பிறவியின் நோக்கத்தை ஒட்டிய எண்ணங்களுக்கு, உடலிலும் மனதிலும் பிணக்குகளை ஏற்படுத்தக் கூடிய செயல்களும், துன்பம் தரும் செயல்களும் "தீய வினைகள்" என்பனவாகும். பிறவியின் நோக்கத்தைப் பிணக்கின்றி தடையின்றி முடிக்கத்தக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணங்களும், செயல்களும் "நல்வினைகளாகும்". இந்த இரு வினைகளில் மனிதனுக்கு வேண்டியவை நல்வினைகளே ஆகும். அவை வாழ்விற்கு வளமும் நலமும் தருவதோடு, பிறவியின் நோக்கத்தைத் தடையின்றி நிறைவேற்றும் அறிவின் பயணமாக அமையும். இந்த உண்மையை உணரும்போது அறிவு ஒரு அளவில் உயர்ந்தே இருக்கின்றது. ஆயினும் தீய வினைகளை விட்டுவிடவும், நல்வினைகளையே ஆற்றவும் மனிதன் விருப்பம் கொண்டாலும், பழக்கத்தினாலாகிய இயல்புகள், மனிதனை அவன் விரும்பிய நல்வழியே எளிதாக போக விடாமல் தடுக்கின்றன. அதனால் குண்டலினி தவம் (Meditation) முறையாகப் பழகிக் கொண்டு, மன உறுதியோடும் தெளிவோடும் செயல்களை நல்வினை தீவினை என்று பாகுபடுத்திக் கொண்டு, நல்வினையே அன்றி மற்றதை விரும்ப மாட்டேன், செய்ய மாட்டேன் என்ற உறுதியில் நிலைத்துச் செயலாற்றி வாழ்வதே தனக்கும் துன்பத்தை நீக்கி, பிறருக்கும் துன்பம் அளிக்காமல் வாழக் கூடிய அறநெறி வாழ்வாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக