விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஞான வழி மனிதனுக்கு இன்றியமையாததாகும். சிந்தனை ஆற்றல் பெற்ற அனைவரும் ஞான வழியில் பயின்று, தேறி விளங்கி வாழ்வது தான் பொருத்தமானது. இயற்கை சமுதாயம் என்ற இரண்டையும் நன்குணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல்வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் விளக்க வழி வாழ்வே "ஞான நெறியாகும்". வாழ்வில் "மனம்" தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான். உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருகின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருட்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் "மனவளக்கலையினை" அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை "யோகமென்றும்", ஆராய்ந்த பின் கண்ட விளக்கத்தின் வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை "ஞானம்" என்றும் வழங்குகிறோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக