"நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும்
நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை"
இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள். அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான். முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை. ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால், கொண்டு வந்தவும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள். இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.
மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் 'நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன' என்பது புரியும். நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது. அதற்கு முரணில்லாமல், நான் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும். ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.
உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று. இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை. இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக