.
"கணவன், மனைவி உறவில்தான் ஒருவருக்கொருவர் அதிகமாக சினம் கொள்கிறார்கள். திருமணத்தை ஓர் அனுமதியாகக் கொண்டு சினம் கொண்டு அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார்கள். திருமணம் என்பது துன்புறுத்துவதற்கு வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..! (Everybody thinks Marriage is a License to get anger with the Life partner.)
அதை மாற்றி திருமணம் என்பது இறைவனால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட வரம். அதை நல்ல முறையில் அன்பாகவும், பண்பாகவும் பாதுகாக்க வேண்டும். கணவன், மனைவி உறவில் சரியான ஒரு பிடிப்பு ஓர் இணைப்பு இருந்தால் நீங்கள் எந்த வேலைக்குப் போனாலும், அங்கே ஓர் ஆள் கூடவே இருந்து வேலை செய்வது போலிருக்கும். அப்படியில்லாமல் கணவன், மனைவி உறவில் விரிசல் இருந்து, அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இரண்டு பேர்களுடைய வேலைகளும் சரியாக நடக்காது. எண்ணம் அலைந்து கொண்டிருக்கும். மனம் வருந்திக் கொண்டிருக்கும்.
ஆகையால் சினத்தைக் தவிர்க்க வேண்டும் என்ற பயிற்சியை "உலக சமுதாய சேவா சங்கத்தில்"அளிக்கிறோம். பயிற்சியைச் செய்து பழகியவர்களையெல்லாம் கேட்டுப் பாருங்கள். சிலர் அதன் மேன்மை தெரியாமல், தொட்டுத் தொட்டு, விட்டு விடுவார்கள். பயிற்சியை முழுமையாகச் செய்தவர்களெல்லாம் எவ்வாறு அந்தக் குடும்பத்தில் அமைதியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
'திருமணம் ஆன நாளிலிருந்து இன்றைய நாள் வரைக்கும் எனக்கு அவ்வம்மையார் என்னென்ன நன்மைகள் செய்து இருக்கிறார்கள்! எம்மாதிரியான மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள்' என்று கணவனும்; 'திருமணத்திலிருந்து இன்றுவரை அவர் எனக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறாரே!" என்று மனைவியும்; ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால் அது இன்பப் புதையலாக இருக்கும்.
.
இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கைத் துணையை எனக்கு இறைவன் அளித்திருக்கிறான். அதை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் வரும். அந்த முறையில் ஒருவருக்கொருவர் செய்த நன்மைகளை விரித்து விரித்து, உள்ளம் பூராவும் பூர்த்தி செய்து கொண்டால், அவ்வப்போது செய்யக் கூடிய சிறு தவறுகள் ஒன்றுமே தவறாகத் தெரியாது, ஏதேனும் குறைவுபடுமேயானால் 'போனால் போகிறது, நான் ஒத்துழைக்கிறேன். நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?' என்று கேட்டு ஆதரவு தெரிவித்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
திருமணமும் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் எப்படியோ வாழ்ந்தாகிவிட்டது. இனி வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்து விட வேண்டும். விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு என் கருத்து தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால் பிணக்குத்தான் வரும். இதையெல்லாம் சரி செய்வதற்கு 'அகத்தவம்' (Simplified Kundalini Yoga) என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரிசெய்து கொள்ளலாம்.
இனி, காலையில் எழுந்தவுடன் கணவன், மனைவியைப் பார்த்தும், மனைவி கணவனைப் பார்த்தும் "வாழ்க வளமுடன்" என்று ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லுங்கள். ஆனால் முதலில் அப்படிச் சொல்ல நாக்கு வராது. எங்கேயோ போய், எதையோ இழந்து விடுவது போல இருக்கும்., இதுவரை கட்டி வைத்த கோட்டைகளெல்லாம் தகர்ந்து போய் விடுவது போல இருக்கும். என்ன செய்ய வேண்டும்? "நான் வாழ்த்தப் போகிறேன்" என்று தைரியப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு "வாழ்க வளமுடன்" என்று சொல்லுங்கள். மறுநாளைக்குத் தெளிவாகச் சொல்ல வரும். இப்படிப் பத்து நாட்களுக்குச் சொல்லிப் பழகி விட்டால், அந்தச் சொல் ஒலி எழும்போதே உடலில் பூரிப்பு உண்டாகும். ஒருவரையொருவர் நினைக்கும் போதே பூரிப்புண்டாகும். இதைப் பார்க்கக் கூடிய குழந்தைகளுக்கும் இப்பண்பாடு உருவாகும்.
ஒரு குடும்பம் நன்றாக இருந்தால் அதைச் சுற்றி உள்ளவர்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். உலகம் நன்றாக இருக்கும். உலகத்திற்கு நல்ல மக்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தன்னிலே அமைதி பெற்று, மகிழ்ச்சி பெற்று, சுகமாக, இனிமையாக வாழ்ந்தால், குடும்பம், நாடு, உலகம் எல்லோரும் நலமாக இருக்கலாம். இறைவன் அளித்த ஆயிரமாயிரம் இன்பங்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். அந்தப் பேரின்ப வெள்ளத்திலேயே மிதந்து திகழலாம்".
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"குடும்பத்தை நீங்கள் நிர்வாகம் பண்ணுகிறீர்கள் என்றால்
அங்கே உங்கள் 'அறிவு' தான் நிர்வாகியாக இருக்க வேண்டும்".
"கணவன் மனைவி இருவரில் யார் அதிகம்
விட்டுக் கொடுக்கிறார்களோ அவர் தான் 'அறிவாளி."
"மனைவியவள் தனைமதிக்க வில்லையென்று குறையால்
மனம்வருந்தும் கணவருக்கும் மணந்தவர் பொறுப்பாய்
எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்
இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்
நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு
நிறைமனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்
உன்னைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்
உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்."
"அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளக்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை."
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.