அகத்தவம் எனும் மனவளப் பயிற்சியால் அறிவில் நுண்மையும் உறுதியும் பெற்று ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றிணைப்பான அறநெறியை வாழ்வின் செயலாக - கர்மயோகமாகப் பின்பற்றி ஆன்மாவை முக்களங்கங்களிலிருந்து விடுவித்து, மெய்ப்பொருள் உணர்வில் சிவமே ஜீவனாக இயங்கும் உண்மை உணர்ந்த பேரின்ப அனுபவமே ஜீவன் முக்தி எனப்படும்....
தவம், அறம் இரண்டும் பயின்று ஆன்ம விடுதலை பெற உரிய காலம், வாழ்நாள் நீளம் வேண்டும். இடையிலே உயிர் உடலை விட்டுப் பிரியாது காக்க வேண்டியது ஜீவன் முக்தி பெற விரும்பினோர்க்கு இன்றியமையாததாயிற்று. எனவே ஜீவன் முக்தர்களது வாழ்க்கையில் மூன்று நோக்கங்கள் இணைந்துள்ளன.
1] அறிவில் முழுமை பெற்று இறைநிலையுணர்ந்து அந்நிலை அகலாத அறிவின் விழிப்பில் நிலைத்திருக்கப் பழக வேண்டும்.
2] தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் எழாத முறையோடு, அளவோடு உலகை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியாகிய அறவழி நின்று வாழ வேண்டும்.
3] தன் விருப்பமின்றி உயிர் உடலை விட்டுப் பிரியாமலிருக்கும் காயகல்பமுறையில் சித்தி பெற வேண்டும். அகத்தவம், அறநெறி, காயகல்பம் என்ற மூன்றும் ஒன்றிணைந்த யோக வாழ்வே ஜீவன் முக்தர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறியாகும்.
தமிழ்நாட்டில் இந்த முறையில் வாழ்ந்து அறிவிலே முழுமை பெற்றவர்கள் சித்தர்கள் என மதிக்கப் பெற்றனர். உடலிலிருந்து உயிர் பிரியாமல் மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொண்டு நிறைவு பெற்றவர்கள் பலர். அவர்களில் பதினெட்டு சித்தர்கள் புகழ் பெற்றவர்கள். உயிர் பிரியாத உடல் பெற்று ஜீவ சமாதியடைந்தவர்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. உடலை எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் அது கெடாது. அத்தகையவர்கள் உடலை அவர் சமாதி எய்திய பிறகு மண்ணில் புதைத்து அதன் மேல் ஏதேனும் சிலை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாயிற்று.
**************************************
.
அகத்தவப் பயன் :
"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்
மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை;
பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
நேர்மையுடன் வாழ உன்னில் அவன் - அவனில் நீயே."
.
"இறையுணர்வார்சிலர் முயன்று வேதநூல்கள் மூலம்
இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல்
இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி
எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;
இறைநிலையே அறிவாக இயங்கும் உண்மை காண
ஏற்றதொரு சாதனைதான் அகநோக்குப் பயிற்சி
இறையறிவாய் உலகாக உயிர்களாகத் திகழும்
இந்த உண்மை உயிர்மீது மனம் ஒடுங்க ஒளிரும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக