நமது உடலை பாதுகாக்கச் செய்யும் செயல் இறைவழிபாடு இல்லையா!. அதுபோல் மற்றவரையும் பாதுகாக்க நாம் செய்யும் செயலும் உதவியும் இறைவழிபாடுதான் என்ற தெளிவையும் பெற வேண்டும். அதற்கு ஏற்பப் பிறரை மதித்து நடத்தவும் வேண்டும். இந்த முறையில் இறைவனை அறிந்தால் அன்பு மலரும். ஏனென்றால் இறைநிலை என்பது இறுக்க ஆற்றல். எல்லாவற்றையும் ஈர்த்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்தப் பேரியக்க மண்டலத்தில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களை எல்லாம் கட்டிப் பிடித்து ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் வைத்துக் கொண்டிருக்கிறதே இதுதான் அன்பு. அன்பு என்றால் ஈர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பது, கவர்ந்து பிடித்துக் கொண்டிருப்பது. ...
அந்த அன்புக்கு மேலாக எல்லாம் நலமாக இருக்க வேண்டி உதவி செய்வது கருணை. இந்த இரண்டும் வேறு வேறு அல்ல. அன்பை உணர்ந்தால் தானாகவே கருணை பிறக்கும்.
உதாரணமாக :
ஒரு குழந்தையைத் தாய் தன்னோடு இணைத்துக் கொண்டிருப்பது, விடாமல் பார்த்துக் கொள்வது அன்பு(Love). அதற்கு மேலாக அதை ஊட்டி வளர்ப்பது கருணை (Compassion). இறைவனின் தன்மாற்றத்தில் தாவரம் முதல் எல்லா இடங்களிலும் இந்த அன்பை பார்க்க முடியும். மாமரத்தில் ஒரு பிஞ்சு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது விழாது இருப்பதற்குக் காம்பு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அது மேலும் வளரும்போது அதனுடைய கவனத்திற்கு தகுந்தவாறு காம்பு பெரிதாகி அதை விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் அன்பு. அதற்கு மேலாக அது வளர்வதற்கு வேண்டிய இரசத்தை ஊட்டி பாதுகாத்து பெரிதாக்கி பழமாக வளரச் செய்கிறது. அதுதான் கருணை.
அன்பும் கருணையும் இறைநிலையின் தன்மை. இது சீவகாந்தத்தின் மூலமாக எழும் இறைநிலையின் மலர்ச்சி.
"கருவுக்குள் முட்டைக்கும் கல்லுக்குள் தேரைக்கும்
உணவை வைத்த இறைவன் என்னை மட்டும் விட்டு விடுவானா?"
என்று பழைய பாடல் ஒன்றின் மூலம் அறிகிறோம்.
நாம் தோண்றுவதற்கு முன் நமக்குத் தேவையானவற்றை இறைவன் பூமியில் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறிவோம். ஒருவருக்கு வாழ்க்கைத் துணை தேவை என்றால் உடனே தயார் செய்யவா முடியும்? எவ்வளவு கருணையோடு நமக்காக உலகில் படைத்து வளர்த்து நம் வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சிக்காவும் அருள்புரிகிறது. சிந்தித்தால், ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்திலிருந்தே நமக்கு உதவி வருகிறது என்பதை அறிய முடியும். எனவே, அன்பை நாம் பெற வேண்டுமெனில் முதலில் அன்பை நாம் தந்தாக வேண்டும். அன்பும் கருணையும் தன்னை உணர்ந்த உயிருக்கு எளிதில் புரியும். தன்னை உணர நினைப்பவர்க்கு அன்பும் கருணையும் நிறைந்த மனம் இறைநிலையோடு இணைத்து வைக்கும்.
உலகில் அன்பும் கருணையும் நிலைபெற்றாலன்றி தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி என்பதெல்லாம் கேள்விக்குறியே!.
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக