Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 30 ஜூன், 2013

புத்தர்

உலகத்தில் சிந்தனையாளர்களிடம் தோன்றிய கருத்துகள் சில. கடவுள் என்பது என்ன? உயிர் என்பது என்ன? ஏன் ஏழ்மை என்பது வருகிறது. துன்பமும் மரணமும் ஏன் சம்பவிக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கு விடை காண ஆயுள் முழுவதையுமே செலவழித்த பெரியார்கள் பலர். உதாரணமாக புத்தர் பெருமானுடைய வாழ்க்கையைக் கவனிப்போம். அவரிடம் எழுந்த கேள்விகள் இவையே. உயிர் என்பது என்ன? ஏன் மனிதனுக்குத் துன்பமும், மரணமும் சம்பவிக்கின்றன? ஏழ்மை ஏன் சமுதாயத்தில் நிலவுகின்றது? கடவுள் என்பது என்ன? இவையெல்லாம் அவருடைய கேள்வி. அவருக்கு முடி சூட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன.

புத்தர் நல்ல சிந்தனையாளர். வேதங்களையெல்லாம் படித்தவர். முடி சூட்டிக் கொண்டால் மக்களுடைய துன்பத்தைப் போக்க வேண்டும். என்னென்ன துன்பங்கள் நிலவி வருகின்றன? என்று அவர் சிந்தனை செய்தார்.விசாரணை செய்தார். விசாரணையில் நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.தானே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பல இடங்களுக்குச் சென்று பார்க்கலானார். மேற்கண்ட வினாக்களுக்கு மந்திரிகளைக் கூப்பிட்டு விடை கேட்டார். அவர்களுக்கு விடை சொல்லத் தெரியவில்லை. இவையெல்லாம் தெய்வச் செயல் என்றார்கள். தெய்வம் என்பது என்ன? என்ற கேள்வியும் கூடி விட்டது.இந்தக் கேள்விகளுக்கு. மந்திரிகளால் விடை கூற முடியவில்லை. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்துதான் ஆக வேண்டும்” என்பதற்காக அவர்களை அடிக்கடிக் கூப்பிட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தார்.இவர் சிம்மாசனம் ஏற வேண்டியவர். இப்பொழுதே இப்படி கேள்வி கேட்கிறார். ஏறிவிட்டால் நம் கதி என்ன? என்று நினைத்த அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சதி செய்தார்கள்.

அவருடைய தந்தையிடம் போய். “உங்களுடைய மகனின் மனம் சரியில்லை. பைத்தியத்தின் அறிகுறிதான் இருக்கிறது. இவரைச் சிம்மாசனம் ஏற்றுவதைத் தள்ளிப் போடுங்கள். அல்லது இரத்து செய்து விடுங்கள்” என்று மந்திரிகள் தெரிவித்தனர். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? என்று மன்னர் கேட்டார். நடுத்தெருவில் ஒரு கிழவரைப் பார்த்தால், அவரை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறார். நோய் வாய்ப்பட்டவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களின் உடல்நலம் பற்றி விசாரித்து அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார். மரணம் சம்பவித்த இடங்களில் இவரே நேரில் போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய அளவுக்குக் கீழே இறங்கி விட்டார். இதுவா அரசனுக்கு அழகு? சிம்மானம் ஏறப்போகிற அரசனுக்கு இதுதான் தொழிலா? எங்களையெல்லாம் கடவுள் என்பது என்ன? நீ நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார். இவையெல்லாம் சராசரி நிலையல்ல என்றார்கள்.

தன்னுடைய மகனின் மனப்போக்கைப் புரிந்து கொண்டார் தந்தை. முறையாக அவருக்குப் பதில் அளிக்க வேண்டும், விளங்க வைக்க வேண்டும் என்பதற்காக. “என் மகனைத் தனியாக ஒரு வீட்டில் வைத்து விடுங்கள்.யாரும் அங்கே போகாமலும், அவனும் வெளியே வராமலும் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அவனுக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன் என்றார். இதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி, அவரைத் தனிமைப்படுத்தி விட்டார்கள். அவருடைய மனைவி, குழந்தை தவிர வேறு யாரும் அவரிடம பேச முடியாது.

புத்தரின் சிந்தனை அதிகமாக உயர்கிறது. ஆனாலும் விளக்கம் கிடைக்காமலேயே காலம் சென்று கொண்டு இருந்தது. நான் இப்படிச் சோறு தின்று விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கப் பிறக்கவில்லை. இவ்வினாக்களுக்கு விடை காண வேண்டும். தான் நேரடியாகவே போய் காண வேண்டும். வெளியில் போக வேண்டும் என்று நினைக்கிறார்.வெளியேற முடியவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லாரும் தூங்கும்போது ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெளியேறும்போது, தனது மனையிவிடம் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.குழந்தையைப் பார்த்தார். சொன்னால், அவள் எழுந்து விட்டால், நம் பயணம் தடைபடும். அதை நினைத்து. பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தி விட்டு, நடு இரவில் அப்படியே கிளம்பி விட்டார். அதன் பிறகு பல இடங்களில் துன்பப்பட்டப்பின், தன் கேள்விகளுக்கு விளக்கம் பெற்றார். விளக்கம் பெற்றவுடன் மக்களின் சிரமங்களைப் போக்குவதற்கு அதிகாரமோ வேறு எந்த வசதிகளோ இல்லை. அதனால் சந்நியாசம் ஏற்றார்.

இதேபோல பெரிய பெரிய மகான்களுக்கெல்லாம் இக்கேள்விகள் எழுந்திருக்கின்றன, இறந்து போனவர்கள் இல்லத்திற்குச் சென்று அதிகமான விசாரணை செய்கிறார்கள் என்றால், ஏன் சாவு மனிதனுக்கு வருகிறது என்ற கேள்விதான் காரணம். உயிர் என்பது என்ன? உடலை விட்டு ஏன் அது பிரிகிறது? என்ற தத்துவத்தைத்தான் ஆராய்கிறார்கள்.அந்த ஆராய்ச்சிக்கு அக்காலத்தில் விடை கிடைக்கவில்லை.


-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 26 ஜூன், 2013

உருவமும் அரூபமும்

புலன்களுக்கு எட்டுகின்ற ஒன்று சத்தியமாக நிலைக்கும் என்றால் அது ஆழ்ந்த மன நிலையைக்கடந்த சிவகளத்திலும் கூட நிலைத்திருக்க வேண்டும்.

எது எப்போதும் நிலைத்திருக்குமோ அதுவே தான் சத்தியம் என்று கொள்ளலாம்.

தோன்றி மறையும் எதுவும் சத்தியமாகாது.

கை கால்களை வைத்துக்கொண்டு புலன் சார்ந்த நிலையிலே தியானிக்கும் போது தெரிகின்ற உலகமும் உடலும், மனோ நிலையை கடக்கும் போது நிலைப்பதில்லையே... அப்படி எனில், அந்த உடல் சத்தியமானது அல்ல என்று ஆகிறது.

உடல் என்ற ஒன்றை மையமாகக்கொண்டே தான் நமக்குள் உலகமே சத்தியம் என்ற எண்ணம் வருகின்றது. எப்போது அந்த எண்ணத்தின் மூலமான மௌனத்தோடு ஒன்றுகிறோமோ அப்போதே தியானிப்பவருக்கு உடலும் உலகமும் இல்லாது போகிறது.

ஜீவன், பரமாத்மா,உலகம் என்ற பேதம் எல்லாம் அறவே விலகி விடுகின்றது மட்டுமில்லாமல் எப்போதும் நிலையாக நிலைத்து இருக்கும் ஆத்மாவாகிய இறை நிலையோடு கலந்து ஆத்மா ஒன்றே தனித்து ஜொலிக்கிறது.

நாம் காணும் உலகத்தை முழுமையாக நாம் ஒதுக்கி விடமுடியமல் இருப்பதற்க்குக் கூட,இறை நிலையிலே இருந்து தான் இந்த உலகம் என்ற எண்ணம் தோன்றுவதால் தான்.

எப்போது இறை நிலையோடு கலந்து நின்று ஆழ்ந்த கருணை நிலையை உணர்ந்து, அந்த இருப்பிலே இருந்து அசைகிறோமோ அப்போது தான், புறத்தோற்றத்திலும் கூட கருணையோடு வாழ்த்தும் பேரன்பு ஒருவருக்குக் கிட்டுகிறது.

புலன்களால் பெறப்படும் புறத்தோற்றத்திலே அலட்சியம் என்கிற எண்ணம் இல்லாமல் இருப்பதும், அகத்திலே உள்ள ஆன்ம நிலையை விட்டு விலகாது நிலைப்பதும் ஞானம் பெற்றிருப்பதற்குரிய தன்மையாக இருக்கிறது.

எதனை எப்படி புலன்களால் நோக்கினாலும், புலன்களால் ஏற்படும் அனுபவங்கள் எல்லாம் நிலைத்து நில்லாத ஒன்றாக போவதும், ஆன்மாவாகிய இறை நிலையிலே வேறெந்த எண்ணமும் நிலைக்க முடியாத நிலை உணர்வதும் அத்வைத நெறி ஆகும்.

முக்கியத்துவம் எதற்க்குத் தருகிறோம் என்பதே தான் முழு விசயமும்.

த்வைத நெறி என்பதை ஆமோதித்தவர்கள் எல்லாம், புலன்களால் காணும் உலகம் நிஜமே என்றும், உலகம் மாயை என்று சொல்லப்படுவதை ஏற்க மறுப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்...

ஆனால், எது நிலைக்காதோ அதை மாயை என்று விலக்கி, நிலையான ஒன்றோடு கலந்தது தான் அத்வைத நெறியாக இருக்கிறது. அத்வைத நெறி என்பதிலே அனைத்து நெறிகளும், இறைவனோடு கலத்தல் என்ற இடத்திலே பேதமற்று ஒன்றாகின்றது. அந்த இடமே மௌனம், அதுவே மோட்சம். அதுவே பிரம்மமும். அதுவே சிவம்.

குருவென்ற ஒரு எண்ணம்( என்பதை) இறை வெளியோடு தவமியற்றும் போது கொண்டு வந்தால்,குரு என்கிற உருவம் எடுப்பது எண்ணத்தினாலே என்பதும், குருவே என்றவுடன் எண்ணமற்று கலத்தலே என்று தியானிப்பவர் இறையோடு கலந்து ஒன்றாவதும் அனுபவம். எப்படி எண்ணம் நிலைக்காதோ அதே போல உருவமும் நிலைக்காது போய்விடுவதும், அரூபமான இறை நிலையோடு கலந்த நிலையிலே குருவும் அரூபத்திலே நிலைத்து நீடிப்பதும் தெளிவாகிறது..

குருவானவர் இயல்பூக்க நியதியின் படி, சிவ நிலையாம் அரூப நிலையோடு கலந்து நின்று அண்டுவோரை அந்த தன்மையில் இருந்தே ஆட்கொள்கிறார்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பூரண சக்தி - குறுகிய ஆற்றல்

ஆதியென்றும், பிரம்மம் என்றும் சொல்லப்படும் சர்வ வியாபக பூரண சக்தியே தான் "நாம்" அல்லது "நான்" என்பதாகும் என்று ஒரு நண்பருக்கு விளக்கம் சொன்னேன். அவருக்கு அந்த அத்வைதத் தத்துவம் புரியவில்லை. நாம் பிரம்மமா? சர்வ வல்லமையும் உடையது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையால், அத்தகைய பிரம்மம் நாம் எனில் ஜீவன்களின் இன்ப துன்பச் சுழலுக்கே காரணமாக இருக்கும் இந்த உலகை ஊதி அழித்துவிட முடியுமா? ஏதோ அதைச் செய்து காட்டுங்கள் எனக் கேலியாகவே கேட்டார்.

அதற்கு, ஆம்! பிரம்மம் என்ற நிலையில் நமக்குச் சர்வ வல்லமையும் இருக்கிறது. ஆனால், எண்ணம் மட்டும் இல்லை. அப்படி ஏற்பட்டவுடன் அந்த நிலைக்கு அறிவு எனப் பெயரிட்டு அழைக்கிறோம். இந்த அறிவு என்ற நிலையில் எந்தச் சோதனையோ நடத்தவேண்டுமெனில், அந்தச் சக்தி சொரூப அளவில் மட்டும் சுருங்கி அதற்கேற்ற ஆற்றலுடன் மட்டிலும் செயலாற்றுகின்றது.

ஆகவே, எண்ணும் நிலையில் எண்ணம் தோன்றும். உருவ அளவிலே ஒடுங்கிய - குறைவுபட்ட - பின்ன சக்தியாகவும், எண்ணமற்ற நிலையில் நிறைந்த நிற்விகற்ப பூரணமாகவும், இருக்கிற நம் நிலையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என விளக்கினேன்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

செடியைக் கூட வாழ்த்துங்கள்

* உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடல் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால், போகத்திலேயே மனம் நாட்டம் கொண்டிருக்கும். அதனால் பிறவித்தொடர் நம்மை விட்டு என்றும் நீங்காது. தேவைகளை முடிந்தவரை சுருக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

*எல்லாப் பொருள்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலும் உயர்வு உண்டாகும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைச் சினம் அணுகவில்லை என்றால் அவன் ஞானம் பெற்றுவிட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாமே தவிர, எப்போதும் சினத்தோடு இருப்பது முறையல்ல. போலியாகக் கோபம் கொள்ளும்போது, மனதில் சிறிதும் சலனம் கூடாது. எதிராளியைத் திருத்துவது மட்டுமே அதன் நோக்கமாகும்.

* ஒரு செடியைப் பார்த்தால் கூட வாழ்க வளமுடன் என்று உளப்பூர்வமாக வாழ்த்துங்கள். உலகத்திற்கு நன்மையான செயல்களைச் செய்து அதனால் அனைவரும் மனநிறைவு பெற வேண்டும் எப்போதும் வாழ்த்துங்கள்.

* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையிலே கண்ணியம் என்று இருப்பதே நல்லோர்களின் பண்பாகும்.

--வேதாத்திரி மகரிஷி

அன்பர்களுக்கு:



அன்பர்கள் அமைதி, அன்பு, கருணை என்று பேசிக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு வினாடியும் அயரா விழிப்புடன் செயல்பட வேண்டும்.
...
"நான்" அறிவுதான், "அறிவு" மெய்ப்பொருளின் அருள் விரிவு மலர்ச்சி தான்' என்ற உண்மை உணர்ந்தும், உணரும் ஆர்வத்துடனும் மனவளக்கலை பயிலும் அன்பர்களே! தன்முனைப்பு எழாமலிருக்க, விழிப்போடிருங்கள். நீங்கள் எண்ணியவெல்லாம் அவ்வாறே நிலை பெரும் வெற்றியை அனுபவமாகக் காண்பீர்கள். உங்களுக்கென உரியவை அத்தனையும் இயற்கை நிலையில் ஏற்கனவே உள்ளன. அவற்றை யாரும் பறித்துவிட இயலாது. உங்கள் மனம் பக்குவப்பட, பக்குவப்பட அவை ஒவ்வொன்றாக உங்களிடம் வந்து சேரும்.

இன்னது தான், இந்த அளவில், இந்த முறையில், இந்தக் காலத்திற்குள் வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கும் [expectation] கற்பனை நிலை வரையறை [imaginary conditionings] க்குள் மனதை அழுத்தி விட வேண்டாம். நான் முன்னமேயே ஆற்றிய செயல்களின் பயன் காலத்தோடு விளைவாக வந்து கொண்டே தான் இருக்கும், இப்போதும் இனியும் செய்யப்போகும் செயல்களுக்கு ஏற்ற விளைவு சிறிது கூட பிறழாமல் எனக்கு வந்து சேரப் போகிறது என்ற உண்மையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

இப்போது விழிப்போடு சிந்தித்து ஆற்றும் செயல்களினால் முன் வினையின் தீமையும் தடுக்கப்படும்; எதிர்காலமும் இனிமையாக இருக்கும். இந்தத் தத்துவம் இயற்கை நியதி. இதை உணர்ந்து மதிப்பளித்துச் செயல் புரிந்து நலம் பெற்று வாழ்வோம்.


                                                                                                                  -வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 25 ஜூன், 2013

எதிபார்ப்பதை விட்டுவிடுங்கள்

எதிபார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிபார்க்கிறோம். எனக்கு இப்படி வர வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிபார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் ...நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத்தான் கிடைக்கிறது. ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும் மன அமைதியும் ஆற்றலும் உண்டாகும்.

பொருளைக் கொடுத்துத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலைக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலே, பொருளாலே, பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.

காலையிலும் மாலையிலும் இந்த உலகம் சமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்த முடியாதா? அதைச் செய்யலாமே. அம்மாதிரி எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டே இருப்போமானால் மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும். நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் மனதளவில் ஏழ்மையில்தான் இருப்பார்கள். நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக் கொண்டு என்னென்ன வகையில் பிறர்க்கு சேவை, உதவி, செய்ய முடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும்.

இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மேலும் மேலும் ஆற்றல் வளரும். செல்வமும் வளரும், மகிழ்ச்சியும் நிறைவும் வளர்ந்து கொண்டே போகும்.
                                                                                                              -வேதாத்திரி மகரிஷி.
 

ஞாயிறு, 23 ஜூன், 2013

அறிவு

இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது. திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவதுபோல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது. அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்துகொள்ளும் முறையே தவம் எனப்படும். சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 22 ஜூன், 2013

உவமையின் எல்லை

உவமையினால் உண்மைப் பொருளை உணர முடியுமா என்றால் உணர முடியாது. உவமையினால் பொருளின் அருகில் போகலாம்; ஆனால் அதை உணர முடியாது. அதனால் தான் வேதாந்தங்களையெல்லாம் உபநிஷத்துக்களாக மாற்றியபோது "உபநிஷத்து" என்ற பெயர் வந்தது. "உபநிஷத்து" என்றால் "மிக அருகில்கொண்டு போய் வைப்பது" என்பது தான். சேர்த்து விடுவதே தவிர அதுவே உணர்த்திவிட முடியாது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் "இனிப்பு"என்பது எப்படி இருக்கிறது என்ற கேள்வியை போட்டுக் கொள்வோம். "இனிப்பு" என்றால் சர்க்கரைபோல் இருக்கும். சர்க்கரை எப்படி இருக்கிறது? கொய்யாப்பழம் மாதிரி இருக்கிறது. இரண்டுக்கும் இனிப்பு என்று சொல்கிறீர்களே என்றால் மொழியில் அவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் இனிப்பு என்பதை எப்படியாகிலும் எடுத்துக்காட்ட முடியுமா? முடியவே முடியாது.

மாம்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். வாழைப்பழம் எப்படிஇருக்கிறது? இனிப்பாக இருக்கும். நூறு பழம் எடுத்தால் நூறு இனிப்பு என்று சொல்லிவிட முடியுமா? இனிப்பு என்ற இடத்தில் ஒன்றாகத் தான் தெரியும். வாழைப்பழ இனிப்புக்கும் மாம்பழ இனிப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இயலுமா? என்றால் இயலாது. அதையெல்லாம் அவரவர்கள் அனுபவித்து உணர்ந்த பிறகு தான் வாழைப்பழத்தைப் போல இருக்கும் என்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ள இயலும். ஆனால், அந்த இறைநிலையானது ஒன்றே ஒன்று தானே இருக்கிறது? அந்த ஒன்றே ஒன்றுக்கு எதனை உவமை காட்டுவது? உவமை காட்ட முடியாது. ஆகையினால் இவனே அதுவாகி அந்த நிலை அடைந்த அனுபவத்தில் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்.

உனது பெருமை:

"அவனில் அணு. அணுவில் அவன்
உன்னில் எல்லாம், உன்னை நீ! அறி".
.

"உயிர்ச் சக்தியின் இயக்க விளைவு தான்
எண்ணம். அது அறியும் திறனுடையதால்
அறிவென்றும் கூறப்படுகிறது".
.

மெய்யுணர்வு :

"ஐயுணர்விற் கடிப்படையாம் ஆதார மூலத்தை
ஆறாவதறிவாலே ஆழ்ந்துணரும் தவநெறியை
மெய்யுணர்வு என்கின்றோம் மேல்நிலையீ தறிவிற்கே
மிரட்சிபோம் தெளிவுண்டாம் மெய்யுயிராய் உளதுணர்வோம்

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வினைப் பயன்

கூர்ந்து பார்க்கின்ற போது ஒவ்வோரு செயலுக்கும் விளைவு இருக்கின்றது என்பது நிச்சயமாகப் புலனாகும். ஒருசில செயல்களுக்கு விளைவு விரைவில் தெரிவதில்லை. காரணம் என்னவென்றால் மனிதனுடைய ஆயுள் சொற்பம் - ஒரு குறிப்பிட்ட எல்லை உடையது. சில செயல்கள் நீண்ட காலத்திற்குப் பின் விளைவாக வரலாம். அதுவரையிலே அறிவை நீட்டிப் பார்க்கவோ, வயதைக் கூட்டிப் போடவோ முடியாது.

அதனால் சாதாரண அறிவு நிலையில் மனிதன் ஒரு முனையை விட்டுவிட்டு ஒரு முனையை மட்டும் பிடித்துக் கொள்கின்றான். செயலை மட்டும் எடுத்துக் கொள்கிறான். விளைவே இல்லை என்று எண்ணுகின்றான்; அல்லது விளைவை மட்டும் எடுத்துக் கொள்கின்றான். அதற்குரிய காரணம் பிடிபடவில்லையே என்று சொல்லுகின்றான். இவ்வாறு பகுதிப்படுத்தப்பட்ட நிலையிலே "வினைப் பயன்" என்பதே பொய்யான தத்துவம் என்று குறுகிய மனத்தாலே முடிவுகட்டிவிடுகின்றான்.

எந்தச் செயலைச் செய்தாலும் விதையைப் போட்டால் நான்கு நாட்களிலோ, நான்கு வாரங்களிலோ முளைப்பது போல, அந்தச் செயலுக்கு ஒரு விளைவு நிச்சயமாக உண்டு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறு குணங்கள் வயப்பட்டு மனிதன் செய்கின்ற செயல்களெல்லாம் அவனிடமே பதிந்து, பதிந்து, பதிந்து மீண்டும் அந்தச் சக்தி உந்தி எண்ண அலைகளாகவோ, செயல் வடிவங்களாகவோ வந்து கொண்டு தான் இருக்கும். அப்படியே வந்து விட்டால் அதே எண்ணப் பதிவுகள் மீண்டும் மீண்டும் பதிந்து எழுந்து செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருப்பதால் மனிதன் துன்பவயப்படுகின்றான். அதிலிருந்து மீட்டுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பற்றறிவு, கற்றறிவு,முற்றறிவு

தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். இவற்றுள் தூலமாகியது உடல், சூக்குமமாகியது உயிர், காரணம் என்பது பிரம்மம் அல்லது மெய்ப்பொருள். இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு. உயிருக்கும் மையப்புள்ளி உண்டு; ஆனால் அதனுடைய சுற்றுவட்டம் ஒரு எல்லைக்குள் அடங்காது. மெய்ப் பொருளுக்கோ மையப்பள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. அந்த உயிருக்கு மனமானது விரியும் போது அது பிரம்மம் வரையில் போவதனால் சுற்றுவட்டம் இல்லை.

ஆனால், பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness). அது உயிராக வந்ததனால் இயங்கிப் பெற்ற சுற்றறிவு (Character) இதுவரையில் இயங்கிப்பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாகக் கொண்டது. அதற்கும் மேலே இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு.

இவ்வாறாகத் தானே பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு என்று மூன்றாகச் சொல்லலாம். இந்த மூன்று நிலையிலும் எங்கேயும் இருப்பது அறிவு ஒன்றுதான்; இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அதனுடைய தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது. தெளிவினாலே, தவத்தினாலே, பல பிறவிகள் எடுத்த தொடர்பினாலே அவர்களுடைய Character இந்த மூன்று நிலையிலே எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால், விகிதாச்சாரம் என்ன? அந்தந்த இடத்தில் ஏற்பட்ட பதிவு அழுத்தம், வலுவு எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக இருக்கும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறியாமை அழிவுக்குத் துணை போகும்.
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்".
.

(முற்றறிவு - பற்றறிவு - கற்றறிவு )

இணைந்துணர் இன்பம் :
--------------------------------------
.
"முற்றறிவு சுத்தவெளி மூல ஆற்றல்
முதற்பொருளாய் இருந்த சிவம் உயிர்களூடே
பற்றறிவாய்த் தேவை பழக்கம் சூழ்ந்த
பலநிலைகட் கேற்ப ஐந்து புலன்கள் மூலம்
கற்றறிவாய் விரைவு பருமன் தூரம்
காலம் என்ற கணக்குகளாய் எல்லைகட்டிச்
சிற்றறிவாய் இயங்கு திருவிளை யாட்டைத் தன்
சிந்தனையால் உணர் இன்பம் சிவயோகம் ஆம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப்பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்துச் செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகிவிட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (essence) தானே?

அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு, அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்த செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், 'த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி' என்றும், 'அத்வைதம் ஒன்று தான் கடவுளை அடையவழி' என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. "எல்லாம் ஒன்று" என்பது அத்வைதம். "ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று "மாறுபடுகிறது" என்பதை த்வைதம்," எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அத்வைதம், துவைதம் :
--------------------------------------

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
கற்கண்டு கரும்புரசம் வேறு வேராய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்".
.

"வேதாந்தி சித்தாந்தியானாலன்றி
வீடுபேறு கிட்டாது வெற்றுப்பேச்சால்
வாதாடி வாழ்நாளைக் கழிப்ப தல்லால்
வந்துலகில் பிறந்த பயன் வழுக்கிப்போகும்".
.

"வேதத்தை யான்படித்த தில்லை ஆனால்
வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்
வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை
வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்;
பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்
பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்;
சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்
சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

தவம் என்றால் என்ன ?

நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள புறத்தையும் உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கான பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிதான் ‘தவம்’ . அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’ ஞானம் பெருகி அஞ்ஞானத்தின் அவலம் குறைகிறது. கானகம் சென்றுதான் ‘தவம்’ செய்யவேண்டுமா? வேண்டாம்! இல்லறத்திலிருந்தே ‘தவம்’ செய்யலாம் தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும். ஞானிகள்தான் ‘தவம்’ இயற்றவேண்டுமா? இல்லையில்லை! குடும்பத்தாறுக்கே தவமும், அகத்தாய்வும் (தற்சோதனை) மிகவும் அவசியம் மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன ஆழுக்கை நீக்கும் !
இரண்டையும் பெற அன்பர்களே வாரீர் ! ‘தத்துவம், விஞ்ஞானம், வாழ்க்கை நெறி ‘ இவை பற்றிய சிந்தனைத்தூண்டல் தான் மனவளக்கலை தவ மையங்கள், அறிவுத்திருக் கோயில்களில் தரப்படுகிறது.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 21 ஜூன், 2013

வேதாந்தம் - சித்தாந்தம்

தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும். அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அநுபோக பூர்வமாகப் பெற்றாக வேண்டும்.

தானே அவனாகவும், அவனே தானாகவும் - சிவனே சீவனாகவும், சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு, மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான், தெளிவோடு திருப்தியும் வரும். இதை நமது மனவளக்கலை மூலம் சாதிக்க முடிகிறது.

தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும், பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டும் தான் உண்டு.

அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே, ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும், இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும், எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல், இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக, இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்கை முறையே பக்திமார்க்கம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"வேதாந்தி சித்தாந்தியானாலன்றி
வீடுபேறு கிட்டாது வெற்றுப்பேச்சால்
வாதாடி வாழ்நாளைக் கழிப்ப தல்லால்
வந்துலகில் பிறந்த பயன் வழுக்கிப்போகும்".
.

சித்தாந்தம், வேதாந்தம் :

"இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் தெய்வம்,
இயக்கநிலை அணுமுதலாய் அண்ட பிண்டம்;
இயற்கையின் உணர்வுநிலை அறிவு ஆகும்.
இம்மூன்றைப் பிரித்துப் பேசும் சித்தாந்தம்;
இயற்கையே அனைத்துமாய் உள்ளதென்று
எடுத்துரைக்கும் வேதாந்தம்; வெவ்வேறல்ல.
இயற்கைஎது? நான்யார்? என்றகத்தே நோக்க
எண்ணியவன் ஒடுங்கும்போது இரண்டும் ஒன்றே".
.

மும்மார்க்கங்கள்:

"விண்ணாட்டம் வரை ஆர்வம்மீறிக் கண்ட
விளக்கமே 'வேதாந்தம்'. சுகதுக்கத்தை
உண்ணாட்டத்தால் ஆய்ந்தோன் ஒடுங்கி மோனம்
உணர்ந்த நிலை 'சித்தாந்தம்'. அறிஞர் அன்பால்
கண்ணாட்டத்துடன் நின்று இன்பதுன்பக்
காரணமே அறியாதோர் உயர்வாழ்வெய்த,
எண்ண ஓட்டம் செயல் இவற்றை ஒழுங்கு செய்ய
எடுத்துரைத்த முறைகள் எல்லாம் 'பக்திமார்க்கம்'".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

அறுகுணச் சீரமைப்பு

அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் அமைந்துள்ளன. மனிதனிடம் இந்த மனோ நிலைகள் எழுச்சி பெறும் போது தீய செயல்களைச் செய்து விடுவான். அதனால் பொருள் அழிவும், மகிழ்ச்சி இழப்பும் விளையும்.

தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில் பேராசையை - நிறை மனமாகவும்; சினத்தைப் - பொறுமையுடமையாகவும்; கடும் பற்றை - ஈகையாகவும்; முறையற்ற பால் வேட்பைக் கற்பாகவும்; உயர்வு - தாழ்வு மனப்பானமையை - நேர் நிறையுணர்வாகவும்; வஞ்சத்தை - மன்னிப்பாகவும் சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்.

தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே "அறிவு" எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை "மயக்கம்" அல்லது "மாயை" என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"எல்லையில்லா இறைநிலையைப் போல
எல்லை இல்லாத தெய்வத்தன்மை வாய்ந்தது பொறுமை"
.

"சினத்தினால் திருத்தம் வரவே வராது.
சினத்தினால் ஏதாவது வரும் என்றால்
அங்கு வருத்தம் தான் வரும்"..
.

சீரமைக்கப்படாத ஆறு குணங்களின் உணர்ச்சிவயத்தால்
-------------------------------------------------------------------------------------
உடலில் உண்டாகும் நோய்கள் பற்றி விளக்கும் மகரிஷியின்
-------------------------------------------------------------------------------------------
கவி:-
-----
.

அறுகுண விளைவுகள் :
---------------------------------

"உளவியலை ஆராய்ந்தால் அறு குணங்கள்
உடலில் நோய்பல விளைத்தல் அறிந்து கொள்வோம்.
அளவிலா விருப்பு கடும்பற்றிரண்டும்
அல்லல் தரும் குன்ம நோய் உண்டுபண்ணும்;
பிளவு செய் சினம் குருதி அழுத்தம், மார்நோய்
பித்து, புண், கண்நோய்கள் தாது மூளை
வளமழிவு செய்யும்; மிகை மோகம் குட்ட
வகை கண்நோய்கள், நீரிழிவு செய்யும்; வஞ்சம்
உள அகைதி உடல் வலுவு போக்கி மார் நோய்
உண்டாக்கும் தொடர்புநோய் பலவும் காட்டும்.
.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அருள் வெள்ளம்

நமது வாழ்க்கையின் நோக்கம் அமைதியும் நிறைவும் பெற்று வாழ்வதோடு ஆன்ம வளர்ச்சி பெற வேண்டும் என்பதேயாகும். ஆன்ம வளர்ச்சியை முதற் குறிக்கோளாகக் கொண்டால் பிறவெல்லாம் அற்பமாகவே தோன்றும். மனதை நிறை நிலையில் வைத்துக் கொள்வோம். கடமையின் மதிப்புணர்ந்து செயலாற்றி வாழ்வோம்.

உண்மையிலேயே ஆன்ம வளர்ச்சியை வேண்டுபவர் சிக்கல்களையும், பிணக்குகளையும் தாண்டி, அறிவைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும். விரிந்த பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளையும், மனித வாழ்வையும் இணைத்து ஒத்துச் சிந்தியுங்கள். தன்முனைப்பு என்ற திரை கரைந்து விடும். தன் முனைப்பும், இயற்கை நியதியறியாமையும் ஒன்றை ஒன்று தழுவி நிலைத்திருக்கின்றன.

இதனால் மனிதன் தன்னிடம் ஒரு கற்பனை மதிப்பை (False Prestige) உருவாக்கிக் கொள்ளுகிறான். இந்த மருள் கொண்ட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பிறரை ஒப்பு நோக்கும் போது கருத்தில் வேறுபாடுகளும், பிணக்குகளும் எழுகின்றன. தனது மனதைச் சீரமைத்துக் கொண்டு எவரை எக்கருத்தைத் தன்னோடு ஒப்பு நோக்கினாலும், ஒரு சமநிலை உணர்வு உண்டாகும். இந்த உணர்வில் தான் பேரின்பம் தொக்கி நிற்கின்றது. இப்பேருணர்வே அருள் வெள்ளமாகும்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி, உடலைக் கெடுத்திடும்".
.

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே;
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்,
மனத்திலே உள எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்."
.

எண்ணிப்பார்:

"நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர்;
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபத்தில் அதுவே இலாபம்".
.

இருள் போக்கும் 'குண்டலினியோகம்' :

"அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்
அனைத்து நலனும் இழந்த துன்பம் ஏற்று
பொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்
போரிட்டு மடிகின்றார் அந்தோ ! வாழ்வில்
மருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்றுள்ளத்தில்
இருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்
இனிதளிக்கும் 'குண்டலினி யோகம்' கற்பீர்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 19 ஜூன், 2013

குடும்ப அமைதிக்கு தற்சோதனை (அகத்தாய்வு)

உலகம் எந்த பழக்கங்களிலே வாழ்ந்து வர்கின்றதோ அந்த வழியே, பெற்றோர்களின் பழக்க வழியே, நாமும் சென்று அவற்றையே பழக்கப்பதிவுகளாக்கிக் கொண்டு வாழந்து வருகின்றோம். இவற்றிலே உண்மை நிலை அறிவதற்காகவே ஆறாவது அறிவு கொண்ட இந்த மனித உடல் வந்த போதிலும் கூட அந்த இலட்சியத்தை மறந்து சாதாரணமாகப் பொருள் ஈட்டு அறிவு பலன்களிலே எல்லைகட்டி உணர்ச்சி வயப்பட்ட அறுங்குணங்களாக அடிக்கடி மாறிப் பல செயல்களைச் செய்து வருக்கின்றோம். இதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தின் வழியே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலைமையிலிருந்து நம்மை அமைதிபடுத்திக்கொண்டு கடும்பத்தில் அமைதி காணவும், உலகில் மனித கலத்திலே அமைதி விளைவிக்க வேண்டும். இதற்கு தற்சோதனை (அகத்தாய்வு) மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது.


தன்னைப்பற்றி தன்தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பை பற்றி ஆராய்வது தற்சோதனை.

இந்த தற்சோதனையில் பெறும் தெளிவைக் கொண்டு எடுக்கும் முடிவையும் தவத்தினால் மனத்திற்கு கிடைத்திற்கும் உறுதியைக்கொண்டு வாழ்வில் எதிர் காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது கிடைப்பதுதான் குணநலப்பேறு. இதன் மூலம் நமக்கு நமது குடும்பத்தில் அமைதி, மகிழவு, நிறைவு பெறுகிறோம்.
                                                           -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்ப அமைதிக்கு மனவளமும் - தியானமும்

மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.


மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.


தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதனைச் சுத்தம் செய்து வைத்தால்தானே மறுநாளைக்கு நன்றாக இருக்கும். அதுபோல் தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையில் மனதை அலைய விட்டுக்கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்துகொண்டும் குடும்பத்தில் அமைதி இழந்து வாழ்கிறோம். அதற்கு தினந்தோறும் அருட்தந்தையின் எளியமுறைதியானப்பயிற்சி மூலம் மனதைச் சுத்தப்படுத்தி மனத்தை அதன் உண்மை நிலைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
தியானம் – மனம் எங்கிருந்து பறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனதைக் கொண்டு வந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பது தான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.
மனம் – எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.


இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் செய்ய தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்கு படுத்திக் கொண்டு தன்னைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.

அகத்தவத்தால் ஐம்பலனை அடக்கி அறிவறிந்திடலாம் !
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் !
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பை பெற்றிடலாம்.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்க கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள, நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்களை. அதில் உள்ள அனைத்தும் தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, நேர்மை என மாற்றப்பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதிகாத்து வாழ முடியும்.
                                                                     -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்ப அமைதிக்கு உடல் நலமும் – பயிற்சியும்

நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வம் இதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். நோயற்றஉடலை உடையவர்கள்தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும். அவர்கள் அறிவும் திறன்பட இயங்கும்.


உடலில் ஏற்கனவே இருக்கிற நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்று சொல்வார்கள். அதைவிட சிறந்தத் என்னவென்றால் நோய் வராமலேயே தடுத்துக் கொள்வது (prevention) ஆகும்.


நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இதில் ஆகாசம் (விண்) உயிராகவும், நிலம் பரு உடலாகவும், மற்ற மூன்று பூதங்களும் இவற்றிற்கிடையே காற்று ஓட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டமாகவும் உள்ளன. மேலும் உயிரில் இருந்து வரும் காந்த அலையும் பரு உடலை பிடித்து வைத்துள்ளது. இதை எல்லாம் சரியாக, முறையாக இருப்பதற்கு அமைந்த பயிற்சி தான் அருட்தந்தையின் எளியமுறைஉடற்பயிற்சி.


எளிய முறை உடற்பயிற்சி 7 கட்டமாக பிரித்து கை, கால், நுரையீரல், கண், கபாலபதி, மகராசனம், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் என உடலின் உள் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமைகிறது. அதனால் நாம் நோயற்றவாழ்வு வாழ முடியும்.


குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் அது துன்பமாகவும், பொருள் நுட்பமாகவும், நேரமின்மையாகவும் அமையும். அதைத் தொடர்ந்து உறவுகளில் பிரிவு, இப்படி அமைதியிழந்து இருக்கும். அதனால் கடும்பத்தில் அமைதி வேண்டுமானால் உள்ளதை உணர்ந்து அல்லதை வட்டு நல்லதை செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லோரும் எளியமுறை உடற்பயிற்சி செய்து சிறப்புடனும் அமைதியுடனும் வாழ்வோம்.


நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிபடுத்திக்கொண்டால் நமக்கு பின்னால் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகிற்குத் தருவதற்கு நாம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று அமைதியாக வாழ்வோமாக.
 
                                                                                            -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்ப அமைதியின் நோக்கம்



உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித மனதில் அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம்தான் அந்த அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்றுவிட்டால் மட்டுமே வந்துவடாது. தன்னிலை விளக்கம் என்றவிளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும். அவ்வெளிச்சத்தில் நீங்கள் வாழும் முறையைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.


உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? என ஆராயுங்கள். எல்லோர் வாழ்க்கையிலும் பிணக்குதான் மலர்ந்திருக்கின்றது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறியதாகவும் வேறுபலர் வாழ்க்கையில் பெரியதாகவும் இருக்கலாம். பிணக்கில்லாத வாழ்க்கை அமைந்தவன் ஞானி. ஒருவர் பற்றி பரிசோதிக்க கருவி ஒன்று இருக்குமேயானால் அது அவரது குடும்பத்தின் அமைதிதான்.


நீங்கள் கற்க வேண்டிய எல்லா பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம். மனித இயல் பாடங்களும் கற்கலாம். ஒரு பல்கலைக் கழகத்தையே கூட குடும்பத்துக்கள்ளேயே காணலாம்.
மனைவிக்குத் தெரியாமல் கணவனோ கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேர்த்து வைப்பதும் பின்னால் பணக்குக்கு இடம் தரும். அதனால் இவர்களுக்குள் இருக்க வேண்டிய தெய்வீக உறவு (divine partnership) இருக்காது. எவ்வகையிலும் ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழக்கூடாது. மனதில் ஒளிவுமறைவு வைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி வராது.


சிறிய காரணத்திற்காகவும், பெரிய காரணத்திற்காகவும் குடும்பத்தில் பிணக்கு எழலாம். எல்லாக் காரணத்தையும் தொகுத்து, பகுத்து நான்காக்கியிருக்கிறேன். அவை 1. தேவை 2. அளவு 3. தன்மை 4. காலம். இவற்றால் ஒன்றையோ அல்லது இரண்டையோ அல்லது அனைத்தையும் கூட மையமாக வைத்துதான் பிணக்குகள் எழும்.

 -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்


கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.


குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் வருப்பங்களையும் மற்றவ் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர்பால் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இனபமும் அமையும்.


அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.


மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.
                                                                           
                                                                                                -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 18 ஜூன், 2013

உளப் பயிற்சி

பருவமழை பொழிகிறது; ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது; வெள்ளம் அதிகமாக இருந்தால் விளைநிலங்களில் பரவிப் பயிர்களை அழித்து விடும். ஆற்றுவெள்ளம் கரைபுரண்டால் ஊர்களிலே பாய்ந்து வீடுகளை மூழ்கடித்துவிடும்; மக்கள், மாடுகள், ஆடுகள் இவற்றிற்கும் அழிவைத் தரும்.

அதே ஆற்றை ஒரு அணைக்கட்டு (Dam) கட்டி நீரைத் தேக்கிக் கால்வாய்களை அமைத்து நீர்போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டால் என்ன வியத்தகு மாற்றம்! எவ்வளவு நன்மை விளைகிறது! ஆண்டு முழுவதும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு நீர் கிடைக்கிறது, குளிக்கவும் அருந்தவும் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. ஆற்றுக்கால் பகுதியிலுள்ள ஊர்களெல்லாம் வளம் பெற்றுச் செல்வம் கொழிக்கிறது.

இவ்வாறே மனிதனுடைய ஆற்றல் எல்லையற்றது. இதனை வேறு எதனோடும் ஒப்பிட்டுக் கணித்து உவமை கூற முடியாது. மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல் அத்தகைய பெருமையுடையது; இயற்கையின் பெருநிதியாகும் அது. அதை உணர்ந்து கட்டுப்படுத்தித் தேக்கி முறையாகச் செலவிட வழி கண்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் உடல்நலம் காக்கலாம், மனவளம் பெருக்கலாம். வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, இன்பம், அமைதி இவற்றை அடையலாம்.

இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட மனிதனுடைய ஆற்றல் அவன் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் வளம் பெருகும் ஊற்றாக அமையும். மனிதனுடைய இத்தகைய பேராற்றலைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தித் திட்டமிட்ட முறையில் செயல்படுத்திப் பயன் காணவல்ல ஒரு உளப் பயிற்சியையே "தியானம்" என்று கூறுகிறோம்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும்.
தாழவும் முடியும். வாழ்வதற்கு உயர்வளிக்கும்
பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்".

.
நின்றிடு: அகண்டாகாரம் நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும்; வெற்றியே !

.
அகத்தவத்தின் பெருமை:
----------------------------------

"அகத் தவத்தின் பொருள் கண்டு
அதன் பெருமை உணர்ந்திடுவீர் !
அகத் தவமோ உயிரினிலே
அறிவை ஒடுக்கும் பயிற்சி !
அகத் தவத்தால் மேலும் உயிர்
அம்மாகி மெய்ப்பொருளாம் !
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம் "!

.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

இறை உறவு

இறைவனை நோக்கித் தியானம் செய்தால், வேண்டினால், அவர் நமக்கு இன்னது இன்னது வேண்டும் என்று கேட்பதைக் கொடுப்பார் என்பதாக நாமே படித்தோ அல்லது பெரியவர்கள் சொல் மூலமாகக் கேட்டோ இறைவனை வழிபடுகிறோம். அங்கே உணர்வு தான்; மதிப்பு இல்லை என்று சொல்லவில்லை; அந்த மதிப்பு மாத்திரம் இருக்கிறது. ஏதோ கிடைக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்திருக்கிறது. உறவிலே அப்படி இல்லை; அங்கு முழுவதுமாகக் கலந்து நிற்கிறோம். எனக்கு அங்கே ஒன்று கிடைக்கும், இல்லை, நான் இங்கிருந்து ஒன்று கொடுப்பேன் என்பதையெல்லாம் மறந்து இரண்டும் ஒன்று கலந்த இடத்திலே ஏற்படுவது தான் உறவு. அந்த உறவை, அதாவது இறை-உறவை ஏற்படுத்திக் கொள்வது தான் ஜீவன் உய்வதற்கான வழி.

அடுத்து, இறை-உறைவை "ஏற்படுத்திக்" கொள்ள வேண்டுமா என ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது என்றால் அந்த உறவு தான் ஏற்கனவே இருக்கிறதே, ஏற்படுத்த வேண்டும் என்பதில்லையே! அதை அறிந்து, உணர்ந்து கொள்ளும் போது எப்படி நாம் அவனை நினைக்காமல் இருந்தாலும் கூட எனக்குள்ளாகவே அறிவாக, உயிராக, இல்லமாக, உள்ளமாக (இல்லம் என்றால் உடல், உள்ளம் என்றால் உயிர்) இருக்கக் கூடியவன் அவனே தான் என்ற ஒரு தெளிவு ஏற்பட்ட பிறகு அவன் வேறு, இவன் வேறு என்று நினைப்பதற்கில்லை.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"கண்ணும், ஒளியும் காண்பவனும் ஒன்றேபோல்,
எண்ணம், இயற்கை, ஈசன் எனும் மூன்றும் ஒன்றாகும்".
.
"பிரம்மம், பூரணம், அறிவு, ஆற்றல் எல்லாம் ஒன்றே".
.
"பிறவிக்கடல் நீந்துதல் என்ற பெரிய காரணத்திற்காக
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்".
.
"நின்றிடு அகண்டாகாரம் நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் ; வெற்றியே!"
.
அறிஞர்களின் பெருநோக்கம்:
"புத்தனென்ற பெரியாரும் இயேசுநாதர்
பொது நோக்கில் கவிபுனைந்த திருவள்ளுவர்
உத்தமராம் நபிகள் எனும் உயர்ந்த ஞானி
உண்மைக்கே உயிரளித்த சாக்கரட்டீஸ்
நித்தியமாம் நிலையளித்த ஞானியர்கள்
நில உலக மக்களுக்கு எடுத்துச் சொன்ன
அத்தனையும் சேர்த்து ஒரு தொகுப்பாய்ச் செய்தால்
அனைத்து மிணைந்து ஒரே கருத்தாய் இருக்கக் காண்போம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உண்மை நிகழ்ச்சிகள் :


ஒவ்வொருவரும் இவ்வுலகமீது பிறக்கிறோம். மனித இனம் வாழ்ந்து கண்ட அனுபவம், வாழும் மக்களின் கூட்டுறவு, இவைகளின் துணையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம்; இன்ப துன்பம் அடைகிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம்.

இந்த நியதி எல்லோருக்கும் பொது. இந்த உண்மையை மறக்காது, விழிப்புடன் இருக்கும் அறிவின் பண்பாட்டுடன், அறிவையும் உடலையும் பண்படுத்தி - பயன்படுத்தி - உலக வாழ்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பதற்காக, இயற்கைக்குப்... பொருத்தமான வாழ்க்கை முறையை வகுத்துப் பூரண அமைதி பெற முயற்சி செய்வோம்.

மனிதனின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்து, பிறப்பு இறப்பு இடையே, அறிவியக்க காலத்தில் மட்டும் ஏற்படும் இன்ப துன்ப தோற்றம், மாற்றம், என்ற மாறுபாடுகளையும் மனதில் கொண்டு, அமைதியாக வாழத் திட்டங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்துகிறோம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
மரணத்தை மறவாதே :

"இறப்பதற்கே பிறக்கின்றோம் எனினும் அந்நாள்
எண்ணத்திற்கெட்டு மட்டும் இந்த உண்மை
மறக்காமல் மற்றவர்க்குத் தீங்கு இன்றி
மண்மீது உழைத்துண்டு அன்பாய் வாழ்வோம்."

.
முக்கால உணர்வு :

"முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,
இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,
பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்,
முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சிந்தனை



"சிந்தனை செய்வது அவசியம் தானா; அது தேவை தானா; அப்படியென்றால் எப்படி அதைச் செய்ய வேண்டும்?" என்றால் அது மிகமிக அவசியம்; தேவை. அளவு முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால் உலகமே ...
அமைதி நிலைக்கு வந்துவிடும். இந்தத் தத்துவம் கடினமானதே அல்ல. முனைந்து பயின்றால் இயல்பாகிப் போகும். ஏற்கெனவே உள்ள பழக்கப் பதிவுகளின் காரணமாக தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும் - மோட்டார் சைக்கிளை Start செய்வது போல, வண்டி ஓடத்தொடங்கி விட்டது என்று சொன்னால் balance தானாக வந்துவிடும்.

நாம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும் பொழுது அந்தச் சிந்தனையில் தவறு வந்தால் அதைத் திருத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும். சிந்தனையே இல்லாமல் வாழ்வது மிதந்து கொண்டிருப்பதற்கு ஈடாகும். வெள்ளம் வந்தால் நம்மை அடித்துக் கொண்டு போகும்; அவ்வளவுதான்; நாம் எங்கே போகின்றோம் என்று தெரியாது; எதைப் பிடிக்க வேண்டும் என்று தெரியாது. இந்த நிலையிலிருந்து மாறி நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் சிந்தனை செய்ய இன்றே, இப்பொழுதே தொடங்க வேண்டும்.  
  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".

.
"இயற்கையையும் கற்பனையையும்
சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான்".

.
"ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு.
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு".

.
"எண்ணத்திற்குக் காவலாக எண்ணத்தையே வைக்க வேண்டும்.
எண்ணத்தை ஆராய எண்ணத்தால் தான் முடியும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

பண்பாடு :


நான் உலகம் முழுவதும் சென்று பல நாட்டு மக்களைக் கண்டிருக்கிறேன். பல நாட்டுப் பெண்மணிகளை நான் கண்டு அவர்களுடைய பண்பாட்டினுடைய அடிப்படை எல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஏனென்றால் எனக்குப் பண்பாட்டின் மேல் அதிகமாகப் பற்றுதல் உண்டு. பண்பாடு என்றால் என்ன? இந்த உலகம் தோன்றி ஆரம்ப காலத்தில் ஆதி மனிதன் (Primitive man) என்று சொல்வார்களே, அந்த நிலையிலேயிருந்து இன்று வரை பார்ப்போம். எத்தனையோ மாறுதல்கள் மனித சமுதாயத்திலே வந்து இருக்கின்றன. அவையெல்லாம் அந்தந்த இடத்திலே அந்தந்தக் காலத்திலே அங்கங்கு கிடைத்த உணவுப் பொருட்கள், ஆங்காங்கு இருந்த தொழில் வசதி, அதைக் கொண்டு உற்பத்தி சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட நோய், அதைப் போக்கிக் கொண்ட முறைகள் இவையெல்லாம் ஒவ்வொரு நாட்டிலேயும் தாமாகவே பரிணாமத்தில் Cultural evolution-process என்பதாக வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒரு மனிதன் ஒரு இடத்தில், ஒரு குருவினிடத்தில், ஒரு நாட்டில், ஒரு பண்பாடு இருக்கிறது என்றால் அதை நோக்கிப் பார்த்தோமேயானால் நீண்டகாலச் சரித்திரத் தொடராகத்தான் அது இருக்கும். ஆகவே பண்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஒழுக்கமும் அறமும் வேறு வேறாக
உணர்த்தப்படினும் ஒன்றில் மற்றடங்கும்
ஒழுக்கம் அறத்தின் முதல் உறுப்பாகும்".
.
"உலகச் சிக்கல்களை ஒரு நொடியில்
உணர்த்திடலாம்; ஒருவராலும் அதனை
உடன் திருத்த முடியாது".
.
"இன்பமும் அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான்
வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாம்
அதைத் தேடி அலைந்து துன்புறுகிறார்கள்".
.
சிறு வயதில் கொண்ட பக்தி:
"கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்
கண்காது மூக்குவைத்துக் கதைகள் சொன்னேன்
கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்
கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்; பின் அந்தக்
கடவுளுக்குப் பசிதீர்க்க பால் நெய் தேங்காய்
கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்
கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்
கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 17 ஜூன், 2013

சிந்தனைத் திறனை வளர்க்க

சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்:
1) திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work)
2) விழிப்பு நிலை (Awareness)
3) தற்சோதனை (Introspection).

திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work):
***********************
இவற்றில், விளைவைக் கணித்து அதற்கு ஏற்ற அளவிலும் முறையிலும் மனம், மொழி, செயல்களைப் பயன்படுத்தலே "திட்டமிட்டுச் செயல்புரிதலாகும்".

விழிப்பு நிலை (Awareness) :
************
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றால் உணர்ச்சிவயப்படாது தன்னையும் தான் அடையவேண்டிய பயனையும் மறவாத விழிப்பு நிலையிலே செயலாற்றும் திறன் தான் "விழிப்பு நிலையாகும்".

தற்சோதனை (Introspection) :
***********
ஒவ்வொரு செயல் முடிவிலும் விளைவைக் கணித்து, தான் செய்த முறை அதில் விளைந்த தவறுகள் அல்லது நன்மைகள், இவற்றைச் சிந்தித்து உணர்வது; ஒவ்வொரு நாளும் இரவு படுக்குமுன், அன்று தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைவிற்குக் கொண்டுவந்து தன் செயல்களைச் சோதிப்பது; செயலில் தவறு கண்டால் இனி அத்தவறு ஏற்படாத உறுதி கொள்வது; நலமாக இருந்தால் அந்த முறையை அழுத்தமாக மனதில் பதிவு செய்துகொள்வது; இவை அனைத்தும் இணைந்த முறையே அகத்தாய்வுச் செயலாகும். 



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
பண்பு :
"சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு".
.
நலம் தீது சீர்தூக்கி வினையாற்ற :
-----------------------------------------------------
"சிந்தித்து நலம்காத்துச் செயலாற்றும்
பண்புடையோர் சிலர்க்கும் தங்கள்
செயல் விளைவாய் சிலர் இன்பம் சிலர் துன்பம்
தவிர்க்க முடியாதபடி பெறுதல் காண்போம்.
இந்த ஒரு நிலை வந்தால் இதைச் செய்தால்
செய்யாக்கால் எங்கு நலம் மிகும் என்று
எண்ணிச் சோதித்த பின்னர் ஏற்பதா இச்செயலை
விடுவதா எனும் முடிவை எடுக்க வேண்டும்.
எந்த ஒரு வகைத் துன்பம் எத்தரப்பில்
வந்தாலும் இன்பம் காண்போர்
ஈடாகத் துன்புறுவோர்க் காறுதலாய்
ஈதல் எனும் ஏற்றபண்பைப்
பந்தமின்றிச் சீர்தூக்கிப் பலன் மிகுதி
கண்டாற்றல் மனித நீதி
பண்பாடே ஏற்றதாம் பகுத்துணர்ந்து
செயல்படுத்தி நலமாய் வாழ்வோம்".
.







- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


ஞாயிறு, 16 ஜூன், 2013

மகரிஷியின் சிந்தனைகள்


ன்னிடம் இருக்கக்கூடிய மிகுதியான ஆற்றலைக் கொண்டு தனக்கும் பிறருக்கும் என்ன உதவி செய்ய முடியும் என்று கணித்து எம்போதும் தயாராக இருந்து கொண்டு உதவிக்கொண்டே இருப்போமேயானால் இங்கேதான் அளவற்ற செல்வம் உடையவனாக ஒரு மனிதன் இருக்கின்ற மனநிலை ஏற்படும்.

தன்னை ரசிக்கும் தகைமை இருப்போரிடம் தான் பிறரையும் இயற்கையையும் ரசிக்கும் குணமும் இருக்கும் முகத்தில் எப்போதும் புன்னகையோடு இருங்கள். எப்போதும் அன்பாகவும் இனிமையாகவும் பேசும் திறனை வளர்த்துக் கொள்வோம்.

என்னுள்ளே அகத்துவாய் இருக்கின்ற பேராற்றல் ஏற்றமிகும் பேரறிவு அவ்வப்போது மின்னலைப்போல் காட்டும் வழி மதித்து மிகச்சிறந்த தொண்டேற்று மகிழ்வாய் உள்ள மனதை உயர்த்துங்கள்! மட்டிலா இன்பம் கிடைக்கும்!

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 9 ஜூன், 2013

சத் சங்கம்


உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில்படும் அல்லல்களையும், துன்பங்களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்குக் காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங் கொண்டுள்ளன.

பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும், தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல் இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்க முடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

புதன், 5 ஜூன், 2013

இல்லற மலர்ச்சி :



உண்மையான நிலை என்னவென்றால் நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால் நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத்தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வரமுடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் அவர்கள் மூலமாகத்தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும். ஆகவே இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான், என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே, இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர், உண்மையான தெய்வ நிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * .
.
"ஒருவர் பெற்ற ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமேயானால், அது அவரது குடும்பத்தின் 'அமைதி' தான்".
.
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும் எப்பொழுதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிரு".
.
"அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது".
.
இல்லற நோன்பு :
"அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்;
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்,
தன்புகழ் விளக்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 4 ஜூன், 2013

பேரான்மா

எல்லாம் வல்ல ஆதியான, எங்கும் நீக்கமற நிறைந்த மெய்ப்பொருளாகிய வெட்டவெளியின் நுண்ணியக்க ஆற்றலே 'பரமாணு' என்னும் சிறப்பாற்றல். இப்பரமாணுவே பேரியக்கத் தொடர்களத் தோற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படையான மூலக்கூறு. இக்கூறு பல சேர்ந்த ஆற்றல்தான் அணு (Atom) எனப்படுகிறது. இவ்வணுக்கள் பல இணைந்த இயக்க ஆற்றல் பேரணு அல்லது அணுத்திறள் (Molecule) எனப்படுகிறது. இவ்வணுத்திறள்கள் கூடிய தோற்றங்களே பேரியக்கத் தொடர்க...ளாக விளங்குகின்றது. மெய் (Truth) என்னும் தெய்வநிலையின் ஆற்றலாக இருப்பதால் இவ்வாற்றலே "உயிர்" என அழைக்கப்படுகின்றது. பொருளைச் சிவமெனக்கொண்டு அதன் ஆற்றலாகிய "விண்" நிலையைச் சக்தியெனவும் வழங்கப் பெறுகின்றது. இந்த நுண்ணியக்க மூலக் கூறுகள் நெருங்கி இயங்கும் விரிந்த ஒரு தொடர்களமே மற்ற தோற்றங்கள் யாவும் இயங்கவும் முடியவும் அடிப்படையான பேராற்றல் களம். இதுவே பிரபஞ்ச காந்த களம் (Universal field). இதனை பேரான்மா என்றும் பேருயிர் என்றும் வழங்குகின்றோம்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மெய் ஞானம்

மெய்விளக்கம் பெற்ற எவராயினும் அவர் மனக் கண்ணோட்டாத்தில் :

1) மெய்ப் பொருளாகிய இருப்பு நிலை,

2) விண் என்ற சுழல் விரைவு ஆற்றலான உயிர் நிலை,

3) உயிர் எனும் விண் துகளிலிருந்து எழும் விரிவு அலை,

4) விண்ணிலிருந்து பரவும் விரிவு அலையானது சுற்றிலுமுள்ள இருப்பு நிலையோடு ஊடுருவி இணைந்து விடுவதால் ஏற்படும் வான்காந்தம்.

5) வான் காந்தமே உயிர் உடலுக்குள் எல்லகட்டித் தனிச் சுழலாக இயங்குங்கால் பெறும் சிறப்பான சீவகாந்தம்.

6) வான்காந்தமோ சீவகாந்தமோ பருப் பொருட்களில் இயக்க அலையால் திணிவு பெறும் போது அது சமனாகும் இயக்க விளைவுகள் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து தன்மாத்திரைகளாக மாற்றம் பெரும் இயல்பூக்கம்.

7) இருப்பு நிலையான மெய்ப்பொருளே அறிவாகி நுண்பொருளான விண்ணிலிருந்த பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி நிறைந்து அது அதன் வடிவத்திற்கேற்ப இயக்க ஒழுங்காகவும், புலனுணர்வாகவும், தன்னையே அறிந்து கொள்ளத்தக்க ஆறாம் நிலை அறிவாகவும் விளங்கும் அருட் பேராற்றலான அறிவு நிலை, இவையெல்லாம் அயரா விழிப்பு நிலையில் காட்சியாக விளங்கும். இந்த முழுமையான பேரியக்க மண்டல விளக்கமே மெய்ஞானம் என்று வழங்கப் பெறுகிறது.


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"அறிவு பிறழாத மனிதனாகத் தான் வாழ வேண்டும் என்றால்,
அந்த விரிந்த மனப்பான்மைக்காக இயற்கை உணர்வு வேண்டும்..
இறையுணர்வு வேண்டும். அறநெறி வேண்டும்".

.
"சிறப்பான இறைநிலை விளக்கத்தையும், செயல்விளைவு
தத்துவத்தையும் எவ்வளவு தெளிவாக மனிதன்
உணர்ந்திருக்கின்றானோ, அந்த அளவுக்கேற்ப
மனிதனுடைய சிறப்பும் வாழ்வும் அமையும்".

.
"மேலும் மேலும் அறிவு உயர்ந்து, மனவளம் பெற்று,
உடல் நலம் பெற்று, வாழ்க்கையில் மேம்பட்டு
சிறப்பாக வாழ்வதற்கு மனவளக்கலைப் பயிற்சி உதவும்".

.
"ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சிபெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள்கூடி
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி, வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம்காண்போம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம் :



நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப்பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும் உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு, சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும் வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதா கின்றது. அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கெனவே அங்கு தொளை (puncture) ஆகி இருக்கிறது அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவ காந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவகாந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவு பட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெறியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க்கை மலர்கள்,  ஜூன் 4
 

திங்கள், 3 ஜூன், 2013

மெளன காலம்

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி