Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 31 டிசம்பர், 2013

கவலை

தப்புக்கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி, ஒழுங்கமைப்புக்கேற்றபடி அப்போதைக்கபோதே அளிக்கும் சரிவிளைவு எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்." ... கவலை என்பது உள்ளத்தின் கொடிய நோயாம். கணக்கு தவறாய் எண்ணம் ஆற்றலாம். கவலை என்பது வாழ்வில் சிக்கல் கண்டு மனம் திகைப்படையும் நிலையாகும். கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையைக் கணிக்க முடியாமல் போகும். சிக்கல் பெரிதாகத் தோன்றும் அதன் நுட்பம் தெரிந்து அவிழ்க்கின்ற திறமை குறைந்து போகும். தீர்க்க முடியாத சிக்கல் என்று எதுவுமே கிடையாது . தீர்க்கின்ற வழியைத் தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு. "திறக்க முடியாத பூட்டே கிடையாது. அதற்கான சரியான சாவியைக் கண்டு பிடிக்கத்தெரியாதவர் தான் உண்டு."

உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும் உயிரின் களங்கமாக விளங்கும் வாழ்க்கைச் சிக்கல்களும் கவலையாக மதிக்கப்படுகின்றன. உடலுக்காயினும் அல்லது மனத்துக்காயினும், சிக்கல்கள் வரும்போது அந்தச் சிக்கல்களைச் சந்திக்கப் போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம். கவலை எந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகிறது? நினைப்புக்கும் நடப்புக்கும் இடையே... வித்தியாசம் வரும்போது அச்சூழ்நிலையை மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதபோது அந்த மனநிலையைக் கவலை என்கிறோம். கவலை என்பது ஒருவகை உளநோய். தனது இயலாமையை உணர்ந்து, நினைந்து அல்லது கற்பித்துக்கொண்டு வருந்தி அமைதி இழந்து இயங்கும் மனோநிலைதான் கவலை.

திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும். வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள்தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை. தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.

திங்கள், 30 டிசம்பர், 2013

கருமையம் எனும் தெய்வீகப் பெட்டகம் :



உடலியக்கத்தாலும் மன இயக்கத்தாலும் ஏற்படும் சீவகாந்த ஆற்றலின் தாக்கங்கள் அனைத்தும் உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலில் கலந்து சுருங்கிக் கருமையத்தில் இருப்பாகி விடுகின்றன. கருமையத்தில் அமைந்திருக்கும் பதிவுகள் அவ்வப்போது மூளைச் செல்கள் மூலம் விரிந்து எண்ணங்கள் என்னும் அகக் காட்சிகளாக மலர்கின்றன. எனவே, கருமையம், மூளை, புலன்கள், இம்மூவகையும் வான்காந்தக்களத்தின் ச...ிறப்பு மிக்க உயிரினங்களின் செயல்பாடுகளாகும். கருமையத்தில் ஒருபதிவு ஏற்பட்டால் அது எப்போதும் அழிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அது ஒரு பதிவேடு போல உதவுவதோடு அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபு வழிப் பதிவுகளாகச் சிறுது கூட மாறாமல் ஜெராக்ஸ் பிரிண்ட் போல பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வரும்.

மனித வாழ்வில், எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று வகைச் செயல்கள் உள்ளன. அவற்றிற்கேற்ற விளைவுகளும் உண்டு. மீண்டும் மீண்டும் அவற்றையே செய்ய எண்ணமும் செயல்களும் எழும். இவையாவும் பதிவுகளாகி அறிவாட்சித்தரமாக அமைந்து விடும். அறிவாட்சித் தரமே ஒருவர் வாழ்வில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய அனைத்தையும் அளிக்கவல்லது. எனவே ஒவ்வொருவரும் தனது கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எண்ணம் ஆராய்தல், என்னும் தற்சோதனைப் பயிற்சி மூலமும், உடலில் உள்ள நோய்கள் மூலமும் கருமையத்திலுள்ள களங்கங்களை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். பிறகு அந்தக் களங்கங்களைத் தூய்மை செய்வதற்கு ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு, அப்பயிற்சிகளின் வழியே பெற்ற விளக்கத்தின் படியே வாழ்க்கையை நடத்தி வரவும் வேண்டும். பொதுவான மனிதகுல நீதியான எவருக்கும் துன்பம் எழாத முறையில் செயல் புரிந்து ஒழுக்கமாக வாழ்வதோடு பிறர் துன்பங்களை முடிந்தவரை தனது உடல் பொருள் ஆற்றல் இவற்றைக் கொண்டு போக்கி வரவும் வேண்டும். கருமையம் எனும் தெய்வீகப் பெட்டகத்தை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி நமக்கு உண்டாக வேண்டும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?



சுவாமிஜியின் பதில் :

 மனித உடலில் electrical, mechanical and chemical energy அவ்வப்போது மாறும். கிரகங்களுக்கு ஏற்றவாறு உடலின் சருமத்தில் சில ரசாயன மாற்றங்கள் உண்டாகும். அதற்குதான் கைரேகை, மச்சம் என்று சொல்வார்கள். இவைகள் எல்லாம் என்ன எடுத்துக் காட்டுகின்றன என்று பார்த்து, கிரகங்களில் இன்னின்ன அழுத்தம் இருக்குமேயானால் இன்ன இட...த்தில் மச்சம் வரும் என்று கண்டுபிடித்தார்கள். அந்த ரேகை இப்படித்தான் வரும் என்பதையும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, அந்த கிரகங்களுடைய வேறுபாட்டினாலும் கைரேகை மாறிக் கொண்டே வரும். அதைக் கொண்டு பலன் சொல்வார்கள்; ஆனால் அவ்வளவும் சரியாக இராது. இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அவ்வளவையும் நுண்மையாகக் கணிக்க முடியாது. கூறப்படும் ஹேஸ்யங்கள் ஓரளவுதான் சரியாக இருக்கும்.

ஒரு கை ரேகைக்காரன் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து என்னுடைய ஆயுள் 58 வயது வரை தான் என்று சொன்னான். நான் கேட்டேன், "எதைவைத்து 58 வயது என்று சொல்கிறாய்?" என்று. இங்கு வந்து ஒரு கட்டு இருக்கிறது, அப்படி இப்படி என்றான். "சரியப்பா, எனக்கு இருக்கிற பணியைப் பார்க்கிறபொழுது இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கவேண்டும். ஆயுளை மாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன், நீ ஏதாவது வழி சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். "அதெல்லாம் இல்லைங்க, உங்களுக்கே தெரியும். நீங்களாகத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, நான் இருப்பதைத்தான் இப்பொழுது கணக்குப் போட்டுச் சொன்னேன்," என்று சொன்னான். தவத்தினாலோ (Meditation) அல்லது நீங்கள் உணர்ந்த ஒரு தன்மையினாலோ உங்கள் ஆயுளையே நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நாம் ஏற்கெனவே செய்ததன் விளைவாகத்தான் இன்றைய நிலை என்கிறபொழுது, இன்று முதல் நாம் செய்வதன் விளைவாக எதிர்காலம் அமையும். நாமே உருவாக்கக்கூடிய ஒன்றுக்கு கைரேகைக்காரனையோ கிளி ஜோசியனையோ நம்பிப் பணத்தையும் பொழுதையும் விரயமாக்குவானேன்!.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 28 டிசம்பர், 2013

சாந்தி தவம்: சில பயனுள்ள நுணுக்கங்கள்

 

1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்.

2. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்....

3 .வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.

4. ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.

5. அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும். தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள்) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.

6. ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.

7. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

8. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.

9. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

10. ஒரு அன்பர் சொன்னது: குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தனது துன்பத்திற்கு காரணம் யார்?

சுவாமிஜி : "சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை. தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர்.எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும்தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது. தனக்கு வரக்கூடிய இன்பமோ,துன்பமோ, லாபமோ, நட்டமோ, புகழோ, இகழோ, வரவோ, செலவோ, தன்னுடைய செயலிலேயிருந்துதான் பிறக்க முடியுமே தவிர வேறு எங்கிருந்தும் வராது.

ஒவ்வொருவரிடமும் வினைப்பதிவுகள் உள்ளன. அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி. தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம். பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக் கொண்டு வருகிறது....

ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார் அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்க்கை அவரது வினைப்பதிவை வெளிக்கொணர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கிறது என்றுதான் பொருள். எனவே தீமை செய்தவர்த்தானே விரும்பி இன்னோருவருக்கு துன்பம் அளித்தார் என்று கருதுவதை விட துன்பம் கண்டவரின் வினைப்பதிவை இயற்கை தனது ஒருங்கிணைந்த பேராற்றலினால் இன்னொருவர் மூலம் வெளிக்கொணர்ந்து நேர் செய்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். "
 

வியாழன், 26 டிசம்பர், 2013

செயலிலே விளைவாக இருப்பது தெய்வ ஒழுங்கமைப்பே:




தெய்வநிலையே தன்மாற்றத்தால் இறைத்துகளாகி, அவை கூடி அணுவாகி அதுவே நுண்ணியக்கமாகி , அதனுடைய கூட்டால் பிரபஞ்சமாகி, அதனுடைய செயற்கையால் பல கோடி உயிரினங்கள் ஆயிற்று . எல்லாமே தெய்வமாக, தெய்வத்தினுடைய பிரதிநிதியாக இருப்பதால் இறைநிலையின் தன்மைகள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பொருட்களுக்கும், உயிரினங்களுக்கும் இருக்கின்றன .

ஒவ்வொரு செயலிலேயும் இறைநிலை அழுத்தம், ஒலி ,ஒளி ,சுவை , மணம் இவையாக உருவெடுத்து வெளிப்பட்டுப் பயனாக விளைகின்றது. செயலின் மூலமாக விளைவாக வருகிறது. அவரவர்கள் செயலிலே விளைவாக வருவது இறைநிலையினுடைய பிரதி பிம்பம் அல்லது உருவம். எனவே தனக்கு வேண்டுவது எதுவோ அதைப் பெறுவதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்ய வேண்டும் . தெய்வீக ஒழுங்கமைப்பை உணராமலோ உணர்ந்தும், அலட்சியம் செய்தோ அல்லது உணர்ச்சிவயப்பட்டோ துன்பம் விளையக்கூடிய செயலைச் செய்து விட்டால் பிறகு அந்த விளைவிலிருந்து தப்ப முடியாது....

"செயலிலே விளைவாக
தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப்
பரமனைப் பின்வேண்டுவதால்?"

--வேதாத்திரி மகரிஷி

புதன், 25 டிசம்பர், 2013

அன்பும் கருணையும்




நமது உடலை பாதுகாக்கச் செய்யும் செயல் இறைவழிபாடு இல்லையா!. அதுபோல் மற்றவரையும் பாதுகாக்க நாம் செய்யும் செயலும் உதவியும் இறைவழிபாடுதான் என்ற தெளிவையும் பெற வேண்டும். அதற்கு ஏற்பப் பிறரை மதித்து நடத்தவும் வேண்டும். இந்த முறையில் இறைவனை அறிந்தால் அன்பு மலரும். ஏனென்றால் இறைநிலை என்பது இறுக்க ஆற்றல். எல்லாவற்றையும் ஈர்த்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தப் பேரியக்க மண்டலத்தில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களை எல்லாம் கட்டிப் பிடித்து ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் வைத்துக் கொண்டிருக்கிறதே இதுதான் அன்பு. அன்பு என்றால் ஈர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பது, கவர்ந்து பிடித்துக் கொண்டிருப்பது. ...

அந்த அன்புக்கு மேலாக எல்லாம் நலமாக இருக்க வேண்டி உதவி செய்வது கருணை. இந்த இரண்டும் வேறு வேறு அல்ல. அன்பை உணர்ந்தால் தானாகவே கருணை பிறக்கும்.

உதாரணமாக :

ஒரு குழந்தையைத் தாய் தன்னோடு இணைத்துக் கொண்டிருப்பது, விடாமல் பார்த்துக் கொள்வது அன்பு(Love). அதற்கு மேலாக அதை ஊட்டி வளர்ப்பது கருணை (Compassion). இறைவனின் தன்மாற்றத்தில் தாவரம் முதல் எல்லா இடங்களிலும் இந்த அன்பை பார்க்க முடியும். மாமரத்தில் ஒரு பிஞ்சு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது விழாது இருப்பதற்குக் காம்பு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அது மேலும் வளரும்போது அதனுடைய கவனத்திற்கு தகுந்தவாறு காம்பு பெரிதாகி அதை விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் அன்பு. அதற்கு மேலாக அது வளர்வதற்கு வேண்டிய இரசத்தை ஊட்டி பாதுகாத்து பெரிதாக்கி பழமாக வளரச் செய்கிறது. அதுதான் கருணை.

அன்பும் கருணையும் இறைநிலையின் தன்மை. இது சீவகாந்தத்தின் மூலமாக எழும் இறைநிலையின் மலர்ச்சி.

"கருவுக்குள் முட்டைக்கும் கல்லுக்குள் தேரைக்கும்
உணவை வைத்த இறைவன் என்னை மட்டும் விட்டு விடுவானா?"
என்று பழைய பாடல் ஒன்றின் மூலம் அறிகிறோம்.

நாம் தோண்றுவதற்கு முன் நமக்குத் தேவையானவற்றை இறைவன் பூமியில் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறிவோம். ஒருவருக்கு வாழ்க்கைத் துணை தேவை என்றால் உடனே தயார் செய்யவா முடியும்? எவ்வளவு கருணையோடு நமக்காக உலகில் படைத்து வளர்த்து நம் வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சிக்காவும் அருள்புரிகிறது. சிந்தித்தால், ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்திலிருந்தே நமக்கு உதவி வருகிறது என்பதை அறிய முடியும். எனவே, அன்பை நாம் பெற வேண்டுமெனில் முதலில் அன்பை நாம் தந்தாக வேண்டும். அன்பும் கருணையும் தன்னை உணர்ந்த உயிருக்கு எளிதில் புரியும். தன்னை உணர நினைப்பவர்க்கு அன்பும் கருணையும் நிறைந்த மனம் இறைநிலையோடு இணைத்து வைக்கும்.

உலகில் அன்பும் கருணையும் நிலைபெற்றாலன்றி தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி என்பதெல்லாம் கேள்விக்குறியே!.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 24 டிசம்பர், 2013

எண்ணத்தில் விழிப்பு நிலை



"ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டால் போதும் . மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று ".

"வெறும் எண்ணம் மட்டும் தானே நான் என்ன செயலிலா இறங்குகிறேன்?" என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்துவிடக் கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய் விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனத்தில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்து விடும் . அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம் ....

இன்னொன்று , செயலில் இறங்க மாட்டேன் என்ற நிதானத்துடன் ஒரு தீய எண்ணத்திற்கு இடம் கொடுத்தாலும், திரும்ப திரும்ப மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற வேட்பையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும் . இதைத் தான் "உள்ளத்தால் உள்ளலும் தீதே .." என்று கூறியுள்ளார்கள் .

எனவே அயரா விழிப்பு நிலையில் இருந்து நாம் நல்ல எண்ணங்களையே பதிய வைத்துக்கொண்டிருந்தால் அது உடல் செல்களிலும் பதிந்து நற்குணமாக மாற்றம் பெரும் .

---அருள் தந்தை

வியாழன், 19 டிசம்பர், 2013

மாயை :


 மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி அறுகுணங்களாகச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும், பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.

இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்க நிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம்.

---அருள் தந்தை

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நல்வினை - தீவினை :



 பிறவியின் நோக்கத்தை ஒட்டிய எண்ணங்களுக்கு, உடலிலும் மனதிலும் பிணக்குகளை ஏற்படுத்தக் கூடிய செயல்களும், துன்பம் தரும் செயல்களும் "தீய வினைகள்" என்பனவாகும். பிறவியின் நோக்கத்தைப் பிணக்கின்றி தடையின்றி முடிக்கத்தக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணங்களும், செயல்களும் "நல்வினைகளாகும்". இந்த இரு வினைகளில் மனிதனுக்கு வேண்டியவை நல்வினைகளே ஆகும். அவை வாழ்விற்கு வளமும் நலமும் தருவதோடு, பிறவியின் நோக்கத்தைத் தடையின்றி நிறைவேற்றும் அறிவின் பயணமாக அமையும். இந்த உண்மையை உணரும்போது அறிவு ஒரு அளவில் உயர்ந்தே இருக்கின்றது. ஆயினும் தீய வினைகளை விட்டுவிடவும், நல்வினைகளையே ஆற்றவும் மனிதன் விருப்பம் கொண்டாலும், பழக்கத்தினாலாகிய இயல்புகள், மனிதனை அவன் விரும்பிய நல்வழியே எளிதாக போக விடாமல் தடுக்கின்றன. அதனால் குண்டலினி தவம் (Meditation) முறையாகப் பழகிக் கொண்டு, மன உறுதியோடும் தெளிவோடும் செயல்களை நல்வினை தீவினை என்று பாகுபடுத்திக் கொண்டு, நல்வினையே அன்றி மற்றதை விரும்ப மாட்டேன், செய்ய மாட்டேன் என்ற உறுதியில் நிலைத்துச் செயலாற்றி வாழ்வதே தனக்கும் துன்பத்தை நீக்கி, பிறருக்கும் துன்பம் அளிக்காமல் வாழக் கூடிய அறநெறி வாழ்வாகும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 16 டிசம்பர், 2013

