Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.

பழக்கத்தின் காரணமாகவும், புலன் கவர்ச்சியாலும், சூழ்நிலையாலும், நாம் தவறுகள் செய்கிறோம். செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. விழிப்புணர்வுடன் இருந்து தவறுகளைக் கண்டறிய வேண்டும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை. மனதின் மாண்புதான் மனிதனின் மாண்பு. மனதின் உயர்வு தான் மனிதனுடைய உயர்வு.
மனதை எந்த அளவில்,
உயர்த்திக் கொள்கிறோமோ,
தூய்மை செய்து கொள்கிறோமோ,
வலுப்படுத்திக் கொள்கிறோமோ,
நெறிப் படுத்திக்கொள்கிறோமோ,
அந்த அளவிலேதான் மனிதனுடைய வாழ்வு, மனிதனுடைய வெற்றி, மனிதனுடைய எல்லா வளங்களும் அமையும். விழிப்புத் தவறும் போது தோன்றும் தவறான எண்ணங்களைக் கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை நாமே விரும்பி எப்பொழுதும் மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நம்மையும் பிறரையும் இவ்வையகத்தையும் "வாழ்க வளமுடன்" "வாழ்க வையகம்" என வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்.  எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

மௌனத்தின் பெருமை :



ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம். மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்...டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம். இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? நாம் கொடுக்கிறோம். நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம். அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனக்கு வேலையில்லை. அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள். சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது. அதற்காக வருந்தவே வேண்டியதில்லை. யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை. இந்த மௌனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மௌனம் என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்துப்பேர் இருக்கிற வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது. ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார். "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !. ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும். அங்கே சுயகவனம் (attention) இல்லை. ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம். இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை. இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது. என்றைக்கு வந்தாலும் மௌனம் இருக்கலாம். நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும் வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும். போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும். அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான். இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை. அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக கௌனம் இருக்க வேண்டும். மௌனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள். பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மௌனமாக இருப்பது நல்லது. எல்லோரும் தூங்கும்போது மௌனமாகத்தான் இருக்கிறார்கள். தூங்கும்போது மௌனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை. எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மௌனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மௌனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும். அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும். எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும். இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு. இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மௌனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும். அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், 'நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்"... "ஆமா, அறிவுத் திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?".. "ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது". உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை,.. இது என்ன மௌனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும். முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன். என்று சொல்லலாம் அல்லவா?, மௌனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மௌனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும். மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும். மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் "மௌனம்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெற்றோர் பொறுப்பு

அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளைப் பொறுப்போடு நிறைவேற்றவும், ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்ற கல்வி, ஒழுக்கம், தொழில் திறம், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. இந்தப் பொறுப்பை உடல். பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்றுங்கள். கொடூரம், விகாரம், அகோரம் உடைய படங்களை வீட்டில் எந்த இடத்திலும் மாட்டி வைக்க வேண்டாம். அன்பு, அருள், இன்முகம், கலை, இவற்றோடு கூடிய உருவப் படங்களை மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக அழகு மிக்கோராகப் பிறப்பார்கள் வளர்வார்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஒருவருடைய என்ணம் மற்றவர் மூலமாக செயலுக்கு வரும்

எண்ணமானது உயிர்சக்தியிலிருந்து பிறக்கிறது. அதற்கு இடத்தாலோ , காலத்தாலோ முடிவே கிடையாது . எண்ணம் என்பது சீவகாந்த அலை . சீவகாந்தமும் வான்காந்தமும் எப்போதும் ஒற்று கலந்தே இருக்கின்றன . ஆகையால் ஒருவர் எண்ணிய எண்ணம் உடனே பிரபஞ்சம் முழுவதும் பரவி நிறைந்து விடுகிறது. எந்த எண்ணமானாலும் அது அலை வடிவில் வான்காந்தத்தில் கலந்து விடுகிறது. வான்காந்தம் ஒவ்வொரு மனிதனுடைய சீவகாந்தத்ததோடு எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறது.... ஆகையால் ஒருவர் எண்ணிய உணர்ச்சிவயப்பட்ட எண்ணம் உடனே உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்து விடுகிறது. இறைநிலையின் இருக்க ஆற்றல் அந்த எண்ணத்தை இறுக்கிச் சுருக்கிக் கருமையத்தில் சேர்த்து விடுகிறது. எந்த அலைநீளத்தில் அந்த எண்ணம் எண்ணப்பட்டதோ அதே அலை நீளத்திற்கு மற்றவர் வரும் போது , அதே எண்ணம் சீவகாந்த அலையால் விரிக்கப்படுகிறது. மூளை அதை காட்சியாக விரித்துக் காட்டுகிறது. அந்த எண்ணம் இப்போது மற்றொருவருக்கு வெளிப்படுகிறது. அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் அவரிடம் எழுந்து அவரைச் செயலில் ஆழ்த்தி விடுகிறது. இவ்வாறாக ஒருவர் எண்ணிய எண்ணத்தை மற்றவர் செயல்படுத்தும் நிலை உருவாகிறது.
--அருள் தந்தை

சனி, 22 பிப்ரவரி, 2014

முப்பூ

கேள்வி: சுவாமிஜி "முப்பூ" என்றால் என்ன ?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

உடலை கல்பமாக்க(உறுதியாக்க) சித்த வைத்திய முறையில் மூன்று விதமான உப்புக்களை சித்தர்கள் கண்டார்கள். அதற்கு முப்பூ என்று பெயர். அந்த முப்பூவைச் சரியாக எடுத்து முடித்துக் கொண்டால் மரணமே வராது என்று சொல்லக் கூடியது. அது சரியான முறையில் தயாரிக்கப்படும் பொழுது தாமிரத்தில் உள்ள களிம்பை எடுத்துவிட்டு பொன்னாகக் கூட மாற்றக் கூடிய வல்லமை பெற்றது. அதை (Alchemy) இரசவாதம் என்றார்கள். ...

இந்த மூன்றும் "பொன்நிறமான பூமியில் ஒன்று, கண்ணிறமான கடலினுள் ஒன்று, மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்றும்" உள்ளது.

1. ஒரு சில இடங்களில், பூமியில் பூப்பது பூநாதம் எனும் பூநீர். ஒரு குறிப்பிட்ட காலங்களில் மல்லிகைப் பூ போல பூத்து வரும். அதை தண்ணீரில் கரைத்துக் காய்ச்சினால் உப்பாகிவிடும்.

2. கடலில் பூப்பது கடல் நுரை.

3. மின்னலில் பூப்பது காளான்.

இதை வைத்து சில முறைகளில் சித்தர்கள் செய்ததைச் சாப்பிட்டால் உடலிலிருந்து உயிர் பிரியாது. அதுதான் முப்பூ. அதை Philosopher's Stone என்பார்கள். அதை மேல்நாட்டில் 'வாலண்டின்' என்ற ஒரு அறிஞர் செய்துள்ளார். நம் நாட்டில் சித்தர்கள் எல்லோரும் இதை அறிந்திருந்தனர்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

"ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?”


ஒருநாள் ஒரு நண்பர் மகரிஷியிடம் "ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.

G: “அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிஷி.

D: “முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டி கழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”
...
G: “நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே! பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

D: “நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

G: “உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”

D: “ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”

G: “உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்

நீங்கள் நல்ல விதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”

இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன். வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வலுப் பெற்றவுடன் இந்த தவறை விட்டு விடுவீர்கள். என்று கூறினார்.

ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெறும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குரு தட்சணையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.

D: “இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.

G: உடனே மகரிஷி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.

அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.

மகான்கள், இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழி வகை செய்பவர்கள். அதைத் தான் மகரிஷியும் செய்துள்ளார்

புதன், 19 பிப்ரவரி, 2014

கேள்வி : சுவாமிஜி, பஞ்சபூத நவக்கிரகத் தவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றலாம் என்று சொல்கிறீர்கள். அதுவும் துரியாதீதம் போன்றதுதானே? அதை எப்படி எல்லோரும் இயற்ற முடியும்?



மகரிஷியின் பதில் : துரியாதீதத் தவம் என்பது மனதை உயிரில் ஒடுக்கி பிறகு உயிரை பரத்தில் ஒடுக்க வேண்டும். இங்கு மனத்தின் அலை வேகம் குறைந்து இயற்கையினுடைய அலை வேகத்திற்கு (Natural Frequency) இறைநிலையாகிய இருப்பு நிலைக்கு வந்து விடும்....

பஞ்சபூத நவக்கிரகத் தவம் என்பது நவக்கிரக வழிபாடு போன்றது. மனதை கோள்கள் மீது வைத்திருந்தால் போதும். மனம் அதில் ஈடுபடும்பொழுது அதனுடைய தன்மையில் உயிர்க்கலப்பு பெறும். அதனால் அதிலிருந்து வரும் தீமைகள் தவிர்க்கப்படும். நன்மைகள் அதிகமாகும்.

இது "இயல்பூக்க நியதி" என்ற முறையில் எதைப் பற்றி மனம் எண்ணிக் கொண்டிருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அதனுடைய தன்மையும் மனத்தினுடைய தன்மையாக மாற்றம் பெறும்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அறிய நினைத்தால் அமைதி

தான், இயற்கை, சமுதாயம் என்ற மூன்று கோட்டு முக்கோணத்துக்குள் தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. எந்த இயற்கையும் இதை மாற்ற முடியாது.இம்மூன்றையும் மனம் அறிந்து மதிக்கும் அளவில் தான் மனத்திற்கு உயர்வு கிடைக்கும் .இந்த சமுதாயமோ இயற்கையை ஒட்டிய சில விதிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சமுதாய வளத்தையும், ஒழுங்கையும் பாதுகாத்து அதன் பயனாக இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக்கொள்ள வேண்டும் . அதற்கு மனம் தன்னையே பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனென்றால் எல்லாமே மனதிற்குள்ளாகத்தான் இருக்கின்றது.

எல்லாமே மனத்திற்குள்ளாக இருந்து தான் வர வேண்டும். மனத்தின் மகத்துவத்தை உணராதவர்கள் தனக்கும் சமுதாயத்திற்கும் துன்பம் விளைவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மனதைப் பற்றி அறியாதவர்கள் இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வரவேண்டும் என்று அறியாமல் எங்கெல்லாமோ அவற்றை தேடி அலைந்து துன்புறுவார்கள்....

----வேதாத்திரி வகரிஷி

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆறாவது அறிவு

பிரபஞ்சத் தோற்றங்களுகெல்லாம் காரணமாக உள்ள ஆதிநிலையே மெய்ப்பொருள். அதே ஆதிநிலை ஒவ்வொரு பொருளிலும் அறிவாக வளர்ச்சியில் வேறுபாடாக இருந்து கொண்டிருக்கொறது. மனிதனிடத்தில் அது சிந்தனை ஆற்றல் பெற்ற பின் , பிரபஞ்சத்தையும் அதற்கு மூலமாக உள்ள ஆதிநிளையையும் உணர்ந்து கொள்ளும்போது அதுவே "அறிவு" என்றும் "ஆறாவது அறிவு " என்றும் கூறப்படுகிறது.---

அருள் தந்தை வாழ்க வளமுடன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பிரம்ம வித்தை :


 பஞ்சபூத தத்துவத்தையும், அதன் முடிவான சுத்தவெளியையும் விளக்கி, விரித்து விரித்துப் பேசுவதால் மட்டும் கிடைத்துவிடாது. புலன் வழி இயக்கங்களை நிறுத்தித் தன்னிலையில் நிற்கும் மெய்யுணர்வு எனும் எல்லையில் தனித்து இருந்து இருந்துப் பழகி, மௌன நிலையறிந்து, அதனால் ஏற்படும் நுட்பம், சக்தி, திறமை இவைகளைக் கொண்டு மேல...ும் ஆராய்ந்து தானே ஆதியாய், அணுவாய், அறிவாய், பலவாய், ஒன்றாய், இயக்கங்களாய், இயக்கங்கள் அனைத்தையும் கடந்த மௌனமாய் இருக்கும் தன்மையை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்த அவ்வெல்லையில் மறவாத ஞாபகத்துடன் புலன்களை இயக்கி வாழவேண்டும். மனிதன் அறிவின் ஆற்றலால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறான். இவ்விதம் கற்றுக்கொள்ளும் வித்தைகள் அனைத்திலும் உயர்வானதும் முடிவானதும் தான் "பிரம்ம வித்தை" எனப்படும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 12 பிப்ரவரி, 2014

வெற்றி பெற வழி

தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும் . கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இவை தான் வேதங்கள் , புராணங்கள் சொல்லும் சாரம் ஆகும். சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்தால் . அதை அவர்களால் தீர்க்க முடியவில்லையென்றால் . அப்போது இயன்ற வரையில் நாம் அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும். ஆனால் அதனால் நமக்கு துன்பம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.... ஏனென்றால் அத்துன்பத்தினால் நாம் பிறரிடம் போய் அதை தீர்க்கும் படி கேட்கும் நிலை வந்து விடக்கூடாது அல்லவா? அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது. பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில் நமக்கு என்னென்ன தேவையோ , அது தானாகவே அமையும். இதற்காக கெஞ்சி பெற வேண்டியது இல்லை. எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்கு தகுந்தவாறு உனக்கு விளைவும் , வெற்றியும் வரும் . --

---அருள் தந்தை

சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.
"கடமையை உணர்ந்திடு. காலத்தில் செய்திடு.
உடம்புக்கும் நல்லது. உள்ளமும் தூய்மையாம்".
.
இன்று செய்ய வேண்டியது :
"அன்றிருந்த அறிவின் சூழ்நிலைக்கும்
ஆராய்ச்சித் திறமைக்கும் ஏற்ப வாழ்ந்தார்,
சென்றுவிட்ட நாட்களிலே மனிதர் வாழ்ந்து
சிந்தனையால் அனுபவத்தால் அடைந்த தேற்று,
இன்றிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும்
எதிர்கால விளைவுகளை யுகங்கொண்டும்,
என்றென்றும் மனித இனம் அல்லல் அற்று
இவ்வுலகில் வாழப் பெருமுயற்சி செய்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 10 பிப்ரவரி, 2014

மெய்யும் பொய்யும்


மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று கருதப்படுகின்றது. இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைத் தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.

ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்துவிடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.

அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது இல்லையென்று சொல்ல வேண்டுமென்பது, அகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கின்றது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டுபட்டு விட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.

இதே போன்று ஏக நிலையாக அரூப நிலையாக இருந்த தெய்வ நிலை, அணுவாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இருநிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும், அவைகளின் இயக்க நிகழ்ச்சிகளையும் வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டுபட்ட நிலை என்று சொல்லுகின்றார்கள். அப்படி இரண்டு பட்ட நிலைகளில் ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டுபட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இருளும் - ஈசனும் :
"மாசற்ற ஒளிஊடே, மறைந்திருக்கும் இருள்போல,
ஈசன் அறிவில் இருக்கும் நிலை".
.
"கடவுள் = கட + உள், ஐம்புலன்களைக் கடந்து
உள்நோக்கி அறிவை அறிவது என்று பொருள்".
.
பிரம்ம வித்தை:
"வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது,
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்


–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மனிதன்

தெய்வம், இறைநிலை, கடவுள், பரம்பொருள், பிரம்மம் எனும் சொற்கள் யாவும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான (The Source of all the Forces) ஒரே தத்துவத்தைக் குறிப்பான ஆகும். நுண்ணணு முதலாக அவற்றின் கூட்டுத் தோற்றங்கள் அனைத்தையும், ஒரு சேரக் குறிக்கும் வார்த்தை தான் பேரியக்க மண்டலம். இந்தப் பெருமண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும். 'மரம்' என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்று பல பெயர்களால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம். இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் பரிணாமத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும். பூரணம், பேராற்றல், பேரறிவு எனும் மூன்றையும் இருப்பு நிலையாகக் கொண்ட இறைநிலையின் பேராற்றல் பரிணாமச் சிறப்பால் இறுதியாக முழுமைத்தகுதி பெற்றவன் தான் 'மனிதன்'.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

இயற்கை சீற்றங்கள் எழ காரணம் என்ன?




சுவாமிஜி :

மக்களின் செயலுக்கான விளைவே இயற்கைச் சீற்றங்கள். அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்குரிய செயல்முறை இருந்தாலன்றி அமைதி கிட்டது. மனிதனே தனது செயல்களை உணர்ந்து திருந்தி தனக்கும், சமுதாயத்திக்க...ும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இயற்கை உலக மக்களுடைய எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மனிதனைத் திருத்த வேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையில் இயற்கைச் சீற்றம் தான் வரும். புயலோ,வெள்ளமோ, பூகம்பமோ ஏற்படும். சீவகாந்தத்தில் எந்த எந்த அலையிலே அழுத்தம் கொடுக்கிறோமோ அந்த மனநிலையோடு உள்ள எல்லா மக்களுடனும் எண்ணத்துக்குத் தொடர்பு உண்டாகிவிடும். அது காலத்தால் ஒளிரும்.

செயல்விளைவு நீதி உணராததே உலகத்துன்பங்களுக்குக் காரணம். எந்தப்பொருளிலும் இறைநிலையைக் காணக் கூடிய அறிவு-செயல் விளைவு நீதி உணர்ந்த தெளிவு துன்பங்களுக்கு விடிவாகும். இன்பமாக , துன்பமாக உணர்வாக விளங்குவது இறைநிலையின் தன்மாற்றமே என்று உணர்ந்தால் ஒரு மனிதன் , இன்னொரு மனிதனுக்கோ அல்லது உயிரினத்துக்கோ துன்பம் விளைவிக்கக் கூடிய துணிவு வராது .அதே நேரத்தில் துன்பபடக் கூடியவர்களுக்கு உதவி செய்யாமல் வெளியேறக் கூடிய துணிவும் வராது.விளைவறிந்து செயல் செய்தால் வாழ்வில் வெற்றியும் ,அமைதியும் ,இன்பமும் கிட்டும்.


"இறையுணர்வும் அறநெறியும் பேறாய்ப் பெற்ற
எவர்க்கும் எண்ணம் சொல் செயல்கள் மூன்றில்
மறைபொருளே பொருத்தமுள விளைவைத் தோன்றி,
மனதுக்கு இன்பம்துன்பம் அமைதி என்னும்
நிறைவுதரும், திருவருளின் நடனம் காண்பார்,
நேர்வழியில் செயல்செய்தே விளைவைக் கொள்வார்.
குறையேது? எதனை எவரிடம் கேட்டுப் பெறுவதற்கு?
குற்றமற்ற குணக்குன்று அருள் சுரங்கம்".

---அருள் தந்தை

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

குழந்தைகள் எந்த பாவமும் செய்யாத முன்னம் ஏன் பல துன்பங்களுக்கு உட்படுகின்றனர் ?

 

மகரிஷியின் விடை:

குழந்தை என்பது பெற்றோர் கர்மங்களின் தொடர் நிகழ்ச்சி என்பதை முதலில் நினைவு கொள்ள வேண்டும். வித்தில் ஏற்பட்ட பதிவு விளைவாக மலரும் இடம்... குழந்தைகள் தான். பெற்றோர் குழந்தைகள் இவர்களுடைய உடல்கள் தாம் வேறுபட்டனவே தவிர உயிர் வேறுபடவில்லை. கர்மம் வேறுபடவில்லை. எனவே குழந்தைகள் வருந்துவதற்கு பெற்றோர் மாத்திரம் அல்ல, பல தலைமுறை தாண்டிய பாட்டன் பாட்டிகளும் பொறுப்பாவார்கள்.

வாழ்க வளமுடன் !!

வியாழன், 6 பிப்ரவரி, 2014

யோகம்

ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிப் பரம் பொருளை உணர்ந்து பிறவிக் கடலை நீந்திக் கரையேறுவதற்காகவே தனக்கேற்றவாறு உடலைக் கட்டிக் கொண்டது. அதைக் காத்தும் வருகின்றது. எனினும் புலன்களில் மயங்கிக் கிடக்கும் வரை அது மாயை என்ற விளக்கமிலா மன நிலையோடும், 'தெளிவு' பெற்ற நிலையில் அதுவே தெளிந்த அறிவு நிலையிலும் செயலாற்றுகின்றது. அறநெறியில் பிறழாது வாழ்ந்து கொண்டே அறிவறிந்த பெரியோர்கள் மூலம் தனது அறிவின் ...நிலையையும், தோற்றமாகக் காணும் பிரபஞ்ச இயக்க விதிகளையும் அறியவும், அவற்றிற்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை விளங்கிக் கொள்ளவும் ஏற்ற அகநோக்குப் பயிற்சியில் ஈடுபட்டுத் தன்னைப் பற்றியும், இயற்கை விதியைப் பற்றியும், சமுதாய அமைப்பைப் பற்றியும், அறிந்து கொள்வது தவம் (Meditation) அல்லது யோகம் எனப்படும். யோகம் என்பது அகநோக்குப் பயிற்சியாகும். இது இரண்டு கட்டங்களையுடையது. மனதைப் புலன்களிலிருந்து விடுவித்து ஆன்மாவில் லயப்படுத்தல் முதற் கட்டம், ஆன்மாவைப் பரத்தில் லயப்படுத்தல் இரண்டாவது கட்டம். இந்தப் பயிற்சியினால் மனம், ஆன்மா, பரம் என்னும் மூன்று மறை பொருட்களின் நிலைகளும் அவற்றின் சிறப்புகளும் விளக்கமாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மனித உடல்

மனித உடல் மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 1) பருவுடல் 2) நுண்ணுடல் (சூக்கும சரீரம்) 3) காந்த உடல். பருவுடலில் ஓடுகின்ற நுண்ணுடலானது, விண் என்றும், ஆகாசம் என்றும் கூறப்படுகின்ற நுண் துகள்களின் ஓட்ட இயக்கமேயாகும். விண் துகளோ தன்னைத் தானே விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதனால், அது ஒரு காந்த நிலையமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண் துகளிலிருந்து வெளியேறுகின்ற இறைத்துகள் (Ether) அலைகளாக உடல் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது. உடலில் ஏற்படுகின்ற இந்தக் காந்த அலைகளை ஜீவகாந்தம் என்று சொல்கிறோம்.

இந்த ஜீவகாந்தம் தான் உடல் உறுப்புகளுக்கு ஆற்றலை அளித்துச் செயல்படுத்துகின்ற ஆற்றலாகும். பருஉடலில் இந்த ஜீவகாந்தம் உற்பத்தியாகி இடைவிடாது சுழன்று இயங்கி ஓடிக் கொண்டிருக்கும்போது இறையாற்றலின் நியதிப்படி, உடலின் மையமான் இடத்தில் சிறிது அதிகமான திணிவு பெறுகிறது. உடலில் மேலும், கீழும், பக்கவாட்டிலும் இருந்து உடல் மையத்தை நோக்கிப் பார்த்தால் அங்கு தான் இந்த ஜீவகாந்த அலையின் அழுத்த மையம் அமைந்திருக்கிறது. இதுவே தான் "கருமையம்" ஆகும். இதுவரை மெய...்ஞ்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும் உணர்ந்து வெளியிடாத ஒரு சிறப்பு இயக்கம்தான் "கருமையம்".

இந்த இடத்தை யோகிகள் மூலாதாரம் என்று சொல்வார்கள். ஆன்மாவின் இருப்பிடமான அகம் (Soul) என்றும் குறிப்பிடுவார்கள். சந்தேகமின்றி இது காந்தத் தத்துவத்தில் அடங்கிய ஒரு புதிர் போன்ற தத்துவமாகும். தன்னிலை விளக்கம், இறைநிலை விளக்கம் இவ்விரண்டையும் அறிந்தவர்களுக்குத்தான் ஜீவகாந்தத்தின் மதிப்பு நன்றாகத் தெரியும். காந்தத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு கருமைய உண்மையை விளங்கிக் கொள்வது எளிதாகும். இவ்வாறு நாம் பிறந்தது முதல் இன்று வரையில் உணருகின்ற எல்லா நிகழ்ச்சிகளும், செயல் பதிவுகளும் அலை வடிவில் சுருங்கி கருமையத்தில் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஒரு குழந்தை பிறக்குமேயானால், தாய், தந்தையாரிடமிருந்த கருமையத்தின் தன்மைகளெல்லாம் ஒன்றுகூட விடாமல் சுருங்கப் பெற்றுக் குழந்தைக்கும் கருமையத்தின் முதல் இருப்பாக அமைகிறது. இந்தத் தன்மைகளுக்கேற்ப அவன் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் செயல் ஆர்வமும், திட்டங்களும் புதிய எண்ணங்களாக உருவாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 3 பிப்ரவரி, 2014

உலகில் துன்பமில்லாமல் வாழ :



வாழ வந்த நோக்கத்தை தெரிந்து கொண்டு அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக வாழுகின்ற முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் ஊடே அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபோக அனுபவங்களை அசட்டை செய்யாமல் கவனமாக அவற்றைக் குறித்துக் கொள்ளவும் . புரிந்து கொண்டு மதிக்கவும் வேண்டும்.வாழ்க்கையின் இடையிடையே ஏற்படுகின்ற சிக்கல்களைக் கண்டு மிரளாத அளவு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றைத் தீர்த்துக் கொள்ளுகின்ற வல்லமையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்....

அறிவில் உயரு பெற உடல் , உயிர் , மனம், மெய்ப்பொருள் என்ற நான்கைப் பற்றியும் அவற்றிக்கிடையே உள்ள தொடர்பைப் பாற்றியும் சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.

--அருள் தந்தை

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

அறிவின் வறுமை :


அறியாமை, அலட்சியம்,உணர்ச்சிவயம் என்ற மூன்று வகையிலும் அறிவு வறுமை மக்களிடம் நிலவுகிறது.மனித குல வாழ்வில் எங்குமே அமைதியின்மையும் துன்பங்களும் , சிக்கல்களும் பெருகி இருக்கின்றன. இவற்றிற்குப் பொருள் வறுமை, அறிவு வறுமை எனும் ...இரண்டு அடிப்படைக் காரணங்களாகும் . அறிவு வறுமையில்லாத சமுதாயத்தில் பொருள் வறுமை எக்காரணத்தால் உண்டானாலும் அதனைக் குறுகிய காலத்தில் நிறைவு செய்து கொள்ளலாம்.

வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்தவர்கள் கண்காணிப்பில் "அறியாமையும்",வாழ்க்கையின் உண்மை உணர்ந்து சிந்தித்துத் திட்டமிட்டுச் செயலாற்றி வாழ்வதன் மூலம் "அலட்சியத்தையும் ", இயற்கை நியதியுனர்ந்து அதையொட்டி மதித்து வாழும் பண்பால் உணர்ச்சிவய மனநிலைகளையும் சமன் செய்து கொள்ளலாம்.

அறிவு வறுமை நீங்க ஆன்மீக அறிவு அவசியம் .அறிவை அறிவால் அறியத்தக்க அகத்தவப் பயிற்சி அவசியம் .

----அருள் தந்தை

சனி, 1 பிப்ரவரி, 2014

ஐம்புலன்களின் வழியே செயலாற்றி வரும் மனம் உடனே ஒடுங்கி தன்னை அறிந்து, மூலத்தை அறிந்து கொள்ள முடியுமா?




சுவாமிஜி :
ரங்க ராட்டினத்தின் மீது அமர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் சுற்றுப் புறக்காட்சியைத் தெளிவாகக் காண்பது முடியுமா? ராட்டினத்தின் சுற்று விரைவிலிருந்து நின்று நிலைத்த பின்னரே அவனைச் சுற்றியிருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்த்தறிகிறான்.
...
அது போன்றே புலன் அறிவில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் மனம் தன்னைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? மனம் நின்று நிலைக்க வேண்டுமல்லவா? அதற்கு வழியென்ன ? தன்னை ஒடுக்கித் தன் மூலநிலையாகிய உயிரற்றலில் இணைந்து , தன் இயக்கத்தில் நினைவை நிறுத்தினால் தானே அது சாத்தியம்?

மனம் உள் ஒடுங்கக்கூடிய ஆற்றலோடு , கூடவே அலைந்தும், விரிந்தும் , கவர்ந்தும் செல்லக்கூடியது. இதன் காரணமாக விலங்கினப் பதிவுகள் எழுச்சி பெற்று பழிச்செயல்கள் ஆற்றி பிறவித் தொடர் நீள்கிறது. பலப் பிறவிகள் தோறும் ஆற்றிய செயல்களிலிருந்து விடுதலை பெற வேண்டியது மிகமிக இன்றியமையாதது. அதற்கான பயிற்சிதான் அகத்தவம் .

மனதின் பிறப்பிடமாகிய உயிராற்றலிலேயே மனதை நிறுத்தி அடக்கி முதலில் தன்னை உயிராக உணர்வதும், ஆதன் பின் தன விரைவைக் குறைத்து மேலும் ஒடுங்கிச் செயலற்று நின்று பரமாகி அமர்ந்து தன தகைமையை உணர்வதும் முடிவான முறை. இதுவே அறிவின் முழுமைப்பேறு .

--வேதாத்திரி மகரிஷி