நாம் ஆற்றைப் பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னாள் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய்விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்...துக் கொள்கின்றோம். அது போன்றதே மனம் என்ற ஒரு இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறபோது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது. அதை எந்தெந்த இடத்தில் பாயச்சுகிறோமோ அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது. மனம் ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஓர் இயக்கம் தான். அது போலத் தான் ஒளியும். விளக்கிலிருந்து அலை அலையாய் ஒளி, ஒளியலை வந்து கொண்டேயிருக்கிறது; அது வெளிச்சமாக இருக்கிறது. அந்த ஒளி நிரந்தரமாக இருக்கிறதா என்றால் இல்லை. சுவிட்சை நிறுத்திய உடனே இருட்டு வந்து விடுகிறது. நிரந்தரமாக இருப்பதாய் இருந்தால் சிறிது நேரம் இருந்து விட்டு மெதுவாய் அல்லவா குறைய வேண்டும்? தொடர்ந்து வரவில்லையாதலால் இருந்தது உடனே போய்விட்டது. எவ்வளவு சீக்கிரம் அது போய்விட்டது என்று பாருங்கள். அதேபோல ஒரு இயக்கத்திலே இருந்து அலை பிறக்கிறது. அந்த அலையானது இடத்துக்குத் தகுந்தவாறு மோதி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்தாகவும், அதை உணர்ந்து கொள்ளக்கூடிய மனமாகவும் இயங்கும் உண்மையைத் தெரிந்து கொண்டால் உலக தத்துவ இரகசியம் அத்தனையும் புரிந்து கொள்ளலாம். காரணம், மனத்தால் அன்றி வேறு எதனால் உலகத்தை அறிகின்றோம் எந்தத் தத்துவத்தை தான் அறிகின்றோம்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உலகப் பரிணாமம்:
"உலகம், அண்டங்கள், உயிரினங்கள், பொருள்கள்,
பலதும் அணுவின் கூட்டுப் பக்குவப் பரிணாமம்,
பகுத்தறிந்தால், ஒன்றி, ஒன்றிப் பார்ப்பவனே, ஒலி முதலாய் பஞ்சதத்துவம், ஈர்ப்பு, பரம், அணு இவையாவான்."
.
அறிவே ஆறு குணங்களாக மாறுகிறது :
"அறிவுக்கு ஐம்புலன்கள் ஆயுதங்கள்,
அதை இயக்கும்போது தன்னிலையில் நிற்க,
அறிவுக்கு அனுபவங்கள் கூடும், அன்றி,
அது சலனமுற்றுப் பல பொருளில் பற்ற,
அறிவடையும் பலநிலைகள், காமமாதி
ஆறுகுணங்களாம், அதனை அறியும் போது,
அறிவு நிலை நிர்க்குணமாம், ஆய்ந்து பாரீர்,
அறிவினிலே அறிவு நிற்கும், அமைதி காண்பீர்."
.
"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக