்.

புலனுணர்ச்சிகளிலே, அறிவைச் செலுத்தி, நாத தத்துவத்தை அறிவிலே விரிவும், தெளிவும் பெறாத பக்தனுக்கு ஒருவாறு விளக்க அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஓசையின் உச்ச நிலையை உணர்த்தும் 'ஓ' என்ற ஒலியையும், எழுத்தையும் ஓசையின் ஒடுக்க நிலையை உணர்த்தும் 'ம்' என்ற ஒலியையும் எழுத்தையும் ஓ-ம் (ஓஓஓஓம்) என்று ஒலித்துக் காட்டினார்கள். அவைகளை ஏடுகளில் 'ஓம்' என்ற எழுத்துக்களாக எழுதிக் காண்பித்தனர்.

அந்த இரண்டு ஓசையும் சேர்நது 'ஓம்' என்ற தனி ஓசையாயிற்று. அந்த இரண்டு எழுத்தும் சேர்ந்து ஒரு புதிய 'ஓம்' என்ற ஒரு கூட்டு எழுத்தாயிற்று. ஆகையால் 'ஓம்' என்பது ஒரு சங்கேதம் - குறிப்பு (Symbol) ஆகும். ஆகவே 'ஓம்' என்ற ஓசைக்கோ, சொல்லிற்கோ எந்தத் தனிச்சிறப்போ, மதிப்போ கிடையாது. புத்தகத்திலுள்ள கருத்தை அறிந்த பின், புத்தகம் மற்றவர்களுக்குத் தேவையாகும் என்று அதைப் பத்திரப்படுத்தி வருகிறோம். அதுபோல் தான் 'ஓம்' என்ற சொல்லும் நிலைத்து வருகிறது; தொடர்ந்து வருகிறது.

அந்த ஓங்கார நிலையை உணர்த்துவதற்கும் 'ம்' கூடத் தேவையில்லை. இதுபோன்ற[.] புள்ளியே போதுமானது. தனிப்புள்ளியில் உச்சரிப்பு ஓசையானது எப்படி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று கூர்ந்து உணர்ந்து உணர்ந்து ஓங்காரத்தின் இயல்பை நன்றாய் அறிந்து கொள்ளலாம்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஓங்காரம் :

"இருகரங்கள் ஓங்கி ஒன்றை ஒன்று தட்ட
எழுந்த சப்தம் இருந்த நிலையே ஓங்காரம்
வருமுன்னே இருந்த தெங்கே, அந்த நாதம்
வந்தபின்னே போனதெங்கே, வகையாராய
நிருவிகற்ப நிலையாக எதிலும், எங்கும்
நிறைந்து அணுக்கூட்ட இயக்கம் ஒக்க
பெருகிபல ஓசைகளாய் விரிந்தலைந்துப்
பரவெளியில் நிரவி நிற்கும் தன்மை கண்டோம்."

.
பிரணவ விளக்கம் :

"ஓங்கார நிலையினிலே "மௌனம்" என்போம்
உச்சரிப்பில் அதனையே "சப்தம்" என்போம்
ஆங்காரமாய் விரிந்த அணுக்கள் கூடி
அடையும் பக்குவ இயக்கங்கள் ஒக்க
ரீங்காரம் பலவிதமாய் விரியக்கண்டோம்
இரகசியமாய் புல், பூண்டு, மரம், மண், கல்லும்,
ஊங்கார ஜபம் அல்லும் பகலும் செய்வது
உணர்ந்திட்டோம் "ஓம்" என்னும் பழக்கம் விட்டோம்."

.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 16 ஜூலை, 2015

துரியாதீத தவம் - பலன்கள்

1. பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள்
குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).

2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.

3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம்,
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல
நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.

4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.

5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.

6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று
கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.

7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில்
லயம் ஆவர்.

8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.

9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.

10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.

11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.

12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.

13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும்.
மனமே செயல்படும்.

14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே
விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

புதன், 15 ஜூலை, 2015

எல்லாம் நன்மையே !



துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அல்ல; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிற போது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறை நிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக்கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தை கண்டு பிடிக்கிற போது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும்.
...
அப்படிப் பார்க்கின்ற போது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக் கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஓட்டிப் பார்த்தீர்களானால் எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
நிறை நிலையில் அமைதி :
"எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம் வீரம்,
நட்டம் லாபம், என்ற அனைத்தும் தோன்றும்:
வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்."
.
அமைதியின்மை எதனால்?
"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்
அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் அறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் ஆறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைத்துளது மனிதர் வாழ்வில்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 14 ஜூலை, 2015

உலகமே ஒரு கலா சாலை

உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்
ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில்
பல புதிய பாடம் சூழ் நிலைகட் கேற்ப
பலாத் காரமாகப் போதிக்கும், என்றும்
நலம் விரும்பும் அறிஞர் பலர் செய்யும் போதம்
நல் வாழ்வில் அவர்கள் சந்தித் தாராய்ந்த
சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்
சிந்தனையைச் செயல் திறனை ஒழுங்கு செய்யும்.

இந்த உலகம் ஒரு பழமையானதும், பெரியதுமான கலாசாலையாகும். சூழ்நிலைகளுக்கேற்றபடி உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் புதிய புதிய பாடங்கள் பலாத்காரமாகப் போதிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலமே குறிக் கோளாகக் கொண்டு வாழும் அறிஞர்கள் அவ்வப்போது பல விதத்தில் மக்களுக்கு நற்பயன் விளைவிக்கும் சன்மார்க்கங்களையும், வாழ்க்கை அனுபவ நுட்பங்களையும் போதனை செய்து வருகிறார்கள்.

அவர்கள் வாழ்வில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, இன்ப துன்ப விளைவறிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார்கள். இந்தப் போதனைகள் அனைத்தும் மக்களின் சிந்தனையை உயர்த்திச் செயல் திறமையை ஊட்டி வாழ்வை ஒழுங்குபடுத்தி வளப்படுத்துவனவாம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
இயற்கையின் பேராற்றல் :

"இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்; பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?."

.
"அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி, அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு".

.
"செயல் வேகம் கொண்டவனே
சித்தன்; சிந்தனையில்
புயல் வேகம் கொண்டெழுத்தில்
பொறித்தான் பலகலைகள்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 13 ஜூலை, 2015

அறிவு நிலையில் வேறுபாடுகள் :



1] உடலறிவு : மனிதனின் அறிவின் தரத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பசி, தாகம், பாலுணர்ச்சிவேகம் ஆகியவற்றைச் சமன் செய்து கொள்ளுதல் மட்டும் தான் வாழ்க்கை என்ற அளவில் சில பேருக்கு அறிவு நின்று விடும். இதுவே முதல்படி. முன்னோர் சொன்ன அன்னமய கோசம் இது என்று சொல்லலாம்.
...
2] மனஅறிவு : உடல் தேவைகள் நிறைவு பெற்றுவிட்டன என்ற பிறகு அவற்றுக்கப்பால் மனதின் தேவை என ஒன்று வரும். இயற்கை அழகுகளை ரசித்தல், அவற்றைப் போல் போலி செய்தல் என்ற அளவில் சிலருக்கு அறிவு விரிந்து நிற்கும். இதுவே இரண்டாம் பிரிவு. இதனை முன்னோர் சொன்ன மனோமய கோசமாகக் கொள்ளலாம்.

3] விஞ்ஞான அறிவு : அறிவின் தரம் இன்னும் ஒரு படி உயரும்போது, இயற்கை நிகழ்ச்சிகளுக்கும், இயற்கை நியதிகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாக அறிவு எழுந்து நிற்கும். இதுவே மூன்றாம்படி. இதனை முன்னோரின் விஞ்ஞானமய கோசம் எனலாம்.

4] இறையறிவு : நியதி தவறாமல் இயக்கம் நடத்தும் அந்த இயற்கையின் தத்துவம் என்ன? அதனை ஆராயும் நான் யார்? எனக்கும் அதற்கும் தொடர்பென்ன? உறவென்ன ? என்று ஆராயும் பக்குவம் பெற்ற அறிவின் நிலையே அதன் நான்காம் படி. இதனையே முன்னோர் சொன்ன பிராணமய கோசத்துக்கும் அதன் முடிவான ஆனந்தமய கோசத்துக்கும் ஒப்பிடலாம்.

அறிவுக்கு நான்கு நிலை இயற்கை தேவை
அவை மட்டும் நிறைவு கொளல் ஒன்று [இரண்டு]
பொறி புலனால் இயற்கையெழில் ரசித்தல், மூன்று
பகுத்தறிவால் இயற்கை ரகசியங்கள் ஆய்ந்து
அறிந்து கொளல், அறிவித்தல்; நான்கோ அப்பால்
அத்தகைய இயற்கைக்கே மூலம் நாடி
அறிவதற்கென் றறிவெழுந்த நிலையாம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

சங்க நோக்கம் :


முற்காலத்தில் கல்வி வாய்ப்பு குறைவாகவும், தொழில் வாய்ப்பு பெற்றோர்கள் மூலமாகவும் இருந்ததால் இளமை நோன்பு, இல்லறம், அகத்தவம், முழுமைப்பேறு எனும் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் நான்கும் பிரிவுபட்டே இயங்கி வந்தன. இப்போது கல்வி வாய்ப்பு பெருகிவிட்டது. தொழில்கள், விஞ்ஞானக் கருவிகள் இயந்திரங்கள் மூலம் எவரும் எத்தொழிலையும் புரியலாம் என்ற நிலை வந்துவிட்டது. வயதாலும், அறிவாலும், வளர்ச்சியிலா நிலையில் இருந்து கொண்டு மயக்க நிலையில் வாழ்பவர்களுக்கு பக்தியோகம் அவசியம் தான். ஆனால் இல்லற வாழ்வுக்கு வந்த பின்னர் படிப்படியாக ராஜயோகமும் ஞானயோகமும் இணைத்துக் கொள்ள வேண்டியதே.

.
இல்லத்தாரிடம் சூத்திரன் [உழைப்பாளி], வைசியன் [வாணிகன்], சத்திரியன் [ஆட்சியாளன்], பிராம்மணன் [மெய்ப்பொருளுணர்ந்தோன்], என்னும் நான்கு செல்வாக்குகளும் இக்காலத்தில் ஒன்றுகூடிவிட்டனபோல், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், நான்கும் இல்லறத்தாரிடம் ஒன்று கூட வேண்டும். அதாவது மனவளக்கலையாகிய ராஜயோகமும், மெய்ப்பொருள் உணர்வு எனும் ஞானயோகமும் இல்லத்தார்களுக்கு அவர்கள் வாழ்வோடு வந்து இணையும் வாய்ப்பு இக்காலத்தில் உருவாக வேண்டும்; பெருக வேண்டும். இல்லறம் புரியும் பெரும்பாலோரிடம் இத்தகைய தேவையுணர்வு உருவாகி ததும்பிக் கொண்டிருக்கிறது. அத்தேவைக்கேற்ப வாய்ப்புக் கிட்டாமையால் அவர்கள் அறிவுத்தேக்கமும், திசை மாற்றமும் சமுதாய வாழ்வில் பலவித கொந்தளிப்பு நிலைகளாக உருவாகிப் பெருகிவருகின்றன.

.
இந்த நிலைமையுணர்ந்து வேண்டுவோர்க்கும் தகுதியுடையோர்கட்கும் இல்லறத்திலேயே ராஜயோகம் பயின்று ஞானயோகம் என்ற முழுமைப் பேறு அடைய உதவி செய்யும் கடமையே உலக சமுதாய சேவா சங்கத்தின் பெருநோக்கமாகும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
வள்ளலார் அருள் :

"என்று எனை இராமலிங்க வள்ளல் பெருமானார்
எதிர் நின்று காட்சி தந்து அருளைப் பொழிந்தாரோ,
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட் பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத்தூய்மையாச்சு;
இன்று எந்தன் மனநிலையோ வள்ளற் பெருமானார்
எந்த செயல் செய்யென்று உணர்த்துவாரோ அதுவே
நன்று எனக் கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 11 ஜூலை, 2015

பக்தி - ஞானம்


ஞான நெறி. புலன்களுக்கு எட்டாமல் நிற்கும் அப்பேராதார நிலையைத் தானே எய்தி அனுபவமாகப் பெறுவது, இது அகநோக்குப் பயிற்சியால் கிட்டக்கூடிய பேறு. ஆன்மா புலன்கள் மூலம் உலகைத் தொடரும் போது மனமாக இருக்கின்றது. மனம் அகநோக்குப் பயிற்சியால் உயிரில் ஒடுங்கும்போது மனமே அறிவாகி ஆன்ம உணர்வை எய்துகிறது. அறிவைக் கொண்டு ஆன்மாவின் மூலநிலை உணரும்போது ஆன்மாவே நிறை நிலை எய்துகின்றது. ஆன்மாவே மெய்ப்பொருளாக அக உணர்வு பெறுகின்றது. இந்த அனுபவங்கள் அகத்தவத்தால் மாத்திரம் கிட்டும். இத்தவத்தைப் பயில ஆசான் வேண்டும். பக்தி நெறிக்கு நூல்களே போதும். ஞானநெறிக்கு ஆசானின் நேர்முகத் தொடர்பு வேண்டும். இந்த இரண்டு வழிகளில் அவரவர் அறிவுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற ஒன்றைப் பின்பற்றலாம். பக்தி நெறியில் முழு அமைதி கிடைக்காவிட்டால் அப்போது ஞான நெறிதான் தகுதியானது. பக்தி நெறியில் மனிதன் தெய்வத்தை நம்புகிறான். ஞானநெறியில் தெய்வத்தை உணர்கிறான். உள்ளுருக்கத்தோடு இவற்றில் எந்த நெறியைப் பின்பற்றினாலும் மனிதனின் தன்முனைப்புத் திரை நீங்கி விடும். இந்தத் திரையை நீக்கிக் கொண்டு விழிப்போடு கடமையாற்றினால் வாழ்வு நிறைவை அளிக்கும். மகிழ்ச்சி ஓங்கும். மனிதன் அருட்பேறு பெற்ற இன்பத்தில் அமைதி பெறுவான்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பக்தி - யோகம் - முக்தி - ஞானம் :

"அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி
அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்
அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி
அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்".

.
தவமும் - ஞானமும் :

"ஐம்புலன்கள் வழியாக அறிவு பலநாள் இயங்கி அலைந்தலுத்து,
நிம்மதியைத் தேட அந்த நிலையறிந்த குரு அருளால் நினைவு தன்னை,
இம்மென்றிருத்தி, யங்கே எழும் சோதி சுடருணர்ந்து, இன்பங் கண்டு, சும்மா விருக்கின்ற, முறை பழகல் தவமாகும், பயனே ஞானம்".

.
ஞானக்கண் :

"இருபுருவ மையத்தில் இருள் நீக்கி அருள் விளக்கும்
ஒருவாசல் உண்டதுவே உயிர் நிலையை உற்றுணரும்
திருவாசல்; உயிர் அறிவாய் தெய்வநிலை எய்தும் வழி
கருவாசலும் ஞானக்கண் என்பதும் இதுவே".

.
.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஐவகைப் பற்று

இயற்கையின் ஒரு கூறு தான் மனிதன். ஆனாலும் பேரியக்க மண்டலத்தில் விளங்கும் எல்லாச் சிறப்புகளும் நுணுக்கமாக உள்ளடக்கம் பெற்ற திருவுருவமாக மனிதன் திகழ்கிறான். இயற்கையின் ஆதிநிலை யாகிய மெய்ப்பொருள் மனிதனிடத்தில் தான் தன் பெருமதிப்பை உணர்ந்து நிறைவு கொள்ளும் அறிவாற்றலாக அமைந்திருக்கிறது.

இவ்வறிவு ஐம்புலன்கள் மூலம் பொருட்கள், மக்கள், இன்ப துன்ப உணர்வுகள் இவை வரையில் எல்லை கட்டி குறுகி நின்று இயங்கும் போது மாயையாகவும், உணர்ச்சிவயமாகவும் சிறுமையடைகிறது. அவ்வறிவு, தனது இயக்கத்திற்கு உலக மக்கள் சமுதாயத்தின் எண்ண அலைகளும், பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாத் தோற்றங்களின் ஆற்றலும் அடிப்படையாக அமைந்து தான் அறிவின் முழுமை பெற்று உய்ய உதவியாக உள்ளன என்ற விளக்கத்தில் மெய்ஞ்ஞானமாகி, விரிவும் விழிப்பும் பெற்று நிறைவு பெறுகிறது.

எனவே, எல்லையற்ற அருட்பேராற்றலின் ஒரு பகுதியே ஒவ்வொரு மனிதனும் என்ற உண்மையினை உணர்ந்து அதனை மறவாமல் இருக்கவும், பழகிக் கொள்ளவும் வேண்டும். அகன்ற பேராற்றலை மறவாத விழிப்போடு உலக வாழ்வை நடத்தும் போதுதான், பற்றி நிற்பதிலும் பற்றின்மை என்ற தகைமை மனிதனுக்கு உண்டாகிறது.

உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை. நீரில் குளிப்பது தேவை தான். ஆனால் நீரில் மூழ்கிவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்க்கைக்கு பலவகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.
"பணத்தை படைத்தது மனிதனே. ஆனால்
பணத்தைக் கொடுப்பது மட்டும் இறைவனோ?"

.
"ஆக்கத்துறையில் அறிவை செலுத்து.
ஊக்கமுடன் உழை. உயர்வு நிச்சயம்".

.
"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு
எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்".

.
பணமும் பாசமும் :

"பணம்பாசம் இவ்விரண்டும் மனிதர் வாழ்வைப்
பாழாக்கும் நச்சாகும் ஆய்ந்து பாரீர்.
பணம் மட்டும் செயற்கையிலே வந்ததாகும்.
பாசமோ இயற்கையிலே விரிந்ததாகும்.
பணம் ஒழித்துப் பாசத்தை அன்பாய் மாற்றி
பற்றற்று வாழவழி வகுத்து விட்டேன்.
பணம் ஏனோ? பகுத்தறிவின் உயர்வில் வாழும்
பண்பை நம் பழக்கத்தால் பெற்றுவிட்டால்".

.
தொடர்புணர்தல்:

"உடலுக்கும் பொருளுக்கும் தொடர்புணர்ந்து
உழைத்துண்டு உதவுதலே கர்ம யோகம்
உயிருக்கும் பரத்திற்கும் தொடர்புணர்ந்து
உயர் அறிவில் ஒழுகுவது ஞான யோகம்
உடலுக்கும் உயிருக்கும் தொடர்புணர்ந்து
உணர்சிகளை முறைப்படுத்தல் மருத்துவம் ஆம்.
உயிருக்கும் உயிர்கட்கும் தொடர்புணர்ந்து
ஒத்துதவி வாழும் முறை அரசியல் ஆம்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 9 ஜூலை, 2015

குடும்ப நல வாழ்த்து:



ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.

வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே.
...
எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நல் வாழ்த்து :

"அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி,
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி;
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு,
நெறியோடு வாழ்க வென அழுத்தமான
நினைவலைகளைப் பரப்பி தவம் செய்கின்றேன்
பொறி புலன்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்."
.

வாழ்த்து:

"வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞ்ஞானம்!"

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 8 ஜூலை, 2015

அன்பும் கருணையும் :



 .
"பேராதாரப் பெருவெளியில் தோன்றிய நுண்ணணு முதற்கொண்டு, அவற்றின் கூட்டத்தாலாகிய அண்டகோடிகள் அடங்கிய பேரண்டத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள இறைவெளியானது (தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் அருட்பேராற்றலால் - Self Compressive Pressure Force ) எல்லாவற்றையும் ஒன்றிணைத்துக் கொண்டு எதுவும் சிதறாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றது அல்லவா? இதுவே இறைநிலையின் ஒப்புவமையற்ற "அன்பு" ஆகும். தன் சூழ்ந்த...ழுத்தும் ஆற்றலால் அனைத்துக்கும் சக்தியை அளித்து எல்லாமே அததற்கு உரிய தற்சுழற்சியோடு இயங்க வைத்து, ஒவ்வொரு தோற்றத்திலும் பருமன், விரைவு, காலம், தொலைவு என்ற நான்கு பரிணாமங்களையும் சிதறாமல் காத்து வருகின்றதே இந்தத் திருவருட்செயலே "கருணை" ஆகும்.

.
அன்பும் கருணையும் என்ற மாயக்கயிறுதான் தெய்வ நிலையையும் எல்லா பொருட்களையும், உயிர்களையும், மனிதர்களையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து நடந்து கொள்வதற்கு வாய்ப்பான ஆறாவது அறிவு மனிதனுக்கு அமைந்திருக்கின்றது. இந்தப் பெருநிதியை மனிதன் அறிந்து கொள்ளாமலோ, அலட்சியப் படுத்தியோ, உணர்ச்சிவயப்பட்டோ, வாழ முற்பட்டால் கயிறு அறுந்த காற்றாடியைப் போல், நெறி பிறழ்ந்த வாழ்வு வாழ்ந்து மனிதன் துன்பங்களை ஏற்க வேண்டிவரும். எனவே அன்பும் கருணையும் மனித வாழ்வுக்கு இன்ப ஊற்று என உணர்ந்த விழிப்புடன் வாழ்ந்தால், இன்முகமும் இனிய சொல்லும் உதவும் கரங்களும் வெற்றி வாழ்வும் உருவாகும்".

.
"அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையிலுள்ளாய்
என்மனத் தைவிரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே
கன்ம வினைகள்எல்லாம் கழிந்தன உணர்கிறேன்
உன்னை உணர்ந்து உய்ய உலகோர்க்குத் தொண்டுசெய்வேன்! "

.
என்று ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 7 ஜூலை, 2015

அலை இயக்கம்

"அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக ஒரு பதிவு ஏற்படும். அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். ஆகவே நாம் எப்பபொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு.

.
இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த பொருளும் அணுவினுடைய கூட்டுதான். ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து அலை வீசிக்கொண்டே இருக்கிறது. எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது. அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது நம் சொத்தாக பதிவாகி விடுகின்றது. அதற்கேற்ப விளைவு வருகிறது. ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி, அது செல்லும் இடமெல்லாம் அதே விளைவைத் தரும். எனவே நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய அறநெறி வாழ்வு வேண்டும். இந்த இரண்டின் வழியேதான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும்".
 .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினால்
உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்து விடும்".

.
"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 6 ஜூலை, 2015

அலையின் தொடர்பு :

தூய்மையான நல்எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றது. அதேபோன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப்பதிந்துவிடுகின்றது. 

அதுபோலவே நீங்கள் ஒருவருக்கு தீமை நினைத்து சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்கு சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றி பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பு செய்துவிட்டுத் தான் மற்றவரை சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்து பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 "எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல்
அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே
அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது".

 "நுணுக்கமான ஓர் அணுவாக ஒடுங்க மனதினால்
முடியும். அதே நேரத்தில் இந்தப் பேரண்டமாகவும்
விரிந்து நிற்கவும் மனதினால் முடியும்".

 "மனதின் அடித்தளம் இறை நிலை :
---------------------------------------------------

 "அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்
அது தெய்வம் கடல் போன்று அலை போன்றதே மனம்;
நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்
நெடுவெளி உன் அறிவாகும், உனது அலையே மனம்;
கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காத்து மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்".

. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

ஞாயிறு, 5 ஜூலை, 2015

மன்னிப்பின் மேன்மை

இப்போது ஒரு வினா எழுப்பலாம்; ஒருவர் ஒரு பெரிய கொடுமையை செய்கிறார். அவருக்கு எதிராகக் கூட சினம் கொள்ளக் கூடாதா? என்று கேட்கலாம். சினத்தினால் எங்கும் ஒரு நன்மையும் வந்ததாக இதுவரை வரலாறில்லை. தியவர்களையும், கொடியவர்களையும் மன்னித்தல் தான் சிறந்தது. அன்றி, பதிலுக்குப்பதில் அல்லது பழிக்குப்பழி என்று இறங்கினால் அதற்கு முடிவு எங்கே?

நமக்கு ஒருவர் கெடுதல் செய்தாலும் நாம் நம் வயம் இழக்கலாமோ? நம் வயம் இழந்தால் தானே சினம் வரும்? நாம் நாமாகவே இருந்தால் அதுவே அவருக்கு ஒரு பாடமாகி மீண்டும் இத்தகைய தீங்கு செய்யாதிருக்க ஒரு நல் வாய்ப்பாகும்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்து விட வேண்டுமென்றும் நமது பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் சினத்திற்கு அங்கு இடமே இல்லை.

அப்படி நமக்குத் துன்பஞ் செய்தார் மேலும் சினம் கொள்ளாததோடு அவருக்கு நன்மையும் செய்யவில்லை என்றால், அருள்துறையில் இருந்து என்ன பயன்? சினம் ஒழிந்த இடத்தில் தான் இந்தப் பெருந்தன்மை வரும்.

நான் எவ்வளவோ பொறுமையாகத்தான் இருந்தேன். எனக்குச் சினம் வரும்படியாகப் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லித் தப்பிக்க முயல வழியில்லை. பொறுமைக்கு எல்லை உண்டு என்பது சுத்தத் தவறு. பொறுமைக்கு எல்லை, வரையறை செய்தால் அது தான் வஞ்சம். ஏன், பொறுமை கடலினும் பெரிது எனும் கருத்துங்கூடத் தவறு தான். பொறுமையை எந்த அளவுக்கும் உள்ளடக்க முடியாது. எல்லை என்பதே இல்லா இறைநிலையைப் போலவே எல்லை என்பது இல்லாததே பொறுமை.

 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"செயலிலே விளைவாகத் தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப் பரமனைப் பின்வேண்டுவதால்?"
.
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம் :
------------------------------------------------------------------
"தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்,
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம்உயரும்; பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்,
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்."
.
எல்லார்க்கும் உதவி செய்வோம் :
"தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலைப் பிறரை குறைகூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூச்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துள்ள
நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்
நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 

சனி, 4 ஜூலை, 2015

குண்டலினியோகப் பயிற்சியின் மூலம் ஆறு வகைமனோ நிலைகளை சீரமைத்துக்கொள்ளலாம்

 "காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறு வகை மனோ நிலைகள் "அறுகுணம்" என்று வழங்கப் பெறுகின்றன. இவற்றை அவா (பேராசை), சினம், கடும்பற்று, பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று முறையே தமிழில் கூறப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் உள்ளன. மனிதனிடம் இம் மனோ நிலைகள் எழுச்சி பெறுகின்ற போது, அவன் உணர்ச்சி மயமாகிவிடுவதால், தீய செயல்களைப் புரிந்து விடுகிறான்.
.
"அகத்தவப் பயிற்சியாலும் ( Simplified Kundalini Meditation ) - தற்சோதனை ( Introspection )" என்ற தன்னை ஆராயும் பயிற்சியின் மூலமாகவும் தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால், இந்த ஆறு மனோ நிலைகளில்,
.
1] அவாவை (பேராசையை) - நிறைமனமாகவும்,
2] சினத்தைப் - பொறையுடைமையாகவும்,
3] கடும்பற்றை - ஈகையாகவும்,
4] பால் வேட்பைக் - கற்பாகவும்,
5] உயர்வு தாழ்வு மனப்பான்மையை - நேர் நிறை உணர்வாகவும்,
6] வஞ்சத்தை - "மன்னிப்பாகவும்" சீரமைத்துக் கொள்ளலாம்.
.
தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 3 ஜூலை, 2015

சித்து


ஜால வித்தை போன்ற - சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும் உருக...்கத்தோடு சொல்லுகிறேன், "சமூகத்திற்கு எந்தவித நன்மையையும் விளைவிக்காத நஷ்டமும் கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை சித்து எனக்கொள்ளும் மயக்கத்தை விட்டுவிடுங்கள்" நன்றாக ஆராயுங்கள். ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கி பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புத சிற்பமான குழந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால் எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு பெருஞ்சித்து அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாக பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள் இது எத்தகைய சித்து?

ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 லட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்தவிதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்கையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.  


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"சீவனில் சிவனைக் கண்டு சிந்தையில் தெளிந்தோருக்கு
ஆவதென் ஜால சித்தால் அத்தகைக் கீழ்த்தரத்தில்
போவரோ புகழைத்தேடி புல்லர்க்கே தகுதியாகும்
பாவமாம் பாமரர்க்குப் பயம் ஆசை வியப்பு காட்டல்."

.
"சித்துக்கள் என்றே பலரின் சிந்தனையை மயக்கிட்டு
எத்தனையோ அற்புதங்கள் இயற்றிக் காட்டும் நண்பா!
நித்தம் எழும் உன்பசியை நிச்சய மாய்ப் போக்குவது
உத்தமனாம் பயிரிடுவோன் உழைத் தளிக்கும் உணவன்றோ."

.
சித்து ஓர் மோசடிக் கலை :
---------------------------------------

"சித்து ஓர்கலை கற்றோரில் சிலருக்கே இலாபம், பார்க்கும்
அத்தனைப் பேர்க்கும் போதை அளித்திடும் மதுவதாகும்
பித்தர் போல் அறிவு மங்கி பெரும் இழப்படைந்தார் பல்லோர் இத்தகைச் செயல் எவ்வாறு ஈசனின் அருளாம் சொல்வீர். "

.
சித்து வேண்டாம் :
--------------------------

"சத்து எனும் மெய்ப் பொருளின் நிலையுணர்ந்து
சன்மார்க்க வாழ்வு பெற வேண்டு மென்றால்
சித்து எனும் மனமயக்கில் சிக்கிடாதீர்
சிலர் மயங்கித்தரும் பொருளோ புகழோ வேண்டாம்
வித்துவை நீ கருதவத்தால் வறுக்கும் போது
விளைகின்ற ஈடு இணையற்ற சக்தி
அத்தனையும் அறிவிற்கே ஊட்ட மாக்கி
அறிவறிந்து மக்கள் தொண்டாற்றுவீரே".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 2 ஜூலை, 2015

ஆன்மநிலை அறிவது ஏன்?

ஆன்மநிலையறிவதனால் யாது பயன்? என்று சிலருக்கு ஒரு கேள்வி பிறக்கலாம்.

பல காரணங்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவின் சக்தி புலன்கள் ஐந்திலும் இயங்கி, தன் தத்துவங்களாகிய உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து பகுதிகளையும் அறிந்துவிட்ட பின் மேலும் வேகம் அதிகரித்து மீதியாகவும், அறியப்படாததும் ஆகிய தன் ஆதி நிலையை, அரூபசக்தி தத்துவத்தை, அறியும் ஆர்வமாக ஒரு எழுச்சி பெறுகிறது.

இவ்வகையில் வேகம் கொண்ட அறிவுக்கு எவ்வளவு தான் புலன்களின் வாயிலாக அனுபோகங்கள் கிடைத்த போதிலும், அதனால் முழுத் திருப்தியும், அமைதியும் பெற முடியாது குறைவுபட்டே நிற்கிறது. அந்தப் பக்குவத்தின் தன்னிலையை அறிந்து விட்டால் எழுந்த வேகம் தணிந்து முழுப் பயன் பெற்று விடுகிறது.

உதாரணம் : ஒரு ஆற்றில் தண்ணீர் வருகிறது. குறுக்கே பல ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் இருக்கின்றன. ஆற்றுநீர் அந்தப் பள்ளங்களை நிரப்பும் வரையில் அதைத் தாண்டிப் போகாது. நிரம்பி விட்டபின் அதன் வேகம் மேலும் முன்னோக்கி ஓடுகிறது. ஒரு மேடு, மலை குறுக்கிட்டாலும் அதைச் சுற்றிக் கொண்டு சென்று கடைசியாகக் கடலில் சங்கமமாகி விடுகிறது. அதன் வேகம் அத்துடன் முடிகிறது.

அதுபோலவே அறிவின் வேகத்திற்கேற்றபடி புலன்களின் மூலம் இயங்கி, மிகுதி வேகம் தன்னையறிந்த பிறகு முடிவடைகிறது. மேலும் தன்னிலையாகிய ஆதி தத்துவம் அறிந்தபின், அங்கே அறிவின் தத்துவமும் அதன் இயக்கம், முடிவு என்பனவும் தெரிந்து விடுவதால் தானே பல உடலுருவாய் இயங்கும் ஒருமைத் தத்துவமும் இன்ப துன்பங்களின் காரணம், எழுச்சி, மாற்றம் அனைத்தும் தெளிவாக விளங்கி விடுகின்றன. இந்நிலையில் அறிவு அமைதியைப் பெறுகிறது.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஆகாசம் உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதால்
உடலுக்கு ஒரு காந்த இயக்கம் கிடைக்கிறது"

.
"ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க
வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்திவிட்டால்
அதுவே ஞானமாகவும் மலரும்".

.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே".

.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறன்றது".

.
"இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உரைந்திந் நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோகும் தன் முனைப்பு காணும் தெய்வம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 1 ஜூலை, 2015

ஊனுடம்பே ஆலயம்

உடலும் உயிரும் இசைந்து வந்திணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு, வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி, குறுகியும், விரிந்தும், நுணுகியும் இயங்கத்தக்க அறிவுத் திறன் இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கருமூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.

ஒரு உயர்ந்த குறிக்கோளோடு மனித உயிர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளன. மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்ளவும், அறிவில் முழமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெரும் நிலையான அமைதியைப் பெறவும் உள் நோக்கமாக அமைந்துள்ளதே மனித உயிர்.

அறிவின் உயர்வு பெற்று உயிரின் மாதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நொக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும்,
உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும்
கவலையாக மாறுகிறது"

.
"உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் 'வாழ்க்கை' என்கிறோம்.
பிரிவு ஏற்பட்டால் 'மரணம்' என்கிறோம்".

.
"உடலில் இரசாயன மாற்றம் ஏற்படுவதில்
நமது 'எண்ணம்' பெரும் பங்கு வகிக்கிறது".

.
"தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே
உடலையும் கெடுக்கின்றன".

.
"அகங்காரம், கோபம், சுயநலம், தர்மம் செய்யாமல் இருப்பது,
துரோகம் செய்வது, போன்றவற்றைத் தவிர்த்தால்,
மனிதனின் ஆயுள் அதிகரிக்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.