முக்தி


 ஒரு மனிதன் சிந்தனை ஆற்றல் மிகுந்து பிறவித் தொடரை அறுத்து விட எண்ணுகிறான். முறையாக ஆசானிடம் அகநோக்குப் பயிற்சி (குண்டலினி யோகம்) பெற்று புலன்களை விளைவறிந்த விழிப்போடு ஆளும் திறமை பெற்று விடுகிறான். பின்னும் அறிவு மேலோங்கி நடுமனதில் பதிவாகியுள்ள பழிச் சுமைப் பதிவுகளை "துரிய நிலை" தவத்தாலும், அந்நிலையில் நின்று ஆராய்ச்சியாலும் மாற்றிக் கொள்ளுகிறான். "துரியாதீத" நிலையெய்தி மெய்ப்பொருளோடு இணைந்து நின்று நின்று, நிலை பேறு அடைந்து அறிவின் முழுமை பெறுகிறான். உயிர் உடலில் இயங்கும்போதே தெய்வ நிலைத் தெளிவும், பழிச் சுமை கழிவும் உண்டாகிவிடுகின்றன. அவன் உடலை விட்டு உயிர் பிரிந்தால் அது முழு விடுதலை விரைவு கொண்டு உடனே பேரியக்கத் தொடர்கள உயிரில் (Universal soul) கலந்து விடுகின்றது. இந்தப் பிரிவைச் சேர்ந்த முடிவுதான் "முக்தி" அல்லது "மோட்சம்" எனப்படும். "விடுதலை" என்றுதான் இச்சொற்களுக்கும் பொருள். அறிவின் முழுமைப் பேறடைய விரும்பும் மக்களுக்கு இத்தகைய உயிராற்றல் எப்போதும் "ஆன்ம ஒளி" தரும் பிரதிபலிப்பு ஆற்றலாக விளங்கும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 12 டிசம்பர், 2013

இன்று நிலவி வரும் குழப்பங்களையும், வேறுபாடுகளையும் முழுமைப் படுத்த வழி

மக்கள் குலத்தை நடத்துவதற்கு மூன்று தலைமைகள் தேவை என்பதை மறுக்க முடியாது.
 அவை. 
1) ஆட்சி, 2) மதம், 3) பொருள்துறை.
 இம்மூன்று துறைகளின் தலைவர்களும் ஒன்று கூடி, 'சிந்தனையாளர்கள் கருத்தரங்குகளை' நடத்த வேண்டும். அந்தக் கருத்தரங்கிற்குத் தலைவராக உள்ளவரிடம், இரண்டு வினாக்களைக் கொடுத்து மேற்சொன்ன தலைவர்களையெல்லாம் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு வினாக்கள் இவைதான்.

1) தெய்வம் என்பது ஒன்றா? பலவா?
2) ஒன்று என்று தீர்மானமானால் எந்தப் பேராற்றலைத் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளலாம்?
...
முக்கியமாக மனித குலத்திற்கு வாழ வழி காட்டிப் பாதுகாக்க வேண்டிய மதத் தலைவர்கள், இத்துறையில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று தலை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.
இறைநிலை என்பது மறைபொருள். புலன்களுக்கு எட்டாது. அறிவின் அலை நிலையாகிய மனச்சுழல் விரைவைப் படிப்படியாகக் குறைத்து, டெல்டா அலைக்கு அதாவது வினாடிக்கு ஒன்றிலிருந்து மூன்று சுழல் வரையில் மனம் வருகின்ற போது தான், மறைபொருள் விளக்கங்கள் கிடைக்கும். குண்டலினி சக்தியின் மீது மனம் வைத்து ஆழ்ந்த தியானப் பயிற்சி செய்பவர்கள் மாத்திரம்தான் இத்தகைய மனநிலைக்கு வர முடியும். ஆகவே இங்குள்ள மதத்தலைவர்கள், தத்துவஞானிகள் அனைவரையும் வேண்டிக் கொள்வது இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே ஒழிய, மனித குலத்தில் ஆன்மீகத் துறையில், இன்று நிலவி வரும் குழப்பங்களையும், வேறுபாடுகளையும் முழுமைப் படுத்த வேறு வழியே இல்லை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 11 டிசம்பர், 2013

பிரம்மஞானம்

பிரம்மஞானம் என்பது மனிதகுல வாழ்வுக்கு மேன்மையை அளிப்பதும், சிறப்பைத் தருவதும் ஆகும். ஐந்து ஞானந்திரியங்கள் எனும் தொடு உணர்வு, சுவையுணர்வு, மணஉணர்வு, ஒளி உணர்வு கருவிகளாகத் தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவைகளுக்கும் - தொழில் செய்கருவிகளான கை, கால், வாய், பால்குறி, குதம் ஆகியவற்றிற்கும் அறிவை அடிமையாக்கிச் செயல்புரிந்து வாழும் வாழ்க்கையானது ஐயறிவுக்குட்பட்ட விலங்கின வாழ்வாகும். ஆறாவது அறிவை மன ஆற்றலோடு இணைத்துக் கொண்டு, ஐந்து உணர்கருவிகளையும், ஐந்து தொழில் கருவிகளையும் விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் ஆக்க வழிகளில் பயன்படுத்தி வாழும் நுண்ணறிவு வாழ்வே மனித இனத்திற்கு ஒத்ததாகும். இத்தகைய உயர் வாழ்க்கைக்கு இயற்கையை, அதன் ஆற்றல்களை, விளைவுகளை, மனிதன் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அடுத்து மனித உடல் அமைப்பையும், மனதின் ஆற்றல்களையும் தெளிவாக உணர்ந்து கொள்வதும் அவசியம் ஆகும். பிரம்மஞானம் எனும் பேரியக்க மண்டலம், மனிதன் என்னும் இரண்டு தத்துவங்களின் தோற்றம், இயக்கம் விளைவுகள் பற்றிய முழுமையான விளக்கம் மிகவும் அவசியம் ஆகும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கேள்வி: கோபத்தை அடக்கி வாழ்ந்தால் கோழை என்று எண்ணி விடுவார்கள். இதை தவிர்க்க என்ன வழி?


 வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
கோபம் கொள்வது தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிலே இருந்து எழக்கூடிய குழப்பம் தான் இது.
சினம் தவிர்த்த எவரையும் கோழை என்று உலகம் கூறவில்லை. மனோ வல்லமை பெற்றவன் என்று இதயப்பிரியன் என்றும் இதுவரையிலே உலகம் கூறி வந்திருக்கிறது.
சினம் கொள்வது வீரமென்ற ஒரு மாற்றுக் கருத்தை, தவறான கருத்து நாம் பதித்து கொண்டு இருக்கும் போது இந்தக் கருத்திலே இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது ,அவரவர் அம்மாதிரி எண்ண இடம் இருக்கின்றது.

கோழை என்று பிறர் நினத்தாலும் கூட சரி, நான் சினம் கொள்ளமாட்டேன். சினத்தின் கேட்டினை நான் அறிவேன். ஆகவே சினம் கொள்ளமாட்டேன்.
அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன் என்ற ஒரு திண்மையோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் செய்து பாருங்கள்.
உங்களோடு தொடர்பு கொண்டவர்களை நீங்கள் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்று எண்ணமாட்டார்கள் வீரர் என்றே போற்றுவார்கள்.
____

திங்கள், 9 டிசம்பர், 2013

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரைத் தியானத்தின் மூலமாக நிறுத்த இயலுமா ?


வேதாத்திரி மகரிஷியின் விடை:

இரண்டு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போரின் விளைவுகளையும், கொடுமைகளையும் தியானத்தின் மூலம் ஏற்படக் கூடிய மன அமைதியினால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். நிறுத்த முடியாது. தியானம் செய்தாலும் தனிமனிதனுடைய மனோசக்திக்கு ஓர் எல்லை உண்டு.

போர் வெறியர்கள் அத்தனை பேருடைய மனதையும் மாற்றக் கூடிய அளவுக்குத் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றால் போரை நிறுத்தி, அமைதி ஏற்படுத்த இயலும்

சனி, 7 டிசம்பர், 2013

இறை நிலையை உணர

இறைநிலையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தே எல்லா வழுக்கல்களுக்கும் காரணம். உண்மையில் இறைநிலையே பிரபஞ்சமாக தன்மாற்றம் (Transformation) அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைநிலை வேறாகவும், பிரபஞ்சப் பொருட்கள் வேறாகவும் இருக்கின்றன என்பதே தவறான கருத்து ஆகும்.
இறைநிலையை சில அடையாளங்களோடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐம்புலனறிவோடு இயங்குகின்ற மனிதர்கட்கு இறை நிலையைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் எளிதில் பிடிபடா. என்றாலும், ஆறாவது அறிவு நிலையில் முதிர்ச்சியடைந்தவர்கள் பயிற்சியினால் (Meditation) இறைநிலையோடு கலந்து அதன் உண்மை நிலைகளை உணர முடியும்; உணர்ந்தும் உள்ளார்கள். அந்த அனுபவங்களை - அடையாளங்களாகக் காட்டி மற்றுமுள்ள மனித குலத்திற்கு அந்த அருட்பேராற்றலைப் பற்றி விளக்குவது எளிதேயாகும். சாதாரணமாக மனிதருக்குள் 'அறிவு ஆராய்ச்சி' நிலையில் சில வழுக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஆறாவது அறிவு இயங்கவில்லை என்றோ, குறைவாக உள்ளது என்றோ கருத்து அன்று. அறிவின் கூர்மையும், நீடித்த சிந்தனையும் மறைபொருட்களை ஆராய்வதற்கு மிகவும் அவசியம். எந்தப் பொருளைப் பற்றி உணர வேண்டுமானாலும் அந்தப் பொருளைவிட நுண்ணிய நிலையில் அறிவு இயங்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான உளப்பயிற்சி தான் "அகத்தவம்"(Meditation) ஆகும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 5 டிசம்பர், 2013

தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி :

நினைவுக்கு எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பல வகையான உடற்பயிற்சிகள் உருவாகியுள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் [நகரும்] நிலையில் இருந்ததால் அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோ...ம். நமது தேவைகளும் வேறு விதமாகிவிட்டன. ஆகவே முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு எற்றவையாகா.

இது சம்பந்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பலவிதமான ஆசனங்களையும் உடற்பயிற்சிகளையும் ஆராய்ந்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெரிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இறுதியாக ஆடவருக்கும் பெண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல்வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு சில பயிற்சிகளை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.

இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்குள் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரப்பிகள் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. நோய் வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும் நீடித்த ஆயுளும் உண்டாகிறது. அதன் மூலம் ஆன்மீகத் தேட்டத்தில் வெற்றி பெற்று நாம் இந்த மண்ணுலகுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சயம் நன்மை அடைவார்கள். எளிய முறைக் குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.

"உடற்பயிற்சி, தவம் இரண்டும் பாவப் பதிவுகளை
எல்லாம் போக்க வல்லவை".
.ஆசான் சிறப்பு:
"உடல் வளர்த்துக்காத்து வாழ்வளிக்கும் மேலாம்
உணவினை வேளாளர் அளித்துலகம் காப்பார்
உடலுக்கும் அறிவிற்கும் ஒழுக்கம் காட்டி
உயர்த்தி வாழ்வின் வளத்தை ஆசான் காப்பார்."
.
உயிர் விளக்கம் :
"உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்
உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்
உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு
உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம்;
உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க
உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே,
உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது
உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


புதன், 4 டிசம்பர், 2013

நான்யார்?

"நான்யார்?" என்பதற்கு விடை கிடைத்தால் தெய்வத்தை அறியலாம், தெய்வ நிலை அறியலாம், மெய்ப்பொருள் என்பதை உணரலாம். அறிவு என்ன என்பது உணரப்படும்., ஆக அறிவை அறிதல், தெய்வநிலை அறிதல் பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாக உள்ளதை அறிதல் எல்லாமே ஒன்றுதான். இப்போது உங்களுக்கு இவ்வளவு பெரிய சிக்கலான விஷயத்தை எளிமையான வார்த்தைகளிலே விளக்கியிருக்கிறேன். இந்த வகையிலே விளக்கம் உங்களில் சிலருக்கு உடனே புரிந்துவிடும். சிலருக்கு விளங்கும்; ஆனால் பிடிபடாது. அதை மறுபடியும் மறுபடியும் ஆராய வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னர், ஏதோ சில விஷயங்களை "அது தான் கடவுள் என்று, "அது தான் உயிர்" என்று எண்ணி எண்ணி அந்தப் பதிவே அதிகமாக இருப்பதால், உண்மை என்பது தெரிந்தால் கூட, அது உடனே ஒத்துவராத ஒரு மயக்கமாக இருக்கிறது. ஒரு சிலருக்குப் புலன்கள் வழி மாத்திரம் தெரியும்; மற்ற சிந்தனைஆராய்ச்சி இல்லை. அவர்களுக்கு உடனே விளங்காது. ஆனால், எல்லோருக்குமே காலத்தால் விளங்கிவிடும் என்பது நிச்சயம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 2 டிசம்பர், 2013

எண்ணம் சீர்பட தற்சோதனை


எண்ணங்கள் தோன்றுவது இயற்கை தான், தேவையான, தூய்மையான எண்ணங்களுக்கு மட்டுமே ஊக்கம் கொடுக்க வேண்டும். மற்ற எண்ணங்களை விலக்கி விட வேண்டும். விலக்குதல் என்றால் விரட்டுதல் அல்லது ஒழித்தல் அன்று. "எண்ணத்தை அடக்க முயன்றால் அலையும், அறிய முயன்றால் தான் அடங்கும்". எண்ணத்தின் பேரிலேயே எண்ணத்தைத் திருப்பிவிட்டு ஆராய வேண்டும். அப்போது அந்த எண்ணம் மாறி, ஆராய்ச்சியும் விழிப்பு நிலையும் மிச்சப்படும். இந்த எண்ணம் பிறக்கக் காரணம் என்ன? இது செயலானால் என்ன விளையும்? எனவே இந்த எண்ணம் தேவையா, வேண்டாமா?' என்று ஆராய வேண்டும். வேண்டாம் என்றால் 'இனி இந்த எண்ணம் எழாமல் விழிப்போடு இருப்பேன்' என்று உங்கள் எண்ணமே சங்கற்பமாக மாற வேண்டும். சங்கற்பம் அழுத்தம் பெறப் பெற, மீண்டும் அந்தத் தீய எண்ணம் எழும்போது அதனோடு நீங்கள் முடிச்சுப் போட்டுவைத்திருக்கும் சங்கற்பமும் சேர்ந்துகொண்டு வந்து விழிப்பு நிலை பிறழாத வல்லமை காக்கப் பெறும்.

எந்த எண்ணத்தையும் உடனுக்குடன் அதன் வேரை ஆராய்ந்து வந்தோமேயானால் காலப்போக்கில் பிறர் எண்ணத்திற்கு ஆளாகாத விழிப்பு நிலை வந்துவிடும். தோன்றும் எண்ணங்களை அப...்போதைக்கப்போது ஆராய்ந்து பார்த்தால் பிறகு இதுவே ஒரு நற்பழக்கமாகவும் இலகுவாகவும் மாறிவிடும். தோன்றும் எண்ணத்திற்குக் காரணம் கண்டு பிடிக்காமல் விடக்கூடாது. மனத்தில் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கக்கூடிய எண்ணங்களென்று சில இருக்கும். அவற்றையும் இப்படித்தான் ஆராயவேண்டும். அப்படி ஒரு பத்துப் பதினைந்து தான் இருக்கும். மாதமொரு முறை ஆற்றும் மௌன(silence) நோன்பில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் கூடப் போதும்.

வெற்றி வேண்டுவோர் எதிர்வரும் பிரச்சினையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை [Analysis and Approach] வேண்டும். இந்த ஆராய்ச்சியும் அணுகுமுறையும் ஆன்மீக வாழ்வு நடத்தும் "மனவளக்கலைஞராகிய" நமக்கு மிகவும் அவசியம். இதற்கு நமது "குண்டலினி யோகம்" (அகத்தவப் பயிற்சி) மனோபலம் கிடைக்கவும், உண்டாக்கவும் மிக்க துணை புரியும்.


அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி,
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.