உடலுக்கும் - மனதுக்கும் இயக்க ஆற்றலாக இருப்பது ஜீவகாந்தம் ஆகும். ஜீவகாந்தம் என்பதோ இறைநிலையும், அதன் நுண்ணியக்க மூலமான விண் மூலம் தோன்றிய அலையும் சேர்ந்த ஒரு கூட்டு ஆற்றல் தான். இந்தப் பேராற்றலானது, கருமையம் எனும் மூலாதாரத்தில் மையம் கொண்டு, உடல் முழுவதும் அலையலையாகப் பரவிப் புலன்கள் மூலம் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் மனமாக இயங்கிக் கொண்டும் இருக்கிறது. இதே மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்" ஆகும். குருவின் மூலம் "ஸ்பரிச தீட்சை" முறையால் உடனே மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்குக் கொண்டு வந்து விடலாம். பிறகு அந்த ஆற்றலின் அழுத்தத்தையும், அதன் சுழற்சியையும் மனத்தால் கூர்ந்து கவனித்துத் தவம் (Meditation) செய்ய வேண்டும். கருமையத்தில் திணிவு பெற்றுள்ள சீவகாந்தத்தைத் தான் "குண்டலினி சக்தி" என்று கூறுகிறோம்.
பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டு இருக்கிற மனிதன் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாகப் பெற்று அந்த விளக்கத்தின் வழியே வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு முறையான பயிற்சி எதுவோ அதைத்தான் "மனவளக் கலை" என்று சொல்கிறோம். பதினைந்து பதினாறு வயது ஆனவுடனேயே இந்தப் பயிற்சிக்கான தகுதி எல்லோருக்கும் உண்டாகிறது. இந்த அகத்தவ (Meditation) பயிற்சியாகிய - குண்டலினி யோகத்தை குடும்பத்திலுள்ள ஆண், பெண் எல்லோருமே பயிலலாம். விடாமுயற்சியுடன் செய்யத் தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப் பற்றி, சமுதாயத்தை பற்றி, இயற்கையை பற்றி அறிந்து தெளிவாக தெரிந்துகொண்டு, பூரண நிலையை (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவும், நம்பிக்கையும் பெற முடியும். தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக